பிரதமராக காய் நகர்த்துகிறாரா மம்தா பானர்ஜி?

- சாவித்திரி கண்ணன்

தெருவில் இறங்கி போராடும் களப் போராளி! அஞ்சாமையின் இலக்கணம்! மதவாத சக்திகளின் மாபெரும் விரோதி என்பதெல்லாம் சரி தான்! அதற்காக மம்தாவை அகில இந்திய தலைவராக – அடுத்த பிரதமராக – ஏற்க முடியுமா..?

நாட்டிற்கு மட்டுமல்ல, மனித குலத்திற்கே பேராபத்தாக பார்க்கப்படும் பாஜகவோடு மோதி வெல்லும் ஆற்றல் உள்ள இந்தியாவின் ஆகச் சிறந்த போராளி மம்தா பானர்ஜி என்பதில் நமக்கு மாற்று கருத்தே இருக்க முடியாது. ஆட்சியில் உள்ள எதிர்கட்சி முதல்வர்கள் எல்லாம் ஏதோ ஒரு வகையில் பாஜகவிற்கு பணிந்து போகின்ற நிலையில், எந்தச் சூழலும் பணியாமல் நியாயம் கேட்டு போராடுவேன் என நிரூபித்து வருகிறார் மம்தா பானர்ஜி.

அவருக்கு எதிரான பலமான சூழ்ச்சி வலைப் பின்னல்கள் செய்தும், பாஜக முழு பலத்தோடும், அதிகாரத்தோடும் நசுக்கப் பார்த்தும் நிமிர்ந்து நின்றார் மம்தா பானர்ஜி. மோடியும், அமித்ஷாவும் இன்னும் பல முன்னணி பாஜக தலைவர்களும் பத்து வருடமாக படிப்படியாக வியூகம் வகுத்தும், வன்முறைகளை கட்டவிழ்த்துவிட்டும், மம்தாவிடமிருந்த தளபதிகளை எல்லாம் அள்ளிச் சென்ற போதும் மம்தாவை வீழ்த்தமுடியவில்லை.

ஒரு வேளை மம்தா இந்த தேர்தலில் தோற்று இருந்தால், அது அவரது தோல்வி மட்டும் அல்ல, வங்கத்தின் தோல்வி மட்டும் அல்ல, உண்மையில் அது இந்திய ஜனநாயகத்தின் தோல்வியாக நிலை பெற்று இருக்கும் என்பது மட்டுமல்ல, பாஜக மிக வீரியத்துடன் அனைத்து எதிர்கட்சி மாநிலத் தலைவர்களையும் மண்டியிட வைத்திருக்கும்!

ஆக, மேற்கு வங்கத்தில் மக்களின் நம்பிக்கையை வென்றெடுத்தது என்பது மம்தாவின் மகத்தான துணிச்சலுக்கு கிடைத்த வெற்றி மட்டுமல்ல, அவரிடம் குறைந்தபட்சம் ஒரளவேனும் நேர்மை இல்லாமல் இந்த வெற்றியை அவர் சாத்தியப்படுத்தி இருக்க முடியாது. மம்தாவின் அரசியல் வழிமுறைகளில் நாம் முழுவதுமாக உடன்படவே முடியாது என்ற போதிலும், அவரது ஐம்பது ஆண்டுகால பொதுவாழ்க்கை ஒரு சமரசமற்ற தலைவராக அவரை அடையாளப்படுத்தி உள்ளது.

தன்னுடைய தேவைகளை குறைத்துக் கொள்ள முடிந்த தலைவராக அவர் இருக்கிறார்! ஒரு எளிய பருத்தி புடவை, ஹவாய் செருப்பு கழுத்திலோ, கையிலோ எந்த அணிகலனுமற்ற எளிமை, யாரும் எளிதில் சந்தித்து பேச முடிந்தவராக இருக்கும் வெளிப்படைத் தன்மை ஆகிய தன்மைகளைக் கொண்ட ஒரு பெண் அரசியல்வாதி இன்றைய தினம் அரிதினும் அரிது! எப்படிப் பார்த்தாலும் பகட்டுகள் இல்லாத எளிய மனுஷியாக – மக்களில் ஒருவராக – அவர் வெளிப்படுகிறார் என்பதற்கு மாற்று கருத்தே இல்லை.

இந்தியாவின் கலாச்சார தலை நகரமாக கருதப்படுவது வங்க மண்ணாகும்! இந்த மண்ணில் இருந்து தான் ராஜாராம் மோகன்ராய் தொடங்கி விவேகானந்தர், சுபாஷ் சந்திரபோஷ், அன்னை தெரசா..போன்ற எண்ணற்ற ஆளுமைகளை பெற்றுள்ளோம்! அந்த வகையில் அந்த மண்ணில் இருந்து – அந்த பின்னணியில் வளர்ந்து ஆளான  ஒருவர்  – பிரதமராக  இந்தியாவிற்கு கிடைப்பது பெருமைக்குரியதே!

ஆனால், சட்டென்று மம்தாவை அகில இந்தியாவிற்குமான தலைவராக ஏற்க முடியவில்லை. அவர் தான் இன்றைக்கு பேரழிவு சக்தியான பாஜகவை முழுவீச்சோடு எதிர்க்கக் கூடிய வல்லமையில் முதன்மையாகத் திகழ்கிறார் என்பதில் நமக்கு சந்தேகம் இல்லை.

விவசாயச் சட்டங்களை முழு வீச்சில் எதிர்த்து பேசினார்!

”நாட்டில் கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் 12 ஆயிரம் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். விவசாயிகள் நலன் பெற மோடி என்ன செய்தார்? கார்ப்பரேட்டுகள் வாழவே திட்டமிடுகிறார்! வேளாண் சட்டங்களை ஏற்கவே முடியாது. எனது ஆட்சியின் கீழ் மேற்கு வங்கத்தில் விவசாயிகளின் வருமானம் மும்மடங்காக உயர்ந்திருக்கிறது.’’ என துணிச்சலாக பேசினார்.

குடியுரிமை திருத்த சட்டம் கொண்டு வந்த போது, ” ”அதை மேற்கு வங்கத்தில் ஒரு போதும் செயல்படுத்த அனுமதிக்கமாட்டோம்’’ என்றார்.

மம்தாவின் ஆட்சியை பற்றி ஏராளமான கட்டுக்கதைகளை பாஜகவினரும், மோடியும் கூறியபோது, ”பிரதமர் மோடி காலாவதியான நபர். அவர் முதலில் டெல்லியைப் பற்றி கவலைப்படட்டும். அதன்பின்னர் வங்கத்தை பார்க்கட்டும். எனது அரசைப் பற்றி தவறான தகவல்களை மோடி அளித்துக் கொண்டிருக்கிறார். நான் பொய் கூற மாட்டேன். பொய் சொல்வதற்கு நான் ஒன்றும் மோடி இல்லை.’’ என்று செவிட்டில் அறைந்தது போல மம்தா பேசினார்.

பாஜகவின் ஆபத்து குறித்து எளிய மக்களுக்கு இதைவிட எளிமையாக புரிய வைக்க முடியாது! ”கலவரம் செய், கொள்ளையடி, மக்களை கொல் இதுவே பாஜக!’’ என்றார்!

இந்தியாவின் தாலிபான்களே இந்த இந்துத்துவ சக்திகள். இவர்களை அனுமதித்தால் இந்தியாவில் நிம்மதி பறிபோய்விடும். இந்தியா என்பது அனைவருக்குமானது. இந்து, கிறிஸ்த்துவர், இஸ்லாமியர், சீக்கியர், பெளத்தர் அனைவருக்கும் சம உரிமை கொண்டது. இதை வகுப்புவாத சக்திகளின் வன்முறைக் காடாக மாற்ற முடியாது! அதற்கு தடைபோடுவோம். இது காந்தி தேசம்! அதை ஒரு போதும் மறக்கமாட்டோம்’’ என உறுதிபட பேசி நம்பிக்கையூட்டிய தலைவர் மம்தா!

இதனால் எல்லாம் அவரை இந்தியா முழுமைக்குமான தலைவராக ஏற்க முடியவில்லை. திரிணமுள் காங்கிரஸ் என்பது தென் இந்தியாவை பொறுத்த அளவில் ஒரு அறிமுகமே இல்லாத அன்னிய கட்சி தான்! மம்தா அனைத்து இந்தியாவிற்குமான தலைவராக இது வரை அடையாளப்படவில்லை. இந்தியாவில் மற்ற மாநில மக்களின் ஆசை, அபிலாசைகள், விருப்பு, வெறுப்புகள், கலாச்சாரங்கள் ஆகியவை பற்றிய புரிதல் அவருக்கு எந்த அளவுக்கு இருக்கிறது என்று தெரியவில்லை. கட்சி ஆரம்பித்து 25 ஆண்டுகள் ஆன நிலையில் இன்று வரை அவரது கட்சி அகில இந்திய கட்சியாக செயல்பட்டதில்லை. அவர் அகில இந்திய தலைவராகவும் முடியாது.

அதே சமயம் அவர் மற்ற மாநிலங்களில் பாஜகவை எதிர்க்கும் கட்சிகளுக்கு ஆதரவாக ஆதர்ஷமாக விளங்க முடியும்! அது தேவையும் கூட! அப்படி செயல்பட விழையும் போது அவர் இப்போது இருந்தே மேற்கு வங்க முதல்வர் பதவியைத் துறந்து அகில இந்தியாவையும் சுற்றி வர வேண்டும். அனைத்து பிரச்சினையிலும் கவனம் செலுத்த வேண்டும். எல்லா பகுதிகளிலும் உள்ள ஜனநாயக சக்திகளோடு இணைந்து செயல்பட வேண்டும். இத்தனைக்கும் பிறகு மக்கள் இசைவு கிடைத்தால் பிரதமர் வேட்பாளராக தன்னை முன் நிறுத்திக் கொள்ளலாம். மக்களிடம் இருந்து தான் அந்த கோரிக்கை எழ வேண்டும்.

ஆனால், இன்று மம்தா தன் மாநிலத்திற்கு வெளியே செய்து கொண்டிருக்கும் அரசியல் ஏற்புடையதாக இல்லை. திரிபுராவிலும், அசாமிலும் வங்க மக்கள் கணிசமாக இருப்பதால் திரிணமுள் காங்கிரசுக்கு ஒரு வரவேற்பு இருப்பதை ஏற்கலாம் என்ற போதிலும், அங்கு காங்கிரஸ் தலைவர்களையும், எம்.எல்.ஏக்களையும் அவர் தன் கட்சிக்கு இழுக்கும் அரசியல் கீழ்த்தரமானது. மேகலாயாவில் 12 காங்கிரஸ் எம்.எல்.ஏக்களை கூண்டோடு தூக்கி திரிணமுள்ளோடு இணைத்திருப்பது அநாகரீகமான அரசியல் பேர விளையாட்டாகும்!

சில மாதங்களுக்கு முன்பு கோவா முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் தலைவருமானவரை தன் கட்சிக்கு கொண்டு வந்து சேர்த்தார் மம்தா. ஆனால், அதனால், திரிணமுள் காங்கிரசுக்கு கோவா மக்களிடம் வரவேற்பு கிடைக்கவில்லை. இது மம்தாவிற்கு அகில இந்திய அளவில் தற்போது ஏற்பட்டு இருக்கும் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்துவதாகவே உள்ளது.

மம்தாவிற்கு இது போன்ற தீய யோசனைகளைச் சொல்லி அவரை தூண்டிவிடுவது பிரசாந்த் கிஷோர் என சொல்லப்படுகிறது. ஒரு அரசியல் தலைவர் ஒரு கார்ப்பரேட் நிறுவனரால் வழி நடத்தப்படுவது ஏற்புடையதல்ல.

எல்லாவற்றுக்கும் மேல் இந்திய தேசிய காங்கிரஸ் தான் மம்தாவின் தாய் கட்சி. பொது வாழ்க்கைக்கு அவரை அறிமுகப்படுத்திய கட்சி காங்கிரஸ். அவருக்கு மகிளா காங்கிரஸ் தலைவர், இளைஞர் காங்கிரஸ் தலைவர், 29 வயதிலேயே எம்.பி, 38 வயதில் மத்திய மந்திரி என அவரை ஆளாக்கி, அடையாளம் தந்த கட்சி காங்கிரஸ். அந்த காங்கிரசை பலவீனப்படுத்தி, அதிலிருந்து ஆள் பிடிக்கும் அரசியல் செய்து வளர்வது நன்றி கொன்ற பாவமாகும். காங்கிரசை வீழ்த்துவது பாஜகவிற்கு பலம் சேர்பதாகவே முடியும்.

அரசியல் ரீதியாக காங்கிரசை அவர் எதிர்க்கட்டும். மேற்கு வங்கத்தை போல மக்கள் நம்பிக்கையை பெறட்டும். ஆனால், குறுக்கு வழியில் ஆள் தூக்கும் அரசியல் செய்வதானது மறைமுகமாக பாஜகவை ஆதரிப்பது போல அமைந்துவிடும்! இன்று சுப்பிரமணியசுவாமி மம்தாவை புகழ்ந்து பேசுகிறார் என்றால், மம்தா மீது நமக்கு மரியாதை ஏற்படுமா? சந்தேகம் ஏற்படுமா? அடுத்த தேர்தலில் அவர் மேற்கு வங்கத்தையும் இழக்க நேரிடும். அதற்காகவே கூட அவருக்கு இத்தகைய ஆசைகள் தோன்ற பாஜக திட்டமிட்டு இருக்கலாம் என கருதவும் தோன்றுகிறது!

யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் தான் அவரவருக்கு மரியாதை மட்டுமல்ல, நன்மையுமாகும்!

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time