நீட் தேர்வு ஆதரவு அரசியல் செய்கிறாரா தமிழக கவர்னர்?

- சாவித்திரி கண்ணன்

க. நாகராஜன், அருப்புக் கோட்டை

நீட் தேர்வு தொடர்பான ஏ.கே.ராஜன் கமிட்டி அறிக்கை இன்னும் குடியரசுத் தலைவருக்கே அனுப்படவில்லையாமே?

செப்டம்பர் 20 ஆம் தேதி நீட் தேர்வு தொடர்பான அந்த அறிக்கை குடியரசுத் தலைவருக்கு அனுப்பட்டதாக நம்பி நாம் காத்துக் கிடக்கிறோம். அது, இன்னும் தமிழக ராஜ்பவன் டேபிளில் இருந்து கூட நகரவில்லை என்பதும், அதைக் குடியரசு தலைவருக்கு அனுப்ப கோரி முதல்வர் கவர்னரை தற்போது சந்தித்து வேண்டியுள்ளதாகவும் வரும் செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன! பல கோடி மக்களின் விருப்பம், அவர்களின் வாழ்வை பாதிக்கும் அம்சம்…எப்படி சுலபமாக நிராகரிக்கப்படுகிறது!  இதை  சொகுசாக அரண்மனை போன்ற மாளிகையில் உட்கார்ந்து கொண்டு ஒரு கவர்னர் தடுத்து நிறுத்தி வைக்கிறார் என்றால், இதை எப்படி புரிந்து கொள்வது.

அவர் நீட் ஆதரவாளர்களுக்கான ஒரு அரசியலை கமுக்கமாக கவர்னர் பதவியில் உட்கார்ந்து செய்கிறார் என்பதே இதன் பொருள்! இன்னும் எத்தனை நாள் இப்படி இங்கேயே அந்த ஆய்வறிக்கை தங்குமோ? இல்லை ராஜ்பவனிலேயே புதையுண்டு போகுமோ? நாம் ஓட்டு போட்டு நம்மை ஆட்சி செய்ய அவரை தேர்ந்தெடுக்கவில்லை! நம் மீது திணிக்கப்பட்டவரே கவர்னர்! கவர்னரின் அலட்சியங்களை தண்டிக்க சட்டம் இருக்கிறதா? தெரியவில்லை.

இந்த லட்சணத்தில் குடும்பத்தோடு தமிழகத்தில் ஊட்டி, கொடைக்கானல் என்று சுற்றுப் பயணங்கள், கோயில்,கோயிலாக சென்று முதல் மரியாதைகள் வேறு.

எம்.சத்தீஸ், கூடுவாஞ்சேரி, செங்கல்பட்டு

தமிழகத்தில் கைதிகள் விடுதலை விவகாரத்தில் இஸ்லாமிய கைதிகளை மட்டும் விடுவிக்க மறுக்கிறார்களே ஏன்?

கருணாநிதி காலத்தில் அண்ணா பிறந்த நாளின் போது பத்தாண்டுகள் சிறைவாசம் முடிந்த அனைத்து கைதிகளையும் எந்த பாகுபாடுமின்றி விடுதலை செய்தார். 1997, 2007 ஆம் ஆண்டுகளே இதற்கு சாட்சி! ஆனால், இப்போது என்னவென்றால், 20 ஆண்டுகள் சிறைவாசம் நிறைவு செய்த கைதிகளுக்கும் விடுதலை மறுக்கப்படுகிறது. இந்த வகையில் நிறைய இஸ்லாமிய சிறைவாசிகளுக்கும், வீரப்பன் அண்ணன் மாதையன் உள்ளிட்ட 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருப்பவர்களுக்கும் விடுதலை மறுக்கப்பட்டு உள்ளது.

இவர்கள் மதவாத சக்திகளாகவும், பயங்கரவாதிகளாகவும் தோற்றப்படுத்துவது போல வழக்கு பதிவு செய்துவிடுகின்றனர்! இந்த தீவிரவாத முத்திரையை யாருக்கு வேண்டுமானாலும் பொருத்தி நிரந்தரமாக ஆயுள் முழுக்க சிறையில் அடைக்கும் தந்திரத்தை மத்திய பாஜக அரசு செய்து வருகிறது.பத்திரிகையாளர்கள்,பேராசிரியர்கள் போன்றோரையும் இந்த வகையில் தான் தற்போது கைது செய்கிறார்கள்! அதிகாரத்தின் கோர முகங்களில் இதுவும் ஒன்று!

தமிழக கைதிகள் விடுதலை தொடர்பாக ஒரு கமிட்டியை போட்டு நிதர்சனங்களை ஆராய்ந்து, அந்தரங்க சுத்தியோடு நியாயமாக முடிவு எடுக்கலாம். சிறையில் இருபதாண்டுகளைக் கடந்து இருந்தவர்கள், 50 வயதைக் கடந்தவர்களாக இருக்கும் பட்சத்தில் அவர்களின் இறுதி வாழ்க்கையையாவது நிம்மதியாக வாழ விடுவிடுவது தான் ஒரு நாகரீக சமுதாயத்தின் அணுகுமுறையாக இருக்க முடியும்.

இந்த எளியோர்களை பலி கொடுப்பதன் வழியாக தன் ஆட்சி அதிகாரத்தை தக்க வைக்கவும், மத்திய ஆட்சியாளர்களுக்கு விசுவாசத்தை காட்டவும் நினைக்கிறாரோ என்னவோ.., முதல்வர்!

எஸ்.ராஜ லஷ்மி, மதுரவாயல்

மேற்கு வங்கத்திற்கு வெளியேயும் தன் அதிகார எல்லைகளை விரிவாக்கம் செய்து வருகிறாரே மம்தா பானர்ஜி?

எதிரிகளை அழிப்பதற்கு இரண்டு வகை உண்டு!

ஒன்று அவர்களின் பலவீனங்களை அறிந்து வீழ்த்துவது!

மற்றொன்று அவர்களின் பலத்தையே அவர்களின் பலவீனமாக்கி அழிப்பது!

தற்போது இந்த இரண்டாவது அம்சத்தை தான் ஆர்.எஸ்.எஸ் கையில் எடுத்துள்ளது.

இந்தியாவில் பாஜகவை எதிர்த்து வீழ்த்துவதில் தனக்கு நிகர் யாருமில்லை என நிரூபித்து இறுமாந்துள்ள தீதிக்கு, பிரதமர் ஆசையைத் தூண்டி..ஆட்டுவிக்கிறார்கள். இதனால் மம்தாவின் கவனம் வங்கத்திற்கு வெளியே சிதறடிக்கப்படும்!

மேற்கு வங்கத்தில் கம்யூனிஸ்டுகளை அழித்தது போல இந்தியாவில் காங்கிரசை அழிக்க தூண்டிவிடப்பட்டுள்ளார் மம்தா. கடைசியில் அவர் இந்தியப் பிரதமராகவும் முடியாமல், இருக்கும் மேற்குவங்கத்தையும் இழக்கவே நேரும். அவரவருக்கான எல்லைகளை உணராதவர்களுக்கு எல்லையற்ற பேரழிவே ஏற்படும்.

எஸ்.கோபிநாத், ஆத்தூர், சேலம்

வருமானவரி செலுத்தும் அளவிற்கான வசதியுள்ளவர்களுக்கு ரேஷனில் இலவச அரிசி கிடையாது என தமிழக அரசு முடிவெடுக்கக் கூடாது என்கிறாரே ஒ.பி.எஸ்?

இந்தியாவில் எல்லா மாநிலங்களிலும் சோற்றுக்கே இல்லாத ஏழைகளுக்கே இலவச அரசி பொது விநியோகத்துறையில் தரப்படுகிறது. சொந்த வீடும், காரும், பல ஆயிரங்களில், லட்சங்களில் சம்பளம் பெறுபவர்களுக்கும் ஓசி அரிசி தேவையா?

”ஆம் ,தேவை” என்கிறார் ஒ.பி.எஸ்! வருமானவரி பாக்கி 82 கோடி சொச்சம் கட்டாமல் டபாய்க்கும் ஒ.பி.எஸ்! அந்த  விவகாரம் என்னவென்று தெரியுமா? சேகர்ரெட்டியிடம் வாங்கிய லஞ்ச பணத்தை அரசே ஒ.பி.எஸ்சின் வருமானமாக கணக்கிட்டு, ”அதற்காவது வரி கொடுய்யா” என்று கெஞ்சிக் கொண்டுள்ளது வருமான வரித்துறை! அதையும் தர மறுத்து ஆகாத்தியம் செய்து கொண்டிருக்கும் ஊழல் மன்னன் வேறு என்ன சொல்லமுடியும்?

ஞானசேகரன், ஈரோடு

கோவையில் அடுத்தடுத்து  யானைகள் பலி உணர்த்தும் செய்தி என்ன?

அந்த ரயில் தடத்தில் மட்டுமே இது வரை 28 யானைகள் அடிபட்டு இறந்துள்ளனவாம்! அங்கே 30 முதல் 40 கீமீ வேகத்தில் வர வேண்டிய ரயில்கள் 100 கீமிக்கும் அதிக வேகத்தில் வருகிறதாம்! இதை தட்டிக் கேட்கவோ, தடுக்கவோ முடியவில்லையே! நாதியற்றுப் போயிற்றா யானைகளின் உயிர்கள்? உயிர்கள் விஷயத்தில் ஆட்சியாளர்களின் அணுகுமுறை மிகுந்த வேதனையாக உள்ளது.

மு.ரத்தினவேல், விருதாச்சலம்

கொரோனா வைரஸ் உருமாறி ஒமிக்ரான் வைரஸாக உருமாறி தாக்குகிறதே?

அப்படியெல்லாம் உருமாறி தாக்க வைக்கத்தான் தடுப்பூசி போடுகிறார்களோ..?  பிறகு அதற்கும் ஒரு புது தடுப்பூசி கொண்டு வந்தால் இன்னும் பல ஆயிரம் கோடிகள் பணம்! மனித உயிர்கள் மீது விஞ்ஞானத்தின் பெயரால் நடத்தப்படும் அத்துமீறல்களே இந்த விளைவுகள்!

தயாளன், தாம்பரம்,செங்கல்பட்டு

மீண்டும் பாஜக ஆட்சிக்கு வந்தால் இந்தியா என்னவாகும்?

மனிதத்தை தேட வேண்டியதாகிவிடும்!

கோமதிநாயகம், கோவை

உங்கள் நிறைவேறாத ஆசை ஏதாவது உள்ளதா?

பள்ளிப் பருவத்திலேயே கவிதை சிறகுகளை விரித்தவன் நான்! சினிமாவிற்கு பாட்டெழுத வேண்டும் என்பது பள்ளிக்கூட காலத்திலேயே முளைத்த லட்சியக் கனவு! ஆனால், என் கூச்ச சுபாவம் காரணமாக நான் அதை நோக்கி நகரவே இல்லை.

ஆர்.ரமேஷ், பெங்களூர்

மேக்சிஸ் நிறுவன முறைகேடு வழக்கில் ப.சிதம்பரம்,கார்த்தி இருவருக்கும் நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளதே?

ஏற்கனவே ப.சிதம்பரம் சிறை சென்று வந்தார் மகனுக்காக! அப்படிப்பட்ட மகனுக்காகத் தான் காங்கிரஸ் தலைமையிடம் போராடி எம்.பி.சீட்டும் வாங்கித் தந்தார்! இன்னும் மகனுக்காக எவ்வளவு மானக்கேடுகளை சுமப்பாரோ ப.சிதம்பரம்?

அப்துல் நாசர், ஹைதராபாத்

எம்.ஜி.ஆருக்கு சிறுநீரகத்தையே தானம் செய்த லீலாவதி அம்மையார் மரணம் பற்றி?

எம்.ஜி.ஆர் மரணத்திற்குப் பிறகு ஜெயலலிதா தலைமையிலான அதிமுகவில் சேர்ந்த லீவாவதிக்கு கடைசி வரை எம்.எல்.ஏ சீட் தரமறுத்துவிட்டார் ஜெயலலிதா. அதனால் ஜெயலலிதாவை எதிர்த்து சுயேட்சையாக போட்டியிடப் போவதாக சொன்னார் லீலாவதியை அதிமுகவினர் கடத்தி வைத்து மிரட்டியதும் நடந்தது. மனம் வெறுத்து கடைசியில் பாஜகவில் சேர்ந்தார். அங்கும் அவருக்கு முக்கியத்துவம் கிடைக்கவில்லை. அவரது இறப்புக்கு கூட பாஜக இரங்கல் தெரிவிக்கவில்லை. தற்போது இரங்கல் தெரிவித்த அதிமுக தலைவர்கள் கூட உயிரோடு இருக்கும் போது அவருக்கு உதவவில்லை.

குறிப்பு;

https://forms.gle/g3i6Bd5S4DD9FGWD8

கேள்வி கேட் க ஆர்வமுள்ள வாசகர்கள் மேலேயுள்ள லிங்கை சொடுக்கி சுலபமாக தங்கள் கேள்வியை கேட்கலாம்.

 

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time