தகாத ஆசிரியர்களை தண்டிப்பதற்கு என்ன தயக்கம்?

- நாகை பாலா

எதிர்கால சமுதாயமான மாணவர்களுக்கு வழிகாட்ட வேண்டிய கலங்கரை விளக்கங்களாக இருக்க வேண்டிய ஆசிரியர்கள் ஒரு சிலரின் தவறான  நடவடிக்கைகளால் ஆசிரியர் என்று மகத்தான சேவைத் தொழிலில் கறை படிய தொடங்கியுள்ளது.

அனைத்து பணிகளிலும் உள்ளது போல ஆசிரியர் சமுதாயத்திலும் ஒருசில கரும்புள்ளிகள் உள்ளன. இப்படிப்பட்டவர்களின் செய்கைக்காக ஒட்டுமொத்த ஆசிரியர் சமுதாயத்தையும் குறைகூறி மட்டம் தட்டி விட முடியாது.

ஆசிரியர் பணியை தவம் போல் செய்கின்ற எண்ணற்ற பல ஆசிரியர்கள் இருக்கும்பொழுது இதுபோல ஒரு சிலரின் தவறுகளால் ஒட்டுமொத்த ஆசிரிய சமுதாயத்திற்கும் அவப்பெயர் ஏற்பட்டு விடுகின்றது.

தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள், அரசு பள்ளியில் பயிலும் மாணவர்கள் என்று மாணவர்களை தரம் பிரிக்க முடியாது. அனைவரையும் ஒன்றாகவே கருத வேண்டும்.

அதேபோல ஆசிரியர்களிலும் அரசு பள்ளி ஆசிரியர், தனியார் பள்ளி ஆசிரியர்கள் என்று வேறுபடுத்திப் பார்க்கக்கூடாது. ஆசிரியர் பணி என்பது எங்கு பணியாற்றினாலும் மாணவர்களுக்கு வழிகாட்டியாக இருப்பதினால் அது உன்னதமான பணி தான்!

சமீப காலங்களில் பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றச்சாட்டுக்கள் தனியார் பள்ளி ஆசிரியர்களை மையப்படுத்தியே  வெளிவருகின்றன. அரசுப் பள்ளிகளில் இது நடக்கவே இல்லை என்று கூற முடியாது. அதே சமயம் தனியார் பள்ளிகளில் இதைப் போன்ற நிகழ்வுகள் அதிகமாக நடைபெறுவதாக ஊடகங்கள் வழியாக தெரியவருகின்றது.

அரசு பள்ளி ஆசிரியர் மூலமாகவோ, தனியார் பள்ளி ஆசிரியர்களாலோ , அக்கம்பக்கத்தில் வசிப்பவர்கள் மற்றும் உறவினர்கள் என யார்மூலம் நடந்தாலும் பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களை நியாயப்படுத்தவோ, மன்னிக்கவோ முடியாது. ஆனால் சமீபகாலமாக தனியார் பள்ளிகளில் அதிகம் இதைப்போல் பாலியல் குற்றங்கள் நடப்பது கண்கூடாக தெரிகின்றது. ஒவ்வொரு முறையும் குற்றங்கள் நிகழும் போது அதை பற்றி பேசிவிட்டு குற்றவாளி தண்டிக்கப்பட்டவுடன் அதைப்பற்றி மறந்துவிடுகிறோம்.

இதைப்போல குற்றச் செயல்கள் நடப்பதற்கான வாய்ப்புகள் சூழ்நிலைகள் காரண காரியங்கள் ஆராயப்பட்டு அவற்றைக் களைவதும் தொடர் கண்காணிப்பில் வைத்திருப்பதுமே எதிர்காலத்தில் இது போன்ற செயல்கள் நடக்காமல் இருப்பதற்கான வழிமுறை ஆகும் ‌.

தங்கள் பிள்ளைகள் அதிக மதிப்பெண் எடுக்க வேண்டும் என்ற காரணத்திற்காகவே பெற்றோர்கள் அதிகக் கட்டணம் செலுத்தி தனியார் பள்ளிகளில் சேர்க்கின்றனர். எனவே தனியார் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களில் எந்த ஆசிரியர் மாணவர்களை அதிக மதிப்பெண்கள் பெற வைக்கிறாரோ, அவருக்கு நிர்வாகத்தின் சார்பில் பல சலுகைகள் தரப்படுகிறது. மற்ற ஆசிரியர்கள் பற்றி நிர்வாகம் அவ்வளவாக கவலைப்படுவது கிடையாது.

பெரும்பாலும் பாலியல் சீண்டல்களில் ஈடுபடும் ஆசிரியர்களின் பின்புலம் பற்றி விசாரிக்கும் பொழுது அவர்கள் மாணவர்களை நல்ல மதிப்பெண்கள் எடுக்க வைக்கும் ஆசிரியர்களாகவே இருக்கிறார்கள். இதனால் அவர்கள் என்ன தவறு செய்தாலும் பள்ளி நிர்வாகம் அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது கிடையாது ‌.

அரசுப்பள்ளிகளில் மதிப்பெண் களுக்கு மட்டுமே முக்கியத்துவம் அளிப்பது கிடையாது. உடற்பயிற்சி விளையாட்டு ஆடல் பாடல் என ஒரு முழுமையான கல்வி அளிக்கப்படுகிறது. எனவே மாணவர்கள் ஆசிரியர்கள் இருவரும் மன அழுத்தம் குறைந்து கல்வியில் நாட்டம் செலுத்துகின்றனர். அதையும் மீறி ஓரிரு அரசுப் பள்ளி ஆசிரியர்கள் இதைப் போன்ற தவறுகளில் ஈடுபடும் பட்சத்தில் தலைமையாசிரியர் மற்றும் அரசு அலுவலர்களும் அவர்களை ஆதரிக்கவோ, காப்பாற்றவோ, மறைக்கவோ முயல்வதில்லை. மாணவர்களுக்கு ஆதரவாக செயல்படுகின்றனர். இதுபோல பாலியல் குற்றச் செயல்களில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு ஆசிரியர் சங்கங்கள் துணை நிற்பது இல்லை.

சாதாரண பள்ளி நேரங்களில் மற்றும் வகுப்பறையில் இது போன்ற நிகழ்வுகள் நடப்பதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவு. மதிப்பெண்களை குறிவைத்து நடத்தப்படும் சிறப்பு வகுப்புகள் தனி பயிற்சிகள் போன்ற நேரங்களில் தான் இதற்கான சூழல் ஏற்படுகின்றன. இவற்றை மாணவர்கள் நலன் கருதி தவிர்க்க முடியாது. ஆனால் சிறப்பு வகுப்புகளும் ,தனி பயிற்சிகளும் தீவிர கண்காணிப்புக்கு உள்ளாக்கப்பட வேண்டும். பெண் ஆசிரியர்கள் மேற்பார்வையில் நடைபெற வேண்டும்.

ஒப்பீட்டு அளவில் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு குறைவான ஊதியமே வழங்கப்படுகின்றது. வசதியான மாணவர்கள், வசதியான பள்ளிச் சூழல் மாணவர்களிடம் பெறப்படும் நன்கொடை மற்றும் கட்டணம் ஆகியவற்றை அங்கு பணியாற்றும் ஆசிரியர்கள் நன்றாக தெரிந்து வைத்துள்ளனர். அவற்றுடன் தங்களது ஊதியத்தை ஒப்பிடும்போது அவர்களுக்கு மிகப் பெரிய மன அழுத்தம் ஏற்படுகிறது. இதுவே ஒரு சில ஆசிரியர்கள் தவறு செய்வதற்கும் மாணவர்களை துன்புறுத்துவதற்கும் அடித்தளம் அமைத்துத் தருகிறது.

மாணவரிடம் வசூலிக்கும் கட்டணத்திற்கு ஏற்ப தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தை உயர்த்த வேண்டும். இதை அரசு முறையாக கண்காணிக்க வேண்டும்.

அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு தொடர்ச்சியாக உளவியல், குழந்தைகளை கையாளுதல் போன்ற பல்வேறு தலைப்புகளில் குறிப்பிட்ட கால இடைவெளியில் சிறந்த கருத்தாளர்களைக் கொண்டு பயிற்சிகளை கல்வித்துறை அளிக்கிறது. இந்த பயிற்சிகளை பெறுவதன் மூலம் தங்களது வகுப்பில் உள்ள குழந்தைகள் யாராவது சுணக்கமாகவோ, கவலையுடனோ தென்பட்டாலும் அந்த வகுப்புக்கு வரும் மற்ற ஆசிரியர்கள் அதை கவனித்து அவர்களின் பிரச்சனைகளை ஆராய்கின்றனர். ஆனால், தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு குழந்தை உளவியல் பற்றிய பயிற்சிகள் அவ்வளவாக நடைபெறுவது கிடையாது. தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கும் இதைப் போன்ற பயிற்சிகளை அளிக்க நிர்வாகத்தை கல்வித்துறை நிர்ப்பந்திக்க வேண்டும்.

தங்களுடைய பள்ளியின் நற்பெயருக்கு கேடு ஏற்பட்டு அதனால் மாணவர் சேர்க்கை குறையும், வருமானம் குறையும் என்ற காரணத்தினால் ஒரு சில தனியார் பள்ளி நிர்வாகிகள் இதை போன்ற பாலியல் துன்புறுத்தல் விஷயங்களை மறைப்பதற்கு முயல்கின்றனர். ஆனால் பத்திரிக்கையாளர்களும், சமூக ஊடகங்களும் விழிப்பாக இருக்கும் இந்த காலகட்டத்தில் மறைப்பது என்பது இயலாத காரியம். அதற்கு பதிலாக, “இந்த ஆசிரியர் தவறாக நடக்க முற்பட்டார் அதனால் அவரை நடவடிக்கை எடுத்து பள்ளியில் இருந்து நீக்கி இருக்கிறோம் ” என்று கூறுவது தான் பெற்றோர்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தும். அந்த நிர்வாகத்திற்கும் மரியாதையை பெற்றுத் தரும்.

மிகப் பெரிய முதலீட்டில் கல்வி நிறுவனங்களை உருவாக்கி இருக்கும் தனியார் பள்ளி நிர்வாகிகளுக்கு இது போன்ற ஆசிரியர்களின் செயல்கள் தர்மசங்கடத்தை அளிக்கின்றன. பூசி மெழுக முயற்சிக்கிறார்கள். அது குற்றங்கள் வளர்வதற்கே வழி வகுக்கிறது. எனவே, வெளிப்படையாக நடப்பதற்கு தனியார் பள்ளி நிர்வாகங்கள் முன்வர வேண்டும்.

வழிபாட்டுத் தலங்களுக்கு செல்லும்போது கூட தங்கள் குழந்தைகளை கையிலேயே பிடித்துச் செல்லும் பெற்றோர்கள் பள்ளி வளாகத்திலோ தங்கள் குழந்தைகளை சுதந்திரமாக விட்டு விட்டு நிம்மதியாக வீட்டுக்குச் செல்கின்றனர். இதற்கு ஒரே காரணம் ஆசிரியர்கள் தங்கள் குழந்தைகளை கண்ணும் கருத்துமாக பார்த்துக் கொள்வார்கள் என்ற நம்பிக்கையில்தான். இந்த நம்பிக்கைக்கு ஊறு விளைவிக்கும் விதமாக ஒரு சில ஆசிரியர்கள் நடந்துகொள்வது பள்ளிக்கல்வியின் மீதான நம்பகத்தன்மைக்கு ஊறு விளைவித்துவிடும்!

நாகை பாலா

மாவட்ட ஒருங்கிணைப்பாளர்

குழந்தைநேயப் பள்ளி கூட்டமைப்பு

நாகப்பட்டினம் மாவட்டம்.

[email protected]

 

Support Aram

நேர்மையான,வெளிப்படையான,சுதந்திரமான இதழியலுக்கு தோள் கொடுங்கள்.

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time