யதார்த்தமான கலைப் பார்வை, சமத்துவ உணர்வு , விளிம்பு நிலை மக்கள் பால் அன்பு , பெண் நிலைவாதம், ஒடுக்கப்பட்ட மக்களுக்கான அதிகாரம் போன்ற கருத்தாடல்கள் மீதான நம்பிக்கை கொண்ட ஞானராஜசேகரன் இந்த முறை பெண்ணிலைவாத பார்வையோடு ஐந்து உணர்வுகள் படத்தை தந்திருக்கிறார்.
எழுத்தாளர் ஆர். சூடாமணியின் ஐந்து கதைகளை மையப்படுத்தி இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே மோகமுள் , பாரதி ,பெரியார், ராமானுஜன் படங்களை தந்தவர் என்ற வகையில் இயக்குனர் ஞானராஜசேகரன் மீதான பெரிய எதிர்பார்ப்போடு தான் இந்த படத்தை பார்க்க சென்றோம்.
பெண் உடல்,பெண் மனது, பெண்ணிலைவாத விடுதலை உணர்வை நாற்பதாண்டுகளுக்கு முன்பே மிகச்சிறப்பாக தன் கதைகளில் கொண்டு வந்தவர் சூடாமணி. அதை திரைப்படமாக்குவதற்கே ஒரு பக்குவம் வேண்டும். அது பிழையின்றி நடந்தேறியுள்ளது!
தமிழில் இயக்குநர்சிகரம் கே பாலசந்தர் எடுத்த ஒரு வீடு இரு வாசல் படத்துக்கு பிறகு ஒரு திரைப்படத்தில் ஐந்து கதைகள் இடம்பெற்ற ஒரு செல்நெறி நோக்கிய anthology தொகுப்பு ஐந்து உணர்வுகள்.
இயக்குனர் பாலுமகேந்திரா பல்வேறு எழுத்தாளர்களின் கதைகளைக் கொண்டு , கதை நேரம் என்ற தொடரை சன் தொலைக்காட்சிக்காக anthology தொடராக அல்லாமல் புதியதொரு தளத்தை தொட்டதும் ஞாபகத்தில் இருக்கிறது.
விடலைப் பருவத்து மாணவன் டியூஷன் கற்றுதரும் பெண்மீது கொள்கின்ற ஈர்ப்பு எதன் பாற்பட்டது என உணர்த்தும் கதை தான் இரண்டின் இடையில்! மிக நுட்பமாக அதே சமயம் விரசமில்லாமல் சொல்லப்பட்டுள்ளது!
இளவயது விதவை அம்மாவை உணர்வுகள் கொண்ட சக உயிரியாக எண்ணத் தவறுகிறான் மகன். தன் இளவயது மனைவியோடு மகன் இங்கிதமில்லாமல் நடத்தும் சல்லாபங்களினால் சங்கடத்திற்காளாகி, கண்ணியமாக, காரணத்தையும் கூறாமல் மகளிர் தங்கும் விடுதிக்கு போகும் அம்மாவைச் சொல்லும் கதை அம்மா பிடிவாதக்காரி.
வரதட்சிணை காரணமாக வாழ்க்கை மறுக்கப்பட்ட ஒரு பெண் மறுத்தவனே மறுபடியும் 15 ஆண்டுகள் கழிந்து திரும்பவும் ஒரு விடோவாக வந்து வாழ்க்கைக்கு அழைக்கும் போது எடுக்கும் முடிவை பற்றி சொல்லும் கதை பதில் பிறகு வரும். இதில் செக்ஸ் எனும் இயல்பான உணர்விற்கு திருமணம் எனும் வர்த்தக நடவடிக்கை தடையாக இருப்பதையும் , திருமணம் ஆகாததனால் கன்னிமைத்தன்மையோடு வாழ்வதை மறுத்த பெண்ணின் கதையாகவும் சொல்லப்பட்டு உள்ளது.
தாம்பத்திய வாழ்க்கைக்கு பெற்றோர்களால் தடங்கலாக கருதப்படும் குழந்தை தாத்தா பாட்டியிடம் வளர்கிறது. தாய்,தந்தை பாசமே கிடைக்காமல் வளர்ந்த குழந்தை பெரியவளான பின் பெற்றோர்களிடம் வாழ வரும் அழைப்பைப் புறந்தள்ளி தாத்தா பாட்டியுடனேயே வாழ முடிவெடுக்கும் வளரிளம் சிறுமியின் கதை தனிமைத் தளிர்.
பாலியல் நெருக்கடிக்கு பலியான ஒரு பெண் தன்மானத்துடன் தனிமையில் வாழ்ந்து காட்டுகிறாள்! நட்புக் குடும்பத்தின் பெண்ணை , பெண் பார்க்க வருபவன் ஒரு பாலியல் வன்முறையாளன் என்பதை , சாட்சியாக நின்று அம்பலப்படுத்தும் பெண்ணின் கதை களங்கம் இல்லை.
அம்மா பிடிவாதக்காரியின் ஸ்ரீரஞ்சனி,பதில் பிறகு வரும் கதையின் சுஜிதா,களங்கம் இல்லை கதையின் ஷ்ரேயா அஞ்சன், தனிமைத் தளிரில் சத்யப்பிரியா ஆகியோர் மிகக் கச்சிதமாக அந்தந்த உணர்வுகளைப் பிரதிபலிக்கும் பாத்திரங்களாக மாறி நிற்கிறார்கள்.
மணிபாரதி,சோஜின்,பேபி நிஷா கவனத்தை ஈர்க்கிறார்கள்.
சூடாமணியின் கதைகளில் வரும் வசனங்களையே பெரும்பாலும் படத்திலும் கையாண்டிருப்பதால் படத்தின் ஆன்மா ஒளிர்கிறது.
எடிட்டிங் பீ.லெனின்,ஒளிப்பதிவு சி.ஜே.ராஜ்குமார்,இசை ஸ்ரீகாந்த் தேவா ,கலை காஞ்சி இளங்கோவன், உடைதேர்வு சகுந்தலா ராஜசேகரன் , இணை இயக்கம் எஸ்.சம்பத்குமார் என பங்களித்திருக்கிறார்கள்.
கமர்சியல் படங்களின் ஆக்ரமிப்பும் இம்மாதிரியான படங்களுக்கு ஆதரவும் தராத கார்ப்பரேட் கைளில் உள்ள தியேட்டர் ஏகபோகமும் ஐந்து உணர்வுகள் படத்தை பாதித்திருக்கிறது.
Also read
தான் திட்டமிட்ட திரையரங்களை பெற இயலாத நெருக்கடியில் இயக்குநர் ஞானராஜசேகரனும் அகப்பட்டுக் கொண்டார்.சென்னை மண்டல திரைப்படத் தணிக்குழு அதிகாரியாக பணியாற்றியவருக்கே வாய்ப்புகள் மறுக்கப்பட்டுள்ளன.இதை ஓடிடி தளத்தில் கொண்டு வந்திருந்தால் மக்கள் குடும்பமாக பார்த்து கொண்டாடி இருப்பார்கள்.
நல்ல படங்களை தமிழக ரசிகர்கள் என்றும் கை விட்டதில்லை என்ற எதிர்பார்ப்போடு கிடைத்த தியேட்டர்களுக்கு படத்தைக் கொண்டு வந்திருக்கிறார் இயக்குநர்.
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் போன்ற அமைப்புகள் படத்தை ஆதரித்து களத்தில் நிற்பது பாராட்டத் தக்கது.
ஆர்.சூடாமணி நினைவு அறக்கட்டளை சார்பாக படத்தை தயாரித்திருக்கிற கே.பாரதி, நீதிமான் கே.சந்துருவிற்கு வாழ்த்துகள்.
விமர்சனம்; இரா.தெ.முத்து
எழுத்தாளர், கவிஞர், கலை,இலக்கிய செயற்பாட்டாளர்
கோவையில் இந்தப் படங்களைப் பார்த்தேன்.திரைமொழி இயக்குநருக்கு வசப்படவில்லை. நாடகப் பாணியில் அமைந்த விசுவின் படங்களைப் போல் இருந்தன. காட்சியமைப்புகள் நாடகங்களை விட மோசமாக உள்ளன. தமிழிலும், பிற மொழிகளிலும் சிறந்த படங்கள் வந்திருந்தும் , இயக்குநர் இப்படிப்பட்டப் படைப்புகளைத் தந்திருப்பது வியப்புக்குரியது. இன்றைய இளைஞர்கள் குறைந்த செலவில் சிறந்த குறும்படங்களை எடுத்துள்ளனர். பாலு மகேந்திராவின் கதைநேரம் இன்றும் நினைவில் நிற்கும் சிறந்த படைப்பு.