தேனீர் தருவதும்,போட்டி உண்ணாவிரதம் இருப்பதும்… பாஜகவின் கீழ்த்தரமான நாடகம்…!

-சாவித்திரி கண்ணன்

ராஜ்யசபையில் இடைக்கால சஸ்பெண்ட் செய்யப்பட்டு போராடிக் கொண்டிருக்கும் எம்.பிக்களுக்கு ஹரிவன்ஷ் சிங் காலையில் தேநீர் கொடுக்க வந்ததைப் புறக்கணித்தனர் எட்டு எம்.பிக்களும்!

இதென்ன, ஏதோ தேநீர் கிடைக்கவில்லை என்பதற்காக இவர்களெல்லாம்,போராட்டம் நடத்தி வருகிறார்களா…? அல்லது என்னை எதிர்த்தவர்களுக்கும் நான் தேநீர் கொடுத்தேன் என, ஹரிவர்ஷன் சிங் அவரது பெருந்தன்மையை வெளிக்காட்டிக் கொள்ளும் ராஜதந்திரமா? எவ்வளவு கீழ்த்தரமாகப் பிரச்சினையைத் திசைதிருப்ப நாடகங்கள் அரங்கேறுகின்றன என்று பாருங்கள்…!  இவர் கொடுக்கும் தேநீரை வாங்கி குடித்துவிட்டு, விவசாயிகள் எக்கேடு கெட்டாலும் பரவாயில்லை என்று எம்.பிக்கள் எழுந்து போய்விடுவார்கள் என நினைத்தாரா…தெரியவில்லை.

ராஜ்ய சபை என்பது அறிஞர்கள், அனுபவஸ்தர்கள்,மூத்த அரசியல்வாதிகளைக் கொண்ட ஒரு சபையாகும். ஆனால்,அந்த சபையைக் கட்டப்பஞ்சாயத்தாக மாற்றிய பெருமை, வரலாற்றில் பாஜகவுக்கு மட்டுமே உரியத் தனிச் சிறப்பாகும்.

’’நாங்கள் நினைத்தால் அதை நடத்தியே தீருவோம்..ஜனநாயகம் எல்லாம் எங்கள் கால்தூசுக்குச் சமானம்…’’ என்ற ஆளும் கட்சியின் பிரதிநிதியாக  ராஜ்யசபையில் வெளிப்பட்டார்,அன்று அவைக்கு தலைமை தாங்கிய ஹரிவர்ஷன் சிங்!

விவசாயிகளின் வாழ்க்கையை படுபாதாளத்திற்குத் தள்ளும் மசோதாக்கள் குறித்த முறையான விவாதத்திற்கு ராஜ்யசபா துணைத் தலைவர் ஹரிவர்ஷன் நாராயணன் தயாரில்லை. மசோதாவை நிலைக்குழுவிற்கு அனுப்பத்  தயாரில்லை, தேர்வுக்குக் குழுவில் விவாதிக்கவும் தயாரில்லை..என்று அவையை ஜனநாயக விதிமுறைகளுக்கு மாறாக நடத்திச் சென்றார் ஹரிவன்ஷ் நாராயணன்.இதனால் தான் எதிர்க்கட்சி எம்.பிக்களிடையே கொந்தளிப்பு ஏற்பட்டது. இந்த விவசாய மசோதாக்கள் குறித்து விரிவான விவாதங்கள், திருத்தங்கள் தேவை.. என்று மீண்டும், மீண்டும் கோரிக்கை வைத்து, அவையை அடுத்த நாளுக்குத் தள்ளி வைக்கக் கோரினர் எதிர்க்கட்சி எம்.பிக்கள்!

ஆனால்,அவையை நடத்திய ஹரிவர்ஷன்,இதைக் காதில் வாங்கியதாகவே காட்டிக் கொள்ளவில்லை. பேசுகிற யாரையும் நிமிர்ந்து கூட பார்க்கவில்லை… குரல் வாக்கெடுப்பு என்றார்..அதையும் கூட டிவிஷன் வாரியாக நடத்த முயற்சிக்கவில்லை…! முறையாக்க விவாதம் நடந்து வாக்கெடுப்பு நடந்திருந்தால் விவசாய மசோதா நிச்சயம் ராஜ்ய சபையில் தோற்கடிக்கப்பட்டிருக்கும்  என்பது அனைவருக்கும் தெரிந்த உண்மை! ஏனெனில், பாஜகவை ஆதரிக்கும் டி.ஆர்.எஸ்,சிரோன்மணி அகாலிதள் உள்ளிட்ட 12 கட்சிகள் அன்று மசோதாவிற்கு எதிர் நிலை எடுத்திருந்தனர்.

இவ்வளவு அராஜகத்தையும் நிகழ்த்தியதோடல்லாமல், நியாயத்திற்காக உறுதியோடு போராடிய எட்டு ராஜ்யசபா எம்.பிக்களையும் இந்த கூட்டத் தொடர் முழுமையும் கலந்து கொள்ள வாய்ப்பின்றி சஸ்பெண்ட்டும் செய்துள்ளனர். சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள எம்.பிக்கள் நேற்று இரவு முழுவதும் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தை  நடத்தியுள்ளனர் என்றால், அங்கு வந்து அவர்களுக்கு தேநீர் கொடுக்கிறார் ஹரிவன்ஷன் சிங்! இதன்மூலம் அவர் உணர்த்த விரும்புவது என்ன?

ஆனால் தற்போது அவருக்கு மனசாட்சி உலுக்கியதோ என்னவோ தெரியவில்லை அவர் தொண்டைக்குள் சோறு இறங்கவில்லை போலும்…ஆகவே அவரும் 24 மணி நேரம் உண்ணாவிரதம் இருக்கப் போவதாக வெங்கய்யா நாயுடுவுக்கு  கடிதம் எழுதியுள்ளார்.முன்னதாக  ஹரிவன்ஷ் சிங் மீதான நம்பிக்கை இலா தீர்மானத்தை வெங்கய்யா நாயுடு எடுத்துக் கொள்ள மறுத்துவிட்டார் என்பது கவனத்திற்குரியதாகும்.

ஒரு சில கார்ப்ரேட்டுகளுக்காக நாட்டின் ஒட்டு மொத்த விவசாயிகளையும், சிறு வியாபாரிகளையும் இழக்கத் துணிந்த பாஜகவினர் எட்டு பேர் போராடி என்ன ஆகிவிடப் போகிறது என நினைக்கலாம்…! ஆனால், இன்று அந்த எட்டுபேருக்காக அத்தனை ராஜ்யசபை எம்.பிக்களும் சபையை புறக்கணித்துவிட்டனர்! விரைவில் ஒட்டுமொத்த மக்களும் பாஜகவை புறக்கணிக்கும் நாள் நெருங்கிக் கொண்டு உள்ளது.

Support Aram

நேர்மையான,வெளிப்படையான,சுதந்திரமான இதழியலுக்கு தோள் கொடுங்கள்.

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time