ஆசிரியர் பற்றாக்குறையால் அல்லாடும் அரசுப் பள்ளிகள்!

- ஈரோடு உமா

தமிழகப் பள்ளிக் கல்வியின் சவால்கள் : 6

தமிழக அரசு பள்ளிகளில் பல்லாயிரக்கணக்கில் ஆசிரியர்கள் பற்றாகுறை நிலவுகிறது. இன்னும் ஓராசிரியர், ஈராசிரியர் பள்ளிகளா..? ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப அரசுக்கு ஆர்வமில்லையா? இது காலப் போக்கில் அரசுபள்ளிகளை காலாவதியாக்கும் சூழ்ச்சியா..?

அரசு ஆரம்ப பள்ளிகளில் 1997 ஆம் ஆண்டு வரை இருபது மாணவர்க்கு ஒரு ஆசிரியர் என்ற அரசாணையே பின்பற்றப்பட்டு வந்தது. ஆனால், 1997 முதல்  1 : 40 என்று மாறியது.  மாணவர் எண்ணிக்கை உயர்த்தப்பட்டு, ஆசிரியர் பணியிடங்கள் குறைக்கப்பட்டன. கல்வி உரிமைச் சட்டம் வந்த பிறகு 30 : 1 என்ற எண்ணிக்கையில் மாணவர் ஆசிரியர் விகிதம் மாறியது.   6-7 வகுப்புகளுக்கு  அது 1 : 35 என்றானது.  அதனைத் தொடர்ந்து அரசுப் பள்ளிகளில் பல்வேறு பிரச்சனைகள் உருவாகின . அரசுப் பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கைக் குறைய ஆரம்பித்தது. இருக்கும் ஆசிரியர்களை பற்றாகுறையான வேறு பள்ளிகளுக்கு நியமித்த அரசு ,  பள்ளிகளில் புதிய ஆசிரியர் நியமனத்திற்கே .இடமில்லாத சூழலை உருவாக்கியது.

ஆசிரியர் மாணவர் விகிதத்தில் ஏகப்பட்ட குழப்பங்கள் …..!

தொடக்கப் பள்ளிகளைப் பொறுத்தவரை 60 குழந்தைகள் இருந்தால் தான் 2 ஆசிரியர்கள்  பணியில் இருப்பர். இதற்கு காரணம் , கல்வி உரிமைச் சட்டம் கூறிய 1:30 விகிதாச்சாரம் தான் பின்பற்றப்படுகிறது.

ஆனால், வருடங்கள் ஆக ஆக , ஆசிரியர்களுக்கு அளவில்லாத  பணிச் சுமைகளும் கற்பித்தல் அல்லாத பல்வேறு மக்கள் தொகை கணக்கெடுப்பு, புள்ளிவிபரங்கள் சேகரிப்பு என வேறு பணிகள் தருவது ஒரு புறம் , ஆசிரியர்களை பற்றாகுறையை சமாளிக்க வேறு பள்ளிகளுக்கு அனுப்புவது எனத் தொடர்ந்தது.

ஒரு கல்வி ஆண்டில் ஜூன் மாதம் மாணவர் சேர்க்கை நடைபெறும். ஆகஸ்ட் மாதத்தின் முதல் தேதிக்கு முன்பு ஓரளவு மாணவர்கள் சேர்க்கை முடிந்திருக்கும். ஆகையால் ஆகஸ்ட் -1  தேதியை வைத்து  ஆசிரியர் பணியிட நிர்ணயம்  மேற்கொள்ளப்படும்.

கொரானா காலச் சூழலில் கடந்த இரு வருடங்களாக அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை  புதியதாக 5.80 லட்சம் உயர்ந்துள்ளது என்று கல்வி அமைச்சரே  குறிப்பிடுகிறார்.  இது மிகப் பெரிய வரவேற்கத்தகுந்த  மாற்றம் . ஆனால்,  தேவையான  ஆசிரியர் நியமனங்கள் இன்னும் உருவாகவில்லை. தற்போது நவம்பர் மாதமே முடியும் சூழலில் ஆசிரியர் /மாணவர் விகிதம்  கணக்கெடுப்புப் பணி ,தமிழ்நாடு முழுவதும்  உள்ள பள்ளிகளில் நடைபெற்று வருகிறது.

இன்னும் கூட தமிழ் நாட்டில் பரவலாக ஓராசிரியர், ஈராசிரியரைக் கொண்டு செயல்படும் பள்ளிகள் உள்ளன! இப்படிப்பட்ட பள்ளிகளில் எப்படி பெற்றோர்கள் பிள்ளைகளை சேர்ப்பார்கள்? இதனால் மாணவர் சேர்க்கை அதிரடியாக குறைவதும், அந்த காறனத்தைக் காட்டி அரசு பள்ளிகள் மூடப்படுவதும் நடக்கின்றன!

பெருங்காட்டூர், ஜவ்வாதுமலை ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 238 மாணவர்களுக்கு இரண்டு ஆசிரியர்கள் மட்டுமே பணிபுரிகின்ற நிலை , கிருஷ்ணகிரி மாவட்டத்தில்   ஒரு ஒன்றியத்தில் மட்டுமே தோராயமாக 170 காலிப் பணியிடங்கள் காலியாக உள்ளன! அதே போல தர்மபுரி மாவட்டத்தில்  தொடக்க வகுப்புகளில் ஆசிரியர்களே இல்லாத நடுநிலைப் பள்ளிகள் என ஏராளமான பிரச்சனைகள் அரசுப் பள்ளிகளை ஆட்கொண்டுள்ளன.

மூலைக்கரைப்பட்டி நான்குநேரி ஒன்றியம் திருநெல்வேலி மாவட்டம் ஊராட்சி ஒன்றியப் பள்ளியில் கடந்த மூன்று ஆண்டுகளாக மூன்று புதிய காலிப்பணியிடங்கள் நிரப்பப் படவில்லை. இந்த ஆண்டும் 470 குழந்தைகளுக்கு. 7 ஆசிரியர்கள் மட்டுமே போதிய ஆசிரியர்கள் இல்லை  என்று ஊர் மக்கள் வருந்துகின்றனர்.

இப்படியான சூழலில் முதுகலை ஆசிரியப் பணியிடங்கள் 2,774 கடந்த ஆண்டு கணக்குப்படி காலிப் பணியிடங்களாக இருக்கின்றன. அவற்றையும்  பெற்றோர் ஆசிரியர் கழகம் வழியாக நியமித்துக் கொள்ள அரசாணை பிறப்பித்துள்ளது  அரசு. அதாவது, மிகக் குறைந்த ஊதியத்திற்கு ஆசிரியர்களை தற்காலிகமாக நியமித்து சமாளித்துக் கொள்ள வேண்டுமாம்!

முதலில் ஆசிரியர்கள் என்ன சொல்கிறார்கள்?  என்று கேட்போம்.

11,12 வகுப்புகளுக்கு ஆசிரியர்களே இல்லை!- பாலாஜி ,

பட்டதாரி ஆசிரியர் ,கருப்பம்புலம் , நாகப்பட்டினம் மாவட்டம்

ஆசிரியர்– மாணவர் விகிதப்படி கணிசமான ஆசிரியர் பணியிடங்கள் குறைக்கப்படுகின்றன.நாம் வகுப்புக்கு ஒரு ஆசிரியர் கேட்கிற நிலையில்  மாணவர் எண்ணிக்கை  கணக்கைக் கொண்டு இருக்கிற ஆசிரியர்களையும் குறைக்கிறார்கள். அதிலும் கிராமப்புற உயர் நிலை ,மேல் நிலைப்பள்ளிகளில் பாடத்திற்கு ஒரு ஆசிரியர் கூட இல்லை. இருக்கிற பட்டதாரி ஆசிரியர்களை டெபுடேஷன் என்ற பெயரில் அலைக்கழிக்கப்போகிறார்கள்.

போன ஆண்டு தரம் உயர்த்தப்பட்ட   மேல் நிலைப்பள்ளிகளுக்கு இன்னும் முதுகலை ஆசிரியர்களே நியமிக்கவில்லை. அதனால் அங்கெல்லாம் 11,12 மாணவர்கள் இதுவரை ஆசிரியர் இல்லாமலே இருக்கிறார்கள்.

‘ஆசிரியர் எண்ணிக்கையை அதிரடியாய் குறைப்பார்கள்’ – அருணாச்சலம் ,

பட்டதாரி ஆசிரியர் , திருவண்ணாமலை மாவட்டம் 

எங்கள்  மாவட்டத்தில் ஒரே பஞ்சாயத்தில் இரண்டு உயர்நிலைப் பள்ளிகளை அரசு திறந்துள்ளது!

இதனால் மாணவர்கள் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது.

மேலும் மூன்று கிலோமீட்டர் தூரத்தில் ஒரு உயர்நிலைப் பள்ளியும் இரண்டு கிலோமீட்டர் தூரத்தில் இரண்டு உயர்நிலைப் பள்ளிகளும் ஒரே பஞ்சாயத்தில் இரண்டு உயர்நிலைப் பள்ளிகளும் எங்களுடைய சுற்றுப் பகுதியில் அமைந்துள்ளதை நினைத்து சந்தோஷப்பட முடியவில்லை!

காரணம், இப்படியான சூழலில் ஆசிரியர் எண்ணிக்கை இன்னும் அதிரடியாய் குறைப்பார்கள். மாணவர்கள் – ஆசிரியர்கள் விகிதாச்சாரம் குறைவது தான் சிக்கலே!

 

ஆசிரியர் பற்றாகுறை, அயற்சியே தருகிறது – பிரசாத்

பட்டதாரி ஆசிரியர் , ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பெருந்துறை கிழக்கு , ஈரோடு மாவட்டம்

30 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் வீதம் 121 அல்லது 125 அல்லது 130 பேர் கொண்ட மாணவர்கள் பயிலும்  பள்ளிகளில் ஐந்து ஆசிரியர்கள் பணிபுரிகிறார்கள்! அதே ஒன்றியத்தில் 258 மாணவர்களைக் கொண்டுள்ள எங்கள் பள்ளியிலும் அதே ஐந்து ஆசிரியர்கள் பணிபுரிகிறார்கள்! மாணவர்கள் எண்ணிக்கை இரு மடங்கானாலும் அதே ஆசிரியர் எண்ணிக்கை தான்! தற்போது 1/8/2021 கணக்கீட்டின்படி ஒரு ஆசிரியர் மட்டுமே எங்கள் பள்ளிக்குக் கூடுதல் பணியிடமாக உருவாக்க உள்ளதாகத் தகவல் வருகிறது. எதற்காக இத்தனை கஷ்டப்பட்டு முயற்சி எடுத்து கூடுதல் மாணவர்களை பள்ளியில் சேர்த்தோம் என்ற சோர்வே ஏற்படுகிறது!

‘தேவை 27, இருப்பதோ 19 ‘ – மூஸா ராஜா ஜூனைதி,

தலைமை ஆசிரியர்,  ஈ.கே.எம்.எம். அப்துல் கனி மதரசா , அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளி , ஈரோடு மாவட்டம்

1:30 என்றால் 600 குழந்தைகளுக்கு 20 ஆசிரியர் கொடுக்க வேண்டும்.ஆனால், 599 மாணவர்கள் பள்ளியில் இருக்கும் பட்சத்தில் அவர்களுக்கு 16 ஆசிரியர்கள் மட்டுமே வழங்கப்படும். இது எப்படி 1:30 ஆகும்? 200 மாணவர்கள் இருக்கக்கூடிய பள்ளிகளுக்கு மட்டும் தான் 1:30.

200க்கு மேல் மாணவர்கள் இருந்தால் 1: 40 என்பதும், 40 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்றே கணக்குப் போடுகிறார்கள். ஆரம்பப் பள்ளியில் ஒரு வகுப்பில் 40 குழந்தைகள் இருப்பின், அவர்களுக்கு எப்படி எழுத்துக்களை, கணக்குகளை கற்றுக்கொடுப்பது? இதை மேலே உள்ள எந்த புத்திசாலியும் புரிந்து கொள்வதில்லை.எனது பள்ளியில் 816 மாணவர்களுக்கு 19 ஆசிரியர் பணியிடங்கள் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது. மேலே கொடுக்கப்பட்டுள்ள அட்டவணையின் படி பார்த்தால் இருபத்தி இரண்டு ஆசிரியர்கள் வரவேண்டும். அல்லது 1:30  என்று பார்த்தால் 27 தரவேண்டும்.

‘ஒரே ஆசிரியர் எப்படி சமாளிப்பது?’ – கமலவல்லி,

இடைநிலை ஆசிரியர்  , வேதாரண்யம்  , நாகப்பட்டினம் மாவட்டம்

தொடக்கப்பள்ளிகளில் ஈராசிரியர்கள் மட்டுமே இருக்கும் வரை கல்வித்தரம் உயராது. அதிலும் ஒராசிரியருக்கு நிர்வாக வேலைகளே சரியாக இருக்கும். ஆக, கிட்டதட்ட ஒராசிரியர் பள்ளியாகிவிடும்! அடிப்படையை போதிக்கும் துவக்க நிலையில் குறைந்தபட்சம் மூன்று ஆசிரியர்கள் வேண்டும். தொடக்கப் பள்ளிக்கு நிரந்தர முழுநேர துப்புரவு பணியாளர் அவசியம் தேவை..இப்போது மழலையர் பள்ளி பரவலாக்கப்படவில்லை. அங்கன்வாடி செயல்படவில்லை.ஆக..மூன்று முதல் ஐந்து வயதுக்குட்டபட்ட குழந்தைகள் அரசுப்பள்ளிக்கே வருகிறார்கள்..ஐந்து வரை 35_குழந்தைகள்.. அங்கன்வாடியில்  8 முதல் 10 வரையிலான குழந்தைகள் , இத்தனை குழந்தைகளுக்கும் ஒரே ஆசிரியர் என்பது பொருந்துமா ?

‘ஒன்றாம் கிளாஷ் டீச்சரை விட்டுவிடுங்கள்!’ முருகன்,

இடைநிலை ஆசிரியர் , கள்ளர் சீரமைப்பு துறை, ஆரம்பப்பள்ளி, மதுரை மாவட்டம் 

அரசு, நமது  மாணவர்களின் கல்வியை கணக்கு பண்ணவில்லை மாறாக அவர்களது எண்ணிக்கையை மட்டும் கணக்கு பண்ணுகிறது .

ஆசிரியர் பணியிடங்களை குறைப்பதை உடனே செய்கிறது. ஆனால், தேவைப்படும் இடங்களில் புது பணியிடம் உருவாக்க  சவ்வு போல இழுக்கிறது . மிகப் பெரிய விளையாட்டை கல்வித்துறையில் விளையாடுகிறது அரசு!

ஒன்றாம் வகுப்பு ஆசிரியருக்கு கல்வித்துறையல்லாத வேறு பிற பணிகளைத் தரக்கூடாது. அவரது கவனம் கல்வியில் முழுமையாக இருக்குமாயின், பெற்றோர்கள் மாணவர்களை தொடர்ந்து விடுப்பு எடுக்காமல் பள்ளி அனுப்புவார்கள் எனில், தற்போது உள்ள பாடத்திட்டப் படி ஒன்றாம் வகுப்பு மாணவர்கள் சிறந்த கல்வி அறிவு பெறுவார்கள்.

 

‘அரசு பள்ளி வளர்ச்சியை அரசே விரும்பவில்லை! ‘ – நரசிம்மன் ,

 தலைமை ஆசிரியர் , ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி , தர்மபுரி மாவட்டம்

தொடக்கக் கல்வித் துறையில் மாணவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர்கள் நிர்ணயம் செய்வதில் அதிகப்படியான முரண்பாடு உள்ளது.

தொடக்கப் பள்ளியில்  1 முதல் 5  வகுப்புகளில் மாணவர் எண்ணிக்கை 91-120  இருப்பின்  – 4 ஆசிரியர்கள்  தரப்படுகின்றனர். அதே போல ,

121- 150 – 5 ஆசிரியர்கள்

151- 200 – 6 ஆசிரியர்கள்

201 – 240 – 7 ஆசிரியர்கள்

ஆனால்,  அதே எண்ணிக்கையிலான , நடுநிலைப்பள்ளிகளுக்கு

1 முதல்  5 வரையுள்ள வகுப்புகளில் பயிலும்

மாணவர் எண்ணிக்கை

91 – 120 – 4 ஆசிரியர்கள்

121- 200 – 5 ஆசிரியர்கள்

201 – 240 – 6 ஆசிரியர்கள்

ஏன் இந்த பாகுபாடு ?

இது குறித்து கேள்வி கேட்டால் அரசாணையின் படி பணியிடம் நிர்ணயிக்கப்படுகிறது என்ற பதிலே தரப்படுகிறது.  . அரசாணையே தவறாக உள்ளது! .

நடுநிலைப்பள்ளியில் 6 முதல் எட்டு வகுப்புகளில் தமிழ் வழி மற்றும் ஆங்கில வழியில் படிப்பவர்களை  தனித்தனியாக கணக்கிடக்கூடாது என்று கூறி , இரு வழியினும் படிப்பவர்களை ஒன்றாகச் சேர்த்து கணக்கிடும் போது ஆசிரியர் பணியிடம் பறிக்கப்படுகிறது. ஆனால், இதே வகுப்புகளுக்கு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் தமிழ் வழியில் பயிலும் மாணவர்கள் எண்ணிக்கையைத் தனியாகவும் ஆங்கில வழியில் பயிலும் மாணவர்களைத் தனியாகவும் கணக்கிட்டு  15 மாணவர்களுக்கு குறையாமல் இருந்தால் கூடுதல் ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயம் செய்யப்படுகிறது.

இவற்றையும் தாண்டி ஒருசிலர் ஆசிரியர்கள் தன்னலம் பார்க்காமல் சிறப்பான செயல்பாடுகளால் பல்வேறு எதிர்ப்புகளையும் சமாளித்து மாணவர் எண்ணிக்கையை அதிகப்படுத்தினால் ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயம் செய்வதில் தொடக்கப் பள்ளிகளைக் காட்டிலும்,   நடுநிலைப்பள்ளி பள்ளிகளுக்கு குறைவான ஆசிரியர்கள் ,

உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளியை காரணம் காட்டி நடுநிலைப்பள்ளிகளில்  குறைவான ஆசிரியர் பணியிடங்கள் என்றால்,   அரசு பள்ளிகள் வளர்ச்சி அடைவதை அரசு விரும்புவதில்லை என்று எண்ணலாமா ?

‘இரண்டே ஆசிரியர்கள்  தான்’ – ஜான் பெளலா

ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி , கொடைக்கானல் , திண்டுக்கல் மாவட்டம்

எங்கள் பள்ளியில்  தொடக்கப் பள்ளியில்  119 மாணவர்கள் பயில்கின்றனர். இடை நிலை ஆசிரியர்கள் இரண்டு பேர் மட்டுமே. நடுநிலைப் பள்ளியில் அதாவது 6-8 வகுப்புகளில் மொத்தமே 56 மாணவர்கள் தான்! ஐந்தாம் வகுப்புக்கு ஆசிரியர் இல்லை.

நகரவை மேல்நிலைப்பள்ளி, பத்மாவதிபுரம்,திருப்பூர் மாவட்டப் பள்ளியில் 770 மாணவர்களுக்கு 13 ஆசிரியர்கள் மட்டுமே பணியாற்றுவதாக வருந்துகிறார் ஆசிரியர் முத்துவேல்.

ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, பூலுவபட்டி, திருப்பூர் வடக்குப் பள்ளியின் ஆசிரியர் மணிகண்டப் பிரபு சொல்வது, அதனினும் கொடுமை , 900 மாணவர்களுக்கு 10 ஆசிரியர்கள் மட்டுமே!

அடிப்படைத் தேவை என்ன ?

ஆசிரியர்களின் மேற்சொன்ன பகிர்வுகளிலிருந்து  நாம் அறிந்து கொள்வது , அரசுப் பள்ளிக் மாணவர்களுக்கு ஆசிரியரை முறையாக நியமித்து உதவுங்கள் என்பதே.  முரண்பாடுகளைக் களைந்து, அனைத்து பள்ளிகளுக்கும் சரியான முறையில் ஆசிரியர் நியமனம் செயற்படுத்தப்பட வேண்டும்.

தொடக்கப் பள்ளிகளைப் பொறுத்தவரை 5 வகுப்புகள் கற்பிக்க 5 ஆசிரியர்கள் வேண்டும்  சட்டம் என்பது மக்களுக்காகத் தான் எனில், மாணவர்களின் நலன் கருதி வகுப்புக்கு ஒரு ஆசிரியரை நியமிக்க வேண்டும். மக்கள் ஏன் தனியார் பள்ளிகளை நோக்கிச் செல்கின்றனர் என்றால் அங்கு வகுப்புக்கு ஒரு ஆசிரியர் உண்டு. அது போல இருந்தால் தான் நம் அரசுப் பள்ளிகள் தரமான கல்வியை வழங்க முடியும். அதே போல் நடுநிலைப் பள்ளி , உயர்நிலைப் பள்ளி , மேல்நிலைப் பள்ளி என எல்லாவற்றிலும் பாட ஆசிரியர்கள் மாணவர் எண்ணிக்கைக்கு ஏற்ப தாராளமாக நியமிக்க வேண்டும். அப்போது தான் விருப்பமாக மாணவர்களாலும் கற்றுக் கொள்ள இயலும். அதே போல மருத்துவ விடுப்பு ,  நீண்ட விடுப்பு , மகப் பேறு விடுப்பு என ஆசிரியர்கள் விடுப்பில் செல்லும் போது மாற்று ஆசிரியர்கள் கட்டாயமாக நியமிக்கப்பட வேண்டும்.

அதோடு மட்டுமன்றி அலுவலகப் பணியாளர் , ஆய்வகப் பணியாளர் , இரவுக் காவலர் , சுகாதாரப் பணியாளர் என அனைத்து வகையிலும் ஒரு பள்ளி தன்னிறைவு பெறுதல் அவசியம்.

ஏற்கனவே, இந்தக் கல்வியாண்டில் 6 மாதங்கள் கடந்து விட்ட நிலையில் மாணவர் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படுவது மிகவும் அவசர அவசியத் தேவையாகும். பள்ளிக் கல்வி சந்திக்கும் சவால்களில் மிக முக்கியமானது கற்பித்தல் செயல்பாடுகளுக்கான ஆசிரியர்கள் பற்றாகுறை! எனவே  குழப்பம் இல்லாத வகையில் மாணவர்க்கு ஏற்ப ஆசிரியர்களை அமர்த்த அரசு உடனடியாக செயல்படுதல் அரசுப் பள்ளிகளை வீழ்ச்சியடையாமல் பாதுகாக்கும் .

கட்டுரையாளர் ; ஈரோடு உமா

கல்வியாளர், கல்வி தொடர்பான காத்திரமான கட்டுரைகளை தொடர்ந்து எழுதி வருபவர்! அசத்தும் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் இயக்கத்தின் ( A 3) மாநில ஒருங்கிணைப்பாளர்.                ‘கல்விச் சிக்கல்கள் தீர்வை நோக்கி’ நூலின் ஆசிரியர்.

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time