சாதியைத் துறந்த சான்றோன், வணங்காமுடி கவிதாசரண்!

- சாவித்திரி கண்ணன்

மிகக் கூர்மையான அரசியல் விமர்சகர், சமூக ஆய்வாளர், சமரசமற்ற பத்திரிகையாளர் என்பதே கவிதாசரணின் அடையாளம்! இன்றைக்குள்ள தொலைக் காட்சி ஊடகங்கள் எதுவும் இந்த நேர்மையான சிந்தனையாளரை, அறிஞரை அறிந்து நேர்காணல் செய்ததில்லை. வெகுஜன பத்திரிகைகள் அவரை பெரிதாக அடையாளப்படுத்தவில்லை. இயக்க சார்புகளற்ற சிந்தனையாளர்! மானுட விழுமியங்களை மனதில் கொண்டு இயங்கியவர், அடிநிலை மக்களை அரவணைப்பதே ஆகச் சிறந்த எழுத்துப் பணி என இயங்கியவர் கவிதாசரண்!

யாருடைய அங்கீகாரத்திற்காகவும் வளைந்து கொடுக்காமல், பொது நலன் சார்ந்து சமரசமற்று இயங்குபவர்களை அடையாளம் கண்டுணரும் அருகதை இன்னும் தமிழ்ச் சமூகத்தில் போதுமான அளவு வளரவில்லை.

ஆற்றொழுக்கான சிந்தனையோட்டம், அருவி போல வந்து விழும் சொல் மொழி ஆளுமை, சிந்தனையின் கம்பீரத்தையும், மொழியின் வளத்தையும் ஒருசேர உணர்த்தும் எழுத்தாற்றல்.. ஆகியவை அவரின் தனிச் சிறப்புகளாகும்!

கவிதா சரணைப் போன்ற கம்பீரமான ஒரு அச்சிதழை அதற்கு முன் நான் கண்டதில்லை. அதைப் படிக்க, படிக்க, இந்த மனிதர் என் நெஞ்சுக்கு நெருக்கமானார்! தொலைபேசி தொடர்புக்கு பிறகு நேரில் சந்தித்தும் பேசினேன்.

கவிதாசரண் இதழில் தான் முதன்முறையாக திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் எழுதிய இராபர்ட் கார்டுவெல்லின் அரும்பெரும் ஆராய்ச்சி சிறப்பை நான் அறிந்து கொண்டேன். அதை அவர் வெளியிட்டது பெருமையல்ல. அதில் தமிழின் தனித் தன்மையையையும், பறையர்களும் தமிழர்கள் தான் என்பதையும் குறிக்கும் 200 சொச்சம் பக்கங்கள் திட்டமிட்டு மறைக்கப்பட்டதையும் வெளிக் கொண்டு வந்ததில் தான் அவரது சிறப்பும், பெருமையும் இருக்கிறது.

சிரத்தை எடுத்து வாழ்நாள் சாதனையாக அவர் செய்த பணி என்பது, இராபர்ட் கால்டுவெல்லின் திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணமான A COMPARATIVE GRAMMAR OF THE DRAVIDIAN OR SOUTH INDIAN FAMILY OF LANGUAGES என்கிற ஆங்கில நூலின் மூலப்பிரதியை நீக்கப்பட்ட பகுதிகளையும் சேர்த்து சிதையாமல் அதை பெரும் செலவில் தன் வீட்டை அடகு வைத்து பதிப்பித்து வெளியிட்டது தான்! அந்த வகையில் அவர் ஒரு வரலாற்றுச் சாதனையாளராக நிலைபெற்றார் என்றும் சொல்வேன்.

கார்டுவெல் எழுதிய குறிப்புகளும், விளக்கங்களும் அதன் மூலம் நமக்கு கிடைக்க வரும் வெளிச்சத்தையும் திட்டமிட்டு மறைத்து மேல் தட்டு வர்க்கத்தின் வழியாக பல்கலைக் கழகம் பதிப்பித்து இருந்தது! இந்த உண்மையை பலவாறாகத் தேடிக் கண்டடைந்து அறிஞர் பொ.வேல்சாமி கவிதாசரணுக்கு எடுத்துக் கொடுக்கிறார். அதை கட்டுரையாகவும் பொ.வேல்சாமி கவிதாச் சரணில் எழுதி இருந்தார். இந்த அளவோடு ஒரு உண்மையை வெளிப்படுத்திவிட்டோம் என்ற நிலையோடு தான் பொதுவாக பத்திரிகை ஆசிரியர்கள் நின்று கொள்வார்கள். ஆனால், மறைக்கப்பட்ட அந்த வரலாற்றை தானே நேர் செய்ய வேண்டும் என களம் கண்டது தான் அவரது சிறப்பு!

இதன் மூலம் திராவிடம் என்ற கருத்தாக்கதிற்கு வலுவான ஆவணத்தை முதன் முதலில் தமிழ்ச் சூழலில் நிறுவினார். திராவிட மொழிகளில் தமிழே முதன்மையானது மட்டுமல்ல, தலைமைத்துவம் கொண்டது, சமஸ்கிருத கலப்பு இல்லாதது என்பதை கார்டுவெல் கண்டறிந்து தந்தார். அத்துடன் பறையர் சமூகத்தின் அறிவார்ந்த இறையாண்மையையும், தனி தன்மையையும் இறுமாப்புடன் பறையறிவித்தார். இவர் எப்போது பார்த்தாலும் தலித் உரிமைகள் என்று எழுதுகிறாரே இவர் ஒரு தலித் சிந்தனையாளர் போலும் என்று தான் நான் நினைத்தேன். ஆனால், அவர் பிறப்பால் தலித் அல்ல, என்பது மட்டுமல்ல, மேல் சாதி என்று சொல்லக் கூடிய வகையிலானவர். ஆனால், மிகக் கறாராகத் தன்னை சாதியற்ற  பொதுமனிதனாக நிறுவிக் கொண்டவர், என அறிந்த போது எனக்கான ஆதர்ஷமாக அவரை உணர்ந்தேன்.

உண்மையில் இந்தப் பணியை ஒரு திராவிட இயக்கமோ, திராவிட இயக்க சிந்தனையாளார்களோ செய்யாதிருந்த நிலையில் – ஒரு தலித் இயக்கமோ, தலித் அறிஞரோ செய்யாதிருந்த நிலையில் – அப்படி செய்வதற்கு இருக்கிறது என்பதே உணர்ந்திராத நிலையில் – தன் வாழ்நாள் சேமிப்பையே பணயம் வைத்து பேருழைப்பை நல்கி கொண்டு தந்தவர் கவிதா சரண். தான் வாழ்ந்த காலகட்டத்தின் தேவையை முன்னெடுத்து சென்று அதை நிறைவேற்றினார் என்றும் புரிந்து கொள்ளலாம்!

அதற்கான அங்கீகாரத்தையும், நன்றியையும் இந்தச் சமூகம் அவருக்கு தரவில்லை என்பதைக் குறித்தும் அவர் பொருட்படுத்தவில்லை. இந்த நூல் வெளியீடு பேராசியர் வீ.அரசுவின் முன் முயற்சியில் சென்னை பல்கலையில் நடந்த போது, அந்த நிகழ்வை கவிதாசரணின் அழைப்பின் வாயிலாக அறிந்து சென்று வந்தது  மறக்க முடியாத நிகழ்வாகும்!

லட்சியவாதிகள் நோக்கத்தை நிறைவேற்றுவார்களே அன்றி, தங்களை முன் நிறுத்திக் கொள்வதில்லை. அவர்களை நாம் தான் கண்டறிந்து உச்சிமோர்ந்து தூக்கி வைத்து நன்றி பாராட்ட வேண்டும்.

2006 ஆம் ஆண்டு அந்திமழை இதழுக்காக மு.யாழினி வசந்திக்கு தந்த நேர்காணலில் அவர் இவ்வாறு பேசியுள்ளார்.

”சமூகத்தில் பேசப்படாத செய்திகளை விவாதிப்பதற்காகவும், மனிதர்களைச் சிந்திக்க வைப்பதற்காகவும் இவ்விதழை நடத்தி வருகிறேன். சிந்திக்க வேண்டுமெனில், கேள்விகள் வேண்டும். அதனால்தான் கவிதாசரணில் நிறைய கேள்விகள் இடம்பெறுகின்றன.


வேறு வேலை இல்லை என்பதாலும் இவ்விதழைத் தொடர்ந்து நடத்தி வருகிறேன். பன்மைத்தன்மையில் ஒற்றுமையை வலியுறுத்துவதும் மாற்றுக் கலாச்சாரம் மற்றும் மாற்றுக் குரல்களுக்கு முக்கியத்துவம் தருவதும் கவிதாசரணின் முக்கிய நோக்கமாகும். அத்துடன் சமூகத்துடன் தொடர்ந்து உரையாடுவதற்காகவும் இவ்விதழை நடத்தி வருகிறேன்.

தமிழில் தலித் இதழ்கள் ஆரம்பிப்பதற்கு முன்பே ( 1991ல்) தலித்தியம் பேசிய ஒரு இதழ் கவிதாசரண். இன்றும் கருத்தியல் அளவில் தலித்தியம் குறித்து அதிகமாக விவாதித்துக் கொண்டிருக்கும் இதழ் இதுதான்! கவிதாசரண் இதழ் தொடர்ந்து தலித்தியம் பேசினாலும் தலித் இதழ் என தலித் அறிஞர்கள் ஒத்துக்கொள்வதில்லை. தலித் அல்லாதவர்கள் கவிதாசரண் தலித்தியம் பேசுவதாக அவர்களும் ஒத்துக் கொள்வதில்லை. நான் தலித் அல்லாதவன் என்றாலும் சாதியற்ற மனிதனாக வாழ்கிறேன்.

நான் யாருடைய அங்கீகாரத்தையும் எதிர்பார்ப்பதில்லை.

காலத்திற்குத் தேவையான கருத்தியலை முதன்மைப்படுத்தி பதிவு செய்து வருகிறேன்.” எனச் சொல்லிச் செல்கிறார் கவிதாச் சரண்!

அவருடைய தமிழ்ச் சமூகமும், தலித்திய கருத்தாடலும் என்ற நூல் மிகவும் முக்கியத்தும் வாய்ந்தது. நமக்கு சொல்லப்பட்ட வரலாறுகளும், அல்லது நாம் புரிந்து வைத்துள்ள வரலாறுகளும் எவ்வளவு மொன்னையானவை என்பதை கட்டுடைக்கும் கட்டுரைத் தொகுதி அது.

சிப்பாய்க் கழகம் பற்றிய புதிய வரலாற்றுப் பார்வையை – அதில் கிறிஸ்த்துவர்களாக மதம் மாறி இருந்தவர்கள் அழித் தொழிக்கப்பட்டதை – அம்பலப்படுத்தி இருப்பார். ஆஷ் துரையை சுட்டுக் கொன்ற வாஞ்சி நாதனை சுத்த சுயம்பான சுதந்திரப் போராட்ட வீரனாக மட்டுமே சித்தரித்து காட்டும் பொய்மையை இன்றைக்கும் வரலாற்று ஆய்வாளர்கள் நாசூக்காக செய்து கொண்டிருப்பதை கேள்விக்கு ஆளாக்கினார் கவிதாச் சரண்.

அவரது மறைவைக் கூட தமிழ்ச் சமூகம் போதுமான அளவு பொருட்படுத்தவில்லை என்பது உள்ளபடியே மிகுந்த வலியைத் தருகிறது.

‘யதார்த்தவாதி வெகுஜன விரோதி!’ உங்களைப் போன்று வாழப் பயணப்பட்டவர்கள் இது போன்ற வலியை பொருட்படுத்தக் கூடாது என்பதையும் புரிய வைத்துவிட்டீர்கள் அய்யா!

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time