காலதாமதமாகும் மருத்துவச் சேர்க்கை! கடும் நெருக்கடியில் மாணவர்கள்!

- சாவித்திரி கண்ணன்

மருத்துவக் கல்வியையே மரணிக்க செய்து கொண்டுள்ளது பாஜக அரசு! காலதாமதமான நீட் தேர்வு, இன்னும் கவுன்சிலிங் நடத்த முடியாத நிலைமை! 83,000 எம்.பி.பி.எஸ் மாணவர்களும், 45,000 பி.ஜி மாணவர்களும் கல்லூரிக்குள் கால் வைக்க முடியாத அவலம்! ஏன் இந்த நிலைமை?

நீட் எக்ஸாம் குளறுபடிகளால் நாளும்,பொழுதும் பாதிக்கப்படும் மாணவர்கள் கோர்ட் வாசலை மிதித்த வண்ணம் உள்ளனர் என்றால், மாநில அரசுகள் நடத்தி வந்த மருத்துவ தேர்வுகளை மத்திய அரசு தான் நடத்த முடியும் என்பதாக மையப்படுத்திவிட்டதால் நீட் எக்ஸாமே குறிப்பிட்ட காலத்தில் நடத்த முடியாமல் உள்ளது.

ஜனவரி முதல் மார்ச்சுக்குள் நடந்திருக்க வேண்டிய நீட் தேர்வை படிப்படியாக தள்ளிவைத்து செப்டம்பரில் தான் நடத்தியது மத்திய அரசு. சரி அவ்வளவு காலதாமதமாக நடத்திய பிறகு, ரிசல்ட் அறிவிப்பு கவுன்சிலிங் மாணவர் சேர்க்கை அனைத்தையும் விரைவில் நடத்தி இருக்க வேண்டுமல்லவா? அவ்வளவு கஷ்டப்பட்டு படித்து, தேர்வு எழுதி தேர்ச்சி அடைந்த மாணவர்கள் கல்லூரியில் கால்வைக்க முடியவில்லை. கிட்டதட்ட நான்கு மாதமாகியும் இன்னும் கவுன்சிலிங் மாணவர் சேர்க்கை நடக்கவில்லை. படிப்பு, பயிற்சி எதற்கும் வாய்ப்பில்லை. நாட்கள் ஓடிக் கொண்டே உள்ளன!

சமீப காலமாக அரசு மருத்துவமனைகள் விழி பிதுங்குகின்றன! மழைக்காலத்தில் அதிகரிக்கும் நோய்கள், வெள்ள பாதிப்பு, கொரோனா பேரிடர் மற்றும் டெங்கு காய்ச்சல் ஆகியவற்றால் நோயாளிகள் கூட்டம் நிரம்பி வழிகின்றன.

ஆனால், இந்த நேரத்தில் மத்திய பாஜக அரசின் வறட்டு பிடிவாதத்தால் நீட் தேர்வு எழுதிய முதுகலை மாணவர்களோ கல்லூரிக்குள் காலடி வைக்கவே முடியவில்லை. காரணம், இன்னும் அவர்களுக்கு கவுன்சிலிங் கூட நடக்கவில்லை.

முதுகலை மருத்துவ மாணவர்கள் அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு சிகிச்சை தருவதில் நன்கு பயிற்சி பெற்றவர்கள்! ஐந்தரை வருட எம்.பி.பி.எஸ் பயிற்சி அனுபவங்களைக் கொண்டிருப்பவர்கள்!

இதனால், இவர்களின் சேவை தடைபடுவதால் சிகிச்சைக்கான நோயாளிகள் கூட்டத்தை சமாளிக்கவே முடியவில்லை மற்ற மாணவர்களால்!. இரண்டாமாண்டு, மூன்றாம் ஆண்டு மருத்துவர்கள் வழக்கமாக 60 அல்லது 70 நோயாளிகளுக்கு தான் அதிகபட்சமாக சிகிச்சை தரமுடியும். ஆனால், அவர்கள் தற்போது நூறு அல்லது அதற்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை தர வேண்டிய கட்டாயத்தால் கடும் மனச் சோர்வு மற்றும் உடல் சோர்வுக்கு ஆளாகிறார்கள்! இது ஏதோ பத்து, பதினைந்து நாட்கள் சமாளிக்க வேண்டியதாயிருந்தால் சமாளித்திருப்பார்கள். ஆனால், சுமார் ஆறுமாத காலதாமதம் தான் அவர்களை சமாளிக்க முடியாமல் போராடும்படி நிர்பந்தித்து உள்ளது.

சென்னை எம்.எம்.சி கல்லூரி என்று எடுத்துக் கொண்டால் மட்டுமே ஆயிரம் முதுகலை மருத்துவ மாணவர்கள் இருக்க வேண்டிய இடத்தில் சுமார் 600 சொச்சம் பேர் இருந்து சமாளிக்கிறார்கள்! இதைப் போலத்தான் ஸ்டான்லி, கீழ்பாக்கம், செங்கல்பட்டு, மதுரை, கோவை என அனைத்து மருத்துவமனைகளிலும் உள்ள சூழல்!

இந்தியாவில் 289 அரசு மருத்துவக்கல்லூரிகள் உள்ளன! 276 தனியார் மருத்துவ கல்லூரிகள் உள்ளன. மொத்தம் 565 மருத்துவ கல்லூரிகள்! இவற்றில் மாணவர் சேர்க்கையை இன்னும் தள்ளிப் போடாமல், உடனே தொடங்க வலியுறுத்தி கல்லூரி மாணவர்கள் தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

நீட் தேர்வு முடிவடைந்து தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு இருக்கும் நிலையில் மத்திய அரசு உடனடியாக கவுன்சிலிங் முறையில் மாணவர்களை தேர்வு செய்து வகுப்புகளை தொடங்க வேண்டும் என கண்டன முழக்கங்களை எழுப்பியும், கோரிக்கை  பதாகைகளை ஏந்தியும் அரசு மருத்துவக் கல்லூரி முதுகலை மாணவர்கள் புற நோயாளிகளுக்கு தாங்கள் தந்து வந்த சிகிச்சையை நிறுத்தி போராடி வருகின்றனர்.

இது தமிழக மாணவர்கள் சந்திக்கும் பிரச்சினை மாத்திரமல்ல, தமிழகத்தில் அரசு மருத்துவ கல்லூரிகளில் சேர வேண்டிய  முதுகலை முதலாமாண்டு மாணவர்கள் 2,500 உள்ளிட்ட அகில இந்திய அளவில் சுமார் 45,000 முதுகலை மருத்துவ மாணவர்கள் தங்கள் ஓராண்டு கல்வியையும், பயிற்சியையும் இழந்துள்ளனர்.

அதே போல அகில இந்திய அளவில் சுமார் 565 மருத்துவ கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ் படிக்க காத்திருக்கும் மாணவர்கள் எண்ணிக்கை 83,000! பிடிஎஸ் படிக்க காத்திருக்கும் மாணவர்கள் எண்ணிக்கை 27,000. இந்த மாணவர்களும், அவர்களை நீட் தேர்வுக்கு தயார் செய்த பெற்றோர்களும் கிட்டதட்ட ஓராண்டு படிப்பு பாழான நிலையில் எவ்வளவு மன உளைச்சலுக்கு ஆளாகி இருப்பார்கள் என அரசாங்கம் கிஞ்சித்தும் யோசித்ததாகவே தெரியவில்லை.

என்ன தான் பிரச்சினை?

பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கு பத்து சதவிகித கோட்டாவை மத்திய அரசு கொண்டு வந்தது! அதில் நீதிமன்றம் கூட தலையிட முடியாது. கொள்கை முடிவு என்று பாஜக அரசு சொல்லிவிட்டது. சரி, உங்கள் கொள்கை முடிவு. அமல்படுத்திவிட்டு போங்கள். ஆனால், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கான அளவாக ரூபாய் எட்டு லட்சம் வருமானத்தை நிர்ணயித்து உள்ளீர்களே. ஆண்டுக்கு எட்டு லட்சம் சம்பதிப்பவர் எப்படி ஏழையாக இருக்க முடியும்? என விளக்குங்கள் என கேட்டது நீதிமன்றம்! அதற்கு மத்திய அரசால் பதில் சொல்ல முடியவில்லையோ என்னவோ.. வழக்கு நீட்டிக் கொண்டே போகிறது!

மத்திய அரசு தன் தவறை திருத்திக் கொண்டு வருமான வரம்மை குறைத்து ஏழைகள் பயன்பெற நியாயமான முடிவை அறிவிக்க வேண்டும். அல்லது இந்த ஆண்டுக்கு பழைய நிலையிலேயே மாணவர் சேர்க்கை நடத்திவிட்டு, நீதிமன்றத்திற்கு பதில் கூற நேரத்தை எடுத்துக் கொண்டிருக்கலாம். ஆனால், நீதிமன்றம் என்ன இதில் தலையிடுவது..?  நான் தீர்மானித்ததை கேள்விக்கு உட்படுத்துவதா? என் விருப்பப்படி நடக்காவிட்டால், எதுவுமே நடக்காது. மாணவர்கள் படிப்பு கெட்டால் என்ன? பயிற்சி தடைபட்டால் என்ன? நோயாளிகள் தவித்தால் என்ன? செத்தால் என்ன? என பிடிவாதம் காட்டுகிறது.

நீதிமன்றத்தில் இந்த வழக்கு அடுத்து ஜனவரியில் தான் விசாரிக்கப்படவுள்ளது. அப்போது தீர்வு கிடைக்குமா என்பதும் சந்தேகம் தான். தீர்வு கிடைத்தாலும், கவுன்சிலிங் முடிந்து கல்லூரிக்குள் காலடி வைக்க பிப்ரவரி ஆகலாம்! ஒரு வருடம் பாழானது பாழானது தான்! இவ்வளவு பொறுப்பற்ற அரசாங்கத்தை இது வரை சுதந்திர இந்தியா கண்டதேயில்லை!

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

 

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time