மயிலாப்பூர் கோயில் குளங்கள்  நிறைந்து வழியக் காரணம் என்ன?

- மாயோன்

வடகிழக்குப் பருவமழை போதும் போதும் என்று சொல்லும் அளவுக்கு கடந்த மாதத்தில் மழைப்பொழிவை கொடுத்தது.

ஏறக்குறைய மாநிலத்தில் ஓடும் எல்லா ஆறுகளும் ஏராளமான உபரி நீரை வங்கக் கடலில் கொண்டுபோய் சேர்த்தன. ஆட்சியாளர்கள் கமிஷன் வாங்கிக் கொண்டு மேற்கொண்ட  மழைநீர் வடிகால் திட்டங்களை இம்மழை அம்பலத்திற்கு கொண்டு வந்தது .அதே சமயத்தில் மக்கள் நலனை அடிப்படையாகக் கொண்டு செய்த உருப்படியான திட்டங்களை இந்த கனமழை காட்டிக்கொடுத்தது. மயிலாப்பூரின் மக்கள் பிரதிநிதியாக இருந்த ஓர் அரசியல் வாதி  சாலைகளில் பெருக்கெடுக்கும் மழை வெள்ளத்தை இங்குள்ள நான்கு குளங்களுக்கும் செல்லும் வகையில் குழாய்கள் பதித்தும் நிலத்தடி நீராக அவை மாறும் வகையில் தெருவோரங்களில் சிறிய கற்களை பதித்தும் சிறப்பு ஏற்பாடுகளை செய்தார். அதற்கான பலனை இந்த மழை கொடுத்துள்ளது.

திருவள்ளுவர் பிறந்த இடமாக கருதப்படும் மயிலாப்பூர் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய வரலாறு கொண்டது. நாயன்மார்களின் பாடல்பெற்ற  கபாலீஸ்வரர் கோயில் இங்கு உள்ளது. பன்னிரண்டு ஆழ்வார்களில் ஒருவரான பேயாழ்வார் இங்குதான் பிறந்தார்.

நம் முன்னோர் கோயில் குளங்களை கோயில் காரியங்களுடன், நிலத்தடி நீரை பெருக்கவும் மற்றும் வாழ்வியல் தேவைகளுக்காகவும்  பயன்படுத்திக்கொண்டனர்.  மயிலாப்பூரில் மட்டும் நான்கு குளங்கள் உருவாயின.

பெரியகுளம் எனப்படும் கபாலீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான குளம், இதன் அருகே சித்திரைக் குளம் எனப்படும் ஆதிகேசவ பெருமாள் கோவிலுக்கு சொந்தமான குளம், இந்த குளத்தில் இருந்து சுமார் அரை கிலோமீட்டர் தொலைவில் அருகருகே விருபாட்சீஸ்வரர் கோயில் குளமும் மாதவப்பெருமாள் கோயில் குளமும் அமைந்துள்ளன.

மயிலாப்பூர் சித்திரைக் குளம்

தமிழ்நாட்டில் உள்ள கோயில்குளங்களிலேயே கபாலீஸ்வரர் கோயில் குளம் இரண்டாவது பெரிய குளம் ஆகும். கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்புவரை இந்த குளத்தில் நீர் வற்றாமல் இருந்தது. இக்குளத்தை சுற்றி நான்கு மாட வீதிகளிலும் பிரபல ஓட்டல் நிறுவனங்கள் தங்கள் கிளையை   தொடங்கி ஏராளமான நிலத்தடி நீரை எடுக்க தொடங்கிய பிறகு இக் குளத்தில் தண்ணீர் மறையத் தொடங்கியது.

கடந்த செப்டம்பர் மாதத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கும் வரை இந்த குளம் காய்ந்துதான் கிடந்தது.  இத்தனைக்கும் கடந்த ஆண்டில் ஓரளவு மழைப்பொழிவு இருந்தது.

மழைப் பொழிவு ஏற்படும் சமயத்தில் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடும்  தண்ணீர் இந்த குளங்களில் வந்து விழும் வசதி தொடக்ககாலந் தொட்டு இருந்தது. நாளடைவில் பல இடங்களில் அடைப்புகள் ஏற்பட்டன.பிளாஸ்டிக் குப்பைகள்  இதற்கு முக்கிய காரணமாக இருந்தது.

இவற்றை சரிசெய்து இந்த குளங்களுக்கு   அதிக அளவு தண்ணீரை கொண்டு வந்து சேர்க்கும் வகையில் குழாய்களை பதிக்கும் பணிகளை மயிலாப்பூரில் 2016-21 காலகட்டத்தில் சட்டமன்ற உறுப்பினராக கடந்த ஆர் .நட்ராஜ்  திறம்பட செய்தார். சோலையப்பன் தெரு, சித்திரை குளம் வடக்கு  தெரு உள்ளிட்ட பல தெருக்களில் இதற்கான குழாய் பதிக்கும் பணிகள் நடைபெற்றன.

மாதவப் பெருமாள் கோயில் குளம்

இதேபோல பெரிய குளத்திற்கு மழை நீரைக் கொண்டு செல்லும் பணிகளை குளத்தைச் சுற்றியுள்ள மாடவீதிகளில் செயல்படுத்தினர்.  மற்ற இரண்டு குளங்களையும்  பல முறை பார்வையிட்டு உரிய நடவடிக்கை எடுத்தார்.

இந்தப் பணிகளை அவர் தனி ஆர்வம்  செலுத்தி  நிறைவேற்றினார்.

மசூதி தெரு,கேசவ பெருமாள் கோயில் மேற்கு தெரு உள்ளிட்ட பல தெருக்களில் நிலத்தடி நீரை சேமிக்கும் திட்டங்களை சிறப்பாக செயல் படுத்தினார். வல்லுநர்கள் ஆலோசனையின் பேரில்  மழைக்கால வெள்ள நீர் நிலத்தடிக்கு செல்லும் வகையில் சிறியகற்களை குறிப்பிட்ட உயரத்தில் சாலையோரம் பதிக்கப்பட்டன

வாகனங்கள் மற்றும் நீரோட்டத்தில் இவை பாதிக்கப்படாமல் இருக்க பாதுகாப்பு வளையங்கள் இவற்றின் மீது பதிக்கப்பட்டன.

இந்த பணிகளுக்கான பலன்கள் தற்போதைய பெரு மழையின் போது கைமேல் கிடைத்தது. கடந்த மாதத்தில் மட்டும் சித்திரைக்குளம்  மூன்று முறை நிரம்பி வழிந்தது. இதில் இருந்து வெளியேறிய உபரிநீர் அருகிலுள்ள தெருக்களில் பாய்ந்தோடின. சமீபத்திய வரலாற்றில் பார்க்காத காட்சியாக இது அமைந்து மயிலாப்பூர் மக்களுக்கு  மகிழ்ச்சியை கொடுத்தது.

கடந்த 2015ல் இதைவிட மழைப்பொழிவு அதிகம் இருந்தும்  கபாலீஸ்வரர் கோயில் குளம் பாதியளவே நிரம்பியது. இப்போது முக்கால்வாசி நிரம்பிஉள்ளது .இதன் மைய மண்டபத்தில் ஒரு படிக்கட்டு அளவே வெளியில் தருகிறது. விருபாக்சீஸ்வரர் கோவில் குளமும் நிரம்பி உபரிநீர் கோவில் கருவறை வரை சென்று விட்டது.

விருபாக்சீஸ்வரர் கோவில் குளம்

இதன் அருகே உள்ள மாதவப்பெருமாள் கோயில் குளமும் நீண்ட காலத்த்திற்குப் பிறகு இப்போது தண்ணீரை பார்த்துள்ளது.

மயிலாப்பூரில் உள்ள கோவில்குளங்கள் இங்கு உள்ள பல்லாயிரக்கணக்கான மக்களின் வாழ்வாதாரமாக திகழ்கின்றன. சென்னை மாநகருக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் நீர் வற்றி குடிநீர் வாரிய குழாய்களில் நீர் வராத காலங்களில் இக்குளங்களால் சேமித்து வைக்கப்பட்ட நிலத்தடி நீர்தான் மயிலாப்பூர் மக்களின் தாகத்தை தீர்த்து  வந்தது .

எனவே,  இந்த குளங்களின் தற்போதைய நீர்ப்பெருக்கு மதங்களைக் கடந்து மக்களை கொண்டாட வைத்திருக்கிறது.

மக்கள் தொகை வேகமாகப் பெருகிவரும் இந்த காலகட்டத்தில் குளம் ,ஏரி போன்ற  புதிய நீராதாரங்களை  உருவாக்குவது அரிதினும் அரிதான செயலாக உள்ளது.. சென்னை மாநகருக்கு செம்பரம்பாக்கம் ஏரி, புழல், சோழவரம்  மற்றும்பூண்டி ஏரிகளை தவிர மேலும் புதிய நீர்த்தேக்கத்தை உருவாக்கும் முயற்சியில் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக தமிழக அரசு ஈடுபட்டது. அது அண்மையில் தான் நிறைவேறியது.

உள்ளூர் மக்கள் எதிர்ப்பு, நிலம் கையகப்படுத்துவதில் பிரச்சினை என்று காலங்கள் ஓடின. தேர்வாய் கண்டிகை – கண்ணங்கோட்டை  ஏரி எனப்படும் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அந்த புதிய நீர்த்தேக்கம்  சோழவரம் ஏரியை விட சிறியது. ஒரு டிஎம்சிக்கும் குறைவாகவே அதில் நீர் சேர்த்து வைக்க முடியும் .

எனவே , வருங்கால நீர் தேவைக்கு இருக்கிற நீர் நிலைகளை பாதுகாத்து பராமரித்தலுக்கு  மிகுந்த முக்கியத்துவம் அளிக்க வேண்டும். நிலத்தடி நீரை அதிகரிக்கும் வகையில் அனைத்து முயற்சிகளிலும் ஈடுபட வேண்டும் .

குளம் ,ஏரி மற்றும் நீர்நிலைகளை தூர்வாரி அதற்கு நீர் வரும் தடைகளை நீக்கி, நீரை வீணாக்காமல் பயன்படுத்த வேண்டும்.

இப்பணிகள் சிறப்பாக நடைபெற உள்ளூர் மக்கள் பிரதிநிதிகளின் பங்களிப்பு இன்றியமையாதது.பொது நலத்துடன் அவர்கள் செயல்பாடு இருந்தால் பொது மக்களுக்கு முழுபலன் கிடைக்கும் என்பதற்கு ஆர். நடராஜின் செயல்பாடு முன்னுதாரணமாக உள்ளது.

காவல் துறையில் உயர் அதிகாரியாக  –  சென்னை மாநகர போலீஸ் கமிஷனராக, டிஜிபியாக –  பணியாற்றி ஓய்வுக்குப் பிறகு, அரசியல்வாதியானவர். அவருடைய சிறப்பான செயல்பாடுகளில் மயிலாப்பூர் குளங்களுக்கு புதிய நீர்வழிப் பாதைகள் அமைத்ததும், பழைய  பாதைகளில் இருந்த அடைப்புகளை நீக்கியதும் நிலத்தடி நீர் சேமிப்பு க்காக அவர் ஆற்றிய பணிகளும் குறிப்பிடத்தக்கது.

உண்மையிலேயே மக்கள் நலனுக்காக மேற்கொள்ளப்படும் பணிகள் விளம்பரப்படுத்த படாவிட்டாலும், ஒரு காலத்தில் இயற்கை காட்டிக்கொடுத்து விடும் என்பதற்கு தற்போது நிரம்பி வழிந்த மயிலாப்பூரில் குளங்கள் ஒரு  சிறந்த சான்று.

-மாயோன்

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time