திமுக பொதுச் செயலாளராகவுள்ள துரைமுருகனின் செயல்பாடுகள் சமீபகாலமாக கட்சியினர் மத்தியிலும்,பொதுமக்கள் மத்தியிலும் கடும் அதிருப்தியையும்,குழப்பத்தையும் உருவாக்கி வருகிறது.
திமுக மீது நமக்கு பல விமர்சனங்கள் இருந்தாலும் இன்றைக்குள்ள திராவிட அரசியல் கட்சிகளில் இன்னும் சில உறுதியான கொள்கையாளர்களை கொண்டுள்ள கட்சியாக திமுக உள்ளது.
திமுகவின் பொதுச் செயலாளர் பதவி என்பது சாதரணமானதல்ல. லட்சக்கணக்கான தொண்டர்கள் தடியடிபட்டும்,சிறைப்பட்டும் தங்கள் இன்னுயிர் ஈந்தும் வளர்ந்த கட்சி அது! ஆனால்,இன்று பிழைப்புவாதிகளும்,அடிவருடிகளும் தான் அக்கட்சியின் தலைமை பதவிகளுக்கு வரமுடியும் என்பதை சூசகமாக உணர்த்துவதாகத் தான் துரைமுருகனின் சமீபத்திய பேச்சுகளும், நடவடிக்கைகளும் உள்ளன!
துரைமுருகன் பொதுச் செயலாளராக பதவியேற்ற போதும், அதன் பிறகும் அவர் பேசி வருவதைப் பாருங்கள்;
’’என் வாழ்நாள் முழுவதும் நான் உங்களிடத்தில்(ஸ்டாலின்) இருப்பேன்..இது உறுதி, சத்தியம்…’’
‘’என்னுடைய மறைவுக்கு பிறகும் எனது குடும்பம் உங்களுக்கு தாசனாக,விசுவாசமாக இருக்கும்…’’
’’உயிருள்ளவரை ஸ்டாலினை தோளில் சுமப்பேன்….அடுத்த நான்கு மாதத்தில் அவரை தமிழக முதல்வராக அரியணையில் அமரவைப்பேன்…’’
இந்தப் பேச்சுகளெல்லாம்…திமுகவின் பொதுச் செயலாளர் என்ற உயர்ந்த பொறுப்பில் இருப்பவர் வாயிலிருந்து வரக் கூடியவையா..? அல்லது ஏதோ ஒரு ஜமீனுக்கு கீழ் இருக்கும் ஒரு கொத்தடிமை தனக்கு எஜமான் தூக்கி எறிந்த எலும்புத் துண்டுகளுக்காக பேசக் கூடிய வார்த்தைகளா…? என்ற அளவுக்கான குழப்பத்தை உருவாக்குகின்றன…!
தான் தலைமைக்கு விசுவாசமாக இருப்பதாக மீண்டும்,மீண்டும் அறிவிக்க வேண்டிய தேவை ஏன் அவருக்கு ஏற்பட்டுள்ளது?
ஒன்பது முறை அவருக்கு சட்டமன்ற உறுப்பினராகும் வாய்ப்பை இந்தக் கட்சி அவருக்கு தந்துள்ளது,அமைச்சராகும் வாய்ப்பை தந்துள்ளது. கட்சியிலும் பல பொறுப்புகளை தந்துள்ளது. 68 ஆண்டுகளாக கட்சியில் இருக்கும் அவர் தற்போது, ‘’என் மீது ஏதும் சந்தேகப்பட்டுவிடாதீர்கள்..அய்யனே…’’ என மன்றாட வேண்டிய அவசியம் தான் என்ன…?
இந்தக் கேள்விக்கு விடை தேட வேண்டுமென்றால், ஒரு யதார்த்தத்தை புரிந்து கொள்ள வேண்டும்.
இன்றைக்கு அவர் ஒரு கோடீஸ்வர வியாபாரி! அவர் அரசியல்வாதி என்பதெல்லாம் அந்த பிசினஸ்க்கான ஒரு அதிகார வழிமுறை அவ்வளவே!
Also read
பொது வாழ்க்கையில் முறைகேடாக சொத்து சேர்ப்பதற்கு தனது கட்சி மற்றும் ஆட்சி அதிகாரத்தை பயன்படுத்திக் கொண்டவரான துரைமுருகன் இன்றைய நிலவரப்படி சுமார் ஆயிரம் கோடிக்கு மேல் சொத்துக்களைக் கொண்டவர்..கல்லூரி அதிபர், நிலவுடமையாளர், பல இடங்களில் கட்டிடங்களாகவும், நிலங்களாகவும் வாங்கி குவித்துள்ளவர்,ஷேர் மார்க்கெட்டுகளில் பல கோடி முதலிடு செய்துள்ளவர்,ஏற்றுமதி,இறக்குமதி என்ற வகையிலான லார்ஜிஸ்டிக் பிசினஸ் செய்பவர்…கிலோ கணக்கில் தங்கத்தை வாங்கி குவித்துள்ளவர்,…! (இது குறித்து பக்கம்,பக்கமாக எழுதி வாசகர்களை சலிப்படைய வைக்க நான் விரும்பவில்லை.)
ஆனால்,இவையெல்லாம் போதவில்லை இன்னும் சொத்துக்களை வாங்கி குவிக்க வேண்டும் என இடையறாது இயங்குபவர்! எனவே தான் இப்படிப்பட்டவர்களிடம் அரசியலில் கொள்கை உறுதியையோ, மக்கள் நலன் சார்ந்த அணுகுறையையோ நாம் எதிர்பார்க்கவே முடியாது. அரசியலில் தங்களுக்கு கிடைக்கும் வாய்ப்புகள் என்பவையே சொத்துகளை பெருக்கத் தான் என அவர் இயல்பாகவே நம்புகிறார். ஆனால் அவருக்கு முன்பாக திமுகவின் பொதுச் செயலாளர்களாக இருந்த அறிஞர் அண்ணா, நாவலர் நெடுஞ்செழியன்,பேராசிரியர் அன்பழகன் போன்றோர் தங்கள் அறிவால்,கொள்கைப்பற்றால், நீண்ட நெடிய தொண்டால், தலைமைப் பண்பால் அந்த பொறுப்பிற்கு வந்தவர்கள்.எனவே, அவர்கள் முழு வாழ்க்கையிலும் சமூகத்திற்காக தங்கள் நேரத்தை,அக்கரையை தரக் கூடியவர்களாக இருந்தனர். அதனால், அவர்கள் பொறுப்பில் இருந்த போது அவர்கள் எதிர்நிலை அரசியல்வாதிகளுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கினர்.
ஆனால்,துரைமுருகன் நிலை என்ன? அவர் இன்றைய ஆளும் கட்சித் தலைமையின் மறைமுகக் கூட்டாளி! அவர்களுடன் பல விவகாரங்களில் கைகோர்த்து உரிய கமிஷன் பெற்றுக் கொள்பவர். இதற்கான ஆதாரங்கள் பல கூறமுடியும்.குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால், அவரது குடும்பம் தற்போது புதிதாக ஒரு கட்டுமான நிறுவனம் துவங்கியுள்ளது. இந்த நிறுவனம் எடப்பாடி பழனிச்சாமியின் கீழுள்ள நெடுஞ்சாலைத் துறையின் பல கோடி மதிப்புள்ள வேலைகளை பெற்றுச் செய்து வருகிறது. ஆனால், நடைமுறையில் ஒரு கட்டுமான நிறுவனத்திற்கு ஐந்து வருட கால அனுபவம் இருந்தால் மட்டுமே இது போன்ற ஆர்டர்கள் கிடைக்கும்!இதையெல்லாம் ஒவர்டேக் செய்து துரைமுருகன் குடும்பத்திற்கு ஆர்டர்கள் தருமளவுக்கு அவர் எடப்பாடியின் நம்பிக்கையை பெற்றுள்ளார் என்பது தான் கவனத்திற்குரியதாகும்.
இப்படியாக இயங்கும் துரைமுருகன் எப்படி ஆளும்கட்சியின் தவறுகளை,மக்கள் விரோத செயல்பாடுகளை தட்டிக் கேட்க முடியும்? அப்படி தட்டிக் கேட்டு போர்க் குரல் கொடுக்கும் எதிர்கட்சி மீது தானே மக்களுக்கு நம்பிக்கை பிறக்கும். ஆக,இன்றைக்கு ஆளும் அதிமுக அரசின் மக்கள் விரோத செயல்பாடுகளின் மீது மக்களுக்கு அதிக அதிருப்தியும்,கோபமும் ஏற்பட்டுவிடாதவாறு திமுகவையும், ஸ்டாலினையும் வழி நடத்திச் செல்பவராக துரைமுருகன் இருக்கின்றார். இந்த காரணத்தால் தான் அதிகவிற்கு மாற்றாக திமுக மீது மக்களுக்கு பெரிய நம்பிக்கை உருவாகாமல் தடையாகிறது.இதை திமுகவின் உண்மையான தொண்டர்கள் நன்கு உணர்ந்து மனம் புழுங்குகின்றனர். எத்தனையோ கொள்கைபற்றாளர்கள்,ஆற்றலாளர்கள் கட்சியில் இருந்தும்,இவ்வளவு உயர்ந்த பொறுப்பு துரைமுருகனுக்கு தரப்பட்டதால் கட்சி பெரிய பின்னடைவையே சந்திக்கும்,அதில் சந்தேகமேயில்லை…எனக் குமுறுகின்றனர்.
இதைத் தான் பாஜகவும் விரும்புகிறது. பாஜகவின் விருப்பத்தையே திமுகவில் இருந்தவாறு நிறைவேற்றிக் கொண்டுள்ளார் துரைமுருகன்.இதற்கு நன்றிகடனாகத் தான் வேலூர் நாடாளுமன்ற தேர்தலின் போது வாக்காளர்களுக்கு லட்சக்கணக்கில் பணம்பட்டுவாடா விவகாரத்தில் கையும்,களவுமாக பிடிபட்டும் துரைமுருகன் மகன் கதிர் ஆனந்த் எந்த குற்ற நடவடிக்கைகளுக்கும் ஆளாகாமல் தப்பிக்க அனுமதிக்கப்பட்டார்.
சரி, அந்த விபூதி சாமியார் விஷயத்திற்கு வருவோம். சமீபத்தில் தன் மகனோடு சாமியாரைச் சந்தித்த துரைமுருகன், ’’சாமி நீங்க சொன்னபடியே…என் மகன் எம்.பியாகிடான், நான் கட்சியின் பொதுச் செயலாளர் ஆகிவிட்டேன்..’’ என்று நன்றி பெருக்கோடு கூறியுள்ளார்.
இங்கே ஒன்றை நன்றாக கவனிக்க வேண்டும். அவர் மகன் எம்.பியானதற்கும், அவர் பொதுச் செயலாளராக ஆனதற்கும் கட்சியோ, மக்களோ காரணமல்ல, சாமியாரின் ஆசி தான் காரணம் என துரைமுருகன் நம்புவது தான்!
அதற்கு அந்த சாமியார், ’’டேய்… நான் சொன்னா அது நடக்காம போயிடுமா.. நீ இன்னும் உச்ச பதவிக்கு வருவடா…’’என்று பெரிய மாலையை அணிவித்து வாழ்த்தினாராம். அந்த சாமியார் யாரையுமே வாடா.போடா என்று தான் அழைப்பாராம்! சுயமரியாதை இயக்க பின்னணியில் இருந்து வந்த துரைமுருகனின் வீழ்ச்சியை என்னென்பது? ஓரு காலத்தில் நடிகர் திலகம் சிவாஜி திருப்பதி கோயில் சென்ற காரணத்தால் அவமானப்படுத்தப்பட்டு திமுகவில் இருந்து வெளியேற்றப்பட்டார் என்பதெல்லாம் நினைவுக்கு வருகிறது!
துரைமுருகனைப் பொறுத்த அளவில் முறைகேடான வழிமுறைகளில் சொத்து சேர்க்கும் பேராசையால் அவருக்கு ஏற்பட்ட குற்றவுணர்வின் தொடர்ச்சி தான் சாமியார்,கோயில்,பக்தி என்பதெல்லாம்….! எனவே, அவர் ஒன்று அதிமுகவில் அவைத் தலைவராகலாம் அல்லது அதைவிட பொருத்தமாக பாஜகவின் தமிழக தலைவராகலாம்! நிச்சயம் விபூதி சாமியார் அதற்கு ஏற்பாடு செய்யாமலா போவார்! சாமியார்கள் சொல்வதைக் கேட்கும் கட்சி அது தானே!.
அருமையான கருத்து.
சரியான பார்வை..
துரைமுருகன் உள்ளிட்ட ஒவ்வெரு தி.மு.க வினரும் அவசியம் இக்கட்டுரையை படிக்க வேண்டும்.!