காங்கிரஸை அழிக்க களம் இறக்கப்பட்டுள்ள இருவர்!

- சாவித்திரி கண்ணன்

பாஜகவின் லட்சியங்களில் ஒன்று காங்கிரஸ் இல்லாத இந்தியா! ஒரு எதிர்கட்சியாகக் கூட காங்கிரஸ் உயிர்பித்து இருக்கக் கூடாது. அவ்வளவு ஏன் ஒரு பலவீனமான கட்சியாகக் கூட அது ஜீவித்திருக்கக் கூடாது என்பது தான் பாஜகவின் இலக்கு! இதை பல மேடைகளில் மோடி உள்ளிட்ட பாஜக தலைவர்கள் சொல்லி இருக்கிறார்கள்!

அதே சமயம் அந்த அழித்தொழிப்பை அவர்கள் ஜனநாயக வழியில் செய்வதற்கு செய்வதை விடவும், ஆள்தூக்கி அரசியல் வழியாக – பேர அரசியல் வழியாகத் –  தான் பல்வேறு மாநிலங்களிலும் நடைமுறைப் படுத்தினார்கள். நமக்கு மிக நிதர்சனமான சமீபத்திய உதாரணம் பாண்டிச்சேரி தான்! காங்கிரஸின் கோட்டையாகத் திகந்த பாண்டிச்சேரியில் இத்தனை ஆண்டுகளாக திமுக,அதிமுக கூட காலூன்ற முடிந்தததில்லை! ஆனால், பாஜக இன்று காலூன்றி ஆளும் கூட்டணிக் கட்சியாகிவிட்டது. இந்த வெற்றியானது முழுக்க, முழுக்க விலை பேசி வாங்கப்பட்டது தான்! இந்த விலை பேசும் வெற்றியைத் தான் அது வட கிழக்கு மாநிலங்கள் பலவற்றில் செய்து வாகை சூடியது. அதாவது மக்கள் தீர்ப்பை நேரடியாக வாங்காமல் கொள்ளைப்புற வழியாக ஆட்சிக் கட்டிலை அடைவது!

இன்றைக்கு அந்த வழியைத் தான் மம்தா பானர்ஜி செய்து கொண்டு இருக்கிறார். காங்கிரஸுக்கு முற்றிலும் நேர் எதிரான பாஜகவில் சேர முடியாமல் மனம் புழுங்கிக் கொண்டிருக்கும் காங்கிரஸ்காரர்களுக்கு வலைவிரித்து திரிணமுல் காங்கிரஸ் கட்சிக்கு இழுத்து வருகிறார்.

பாஜக என்ற பேராபத்தான அரசியல் கட்சியை மூர்க்கமாக மோதி அழிப்பதற்கான சர்வசக்தி படைத்த காளியாக மேற்கு வங்கத்தில் களம் கண்டு வெற்றி வாகை சூடிய மம்தா மீது வட இந்தியாவில் ஒரு ஈர்ப்பு ஏற்ப்பட்டு உள்ளது! அந்த ஈர்ப்பை அரசியல் அறுவடையாக்கி அவர் பிரதமராக முடியும் என்ற அபிலாசையை மம்தா மனதிற்குள் விதைத்து பிரசாந்த் கிஷோர் ஒரு அரசியல் விளையாட்டை நடத்தி வருகிறார்.

அவர் தான் கோவாவில் களம் இறங்கி முன்னாள் முதல்வரும் காங்கிரஸ் தலைவருமான லூயிசின்ஹோ பலரோவை திரிணமுல்லுக்கு தூக்கி வந்தார். மேகலாயாவில் களம் கண்டு 12 காங்கிரஸ் எம்.எல்.ஏக்களை திரிணமுல்லுக்குள் திருப்பிவிட்டார். அஸ்ஸாம் காங்கிரஸ் தலைவர் சுஷ்மிதா தேவுக்கு எம்.பி பதவி தந்து இழுக்கப்பட்டுள்ளார். அசோக்தன்வார், கீர்த்தி ஆசாத் போன்ற சிலர் திரிணமுல்லுக்குள் வந்துள்ளனர். இதே போல ஹரியானா, உத்திரகண்ட் உள்ளிட்ட பல மாநிலங்களில் இந்த வேலையை மம்தாவிற்காக முன்னெடுக்கிறார் பிரசாந்த் கிஷோர்.

ஒரு காலத்தில் கட்சிக்குள் பெரும் தலைவராக அறியப்பட்டவர் சரத்பவார். அதிருப்தி காரணமாக அதில் இருந்து வெளியேறி தனிகட்சி கண்டுள்ளவர். அவரது நீண்டகால பிரதமர் கனவு நிராசையான நிலையிலும் காங்கிரசோடு கைகோர்த்துள்ளார். பாஜகவை எதிர்க்கும் எதிர்கட்சிகளை இணைக்கும் மையபுள்ளியாக அவரை பயன்படுத்த திட்டமிடும் போது, அவர் மம்தாவை ஏற்க என்ன செய்யலாம்? ஒன்றைக் கொடுத்து தான் ஒன்றை பெற வேண்டும். அதனால், அவருக்கு குடியரசுத் தலைவர் எனும் தூண்டில் போடப்படுகிறது. இவை எல்லாம் பிரசாந்த் கிசோரால் திட்டமிடப்படுகிறது.

முன்னதாக பிரசாந்த் கிஷோர் காங்கிரஸ் கட்சியில் சேர ஆசைப்பட்டார். அவரை சேர்ப்பதா? வேண்டாமா? என தீர்மானிக்க மூன்று நபர் குழு அமைக்கப்பட்டது. கே.சி.வேணுகோபால், ஏ.கே.அந்தோனி, அம்பிகா சோனி ஆகிய மூவரும் கட்சிக்குள் விவாதம் செய்தனர். பெரும்பான்மையான காங்கிரஸ் தலைவர்கள் பிரசாந்த் கிஷோரை நிராகரித்தனர். மற்றும் சிலரோ, ”காங்கிரஸின் தேக்க நிலை உடைபட அவர் தேவை” என்றனர். ஆனால், பிரசாந்த் கிஷோரின் அரசியல்பார்வை என்பது என்ன? கொள்கை என்ன? எதற்காக அவர் அரசியலுக்குள் நுழைகிறார் என்பதற்கு திருப்திகரமான விடை கிடைக்கவில்லை.

பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவரான கிஷோர் நிதீஸ்குமாரின் ஜனதா தளத்தில் சேர்ந்தார். நிதீஸ்க்கு அடுத்தபடியாக அதன் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டார். அவ்வளவு முக்கியத்துவம் தந்ததுடன், அரசின் அதிகாரபூர்வ ஆலோசகராகவும் நியமிக்கப்பட்டார். ஆனால், மிகப் பெரிய ஏமாற்றத்தையே அவர் தந்தார். காலப்போக்கில் கட்சிக்கு அவர் பெரிய தலைவலியாகிவிட்டார். ஆகவே, அவர் கட்சியில் இருந்து விலக்கப்பட்டார். கிஷோர் விலகிய போது தான் அவரை அமித்ஷாவின் ஆலோசனையில் தான் கட்சியில் துணைத்தலைவராக்கியதாக நிதீஸ்குமாரே குறிப்பிட்டார். கிஷோர் சேர்ந்த போதைவிடவும் விலகும் போது ஜனதாதளம் சற்று பலவீனப்பட்டுவிட்டதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

உத்திரபிரதேசத்தில் சென்ற தேர்தலில் காங்கிரஸுக்கான தேர்தல் வியூக ஆலோசகராக கிஷோர் நியமிக்கப்பட்ட விவகாரத்திலும் பெரும் தோல்வியே கிட்டியது. பஞ்சாப்பில் அமீந்தர்சிங் வெற்றிக்கு வியூகம் வகுத்துக் கொடுத்தார் கிஷோர். அந்த அமீந்தர்சிங் இன்று காங்கிரசில் இருந்து வெளியேறி பாஜகவுக்கு நெருக்கமானவராகிவிட்டார்.

பிரசாந்த் கிஷோருக்கு பாஜக பற்றிய பார்வை என்ன? பாஜகவை இயக்கும் ஆர்.எஸ்.எஸ் பற்றிய புரிதல் என்ன? அதை என்றாவது அவர் வெளிப்படுத்தி உள்ளாரா? மம்தாவின் வெற்றிக்கு கிஷோர் பணியாற்றிய போது, பாஜகவிற்கோ, ஆர்.எஸ்.எஸ்சுக்கோ பிரசாந்த் கிஷோர் மீது ஏன் பெரிய கோபம் வெளிப்படவில்லை.  பல மாநில அரசுகளையும், அரசியல் தலைவர்களையும் ஆட்டிப்படைக்கும் பாஜக அரசு பிரசாந்த் கிஷோரை ஏன் இது வரை தனக்கான ஆபத்தாக பார்க்கவில்லை? பிரசாந்த் கிஷோர் என்பவர் பணத்திற்காக வேலை செய்யும் ஒரு வர்த்தக நிறுவனம் நடத்துபவர் தானே! பிரசாந்த் கிஷோரை முடக்க நினைத்தால், அது பாஜகவிற்கு மிக எளிதான ஒரு விவகாரம் தானே!

காங்கிரஸ் நுழைவு தனக்கு மறுக்கப்பட விலையில் பிரசாந்த் கிஷோர் தன் டுவிட்டர் பதிவில், காங்கிரஸ் கட்சியின் தலைமை என்பது ஒரு தனிநபரின் புனித உரிமை அல்ல. குறிப்பாக, கடந்த 10 ஆண்டுகளில் நடந்த தேர்தலில் 90 சதவீதத்திற்கும் அதிகமான தோல்வியை அக்கட்சி சந்தித்துள்ளது. எதிர்க்கட்சித் தலைமையை ஜனநாயகம் முடிவு செய்யட்டும்’’ என பதிவிட்டுள்ளார். இந்தப் பதிவின் வாயிலாக அந்த தனி நபரின் புனித உரிமை மீதும், காங்கிரஸ் கட்சியின் எதிர்கட்சி அந்தஸ்த்து மீதும் இவ்வளவு எதிர்மறை பார்வையை வெளிப்படுத்தி உள்ள பிரசாந்த் கிஷோர், சில நாட்களுக்கு முன்பு வரையிலும் அந்த கட்சிக்குள் நுழைய காத்திருந்தவர் என்பதையும் இணைத்து யோசிக்க வேண்டியுள்ளது.

சில நாட்களுக்கு முன்பு பிரசாந்த் கிஷோர் ஒரு கருத்தை வெளியிட்டு இருந்தார். அவரது இந்த கருத்தை சமூக வலைதளத்தில் பெரும்பாலான பாஜகவினர் பகிர்ந்து கொண்டு புளகாங்கிதப்பட்டனர்.

“பா.ஜ.க இந்திய அரசியலில் மையப்புள்ளியாக இருக்கும். அவர்கள் வெற்றி அடைகிறார்களோ அல்லது தோல்வி அடைகிறார்களோ, அதனால் எந்த மாற்றமும் ஏற்படாது. தேசிய தேர்தலில் 30 சதவீதம் வாக்கு எண்ணிக்கை பெற முடியும் எனில், அவர்கள் அவ்வளவு எளிதில் எங்கும் செல்லமாட்டார்கள். உங்களால் மோடியை புரிந்துகொள்ளாதவரை – அவரின் பலத்தை புரிந்து கொள்ளாத வரை – அவரை தேர்தலில் தோற்கடிக்க திட்டம் வகுக்க முடியாது. அவரை நீங்கள் தோற்கடிக்க முடியாது.” என்று தெரிவித்து இருந்தார். இதைத் தான் பாஜகவினர் எடுத்து அப்படியே பகிர்ந்து கொண்டாடினர்.

மோடி என்பவரை தனி நபராக புரிந்து கொள்வதே பிழையாகும். நல்ல பேச்சாளர், ஞாபக சக்தி உள்ளவர் என்பதைக் கடந்து தனிப்பட்ட அறிவாற்றலோ, திறமையோ அவரிடம் ஒன்றுமில்லை. அவரை ஒரு ஐகானாக சித்தரித்து ஆர்.எஸ்.எஸ் தான் பிரதமர் அலுவலகத்தையே நிர்வகித்து வருகிறது. இந்த எளிய உண்மையை ஏன் மறைக்கிறார் பிரசாந்த் கிஷோர்? மோடிக்கு தேர்தல் வியூக வகுப்பாளராக இருந்த கிஷோருக்கு இது நன்றாகத் தெரிந்திருக்க வேண்டுமே!

இந்திய மக்களையே உலுக்கிய லக்கிம்பூர் நிகழ்வை குறித்து பிரசாந்த் கிஷோர் என்ன சொன்னார் என்பதை பார்க்க வேண்டும்! “லகிம்பூர் கேரி சம்பவத்திற்கு பிறகு பழம்பெரும் கட்சி ( காங்கிரஸ்) உடனடியாக மறுமலர்ச்சி அடையும் என்று எதிர்பார்ப்பவர்கள் பெரும் ஏமாற்றமடைவார்கள்.” என்றார். அதாவது, அந்த படுகொலையை நிகழ்த்திவர்கள் மீது அவருக்கு எந்த விமர்சனமும் இல்லை. மாறாக, அந்த சம்பவத்தால் காங்கிரஸ் கட்சிக்கு அரசியல் அனுகூலம் ஏற்பட்டுவிடுமோ என்ற கவலை தான் பிரசாந்த் கிஷோருக்கு!

ஆக, பாஜக மீது இல்லாத விமர்சனமும், கோபமும் காங்கிரஸ் மீது பிரசாந்த் கிஷோருக்கு இருக்கிறது. காங்கிரஸ் பலவீனமடைவது யாருக்கு சாதகமாகப் போய்முடியும் என்பது சிறு குழந்தைக்கும் தெரிந்த உண்மை தான்! இவ்வளவு நாள் முயன்றும் தன்னால் முடிவுரை எழுதமுடியாத காங்கிரசுக்கு தற்போது இந்த இருவரும் வரிந்து கட்டிக் கொண்டு எழுத ஆரம்பித்திருப்பது பாஜகவிற்கு மிகப் பெரிய சாதகத்தையே ஏற்படுத்திக் கொடுக்கும்! இப்போதெல்லாம் மம்தா பானர்ஜியை டெல்லியில் மோடி மகிழ்ச்சியோடு வரவேற்கிறார். மோடியின் நண்பர் அதானியும் மம்தாவை சந்தித்து ஆலோசனை நடத்துகிறார்! தமிழகத்தில் திமுகவையும் காங்கிரஸ் கூட்டணியில் இருந்து பிரித்து மம்தா அணிக்குள் கொண்டுவர முயற்சிகள் நடக்கலாம்.

காங்கிரஸ் என்பது அரசியல் கட்சி தான் என்றாலும், அது அரசியல் கட்சி மட்டும் அல்ல, அது சகல மக்களையும் சமமாக பாவிக்கும் ஒரு அரசியல் சித்தாந்தம்! அந்த சித்தாந்தத்தின் அழிவு, மக்களின் அழிவாக மாற வாய்ப்புள்ளது. காங்கிரஸ் இல்லாத இந்தியாவில் மம்தாவை எதிர்கொள்வது பாஜகவிற்கு மிகவும் எளிதாகும். மம்தா பானர்ஜி நேச சக்தியை அழித்தொழிக்க முயற்சிப்பது தற்கொலை முயற்சியாகும்.

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time