அடிமைவம்சத்தை உறுதிபடுத்தும் அதிமுகவின் தேர்தல் வரலாறு!

- சாவித்திரி கண்ணன்

ஜனநாயகம் என்பது பொது நலன் சார்ந்து ஒன்றுபட்டு செயலாற்றுவது! ஆனால், தன்நலன் ஒன்றே குறிக்கோளாகக் கொண்ட தற்குறிகளான சில சந்தர்ப்பவாதிகள் கைகோர்த்து செய்யும் சதிசெயலைத் தான் ஜனநாயகம் என்பதாக  நமக்கு அறிமுகப்படுத்துகிறார்கள்!

முதலில் தெரியாத்தனமாக நானும் கூட நம்பிவிட்டேன்.

அடடா, இதுவல்லவோ ஜனநாயகம்! அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரையும், துணை ஒருங்கிணைப்பாளரையும் கட்சியின் அடிப்படைத் தொண்டர்கள் தேர்ந்தெடுப்பார்களாம்! அப்படியான சட்டவிதியை தற்போது ஏற்படுத்தி உள்ளார்களாம்!

பத்திரிகைகள் இது பற்றி பலவாறாக எழுதின!

”இது எடப்பாடி பழனிச்சாமியின் சர்வாதிகாரத்திற்கு வைக்கப்பட்ட செக்” என ஒரு பத்திரிகை எழுதியது.

”ஒ.பி.எஸ் ராஜ தந்திரமாக காய் நகர்த்துகிறார்”என ஒரு பத்திரிகை எழுதியது!

ஆனால், அடிப்படையில்  நமக்கு ஒரு சந்தேகமும் ஊடாடியது!

இந்தக் கட்சியில் வட்டச் செயலாளர், ஒன்றியச் செயலாளர் உள்ளிட்ட எதற்குமே தேர்தல் கிடையாதே…அப்படி இருக்க, எப்படி பல லட்சம் உறுப்பினர்களைக் கொண்ட ஒரு கட்சியின் தலைமையை தேர்தல் நடத்தி தேர்ந்தெடுப்பார்கள்! ( அவங்க வாய்மொழிப்படி ஒன்றரை கோடி தொண்டர்கள் கொண்ட கட்சி.) அப்படி தேர்தல் நடத்த வேண்டும் என்றால், அது  பொதுத் தேர்தல் போலல்லவா ஆகிவிடும். எத்தனை வாக்குச் சாவடிகள், அதை நிர்வகிக்கும் ஆட்கள் தேவைப்படும் என்றெல்லாம் யோசிக்கத் தோன்றியது.

அதிமுக ஆதரவு பத்திரிகையாளர் நண்பர் துரை கருணா நினைவு வந்தது! அவரிடம் கேட்டேன்.

அவர் கலகலவென்று சிரித்தார்! ”நீங்க என்ன இப்படி கேட்கிறீங்க.., அதெப்படி அவங்க ரெண்டு பேரை மீறி வேற ஆளுங்க போட்டி போடுவாங்க. வேட்புமனுவே அவங்க இரண்டு பேரைத் தவிர யாரும் போடப் போவதில்லை..’’என்றார்.

”அடிப்படை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படுவதாக அல்லவா சொல்லப்பட்டு உள்ளது. அதற்காக தேர்தலில் சட்ட திருத்தமே கொண்டு வந்ததாக அல்லவா சொல்கிறார்கள்?”

”எல்லாம் சரி. எந்த உறுப்பினருமே அவர்களை எதிர்த்து போட்டியிட முன்வரவில்லை என்றால், அனைத்து உறுப்பினர்களுமாக சேர்ந்து அவர்களை தேர்ந்தெடுத்திட்டதாகத் தானே பொருள்” என்றார்.

துரை கருணா சொன்னது தான் நடக்கிறது!

”ஏன் போட்டியிட முன் வருவதில்லை?”

அது, எம்.ஜி.ஆர் காலத்தில் இருந்து அப்படித்தான்.

அதிமுகவை பொறுத்த அளவில் கட்சி தொடங்கி இரண்டு ஆண்டுகள் கடந்த நிலையில் தான் 1974 ல் எம்ஜிஆர் பொதுக் குழு கூட்டம் நடத்தினார். அதன் பிறகு அவர் பொதுச் செயலாளராக தேர்வானார். பிறகு, 1981 வரை அவர் தான் பொதுச் செயலாளர். அவர் அமெரிக்கா செல்ல நேர்ந்த போது நாவலர் நெடுங்செழியனை தற்காலிகப் பொதுச் செயலாளராக நியமித்தார். திரும்பி வந்ததும் அவரையே பொதுச் செயலாளராக நீடிக்க வைத்தார். அதன் பிறகு ப.உ.சண்முகத்தை அதிமுகவின் பொதுச் செயலாளராக்கினார். அதன் பிறகு ராகவானந்தத்தை பொதுச் செயலாளராக்கினார். இந்தக் காலங்களில் தான் எம்.ஜி.ஆர், ‘அதிமுக பொதுச் செயலாளரை கட்சியின் அடிப்படைத் தொண்டர்கள் தேர்ந்தெடுப்பார்கள்’ என சட்டவிதியைக் கொண்டு வந்தார்.

எம்ஜிஆர் மறைவுக்கு பிறகு கட்சியின் பொதுச் செயலாளராக மாறிய ஜெயலலிதா அந்த சட்டவிதியை, ‘பொதுக் குழு உறுப்பினர்களால் பொதுச் செயலாளர் தேர்ந்தெடுக்கப்படுவார்’ என அறிவித்தார். அதிலிருந்து வழ்க்கமாக தேர்தல் அறிவிக்கப்படும். பொதுச் செயலாளராக போட்டியிட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த முக்கிய தலைவர்கள் வேட்புமனு தாக்கல் செய்வார்கள். அவர்கள் எல்லோருமே ஜெயலலிதா சார்பில் மனு செய்வதாக சொல்லிக் கொள்வார்களே தவிர தாங்கள் யாரும் போட்டியிடுவதில்லை. அப்படி போட்டியிட வேட்புமனு செய்பவர்கள் கட்சியில் இருக்க முடியாது’’ என்றார்.

திமுகவை அண்ணா உருவாக்கிய போது அதை முழுக்க, முழுக்க ஜனநாயக ரீதியில் தான் கட்டமைத்தார். அனைத்து நிலைகளிலும் உறுப்பினர்கள் வழியாகத் தான் கட்சிப் பதவிகள் நிரப்பப்பட வேண்டும். அதில், கட்சித் தலைவர்கள் தங்களுக்கு வேண்டப்பட்டவர்களுக்கு சிபாரிசு செய்யக் கூடாது என்பதிலும் கறாராக இருந்தார். அவரே கூட யாருக்கும் சிபாரிசு செய்ததில்லை. காரணம், ‘தொண்டர்களின் நம்பிக்கையை பெறக் கூடிய வகையில் தலைமைப் பண்பும் , அர்ப்பணிப்பும் உள்ளவர்கள் தான் கட்சிக்கு வேண்டுமே அல்லாது, எனக்கு ‘ஆமாம் சாமி’ போடுபவன் தேவையில்லை’ என்பது அண்ணாவின் கொள்கை. அது தான் திமுகவிலும் அனேகமாக 1990 கள் வரையிலும் இருந்தது. பிற்பாடு திமுகவுமே கூட, அதிமுகவைப் போல தன்னை மாற்றிக் கொண்டது.

”அண்ணா திமுகவில் கட்சித் தேர்தலே நடை பெற்றதில்லையா?” என்று கேட்டதற்கு முதுபெரும் அரசியல்வாதியான திருச்சி செளந்திரராஜன் கூறியதாவது,  ”1982 ல் நடைபெற்ற கட்சி தேர்தலுக்கு பிறகு அதிமுகவின் ஜனநாயகம் காணாமல் போனது” என்றார்.

அந்த தேர்தலில் சில மாவட்டங்களில் தனக்கு கட்டுப்பட்டவர்கள் மாவட்ட செயலாளர்களாக வர வேண்டும் என எம்ஜிஆர் விரும்பினார். உதாரணத்திற்கு,திருச்சியில் நான் மாவட்ட செயலாளருக்கு நின்றேன். எம்ஜிஆர் எனக்கு எதிராக நின்ற நல்லுசாமி என்பவரை ஆதரித்தார். அதை வெளிப்படையாக சென்னையில் இருந்து ஆர்.எம்.வீரப்பன் உள்ளிட்ட தளபதிகளை திருச்சிக்கு அனுப்பி பேசவும் வைத்தார். நான் பின்வாங்கவில்லை. நான் இந்த மாவட்டத்துக்காரன், ரத்தமும் சதையுமாக தொண்டர்களோடு உறவு பாராட்டுபவன். அவர்களின் நல்லது கெட்டதுகளில் உடன் இருப்பவன். ஆகவே, தொண்டர்கள் முடிவு செய்யட்டும்’ என போட்டியிட்டேன். தேர்தல் நடந்தது. தேர்தல் முடிந்ததும் எம்ஜிஆர் ஓட்டுப் பெட்டியை சென்னைக்கு அனுப்பச் சொல்வதாக மாவட்ட கலெக்டரும், எஸ்பியும் என்னிடம் வந்து கேட்டனர்.

உடனே நான் அவர்களிடம், ”இது எங்க கட்சித் தேர்தல். இதில் தலையிட அரசு அதிகாரிகளுக்கு வேலை இல்லை. இங்கேயே ஓட்டு எண்ணிக்கை நியாயமாக நடக்கட்டும். தோற்றுவிட்டால் நான் ஒத்துக் கொள்கிறேன்” என்றேன். அதன்படியே ஓட்டு எண்ணப்பட்டதில் நான் வெற்றி பெற்றேன். இதே போல தஞ்சை மாவட்டத்தில் எஸ்.டி.எஸ்சின் சீடர்கள் வென்றனர். இந்த வெற்றிகளை தடுக்க எம்ஜிஆர் செய்த முயற்சிகள் தோற்றன. இதற்குப் பிறகு எங்கேயும் கட்சி தேர்தல்களே கூடாது. நான் நியமிப்பவர்களே மாவட்ட செயலாளர்கள் என எம்ஜிஆர் முடிவெடுத்துவிட்டார்” என்றார் திருச்சி செளந்திரராஜன்.

அப்படி எம்ஜிஆர் ஏற்படுத்திய மன நிலையில் இருந்து இன்று வரை அதிமுகவில் யாரும் மாறவில்லை. சமரசத்தின் அடிப்படையில் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்தோ அல்லது அதிகார பலத்தின் மூலம் மேலாதிக்கம் பெற்றோ தான் நிர்வாகிகள் நியமிக்கப்படுகின்றனர்.

சாதாரணத் தொண்டன் கூட இங்கு பெரிய தலைவராகலாம். அப்படிப்பட்ட கட்சி அதிமுக என்று சொல்வார்கள். ஆனால், அது ஜெயலலிதா காலத்தில் சசிகலா ஆதிக்கத்தில் கட்சி வந்த பிறகு கட்சிப் பதவிகளுமே கூட விலைபேசக் கூடியதாக மாறிப் போனது.  தலைமைக்கு அடிமையாக விசுவாசம் காட்டுபவர்களே தேவை. பொது வாழ்க்கைக்கான வேறு எந்த தகுதியும் அவசியம் இல்லை என்பது எழுதப்படாத விதியானது! அந்த அடிமைத் தனத்தை மீற நினைப்பவர்கள் அடி, உதை கொடுத்து விரட்டப்படுவார்கள் என்பதும் சமீபத்தில் உறுதிபட்டது. அண்ணாவின் பெயரிலான கட்சிக்கும், அண்ணா உருவாக்கி செயற்படுத்திய ஜனநாயகப் பண்புக்கும் கடுகளவும் தொடர்பில்லை!

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time