பத்திரிகையாளர் சோவின் மாறுபட்ட மறுபக்கம்!

-சாவித்திரி கண்ணன்

”எப்படி சார் கருத்தியல் ரீதியாக முற்றிலும் மாறுபட்ட துக்ளக்கில் வேலை  பார்த்தீங்க..?” என்பது அடிக்கடி நான் சந்திக்க நேரும் கேள்வி!

நான் துக்ளக்கில் ஒரு முழு நேர பத்திரிகையாளராக பணியாற்றவில்லை. நான் ஒரு சுதந்திரப் பத்திரிகையாளனாக தொடர்ந்து சுமார் ஒன்பதாண்டுகள் எழுதினேன். அதற்கும் முன்பாக துக்ளக்கிற்கு ஒரு போட்டோ ஜர்னலிஸ்டாக நிறைய வேலை செய்துள்ளேன்.

1985 ல் ஜனசக்தியிலேயே எழுத ஆரம்பித்த நான் துக்ளக்கில் 1996ல் தான் எழுதத் தொடங்கினேன். எனக்கும் துக்ளக் ஆசிரியர் குழுவிற்கும் பரஸ்பர புரிதல் வருவதற்கே சில ஆண்டுகளாயின! என்னை யாரும் கட்டுப்படுத்தவோ, நிர்பந்திக்கவோ கூடாது என்ற மனோபாவம் இருந்ததால் எங்குமே நான் வேலை தேடவில்லை. கையில் இருந்த போட்டோகிராபி தொழில் என்னை காப்பாற்றியது!

அவரோடு பழகவும்,விவாதிக்கவுமான சூழல் உருவான போது ராகுல் சாங்கிருத்தியாயனின் வால்காவிலிருந்து கங்கை வரை நூலையும், பெரியாரின் மிகப் பெரிய கட்டுரை தொகுப்பு வால்யூமையும் அவருக்கு தந்து படிக்கும்படி வேண்டினேன்.

நான் தொடர்ச்சியாக எழுதி வந்ததாலும், தினசரி துக்ளக் அலுவலகம் வந்து செல்பவனாக இருந்ததாலும் என்னை அப்போது ஆசிரியர் குழுவில் ஒரு அங்கத்தினராக கருதும் போக்கும் காலப்போக்கில் ஏற்பட்டது! எனக்கென்று தனியாக டேபிள், சேர், கபோர்ட் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டது.

பல நேரங்களில் அவர் தன்னை ஆசிரியராக அதிகாரப்படுத்திக் கொள்ளாமல், சக நண்பனாக அவர் ஆசிரியர் குழுவிடம் பேசுவார்! இதனால், என் மாறுபட்ட கருத்தை – அதன் நியாயத்தை – எடுத்து வைக்கும் களம் தானாக அங்கு அமைந்தது. அப்படி ஒரு மாறுபட்ட கருத்தை எதிர்கொண்டு பேசவும், விவாதிக்கவுமான விருப்பம் அவருக்கும் இருந்தது.

அவர் தலையங்கம் எழுதி முடித்துவிட்டால் அதை ஆசிரியர் குழு இருக்கும் இடத்திற்கு அவரே வருகை தந்து, அனைவரையும் கேட்கச் சொல்லி விவாதிப்பார். அதில் ஒத்துப் போகிற தன்மையும், மாறுபடுகிற தன்மையும் வெளிப்படும். இதில் நான் சற்றுக் கூடுதலாகவே மாறுபட்டு விவாதிப்பேன். ஒரு சில நேரங்களில் அந்த நியாயத்தை ஏற்று சிறு மாற்றங்களை செய்துள்ளார். பெரும்பாலான நேரங்களில், என்னைப் பார்த்து,  ”சரி, உங்க கருத்துப்படி நான் பிற்போக்காளனாகவே இருந்துவிட்டு போகிறேன். அநீதியாக எழுதிவிட்டுப் போகிறேன். இது எனக்குபட்ட நியாயம்” என்பார்.

சில நேரங்களில் இன்றைக்கு நான் சாவித்திரி கண்ணனுக்கு பிடிக்காத விஷயத்தை எழுதி இருக்கேன். இதை கேட்டுட்டு என்னை படுபிற்போக்குவாதின்னு சொல்லப் போறார்’’ என்று சிரித்துக் கொண்டே ஆரம்பிப்பார்!

காவல்துறையின் அணுகுமுறைகளை கண்ணை மூடிக் கொண்டு நியாயப்படுத்துவார். பதறிப்போவேன். அதிகார வர்க்கத்தின் செயல்பாடுகளுக்கு அனுசரணை காட்டுவார். மறுத்துப் பேசுவேன். மனித உரிமை செயல்பாட்டாளர்களை கிண்டலடிப்பார், கொதித்துப் போவேன். இவை எல்லாமே அந்த ஷணத்திலேயே தீப்பொறி போல என்னில் இருந்து வெளிப்பட்டுவிடும்.

அலுவலகத்தில் முதலில் இதை பதற்றமாகத் தான் ஆசிரியர் குழுவினர் பார்த்தனர். பிறகு, இது எல்லோருக்கும் பழகிவிட்டது சாவித்திரி கண்ணன் இப்படித் தான் என்று. சில சமயங்களில் அவர் தலையங்கத்தில் எழுதிய கருத்துக்கு முற்றிலும் வேறான கருத்து அதே இதழில் என் கட்டுரையில் இடம்பெறும்.

அதைப் பற்றி ஒரு வாசகர் கேள்வி கேட்டிருந்தார்.

”தலையங்கத்தில் நீங்க ஒன்றை சொல்றீங்க, அதுக்கு நேர்மாறாக சாவித்திரி கண்ணன் அதே இதழில் விரிவான கட்டுரை எழுதியுள்ளார். இதை எப்படி புரிந்து கொள்வது?” என கேட்டிருந்தார்.

அந்த கடிதமும் துக்ளக்கில் பிரசுரமானது!

”அவரையெல்லாம் ஏன் எழுத அனுமதிக்கிறீங்க..’’ என சிலர் என்னைப் பற்றி அவரிடம் கேட்டிருப்பார்கள் போலும்!

அதை அவரே என்னிடம் ஒருமுறை சொன்னார். அவங்களுக்கு நான் சொன்னேன். அவர் நேர்மையானவர். எந்த கட்சி சார்பு நிலையும் இல்லாதவர். தப்புன்னு ஒன்றைக் கண்டால் அவரிடம் யாராலும் ஒத்துப் போகமுடியாது. இதனால் தான் அவர் துக்ளக்கில் எழுத முடியறது எனச் சொல்லியதாக குறிப்பிட்டார்.

பொதுவாக சோ சார் சுலபத்தில் யார் மீதும் நம்பிக்கை வைக்கமாட்டார். அப்படி நம்பிக்கை வைத்துவிட்டார் என்றால், அதை மற்றவர்களால் அசைத்துப் பார்ப்பது கடினம். சம்பந்தப்பட்டவர்களை விட்டுக் கொடுக்கவே மாட்டார். அந்த வகையில் மூத்த துணை ஆசிரியர் மதலை, சத்யா, சுவாமிநாதன்..போன்றவர்கள் அவரது நம்பிக்கைக்குரிய துக்ளக்கின் தூண்களாக இருந்தனர்.

நான் இருக்கிறேனா என்பதை விசாரிக்க,

”எங்க சமூக பிரக்ஜை வந்தாச்சா..?” என்றோ,

”பெண்ணீயம் வந்துட்டாரா..” என்றோ,

”எங்க மனித உரிமையாளரை காணலியே ..”

என்றோ தமாஷாக பேசுவார்.

”சாவித்திரி கண்ணன் வந்துடாருன்னா, என்னோட இந்த தலையங்கத்தை படிச்சுட்டு, என்னை வந்து பார்க்கச் சொல்லுங்க’’ என சில  நேரங்களில் என் அபிப்ராயம் தெரிந்து கொள்ள ஆர்வம் காட்டுவார். அதைப் படித்துவிட்டு நான் அவரது அறைக்குள் நுழையும் போதே, ”வாங்க சமுதாய சீர்திருத்தம்…ஏதோ கோபமாக வருகிறாப்பல இருக்கே..’’ எனக் கேட்டு சிரிக்க வைத்துவிடுவார்.

இப்படியான ஒரு ஜனநாயகப் பண்பு , தன்னை எளிமைப்படுத்திக் கொண்டு மற்றவர்களை தன்னோடு இணைத்துக் கொள்ளும் குணம் அவரிடம் இருந்தது.

எல்லோரும், ‘ஆபீஸ்’ என்றால், நான், ‘அலுவலகம்’ என்பேன். ‘டெலிபோன்’ என்றால், ‘தொலைபேசி’ என்பேன், அவங்க,” பஸ் ஸ்டாண்ட்டுக்கு போறேன்” என்றால், ”பேருந்து நிலையத்திற்கு புறப்பட்டாச்சா” என்பேன். இப்படிப் பேசுவது என்பது என்னுடைய தன்னியல்பாக இருந்தது! என்னுடைய தமிழ்ப் பற்றை சோ நக்கலடிப்பார். நான் சளைக்காமல், ”உங்களுக்கு என்னைப் போல பேசவரலே.., எதற்கெடுத்தாலும் ஆங்கிலம் கலந்து பேசறீங்க..’’ என்பேன்.

அவர் துக்ளக்கில் ஏதேனும் தொடர் எழுத ஆரம்பித்தால் அது குறித்து பலரிடம் தொடர்ந்து விவாதித்துவிட்டுத் தான் தொடங்குவாரே! அப்படியாக அவர் ஒரு நாள் ”வெறுக்கத்தக்கதா பிராமணீயம்’ என்ற தொடர் எழுதப் போகிறேன் என்ன சொல்றீங்க” என ஆசிரியர் குழுவில் எல்லோரிடமும் கேட்டார்! தலைப்பை கேட்டவுடன் எனக்கு சட்டென்று புரிபட்டுவிட்டது. நடைமுறையில் அது வெறுக்கப்பட்டு வருவதை உணர்ந்த புரிதலிலேயே இதை அவர் எழுதுகிறார் என்பது!

திராவிட இயக்கத்தினர் வேண்டுமென்றே பிராமண துவேஷத்தை ஏற்படுத்திவிட்டார்கள். ஆகவே, அதற்கு பதில் சொல்ல வேண்டியது அவசியம் தான் என்பதே அங்கு பலரின் அபிப்ராயமாக இருந்தது. நான் அமைதியாக அனைத்தையும் அவதானித்து வந்தேன். ”என்ன நீங்க ஒன்னும் சொல்லலையே” என்றார்.

எந்த ஒரு தனிப்பட்ட சாதி மீதும் பகைமை பாராட்டுவதில் எனக்கு சுத்தமாக உடன்பாடு இல்லை. அது மனிதத் தன்மைக்கே இழுக்கு. ஆனால்,  திராவிட இயக்கத்தால் தானா பிராமணர்கள் மீது மக்களுக்கு வெறுப்பு வந்தது…? பிராமணர்கள் மீது மக்களுக்கு ஏற்பட்டிருந்த வெறுப்பை அவர்கள் பயன்படுத்திக் கொண்டனர். நான் மொழிபெயர்க்கப்பட்ட பல இந்திய மொழிச் சிறுகதைகளை படித்திருக்கிறேன். அந்த இலக்கியங்களில் இருந்து எனக்கு தெரிய வந்தது, என்னவென்றால், இந்தியாவில் எங்கெல்லாம் பிராமணர்கள் இருக்கிறார்களோ.., அங்கெல்லாம் அவர்களால் பாதிக்கப்பட்டவர்களும் இருக்கின்றனர். பாதிக்கப்படுபவர்களுக்கு வெறுப்பு ஏற்படுவது என்பது இயல்பு தானே..’’ என்றேன்.

”அப்படியா என்னென்ன பாதிப்புகள்.?”

”முதல்ல, அவங்க தங்களை ஒசந்தவங்களா நினைக்கிறதுல இருந்து தான் எல்லா பிரச்சினையும் வர்றது…”

”ஒஹோ.. இப்படி வேற என்னெல்லாம் பிராமணர்களை வெறுக்க காரணமாயிருக்குன்னு சொல்லுங்களேன்…’’  எனக் கேட்டு அவர் நோட்ஸ் எடுத்துக் கொள்ளும் வகையில் பேடையும், பேனாவையும் எடுத்து நான் சொல்லியதை எழுதிக் கொண்டு, ”மேற் கொண்டு சொல்லுங்கள்” என்றார்.

அவர் காட்டிய அக்கறை எனக்கு சற்று தர்மசங்கடமானது. ஆனால், அவர் என்னை விடுவதாக இல்லை என்பதை உணர்ந்ததும் மேலும் சரளமாகப் பேசினேன். நான் சொல்லச் சொல்ல எந்த ரியாக்சனும் காட்டாமல் பொறுமையாக குறிப்பெடுத்துக் கொண்டார்.

ஆனால், இதையெல்லாம் நான் சொல்லி அவருக்குத் தெரிய வேண்டியதில்லை என்பதும், எவ்வளவு தான் தெரிய வந்தாலும் அதனால் தங்களை சுய பரிசோதனைக்கு அவர்கள் உட்படுத்திக் கொள்ள மாட்டார்கள் என்பதும், ஆனால், ஸ்டேட்டர்ஜியைத் தான் மாற்றிக் கொள்ளப் பார்ப்பார்கள் என்பதும் மிகக் காலதாமதமாகத் தான் அறிந்து கொண்டேன்.

எப்படிப் பார்த்தாலும் சோ சார் பழகுவதற்கு இனியவர், பண்பாளர். அவரிடம் குறிப்பிடத்தக்க அளவுக்கேனும் சகிப்புத் தன்மை இருந்தது என்பதற்கு நானே சாட்சி! அதைக் கூட மற்ற பலரிடம்  நான் பார்க்க முடிந்ததில்லை என்பது நிதர்சனம்!

டிசம்பர் 7; சோ அவர்களின் ஐந்தாம் ஆண்டு நினைவு நாள்.

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

 

 

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time