ரஜினி – சசிகலா சந்திப்பின் முக்கியத்துவம் என்ன?

-சாவித்திரி கண்ணன்

வேல்முருகன், சுங்குவார் சத்திரம்,காஞ்சிபுரம்

நாகலாந்து சம்பவத்தில் அமித்ஷாவின் விளக்கத்தை கேட்டீர்களா?

அப்பாவிகள் சென்ற வாகனத்தை தவறுதலாக புரிந்து கொண்டு இராணுவத்தினர் ஆறு பேரைக் கொன்றுவிட்டனர். அதில் கோபமடைந்த கிராமத்தினர் வேன்களுக்கு தீ வைத்துள்ளனர்! இதனால் அவர்களையும் சேர்த்துக் கொன்றுள்ளனர்.

மாநில போலீசாரை துணைக்கு வைத்துக் கொண்டிருந்தாலே இந்த சம்பவம் தவிர்க்கப் பட்டு இருக்கும்! மாநில அரசு நிர்வாகத்தின் துணையோடு ரோந்து சுற்றி இருந்தால், உயிர்ப்பலிக்கே வாய்ப்பில்லை என உள்ளுர் காவலர்கள் வருந்துகின்றனர். உள்துறை அமைச்சருக்கு இதில் குற்ற உணர்வு கூட இல்லை என்பது தான் கொடுமை! எவ்வளவு ஒரு மோசமான – நிர்வாகத்திறமையற்றவரிடம் – இந்தியாவின் உள் துறை உள்ளது என்பதற்கு இந்த நிகழ்வே சாட்சி!

 

எஸ். கண்ணப்பன், சேத்தியா தோப்பு,கடலூர்

ரஜினியை சசிகலா சந்தித்திருப்பது எதற்காக? இந்த சந்திப்புக்கு ஏதேனும் முக்கியத்துவம் உண்டா?

மண்ணாங்கட்டி!

தமிழக அரசியலில் செல்வாக்கு இழந்தவர்கள் தேடிச் செல்லும் இடம் ரஜினியின் வீடு. மு.க.அழகிரி, எஸ்.திருநாவுக்கரசு, அன்புமணி ராமதாஸ்,கமலஹாசன்… போன்றவர்கள் வரிசையில் தற்போது சசிகலாவும் இடம் பிடித்துவிட்டார்.

சசிகலாவை பொறுத்த வரை, ‘தானும் இருப்பதை மறக்க வேண்டாம்’ என்பதை வெற்றி பெற்றுள்ள இரு கூட்டுக் களவாணிகளுக்கும் காட்டிக் கொள்ள சந்தித்து இருக்கலாம்!

அதே போயஸ் கார்டனில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக அருகருகே வசித்த போதெல்லாம் ரஜினியை நினைத்தும் பார்த்திராத சசிகலாவிற்கு, புதிதாக ரஜினி மீது என்ன அக்கறை! ரஜினிக்கு உடல் நிலை சரியில்லாத போதெல்லாம் வராத அக்கறை இப்போது என்ன? மற்றவர்கள் தன்னை திரும்பி பார்க்க வைக்க ரஜினியின் சந்திப்பு உதவலாம்.

மு.கருப்பசாமி, அருப்புக் கோட்டை

வைகோவும், திருமாவளவனும் நிர்மலா சீதாராமனை சந்தித்து உள்ளனரே?

தடுமாறி நிற்கும் திமுகவின் திசைமாற்றம், கூட்டணியிலும் தாக்கத்தை தருகிறதோ எனத் தோன்றுகிறது.

திமுகவிற்கும் கூட்டணி கட்சிகளுக்குமான இடைவெளியில் ஏற்பட்டுள்ள தாக்கமாகவும் இதை பார்க்கத் தோன்றுகிறது. பொறுத்திருந்து பார்ப்போம்.

க.செபாஸ்டியன், வேலூர்

ஆண்டி இந்தியன் டிரைலர் பார்த்தீர்களா?

தீ பறக்கும் விமர்சனங்களை செய்து வந்த ப்ளுசட்டை இளமாறனுக்குள் தேர்ந்த படைபாளி இருந்துள்ளார் போலும் எனச் சொல்கிறது டிரைலர்! ஒரு தேர்ந்த விமர்சகனுக்கு என்னெல்லாம் செய்யக் கூடாது என்பது நன்கு தெரியும். என்ன செய்தால் வரவேற்பு கிடைக்கும் என்ற புரிதலும் இருக்கும். பார்ப்போம்.

எஸ்.கிருஷ்ணவேணி, மடிப்பாக்கம்

சமீப காலமாக மாவட்ட ஆட்சியர்களும், மற்ற சில அதிகாரிகளும் தடுப்பூசி போடாவிட்டால் சம்பளம் தரமாட்டோம், வேலை கிடைக்காது, சினிமா தியேட்டருக்கு வரக் கூடாது..என விதவிதமாக கண்டிஷன் போடுவதைக் குறித்து என்ன சொல்கிறீர்கள்?

தடுப்பூசி அறிமுகப்படுத்தப் பட்ட போது மக்கள் முண்டியடித்துச் சென்று போட்டனர். வாய்ப்பு மறுக்கப்பட்ட இடங்களில் போராட்டங்கள் கூட நடந்தது! தடுப்பூசி விளைவுகள் மக்களை தயக்கம் கொள்ள வைத்துள்ளதால் அதிகாரிகள் பதற்றமடைந்துள்ளதன் வெளிப்பாடே இது!

விருப்பமில்லாத மக்களுக்கு நிர்பந்தம் தரப்படுவதற்கான அத்தாட்சிகளே இந்த அதிகார உத்தரவுகள்.

என்.கதிரவன், கும்பகோணம்

12 எம்.பிக்கள் சஸ்பெண்ட் விவகாரத்தால் நாடாளுமன்றம் அல்லோலகலப்படுகிறதே?

அதைத் தான் பாஜக தலைமை விரும்பியது. தேவையில்லாத சஸ்பெண்டிற்கு எதிர்வினையாக எழுந்த அந்த அல்லோகலத்தின் ஊடாக மக்கள் விரோத சட்டங்களை கொண்டு வந்து நிறைவேற்றும் உத்தியே இது. இது எதிர்கட்சி எம்.பிக்களுக்கு புரியாமலா இருக்கும்? புதிராக உள்ளது.

அ. அறிவழகன், மயிலாடுதுறை

அதிமுக உட்கட்சி தேர்தல் நடந்த விதம் குறித்து என்ன சொல்கிறீர்கள்?

உண்மையிலேயே சசிகலா பயம் ஒபி.எஸ்சுக்கும் இருந்திருக்கிறது. எடப்பாடியை பணிய வைக்கவே சசிகலா ஆதரவு நாடகம் நடத்தியுள்ளார். அதே போல எடப்பாடியும் கொங்கு மண்டல அரசியல் முன்னெடுப்பை ஒபிஎஸ்சை ஒடுக்கி வைக்கவே கையில் எடுத்தார். ஆனால், ‘வேலுமணி,செங்கோட்டையனை விட பன்னீர் எவ்வளவோ பரவாயில்லை’ என முடிவெடுத்துவிட்டார்! ஆக, இரண்டு கூட்டுக் களவாணிகளும் சேர்ந்து அதிகாரத்தை யாருக்கும் பகிர்ந்து கொடுக்க வழியின்றி உறுதிபடுத்திக் கொண்டனர். ஆனால், ஒரே ஓட்டில் இருவரை தேர்ந்தெடுக்கும் கோமாளித்தனத்தை கோர்ட் அங்கீகரிக்குமா என்பது தான் சந்தேகம்!

எம்.ரகுமான்கான், சேலம்

அதிமுகவின் எதிர்காலம் என்னாகும்?

எதிர்காலமே இல்லாத கட்சிக்கு என்ன பதில் சொல்வது?

ஆர்.தணிகாசலம், திருக்கோவிலூர், விழுப்புரம்

கமலஹாசன் மீண்டும் பிக்பாஸ்க்கு வந்துவிட்டாரே? அவரது சிகிச்சை காலம் முடிந்துவிட்டதா?

இல்லை. அதனால் தான் சுகாதாரத்துறை அவரிடம் விளக்கம் கேட்டு உள்ளது. ஆனால், கமலஹாசன் நடையில், அசைவுகளில் அளவுக்கு மீறிய ஒரு சோர்வு  நன்றாகவே தெரிகிறது! அவருக்கு ஓய்வு தேவைப்படுவதையே அது உணர்த்துகிறது.

குறிப்பு;

https://forms.gle/g3i6Bd5S4DD9FGWD8

கேள்வி கேட் க ஆர்வமுள்ள வாசகர்கள் மேலேயுள்ள லிங்கை சொடுக்கி சுலபமாக தங்கள் கேள்வியை கேட்கலாம்.

 

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time