ஆட்சி முடியும் காலம் நெருங்குவதால், இனி கட்சியைக் கட்டுக்குள் வைத்துக் கொண்டால் தான் தலைமையை உறுதி செய்யமுடியும் என்று ஒ.பி.எஸ் திட்டவட்டமாக ஒரு முடிவுக்கு வந்துவிட்டார்.
தென் மாவட்டங்கள் முழுக்க சுற்றுப் பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார் ஓ.பிஎஸ்! கட்சித் தொண்டர்கள் நிர்வாகிகளை ஒவ்வொரு சனி, ஞாயிறும் சந்திப்பதோடு பொதுக் கூட்டங்கள் நடத்துவதென்றும் திட்டமிட்டுள்ளார். குறிப்பாக தென் மாவட்ட தொண்டர்களுக்கு எம்.ஜி.ஆர் .ஜெயலலிதா படம் முன்பக்கமாகவும், தானும், ஜெயலலிதாவும் இருக்கும் படம் பின்பக்கமாகவும் போட்டு ஒரு லட்சம் பனியன்கள் தருவதென்று முடிவு செய்துள்ளாராம்!
தன் மகன் ரவீந்திரநாத்திடம் இது குறித்து பேசிய ஒபிஎஸ், ஒவ்வொரு மாவட்ட,வட்டார,கிளை தொண்டர்களுக்கும் மாதாமாதம் கணிசமாகப் பணம் கொடுக்கச் சொல்லியுள்ளார். ’’கட்சி நிர்வாகிகள் மனம் குளிரப் பணம் கொடுக்கப் போகிறேன்… எடப்பாடி பணம் செலவழித்து தான் முதல்வரானேன்..என அடிக்கடி சொல்லி வருகிறார்.ஆனால்,அவர் செலவழித்த பணத்திற்கு மேல் பல மடங்கு எடுத்துவிட்டார். மீண்டும் அந்த பணத்தில் கொஞ்சம் எடுத்து வீசி முதல்வராகிவிடலாம் என்று நினைக்கிறார்…! என்னாலும் பணம் கொடுக்க முடியும்…!’’ என்று நெருங்கிய வட்டாரத்தில் பேசியுள்ளார்.
சிஎம்டிஏவில் மட்டுமே சுமார் ஆயிரம் கோடி ரூபாய் பணம் ஈட்டியிருக்கிறார் ஒ.பி.எஸ் என அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன!
ஒபிஎஸ்சின் நடவடிக்கைகள் பற்றித் தெரிய வந்ததும் பதட்டத்திற்கு ஆளானாராம் எடப்பாடி! உடனே, ’’அவர் என்ன பண்ணிவிட முடியும்…? அவரிடம் இருப்பதைவிட என்னிடம் பத்து மடங்கு பணம் இருக்கு! மேலும் எங்க சமூகத்து ஆட்கள் நான் கேட்காமலே கொண்டு வந்து கொட்டுவாங்க…’’ எனக் கூறியுள்ளார்.
சாதி ஆதரவைப் பொறுத்தவரை ஒபிஎஸைக் காட்டிலும் அமமுகவிற்கு அதிக செல்வாக்கு அந்த சாதி மத்தியில் உள்ளதால் ஒபிஎஸ்க்கு கொஞ்சம் சிரமம் இருக்கிறது. அதனால், சசிகலா வந்த பிறகு சசிகலாவுடன் இணைந்து பணியாற்றும்படி பாஜக கட்டளையிட வாய்ப்புள்ளது என்பதால் அதற்குத் தயார் நிலையிலேயே தன்னை வைத்துள்ளார்.ஏற்கனவே சசிகலா போயஸ் கார்டனில் பெரிய பங்களா கட்டிவருவதற்கு சிஎம்டிஏ சார்பில் முழு ஒத்துழைப்பையும் நல்கியுள்ளார் ஒபிஎஸ்.
அதே போல சசிகலா குடும்பத்தின் மிடாஸ் மதுபான நிறுவனத்திற்கு டாஸ்மாக் சார்பில் அதிக ஆர்டர்களை கொடுத்துக் கொண்டிருக்கிறார் எடப்பாடி! மேலும் தன் குடும்பத்தாரை அவர் சசிகலாவைச் சந்திக்க பெங்களூர் அனுப்பி வைத்ததாகவும் ஒரு தகவல் சொல்லப்படுகிறது.
Also read
எப்படிப் பார்த்தாலும் இந்த இருவர் சண்டையில் அவர்கள் இருவரைத் தவிர தற்போது மற்றவர்களே அதிகம் பயன்பெற வாய்ப்புள்ளது.இதில் கட்சிக்காரர்களை கரன்சிகளைக் கொண்டு இருவரும் குளிப்பாட்டுவது என்று முடிவு எடுத்துள்ளதால்,அதிமுக என்னும் கட்சியின் குணாம்சமே மாறவுள்ளது.இனி பணம் தரும் தலைவர்கள் பின்னால் தான் தொண்டர்கள் போவார்கள் என்ற நிலை உருவாகலாம் .ஊழல் பணம் ஒரே இடத்தில் குவியாமல் பகிர்ந்தளிக்கப்படுவது ஒருபுறம் நல்ல விஷயமாகப் பட்டாலும், தொலை நோக்குப் பார்வையில் பார்க்கும் போது பாவப் பணம் பாதகத்தையே ஏற்படுத்தும் எனக் கட்சியின் எம்.ஜி.ஆர் கால விசுவாசிகள் வருத்தப்படுகின்றனர்.
Leave a Reply