ஆசிரியர்களா..? டேட்டா ஆபரேட்டர்களா..?

- ஈரோடு உமா

தமிழகப் பள்ளிக் கல்வியின் சவால்கள்; 7

‘பள்ளிக் கூடம் சென்றோமா? மாணவர்களுக்கு பாடம் நடத்தினோமா?’ என்ற அளவோடு நிற்பதில்லை அரசுப் பள்ளி ஆசிரியர்கள் வேலை! சதாசர்வ காலமும் கற்பித்தல் அல்லாத பணிகள் ஏராளமாக தரப்படுகின்றன. இதில் EMIS பதிவேற்றம் என்ற டேட்டா என்ட்ரீஸ், கடும் மன உளைச்சலுக்கு ஆட்படுத்துகிறது, ஆசிரியர்களை!

EMIS( Educational Management Information System)  கல்வியியல் மேலாண்மைத் தகவல் மையம்

தலைப்பே சொல்கிறது , இது கற்பித்தல் பணி அல்ல , மேலாண்மைப் பணி என்பதை! பள்ளிகளில் ஒரு மாணவர் சேரும் பொழுதே அவருக்கு ஒரு எண் அளிக்கப்பட்டு விடுகிறது. கல்வித் துறையைப் பொறுத்தவரை ஒரு மாணவனுக்கு அடையாளச் சான்று அந்த எண் தான். ஆமாம் அது 16  இலக்க எண்களைக் கொண்டதாக இருக்கும். அதே போல பள்ளிகளுக்கும் UDISE என்ற  எண் தரப்பட்டிருக்கும் , அது மட்டுமல்ல , ஆசிரியர்களுக்கும்   இலக்கம் கொண்டEMISஎண்தரப்படுகிறது. எல்லாவற்றையும் ஒருங்கிணைத்து இந்தியா முழுவதும் பள்ளிக்  கல்வித் துறையை ஒற்றை மையத்தில் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த எண்கள்  கொடுக்கும் முறை பள்ளிகளுக்கு ஆரம்பித்து ஏறக்குறைய 9 வருடங்கள் ஆயிற்று.

Ref :https://udiseplus.gov.in/#/home

இது குறித்து நாம் விவாதித்தால் கட்டுரையின் போக்கு மாறக் கூடும். ஆகவே நமது கட்டுரையின் மையத்துக்கு வருவோம் .

TN – EMIS  (Tamil Nadu – கல்வியியல் மேலாண்மை தகவல் மையம்)

தமிழகப் பள்ளிக் கல்வித் துறையின் அத்தனைப் பள்ளிகள் , மாணவர்கள் , ஆசிரியர்கள் , கல்விக்கான திட்டங்கள் இப்படி அனைத்தும் உள்ளடக்கிய தளம் தான் இது.

TN – EMIS  இப்படி ஒன்றை இணையத்தில் தேடினால் ஏராளமான தொடர்புள்ள செயலிகளை நம்மால் காண முடியும். இவை , கடந்த பல ஆண்டுகளாகவே அப்டேட் செய்யப்பட்டுக் கொண்டே இருக்கின்றன . தகவல்களையும்  தொடர்ந்து அன்றாடம் அப்டேட்   செய்ய வேண்டியுள்ளது.

கற்பித்தலை பின்னுக்குத் தள்ளும் EMIS பதிவேற்றங்கள்

டிஜிட்டல் இந்தியாவின் மாடலாக நமது தமிழகப் பள்ளிக் கல்வித் துறை மாறியுள்ளது. ஆம் ,காலையில் பள்ளிக்கு வந்தவுடன் மாணவர் வருகைப் பதிவை  இணையத்தில் பதிவதை 9.30 மணிக்குள் செய்ய வேண்டும் என்று நிர்ப்பந்தம் . இது மட்டுமல்ல , மாணவரது பெற்றோர் பெயர் , சாதி உள்ளிட்ட ஏராளமான விபரங்களைப் பதிவு செய்ய வேண்டும். பிறந்த தேதி , முகவரி , வங்கிக் கணக்கு விபரங்கள் , ஆதார் எண், கல்வி உதவித் தொகை விபரங்கள் , பொதுத் தேர்வு மாணவர் குறித்த விபரங்கள்  என அடுக்கிக் கொண்டே போகலாம் .

தலைமை இடங்கள் கொடுக்கும் புலன வழிச் செய்திகள் படிப்படியாக மாவட்டம் , கல்வி மாவட்டம் , பள்ளிகள் என கீழ் நிலையில் இருப்பவர் வரை அவசர சிகிச்சைப் பிரிவு போல பறக்கும் . கடைசியில் அந்தப் பணிகளை செய்பவர்கள் யார் ? ஆசிரியர்கள் தான். நீ பாடம் நடத்து , நடத்தாமல் இரு ….கேட்கும் தகவல்களை உடனடியாகப் பதிவு செய் என்பது போல அந்தத் தோரணை இருக்கும். உடனடியாக ஆசிரியர்கள் மாணவர்களை ஏதோ படி , எழுது’’ என்று கூறிவிட்டு ஆசிரியர்களும் அப்டேட் வேலையில் மும்முரமாகிவிடுகின்றனர். கற்பித்தல் பணி கடுமையாக பாதிக்கப்படுகிறது. தற்போதைய சூழலில் , மாணவர்களை கவனிக்க இயலாமல், கல்வி உயரதிகாரிகளின்  வாட்ஸ்அப்  வழிக் கட்டளை செய்திகளுக்கு  ஏற்ப வினையாற்றுவதே ஆசிரியர்களின் தலையாய பணியாக இருக்கின்றது.

அரசுப் பள்ளி ஆசிரியர்கள் சிலரிடம் பேசிய போது, 

அருப்புக்கோட்டை ஆசிரியர் கோபால் கூறும் போது ,  Not marked list- இல் நமது பள்ளியின் பெயர் வரக்கூடாது என்ற பரபரப்புடன் ஒவ்வொரு நாள் காலைப்பொழுதும் நகர்கிறது. உயர் அதிகாரிகளுக்கு வேண்டிய தகவல்களை குறிப்பிட்ட கால அவகாசம் கொடுத்து கேட்டால் கூட சரி ,அதை விடுத்து உடனே இன்று மாலைக்குள் EMIS – இல் பதிவு செய்ய வேண்டும் என்று உத்தரவு. போதாக்குறைக்கு காலை 10  மணிக்கு மேல்  EMIS APP – இல் ஒரு பதிவு செய்வது என்பது சர்வர் பிரச்சனையால் கிராமப்புற பகுதிகளில் பெரும் கேள்விக்குறியாக உள்ளது.  என்கிறார்.

ஆசிரியர் ராதா ரத்தினம் 

காலை வந்த உடன் முதல் பாட வேளை 30 நிமிடம் , ஆனால் வகுப்பிற்கே போக முடியாமல் , EMIS இல்  வருகை போட மைதானத்தில் நிற்பது தான் நடக்கிறது .Attendance போடாத  லிஸ்ட்ல நம்ம  பள்ளி பெயர் வரக்கூடாது என்பதே  அதிகாரிகள் கவலை. ஆனால்,பாடம் நடத்த முடியாமல் போவதால் மாணவர் பாதிக்கப்படுவார்கள் என்பது   ஆசிரியர் கவலை .

ஆசிரியர் பிரகாஷ் குமார் 

பள்ளி மானிய  செலவீனங்களை 36 மணி நேரத்தில் EMIS தளத்தில் பதிவு செய்ய வேண்டும்.  இதற்காக பல மணி நேரம் போராட வேண்டி உள்ளது .

ஆசிரியர் வே .சங்கர் 

தொழில்நுட்ப வளர்ச்சி என்ற பெயரில் இதெல்லாம் தேவையில்லாத. கால விரயம் தான்.  கற்பித்தலைக் கெடுக்கும் பணிகள்.

ஆசிரியர் காதி 

ஆசிரியர்பணி என்பதன் இலக்கணமே மாறிப்போய் இன்று  மாணவர்களுடன் நேரத்தை செலவிட  வேண்டிய நாம்..அலைபேசி கணினி என அல்லாடும் நிலை .இன்று புதியன கற்றுக் கொடுக்கவேண்டும் மாணவர்களோடு மகிழ்வாய் வகுப்பறை நிகழ்வுகளில் ஈடுபட வேண்டும் என்ற கனவோடு செல்லும் எம்போன்ற ஆசிரியர்களுக்கு இது ஒருசாபக்கேடு!

இதற்கு ஒரு தீர்வு காணாமல் அரசு எத்தனை திட்டங்கள் கொண்டு வந்தாலும் தரமான கல்வி சாத்தியமில்லை…

நூறு மாணவர்கள் பயிலும் பள்ளிகளில், அலுவலகப் பணியாளர்களை நியமிக்கும் நிலை மீண்டும் கண்டிப்பாக வரவேண்டும்  அல்லது  குறுவளமைய ஒருங்கிணைப்பாளர்கள் (BRTE )

ஆசிரியப் பயிற்றுநர்கள்/வட்டார வளமைய கணினி உதவியாளர்கள் மடிக்கணினியுடன்  பள்ளிகளுக்குச் சென்று இதுபோன்ற பணிகளை மேற்கொள்ளச் செய்யலாம்…

ஆசிரியர்கள் பற்றாக்குறை

போதிய வகுப்பறைகள் இன்மை…

இதுபோன்ற சூழலில் EMIS பணிகளால் ஆசிரியர்கள் மிகுந்த மன அழுத்தத்திற்கு ஆளாகி வருகின்றனர், இந்நிலை மாறவேண்டும் ..

ஆசிரியர் எஸ் .பிரசாத், பெருந்துறை 

கல்வித்துறையில் மாணவர்கள், ஆசிரியர்கள், கல்வி அலுவலர்கள் விவரங்கள் ஆகியவை தகவல் தொழில்நுட்பத்தின் உதவியுடன் ஆன்லைனில் பதிவு செய்யப் படுகிறது. இந்த விபரங்களை ஒரு முழுமையான கட்டமைப்பு செய்தபின் அதில் உள்ளீடு செய்தால் சிறப்பாக இருந்திருக்கும். கிட்டத்தட்ட 2012ஆம் ஆண்டின் தொடக்கத்திலிருந்து இந்த உள்ளீடுகளை செய்யக்கூடிய பணி தொடங்கியது . ஆனால் இன்றுவரை முழுமை பெறாமல் நாள்தோறும் புதுவிதமான அப்டேட்களை உள்ளடக்கியதாக இருக்கிறது . சதா சர்வகாலமும் வாட்ஸ் அப் செயலி மூலம் சனி ஞாயிறு , இரவு பகல் என்று பாராமல் எந்த நேரமும் அப்டேட் செய்ய வேண்டும் என வாட்ஸ்அப் மூலமாக ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு வருகிறது . இதனால் வாரத்தில் ஆறு நாட்கள் பள்ளி வேலையை முடித்துவிட்டு ஒரு நாள் வீட்டில் குடும்பத்தோடு இருக்கும் ஆசிரியர்கள் மன உளைச்சல் அடைகின்றனர் . மிகுந்த மன உளைச்சலுக்கு இடையே பணியும் செய்து முடிக்கின்றனர். ஆக, கற்பிக்க வந்த ஆசிரியர் பெருமக்களை வெறும் டேட்டா ஆப்பரேட்டர்கள் ஆக்கிய பெருமை இந்த கல்வித்துறையை சாரும் .

ஆசிரியர் ரவி முத்து , ஈரோடு 

நமது கல்வித் துறை ஆசிரியர்களை Data entry operator களாக மாற்றியுள்ளது. கற்றல் கற்பித்தல் எல்லாம் இதற்குப் பிறகு தான் என்றாகி விட்டது. தனியார் பள்ளிகளைப் போல ஒவ்வொரு பள்ளிக்கும்  data entry operator பணியை உருவாக்கி வேலை வாய்ப்பை உருவாக்கலாம்..

அ. பிரகாஷ், இடைநிலை ஆசிரியர் ஊ. ஒ. தொ. பள்ளி பண்ணவயல், HC பட்டுக்கோட்டை

பட்டுக்கோட்டை ஒன்றியத்தில் பல பள்ளிகளுக்கு சென்றுள்ளேன். அங்கு சாதாரணமாக ஆசிரியர்களுக்கு அலைபேசியில் தொடர்பு கொள்ளவே அலைவரிசை  ( சிக்னல் ) கிடையாது. இது ஒரு மாதிரி தான் , தமிழகம் முழுக்க 412 ஒன்றியங்களில் இப்படியான சூழலில் ஆயிரக்கணக்கான  பள்ளிகள் இருப்பதைக் காணலாம்.   ஆனால் 9.30 மணிக்குள் வருகையைப் பதிவு செய்ய நிர்ப்பந்திப்பது எந்த விதத்திலும் சரியல்ல,’’ என்கிறார்.

ரவி முத்து,                                                     பிரகாஷ்,                                                              விஜி

தலைமை ஆசிரியர் விஜி , இராமநாதபுரம் மாவட்டம்.

EMIS இணையதளம் வரவேற்கத்தக்க ஒன்று தான்… மறுப்பதற்கில்லை இங்கு என்ன நடக்கிறது என்றால்,  மாணவர்களுடைய கல்வி மேம்பாட்டிற்கு UPDATE இருந்தால் நாம் செய்யலாம்… தேவையில்லாத நிறைய அப்டேட்கள் தற்போது நடைபெற்று வருகின்றன. உதாரணமாக expenture daily update… பருவத் தேர்வு மதிப்பெண்களை ஆன்லைனில் ஏற்றுவது, போன்ற இன்னும் பல!

Emis ஆல் மாணவர்கள் அடைந்த பலன் ஏதாவது ஒன்று கூட கிடையாது.

ஆசிரியர் ரவிச் சந்திரன் , பெருந்துறை

அந்தத் தளத்தை உடனடியாக சரி செய்து மேம்படுத்தி விட்டு ஆசிரியர்களிடம் கூறினால் எளிமையாக இருக்கும் சர்வர் பிரச்சினை தொடர்ந்து கொண்டே இருப்பதுதான் வேதனை.

ஆசிரியர் கரிகாலன் , தர்மபுரி

இது அவசியமான ஒன்று தான். இது இருபதால் தான் பாதி ஆசிரியர்கள் 9.30 மணிக்கு முன் பள்ளிக்கு வருகிறார்கள். .  தற்போது தான் சில பள்ளிகளில் உள்ள மாணவர்கள் எண்ணிக்கை விவரம் சரியாக உள்ளது.  EMIS இணையதளம் அவசியமான அத்தியாவசியமான ஒன்று.

ஆசிரியர் ஜோதி வேணுகோபால் 

காலையில் புத்துணர்ச்சியுடன் ஆர்வமாக காலையில் பாடம் நடத்த முடிவதில்லை.ஏறக்குறைய 45 நிமிடம் எமிஸ் பதிவு முழுமை பெற LKG UKG வகுப்பு தொடங்கப்படவில்லை. ஆனால், அவர்களுக்கும்’ a’ என்று பதிவிடவேண்டும்.தொடங்கப்படாத வகுப்பிற்கு பதிவா? வருகிற மாணவர்களுக்கே சிக்னல் தடையால் போடமுடிவதில்லை.

18 மாதம் கழித்து வந்த மாணவனின் கற்றல் நிலை பற்றி யாரும் கண்டுகொள்ளவதில்லை. ஒவ்வொரு பள்ளிக்கும் மோடம் இணையவசதி ஏற்படுத்தி ஆஃபீஸ் ஒர்க் மற்றும் கணினி பாடத்திற்கு என்று தனி ஒரு computer staff போடவேண்டும். கற்றல் கற்பித்தல் பணி மட்டும் இருக்கவேண்டும்.

2015 முதல் நடுநிலைப்பள்ளியில் ஒரே ஒரு இடைநிலை ஆசிரியர்! …45,50,60 மாணவர்கள் என்று உயர்ந்து தற்பொழுது 80 மாணவர்கள்…எப்படி அடிப்படைக் கல்வியின் தரம் நன்றாக இருக்கும். Emis இல் location இருக்க வேண்டும், note செய்ய வேண்டும், அவரவர்களின் வருகையை பள்ளி location இல் இருந்து அவரவர்களின் password, id போட்டு பதிவு செய்யவேண்டும்.

ஆசிரியர் செல்வகுமார் , பவானி 

காலவிரயம்..

ஆசிரியர்கள் கற்றல் கற்பித்தலுக்காக தங்களுடைய மாணவர்களுடன் செலவிடும் நேரத்தை இம்மாதிரியான செயல்பாடுகள் விழுங்கிவிடுகின்றன.

ஆசிரியர் ருக்மணி , கிருஷ்ணகிரி மாவட்டம்

Emis எப்பவும் சுத்தோசுத்துனு  சுத்தி நம்மள தலைய சுத்த வைக்குது..

Eye screening test ரொம்ப அபத்தமா இருக்கு .இந்த ரிப்போர்ட்டை வச்சி என்ன செய்வாங்கனு ஒன்னும் விளங்கல..!

மாற்றுத் திறனாளிகள் விவரம் emis ல பதிவு செய்யும் போது …அதிலிருந்த கேள்விகளுக்கு பெற்றோரே யோசிச்சி யோசிச்சி குத்துமதிப்பா தான் பதில் சொல்றாங்க.

ஒரு பள்ளியின் DISE code தெரிந்தால் போதும்.அந்த ஒன்றியம் முழுவதும் ஒரே மாதிரியான Password. யார் வேண்டுமானாலும் அங்கே போய் பார்க்கலாம்.தகவல்களை தவறாக பதியலாம் என்ற நிலைமை..

ஆசிரியர் சத்யகுமார் , திருவண்ணாமலை 

*Emis-இணையதளம் துவங்கப்பட்ட நாள் முதலே முற்றிலும் சோதனை  ஓட்டமாகவே உள்ளது. என்றைக்கு செயல்வடிவம் பெறுமோ? மாணவர்களின் புகைப்படம் Resize -option கண்டிப்பாக இணையதளத்தில் செய்ய வழிவகை செய்யவேண்டும்(அதிகபட்சமான மாணவர்களின் புகைபடப் பதிவுகள் அகோரமாக உள்ளன.)

* தற்சமயம் Firefox friendly-ஆக செயல்படுகிறது.(chrome pop up block ) முறையான தகவல் இல்லாமல்.

*. தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அதிகபட்ச தகவல்கள் தளத்தில் காண்கிற பொழுது உள்ளது. அதை தரவிரக்கம் செய்தால் அதில் அந்த தகவல்கள் வருவதில்லை(..கா. ஆசிரியர்கள் விவரம்)

*.Rise Request option -தவறாக பயன்படுத்தப்படுகிறது. (எ.கா. மாணவர்கள் விகிதாச்சார அடிப்படையில்  -ஆசிரியர்கள் நியமனத்திற்காக) ஒரு அரசு பள்ளிக்கு மாணவர்கள் சென்றாலும், அம்மாணவன் அப்புதிய பள்ளியின் EMIS-ல் இணைக்கப்பட்டாலும் அப்பழைய பள்ளி RISE REQUEST-டை பயன்படுத்தி அவர்கள் பள்ளியில் அம்மாணவனை இணைத்து கொள்கிறார்கள்.(தீர்வு: மாணவனின் பெற்றோர் கைபேசிக்கு OTP- வசதி)

*. TC- ஒழுங்கான formate-ல் இல்லை.

என்ன செய்யலாம் ?

அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு இப்பணி கூடுதல் பணிச்சுமை தருவதுடன், மன அழுத்தத்தைத் தரும் அச்சுறுத்தலாகவே இருக்கிறது. சமீபமாக, சரியான நேரத்தில் EMIS  வருகை பதிவு செய்ய இயலாத ஆசிரியர்களுக்கு , தொழில் நுட்பக் கோளாறுகளாகவே இருந்தாலும்  தண்டனை வழங்க  துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வாய் வழி உத்தரவு பிறப்பித்துள்ளனர் கல்வி அதிகாரிகள் . கற்பித்தல் பணியை சீரமைக்க வேண்டும் எனில், பெரிய பள்ளிகள் ஒவ்வொன்றிற்கும் ஒரு டேடா ஆபரேட்டர் பணியாளரை அரசே  நியமிக்க வேண்டும். பள்ளிக் கூட கல்வி நேரம் என்பது மாணவர்களுக்காக ஆசிரியர்கள் தர வேண்டியது. அதை அதிகாரிகள் அபகரிக்கக் கூடாது.

கட்டுரையாளர்; ஈரோடு உமா

கல்வியாளர், கல்வி தொடர்பான காத்திரமான கட்டுரைகளை தொடர்ந்து எழுதி வருபவர்!

அசத்தும் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் இயக்கத்தின் ( A 3) மாநில ஒருங்கிணைப்பாளர்.

‘கல்விச் சிக்கல்கள் தீர்வை நோக்கி’ நூலின் ஆசிரியர்.

 

 

 

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time