தொழிலாளர்களை கொத்தடிமையாக்கும் உரிமையே புதிய பணிச் சூழல் சட்டங்கள்!

- பீட்டர் துரைராஜ்

இது வரையிலான தொழிலாளர் சட்டங்களில் தொழிலாளர்களுக்கு சில குறைந்தபட்ச பாதுகாப்பு அம்சங்களாவது இருந்தன. ஆனால், தற்போதைய பாஜக அரசோ, புதிய பணிச்சூழல் சட்டத் தொகுப்பின் வழியாக தொழிலாளர்களை கொத்தடிமைகளாக்கி கொள்ளலாம் என சூசகமாகச் சொல்கிறது!

எவ்வளவு மணி நேரம் வேண்டுமானாலும் வேலை வாங்கிக் கொள்ளலாம். வாரத்திற்கு ஒரு நாள் விடுமுறை அவசியமில்லை. எப்போது வேண்டுமானாலும் வேலையை விட்டு தூக்கலாம்…இப்படியாக எண்ணற்ற சுதந்திரங்களை முதலாளிகளுக்கு அள்ளி வழங்குகிறது மோடி அரசு!

இது வரை தொழிலாளர்களுக்கு ஒரளவேனும் பாதுகாப்பளித்த  44 சட்டங்களைச் சுருக்கி, 4 தொழிலாளர் சட்டத் தொகுப்புகளாக நாடாளுமன்றத்தில்‌ நிறைவேற்றியுள்ளது பாஜக அரசு. .1) சம்பளச் சட்டத்தொகுப்பு, தொழிலுறவுச் சட்டத் தொகுப்ப 3) தொழில்வழிப் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் வேலைச்சூழல் சட்டத் தொகுப்பு  4) சமூகப் பாதுகாப்பு சட்டத்தொகுப்பு. அதற்கான விதிகளையும் உருவாக்கியுள்ளது. இது எப்போது வேண்டுமானாலும் நடைமுறைக்கு வரலாம்.

‘எளிதாக தொழில் நடத்தும் சூழலை ஏற்படுத்துவது’ என்ற பெயரில் தொழிலாளர்களின் கண்ணியமான வாழ்வு காவு கொடுக்கப்பட்டுள்ளது ! தொழில்வழி பாதுகாப்பு, உடல்நலம், பணிச்சூழல் சட்டத்தொகுப்பு என்ற புதிய தொழிலாளர் சட்டத்தை ஒன்றிய அரசு நிறைவேற்றியுள்ளது.

தொழிற்சாலை சட்டம், கட்டடத் தொழிலாளர் சட்டம், பீடித் தொழிலாளர் சட்டம், ஒப்பந்த தொழிலாளர் சட்டம், புலம் பெயர்ந்த தொழிலாளர் சட்டம்  என்று ஏற்கனவே இருக்கும் 13 சட்டங்களுக்குப் பதிலாக இந்தப் புதிய சட்டத் தொகுப்பை  ஒன்றிய அரசு நிறைவேற்றியுள்ளது. இந்தப் புதிய சட்டத்தை திரும்பப் பெற வேண்டும் என்று தொழிற்சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.

இந்த நான்கு சட்டத் தொகுப்பில்,  தொழில்வழிப் பாதுகாப்பு குறித்த சட்டத் தொகுப்பை இக்கட்டுரை பேசுகிறது. இந்தச் சட்டத்தொகுப்பு தொழிற் சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கும் பொருந்தும். குடிசைகளில் பீடி சுற்றும் தொழிலாளர்களுக்கும்  பொருந்தும்.

“ஏழைகளின் சிகரெட்” என்று பீடியைச் சொல்லுவார்கள். பீடி சுற்றுபவர்கள்  ‘மங்களூர் கணேஷ் பீடி’ போன்ற ஆலைகளிலும் பணிபுரிவார்கள். வீட்டிலும் பெண்களும், குழந்தைகளுமாக  பணிபுரிவார்கள். ஆயிரம் பீடியைச் சுற்றினால் இத்தனை ரூபாய் என்று ஊதியம் பெறுவார்கள். பீடி, சுருட்டு, புகையிலை,மூக்குப் பொடி  தொழிலின் பிரத்யேக நிலைகளைக் கணக்கில் கொண்டு, 1966 ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட பீடி, சுருட்டு தொழில் நிலமைகள் சட்டம் இப்போது  நடைமுறையில் உள்ளது.

அழிந்து வரும் பீடித் தொழிலை மேலும் பலவீனப்படுத்தி, ஐடிசி சிகரெட் போன்ற பெரிய கம்பெனிகளுக்கு  சாதகமாக அரசாங்கத்தின் கொள்கை இருக்கிறது. ஆயிரம் பீடிக்கு 2.02 சதமாக சுங்க வரி இருந்தது; இப்போது ஆயிரம் பீடிக்கு 28 சதம்  ஜி.எஸ்.டி. விதிக்கப்பட்டுள்ளது. அப்படியென்றால்  பீடித் தொழில் எப்படி சந்தையில் நிற்கும்?  இதனால் பீடித் தொழிலாளர்கள் மேலும் பாதிப்பு அடைவார்கள். ” என்றார்  அகில இந்திய பீடி,சுருட்டு, புகையிலை தொழிலாளர் சம்மேளனத்தைச்  சார்ந்த எஸ்.காசி விஸ்வநாதன்.

“போக்குவரத்து துறை அலுவலகத்தில் பணிபுரிவோருக்கு கடைகள் மற்றும் நிறுவனங்கள் சட்டப்படி விடுமுறை வழங்கப்படுகிறது. அதன் பணிமனைகளில் வேலைசெய்பவர்களுக்கு தொழிற்சாலைச் சட்டப்படி பணிநிலமைகள் உள்ளன. பேருந்துகளில் பணிபுரியும் ஓட்டுநர், நடத்துனர்களுக்கு தொழிற் தகராறு சட்டப்படி ஒப்பந்தங்கள் ஏற்படுத்தப்படுகின்றன. இப்படி  ஒரு துறையில் பணிபுரிபவர்களுக்கே பலவிதமான சட்டங்கள் உள்ளன.  ஆனால், புதிய தொழிற்சாலை சட்டப்படி ஆலையில் பணிபுரியும்  தொழிலாளர்களுக்கும், சம்மந்தமே இல்லாமல்  கட்டட வேலை, பீடி வேலை , தோட்ட வேலை செய்யும்  தொழிலாளர்களுக்கும் ஒரே சட்டத்தை அரசு நிறைவேற்றி உள்ளனர் ” என்றார் ஏஐடியுசி தொழிற்சங்கத்தைச் சார்ந்த டி.எம்.மூர்த்தி.

பாட்டாளி படிப்பு வட்டமும், தமிழ்நாடு ஏஐடியுசியும் இணைந்து, ‘தொழில்வழி பாதுகாப்பு, உடல்நலம், பணிச்சூழல் சட்டத்தொகுப்பு’ குறித்த இணைய வழி கருத்தரங்கை சமீபத்தில் நடத்தின. அதில்   சிஐடியுவைச் சார்ந்த ஆர்.கருமலையன் பேசும்போது ” இந்தியா போன்ற பல்வேறு இயற்கை வளங்கள், தட்பவெப்பம் உள்ள நாட்டில்தான்  சுரங்கத் தொழிலாளர்களுக்காக, தோட்டத் தொழிலாளர்களுக்காக, ஆலைத் தொழிலாளர்களுக்காக,  சினிமா தொழிலாளர் களுக்காக, பத்திரிகையாளர்களுக்காக என தேவையை முன்னிட்டு பல்வேறு சட்டங்கள் உருவாயின. இதற்கு மாற்றாக  இயற்றப்பட்டுள்ள,  புதிய சட்டங்கள் தொழிலாளர்களை நவீன அடிமைகளாக்க உள்ளது. மோடி அரசு கார்ப்பரேட் கம்பெனிகளின், பெரிய முதலாளிகளின் நலனுக்காக இந்த சட்டத் தொகுப்பை கொண்டு வந்துள்ளது. இதிலுள்ள பல்வேறு சட்டப்பிரிவுகள், இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் வழிவகுத்துள்ள கண்ணியமாக உயிர் வாழும் உரிமைக்கு எதிராக உள்ளன” என்றார்.

கருமலையான்

எம்.ஜி.ஆர் முதலமைச்சராக இருந்த காலத்தில், 1982 ஆம் ஆண்டு  உடலுழைப்புத் தொழிலாளர் சட்டம் கொண்டு வரப்பட்டது. அதன் அடிப்படையில்தான் தமிழ்நாட்டில் கட்டடத் தொழிலாளர்களுக்கான நல வாரியம் 1994 ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. அதே போல ஆட்டோ, சுமை தூக்கும், வீட்டுவேலை செய்வோர் போன்ற அமைப்புச்சாரா தொழிலாளர்களுக்கும்  வாரியங்கள் உள்ளன. மற்ற மாநிலங்களை விட தமிழ்நாட்டில் கட்டட தொழிலாளர் நல வாரியம் நன்முறையில் செயல்பட்டு வருகிறது. 1982 ஆம் ஆண்டு சட்டப்படி, கட்டடத் தொழிலாளர்களுக்கு வருங்கால வைப்பு நிதி,  இஎஸ்ஐ போன்ற வசதிகள் இன்னும் கிடைக்கவில்லை. இந்த நிலையில் தமிழ்நாட்டு கட்டட வாரியம், இந்தப் புதிய சட்ட அமலாக்கத்திற்குப் பின்பு ஒன்றிய அரசு அமைக்க இருக்கும் வாரியத்தோடு இணைக்கப்படும்.

அதாவது, தமிழ்நாட்டு கட்டட தொழிலாளர்களின் 27 ஆண்டு கால அனுபவம் பின்னுக்குத் தள்ளப்படும்.” தமிழ்நாடு கட்டடத் தொழிலாளர் நல வாரியத்தில் உள்ள 4000 கோடி ரூபாயை ஒன்றிய அரசு கபளீகரம் செய்ய முயல்கிறது. இதற்கு எதிராக உறுதியான நிலையை எடுக்க வேண்டும் ” என்று இந்திய கம்யூனிஸ்டு மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன்,  கட்டடத் தொழிலாளர் மாநாட்டில் பகிரங்க கோரிக்கை விடுத்தார்.

” 30 பெண் தொழிலாளர்கள் இருந்தால் ஒரு குழந்தைகள் காப்பகம் இருக்க வேண்டும் என்று தொழிற்சாலைச்  சட்டம் சொல்கிறது. ஆனால் 50 பெண் தொழிலாளர்களுக்கு ஒரு குழந்தைகள் காப்பகம் இருக்க வேண்டும் என்று புதிய சட்டம் சொல்கிறது. ஏற்கனவே ஆலைகளை ஆய்வு செய்ய ஆய்வாளர்கள் (Inspectors) இருந்தார்கள். இப்பொழுது அந்தப் பதவிகள் ஆய்வாளர்- வசதிசெய்பவர் (Inspector – Facilitator) என்ற பெயர் மாற்றம் பெறுகின்றன. வலைத்தளம் மூலமாக ஆய்வு நடத்த வழிவகை செய்யப்பட்டுள்ளது.  அதாவது, தொழிலாளர் பாதுகாப்பு, உடல்நலம் குறித்த அம்சங்களில் ஏற்கனவே இருந்த கறாறான வரையறைகள் மாற்றப்படுகின்றன. கழிப்பறை, முதல் உதவிப் பெட்டி, மருத்துவ அலுவலர், மருத்துவ வாகனம், நல அலுவலர், கேண்டீன் குறித்தவைகளின் விளக்கங்கள் மாறுபடுகின்றன. அரசுக்கு அனுப்ப வேண்டிய அறிக்கைகளை, சுயமாக அனுப்பினால் (self certificate) போதுமானது என்று  மாற்றியுள்ளனர்.

‘ஆறுநாட்கள் பணிபுரிந்தால் ஏழாம் நாள் விடுமுறை தர வேண்டும்’ என்று ஏற்கனவே இருந்த சட்டமானது, அரசு நினைத்தால் சில தொழில்களுக்கு விதிவிலக்கு அளிக்கலாம் என மாற்றப்பட்டுள்ளது. அதே போல வாரத்திற்கு 48 மணி நேரம் வேலை’ என்ற பிரிவானது, அரசு நினைத்தால் மாற்றிக்கொள்ளலாம் என்று திருத்தப்பட்டுள்ளது ” என்றார் சிஐடியுவைச் சார்ந்த ஆர்.கருமலையான்.

“இந்த சட்டங்களை விவாதிப்பது என்பதே தவறு, இவை முற்றாகத்  திரும்பப் பெற வேண்டும். இரவு நேரங்களில் பெண்கள் வேலை செய்யக் கூடாது என்பது இப்போது உள்ள சட்டம். ஆனால் அரசு நினைத்தால் இதனை மாற்றலாம் என்று புதிய சட்டத்தில் உள்ளது. இதனால் என்னவாகும் என்றால் நவீன அரிசி ஆலைகளில் பெண்களை இரவு நேரத்தில் வேலை வாங்குவார்கள். ஒரு நபர் ஐம்பது கிலோவரை எடையுள்ள மூட்டையை தூக்கலாம்  என்று சர்வதேச தொழிலாளர் அமைப்பின் (ILO) வழிகாட்டுதல் உள்ளது. இது போன்று  ஒவ்வொரு தொழிலுக்கும், செயலுக்கும்  பல்வேறு வரையறைகள் உள்ளன. அரசு நினைத்தால் பல விதிவிலக்குகளைக் கொடுத்து இருக்கின்ற கொஞ்ச பாதுகாப்பு அம்சங்களைக் கூட இல்லாமல் ஆக்கமுடியும். பொருளாதார நடவடிக்கைகளுக்காக இந்தச் சட்டத்தின் அமலாக்கத்தையே அரசு குறிப்பிட்ட காலத்திற்கு நிறுத்தி வைக்க முடியும் ” என்றார் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக  சங்கத்தைச் சார்ந்த எஸ்.சந்திரகுமார்.

சந்திர குமார்

1948 ம் ஆண்டு தொழிற்சாலை சட்டப்படி, மாவட்ட ஆட்சித்தலைவர், அவரது ஆளுகைக்கு உட்பட்ட ஆலைகளுக்கு  ஆய்வாளர் ஆவார். புதிய சட்டப்படி  மாவட்ட ஆட்சித்தலைவர், ஆலைகளுக்கு (சுரங்கங்களைத் தவிர) ஆய்வாளர் இல்லை என மாற்றப்பட்டுள்ளது. அதாவது அரசாங்கத்தின் கட்டுப்பாடுகளில் இருந்து தொழிற்சாலைகள்  விடுவிக்கப்பட்டுள்ளன. நேரடியான ஆய்வுக்குப் பதிலாக, மூன்றாம் நபர்களைக் கொண்ட நிபுணர்கள் ஆய்வுக்கு வருவார்கள்.

ஒரு இடத்தில்  பத்து நபர்களுக்கு மேல் பணிபுரியும் தொழிலாளர்களுக்குத்தான் புதிய சட்டம் பொருந்தும். இதனால் சிறு அளவில் பணிபுரியும்  பீடி, சினிமா, பத்திரிகையாளர்  போன்ற பல தொழிலாளர்கள்,  சட்டப் பாதுகாப்பில் இருந்து விடுபடுவர். ஒப்பந்தத்  தொழிலாளர்களை முறைப்படுத்தும் நோக்கில் அமைக்கப்பட்டுள்ள ஒப்பந்தத்  தொழிலாளர் ஆலோசனைக் குழு கலைக்கப்படும். அதாவது பணிநிரந்தரக்  கோரிக்கைகளை இந்தச் சட்டம் நீர்த்துப் போகச் செய்யும்.  அதே போல பாதுகாப்பு தொடர்பாக உள்ள பல குழுக்கள் (Safety Committees)  கலைக்கப்படும்.

“சுருக்கமாகச் சொன்னால், இந்தப் புதிய சட்டத் தொகுப்பு குறைவாக சம்பளம் வாங்குவோர் தொடங்கி அதிகமாக சம்பளம் வாங்குபவர்கள் வரை பாதிக்கும். நவீன ஆலைகள் தொடங்கி அலுவலகங்களில் பணிபுரிபவர்கள் வரையும் பாதிக்கும்; சிறு நிறுவனங்களிலும், வீடுகளிலும் பணிபுரிபவர்களையும் கூட விட்டுவைக்காது. இந்தப் புதிய தொழிலாளர் சட்டத் தொகுப்புகளை திரும்பப் பெறக் கோரி, இந்தியத் தொழிலாளர்கள்,  பட்ஜெட் கூட்டத்தொடரின் போது, பிப்ரவரி 23,24 தேதிகளில் வேலைநிறுத்தம் செய்வார்கள்” என்றார் ஆர்.கருமலையான்.

– பீட்டர் துரைராஜ்.

 

 

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time