தனியார் பள்ளிகளிலிருந்து வெளியேறி அரசு பள்ளிகளுக்கு மாணவர்சேர்க்கை அதிகரித்துள்ளதா?

சாவித்திரிகண்ணன்

அய்யோ…அரசு பள்ளியா…! வேண்டாம் என சென்ற வருடம் வரை அலறியவர்கள்

அப்பா,,அரசு பள்ளி இருக்குதே அது போதும்….என்று அடைக்கலம் தேடுகிறார்கள்..!

காலச் சுழற்சி கீழிருப்பதை மேலும்,மேலிருப்பதை கீழும் தள்ளும்..!

ஆனால்,இந்த செய்தி உண்மையா…?

ஆங்காங்கேயுள்ள சில அரசுப் பள்ளிகளில் கூடுதல் மாணவர்கள் சேர்ந்திருப்பது உண்மை தான்! ஆனால்,எல்லா அரசுப் பள்ளிகளிலும் அதிக மாணவர்கள் சேரவில்லை!

அப்படிக் கூடுதல் மாணவர்கள் சேர்வதற்கு அரசும் அக்கரை காட்டியதாகத் தெரியவில்லை!

ஏனெனில், தனியார் பள்ளிகள் கொரோனாவைப் பொருட்படுத்தாமல் ஜூன்,ஜூலையில் அட்மிஷனை தொடங்கிய போது அரசு பள்ளிகளூக்கே அனுமதியில்லாத போது தனியார் எப்படி அட்மிஷன் ஆரம்பிக்கமுடியும்? என அதை அரசு தடுத்திருக்க வேண்டும். ஆனால்,தடுக்கவில்லை, அதனால்,பள்ளியும் திறக்காமல்,பிள்ளைகளும் படிக்காமல் பெற்றோர்கள் கல்விக் கட்டணம் கட்ட நிர்பந்திக்கப்பட்டனர். பள்ளியில் இருந்து வெளியேற விரும்பிய மாணவர்களுக்கு டிரான்ஸ்பர் சர்டிபிகேட் தரமுடியாது என்று அழிச்சாடியம் செய்தனர். இந்த செய்திகள் அரசு கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டும் எந்த நடவடிக்கையும் தனியார் பள்ளிகளின் மீது எடுக்கவில்லை.மாறாக தற்போது அரசு டி.சி. இல்லாவிட்டாலும் அரசு பள்ளியில் சேரலாம் எனக் கூறிவிட்டது.மிகப் பலரும் கடனை வாங்கியோ நகை அடகு வைத்தோ தான் பீஸ் கட்டினார்கள். அப்படியும் கட்ட வழியில்லாதவர்களே தற்போது அரசு பள்ளிகளுக்கு வந்து கொண்டுள்ளனர். அதிலும் நல்ல ரிசல்ட் தரும் அரசு பள்ளிகளாக தேர்வு செய்து தான் பிள்ளைகளை சேர்க்கின்றனர்.

தமிழகத்தில் ஒரு ஆண்டில் புதிதாக 11 லட்சம் பிஞ்சு குழந்தைகள் பள்ளியில் புதிதாக சேருகின்றனர். இதில் இந்த ஆண்டு அரசு பள்ளியில் முதலாம் வகுப்பில் சேர்ந்தவர்கள் எண்ணிக்கை அதிகபட்சமே மூன்று லட்சம் தான்! இந்த நிலையில் அரசு பள்ளியில் அதிக மாணவர்கள் சேர்ந்ததாக சொல்வதில் அர்த்தமே இல்லை. எந்த பிரபலப் தனியார் பள்ளியில் இருந்தும் மாணவர்கள் வெளிவரவில்லை. அபூர்வமாக ஒருசில பெரிய தனியார் பள்ளிகளில் நடந்திருக்கலாம்.பொதுவாக இந்த ஆண்டும் சுமார் 70% குழந்தைகள் தனியார் பள்ளிகளில் தான் சேர்ந்துள்ளனர்.

சென்ற ஆண்டின்படி(2019) தமிழகத்தின் அரசு பள்ளிகள் மொத்தம் 37,358. மொத்த மாணவர்கள் 46,61,000. மொத்த ஆசிரியர்கள் 2,33,000.

இதில் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதி வெளியேறியவர்கள், ப்ளஸ்டு தேர்வு எழுதி வெளியேறியவர்கள் சுமார் 15 லட்சம் இருக்குமென்றால்,இப்போது அரசு பள்ளிக்குள் வந்தவர்கள் எண்ணிக்கையும் சுமார் 13 லட்சம் என்று தான் சொல்லப்படுகிறது. ஆனால், இதில் கவனிக்க வேண்டியது என்னவென்றால், வருடாவருடம் அரசு பள்ளியைவிட்டு வெளியேறியவர்களைக் காட்டிலும் உள்ளே வருபவர்கள் எண்ணிக்கை குறைந்து கொண்டிருந்தது. தற்போது அது கிட்டதட்ட சமநிலை எய்தியுள்ளது!

16 ஆண்டுகளுக்கு முன்பு தமிழக அரசு பள்ளிகளில் படித்தவர்கள் எண்ணிக்கை 70 லட்சமாக இருந்தது. ஆனால்,அதில் தற்போது சுமார் 23.5 லட்சம் குறைந்துள்ளது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். இந்த காலகட்டத்தில் இவ்வளவு மாணவர்கள் ஏன் அரசு பள்ளிகளிலிருந்து விலகினார்கள் என்று விடை தேடினால் கிடைக்கும் கசப்பான அம்சங்கள் தற்போது நிவர்த்தி செய்யப்பட்டுவிட்டனவா?

புதர் மண்டிய பள்ளிவளாகங்கள்,சுகாதாரமற்ற சூழல்,மின் வசதியின்மை, ஒழுகும் மேற்கூரை,பாழடைந்த கட்டிடம்,கழிவறையில்லா துயரங்கள், குடி தண்ணீர் கிடைக்காத அவலங்கள், ஆசிரியர் பற்றாகுறை, தகுதியில்லா ஆசிரியர்கள்…இவை எந்தளவு பூர்த்தியாகியுள்ளன…? சென்ற ஆண்டு ப்ளஸ்டூ தேர்வு எழுதிய மாணவர்களில் 30 சதவிகிதமானவர்களுக்கு சம்பந்தப்பட்ட முக்கிய பாடங்களில் ஆசிரியர்களே இல்லாமல் தான் தேர்வு எழுதினார்கள் என்பதை நாம் மறக்கமுடியாது. இதை ஆறுதல் கொள்ள வேண்டிய ஒரு அம்சம் என்னவெனில் சமீபத்தில் போஸ்ட்கிராஜுவேட் ஆசிரியர்கள் 635 பேர் வேலைக்கு எடுத்தனர் என்பது தான்!

தற்போது அரசு பள்ளிக்கு வந்து சேர்ந்துள்ள மாணவர்கள் கொரானா காலத்து பொருளாதார பாதிப்பில் வீழ்ந்த பல லட்சம் குடும்பங்களின் ஓரு சில தளிர்கள்! இவர்கள் எதிர்பார்க்கும் கல்வித் தரம் இல்லையென்றால், அடுத்த வருடம் இவர்களின் குடும்ப நிலை சரியாகும் பட்சத்தில் அரசு பள்ளியில் இருந்து வெளியேறவும் கூடும்!

’’தமிழகத்தின் அரசு பள்ளிகளில் 50% த்திற்கும் அதிகமான அரசு பள்ளிகளில் புதிய அட்மிஷன்கள் எதுவும் பெரிதாக அதிகரிக்கவில்லை.ஒரு சில பள்ளிகளிலோ போன வருடத்தைக் காட்டிலும் குறைவாகவோ அல்லது இணையாகவோ தான் உள்ளது. நாகபட்டிணம்,கடலூர் போன்ற மாவட்ட சில பள்ளிகள் நிலவரம் உள்ளது. சேலம் மாவட்ட ஆத்தூர் பிளாக்கில் சென்ற வருடம் சேர்ந்த மாணவர்கள் மொத்தம் 5,430. இந்த வருடம் சேர்ந்தவர்கள் 5,680. ஆக மிகக் குறைந்த முன்னேற்றமே…’’என்கின்றன ஆசிரியர் அமைப்புகள்.

தமிழகத்தில் இருபது மாணவர்களுக்கும் குறைவான மாணவர்கள் படிக்கும் பள்ளிகள் சுமார் 3,000 உள்ளன! இப்படியான பள்ளிகள் சிலவற்றை கடந்த சில ஆண்டுகளாக அரசு மூடிவருகிறது. இதை கல்வி அமைச்சர் செங்கோட்டையன் சட்டசபையிலேயே ஒத்துக் கொண்டுள்ளார். அதிலும் இந்தப் பள்ளிகள் பின்தங்கிய மக்கள் குறிப்பாக தலித்துகள்,பழங்குடிகள் வாழும் பகுதிகள் என்பது கவனத்திற்குரியது. இதில் எஞ்சியுள்ள எத்தனை பள்ளிகளில் கூடுதல் மாணவர்கள் சேர்ந்தனர் என்று பள்ளிக் கல்வித்துறை தெரிவிக்க வேண்டும்.

அடுத்ததாக முக்கியமாக ஆசிரியர்கள் பற்றாக்குறை விஷயத்தில் அரசு தெளிவான முடிவு எடுக்காவிட்டால்,பெரிய வீழ்ச்சியே ஏற்பட்டுவிடும். தற்போதைய நிலவரப்படியே அரசு பள்ளிகளின் ஆசிரியர் பற்றாக்குறை 70,000 இருக்கலாம். சென்ற சில ஆண்டுகளில் மட்டும் தொடக்கபள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளி ஆகியவற்றில் 10,000 ஆசிரியர் பணியிடங்கள் குறைக்கப்பட்டது. தற்போது கிராம அளவில் தொடங்கி சிற்றூர் வரையிலான பல அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை சிறப்பாக அதிகரித்துள்ளது. குறிப்பாக அங்கீகாரமில்லாத டுபாக்கூர் கன்வெண்டுகள், தனியார் பள்ளிகள் நடத்தி வந்த இடங்களில் இருந்து தான் கணிசமான மாணவர்கள் வந்துள்ளனர்.இவர்களை தக்கவைக்க அரசு கட்டமைப்பை பலப்படுத்த வேண்டும்’’ என்கிறார் தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி பொதுச் செயலாளர் இரா.தாஸ்.

’’அரசு கூறும் தகவல்கள்படியே தற்போது புதிதாக சுமார் இரண்டு லட்சம் மாணவர்கள் கூடுதலாக சேர்ந்திருந்தால்.. அவர்களுக்கான ஆசிரியர்களாக சுமார் 5,000 பேர் புதிதாக உடனடியாக வேலைக்கு எடுக்க வேண்டும். மேலும் இதற்கேற்ப கூடுதல் வகுப்பறைகள், கட்டிடங்களை தாமதமின்றி பள்ளிகள் திறக்கும் முன்பே கட்டிமுடிக்க வேண்டும். உதாரணத்திற்கு சிவகங்கையில் உள்ள அரசு பள்ளியின் ஆறாம் வகுப்பிற்கு புதிதாக சுமார் 750 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். இவர்களில் 540 பேருக்கு மட்டுமே தற்போது வரை அட்மிஷன் போடப்பட்டுள்ளது. இங்கே கூடுதல் கட்டிடம் உடனே தேவை! சென்னை பெரம்பூர் அரசு பள்ளியில் ஆறாம் வகுப்பிற்கு மட்டுமே 400 மாணவர்கள் சேர்ந்துள்ளனர். நுங்கம்பாக்கம்,அசோக் நகர் போன்ற அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது. குறிப்பாக ஆறாம் வகுப்பில் மாணவர் எண்ணிக்கை அதிகரித்துள்ளதற்கான காரணம் நீட் தேர்வில் அரசு பள்ளியில் ஆறாம் வகுப்பிலிருந்து படிக்கும் மாணவர்களுக்கு 7.5% இடஒதுக்கீடு கொடுக்கப்பட்டிருப்பது தான்! இன்னும் சிலர் பள்ளி திறந்த பிறகு மாணவர்களை சேர்க்கலாம் என உள்ளனர். செப்டம்பர் 30 க்குள் அரசு பள்ளி அட்மிஷன்களை முடித்துவிட்டால் நிறைய மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள்.இன்னும் ஒரு மாதம் நீடிக்க வேண்டும்.’’என்கிறார் தமிழ்நாடு ஆசிரியர் சங்க மாநிலத் தலைவர் பி.கே.இளமாறன்.

எல்லாவற்றுக்கும் மேலாக கல்வித்துறையில் கரைபுரண்டோடும் ஊழல்களை, லஞ்சலாவணியங்களை முற்றிலும் முடிவுக்கு கொண்டு வராவிட்டால் எல்லாமே பாழாகிவிடும். ஆசிரியர் பணியிட மாற்றங்களில் பல லட்சம் ரூபாய் கேட்கப்படுகிறது. இப்படிக் கொடுத்து வரும் ஆசிரியர் பாடம் நடத்துவராரா? விட்ட பணத்தை எப்படி எடுப்பது என்று பார்ப்பாரா? சில அரசு பள்ளித் தலைமை ஆசிரியர்கள் தற்போது தனியார் பள்ளிகளிலிருந்து விலகி நொந்து வருபவர்களிடம் அங்கே எவ்வளவு கட்டினீர்கள்..ஏன் இங்கே பத்தாயிரம் தரக் கூடாதா? எனக் கேட்கின்றனர். இப்படி வாங்குவது தொடங்கி பல்வேறு ஊழல்களில் ஈடுபடுகின்றனர்.

கல்வி அமைச்சரும், அதிகாரிகளும் அடிக்கும் கொள்ளை தனி ரகம்! அவை அனைத்தும் இலவச திட்டங்களை மையப்படுத்தியதே! பள்ளிச் சீருடை, பாடப்புத்தங்கள், புத்தகப் பை, சைக்கிள், செருப்பு, அட்லஸ், ஜாமிண்டிரி பாக்ஸ், பென்சில், கிரையான்ஸ், லேப்டாப், டைரி…என சுமார் 14 வித இலவசங்கள் அரசு பள்ளி மாணவர்களுக்குத் தரப்படுகிறது. ஊழல் செய்வதற்கென்றே ஒவ்வொரு வருடமும் இந்த இலவசங்களின் எண்ணிக்கையை அதிகரித்த வண்ணம் உள்ளனர் என்பது தான் கல்வித்துறையில் உள்ளவர்கள் பெரும்பாலோர் சொல்கிறார்கள். உண்மையிலேயே இவர்களுக்கு மாணவர்கள் நல்லனில் அக்கரை இருந்தால் சிறப்பான கல்விதரத்திற்கு தான் மெனக்கெட வேண்டும். ஆனால், பாருங்கள். இவர்கள் மாணவர்களுக்கு நாட்காட்டி எனப்படும் டைரியை கல்வியாண்டின் ஆரம்பத்தில் தராமல் முடியும் தருவாயான பிப்ரவரியில் தருவார்கள். அதை வாங்கி மாணவர்கள் என்ன செய்ய முடியும்?

உண்மையிலேயே அரசுக்கு பள்ளிகள் மீது அக்கரை இருந்தால் தனியார்பள்ளிகளின் மாணவர் சேர்க்கையில் 25%த்தினருக்கு அரசு பணம் தரக் கூடாது. இது அரசு பள்ளி மாணவர்களுக்கு செய்யும் துரோகமாகும். இப்படியாக சுமார் 100 கோடிக்கும் அதிகமான நிதி அரசு கஜானாவிலிருந்து தனியார் பள்ளிகளுக்குப் போகிறது. இந்த மாணவர்களை ஏன் அரசு பள்ளியிலேயே சேர்த்து படிக்கவைக்கலாமே! இந்தப் பணத்தை அரசு பள்ளிகளின் பல்வேறு பற்றாக்குறைகளுக்கு முன்னுரிமை தந்து செலவழிக்கலாம். மாணவர்கள் குறைவை காரணம் காட்டி ஆசிரியர் எண்ணிக்கையை குறைப்பதை தவிர்க்கலாம். அத்தியாவசிய கல்விச் செலவில் சமரசமின்றி அரசு செயல்பட வேண்டும். தனியார்பள்ளிகளில் சேரும் 25% மாணவர்களுக்கு அரசு நிதிஉதவி செய்வதை நிறுத்தாமல் அரசுப் பள்ளிகளின் தரம் உயர்த்துவது சாத்தியமில்லை.’’என்கிறார் கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு.

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time