ஆண்டி இண்டியனா..? ஆண்டி ஹியூமனா..?

- சாவித்திரி கண்ணன்

கலைத்துறை சார்ந்த யாரும் யோசித்தே பார்த்திராத ஒரு சின்னக் கதைக் கருவை வைத்து மிக சுவாரஷ்யமாக கதை சொல்ல முயற்சித்ததற்கு ஒரு சபாஷ் இயக்குனர் இளமாறனுக்கு!

இறந்து போன பிணத்தில் ஏற்படும் மத அடையாளச் சிக்கல் உருவாக்கும் இயல்பான குழப்பங்கள், தடைகள், அதைத் தொடர்ந்து உருவாகும் பதற்றம் ஆகியவை சிறப்பாகக் காட்சிபடுத்தப் பட்டுள்ளன!

கடைசி வரை ஒரு சுவரெழுத்து ஓவியன் எப்படி கொலை செய்யப்பட்டான்? ஏன் செய்யப்பட்டான்? எதனால் அந்த கொலை நடந்தது என்ற மர்மம் விலக்கப்படவே இல்லை.

இப்ராஹிம் என்பவர் சரோஜா என்ற இந்து பெண்ணை இரண்டாம்தாரமாக கல்யாணம் செய்து ஒரு குழந்தையை கொடுத்துவிட்டு கைவிட்டு விடுகிறார். அந்தக் குழந்தை பாட்ஷா ஒரு சுவரெழுத்து ஓவியனாக வாழ்ந்ததாக சொல்லப்பட்ட நிலையில், அவன் எந்த சாமியைக் கும்பிட்டான் அல்லது கும்பிட மறுத்தான் என்பதும் சொல்லப்படவில்லை.

ஆனால், இஸ்லாமியர்கள் அவன் பிணத்திற்கு இறுதி சடங்கு செய்து அடக்கம் செய்ய மறுக்கும் போது தான் அவன் முஸ்லீமாக வாழவில்லை என்பது உறுதிப்படுகிறது.

இஸ்லாமியர்கள் அவன் இறுதி சடங்கை நடத்த மறுக்கப் பட்ட நிலையில் அவனை இந்து சார்பான கட்சி எடுத்து அடக்கம் செய்ய முனைகின்றனர். அதில் உருவாகும் முட்டல்,மோதல்கள் அதன் பிறகு ஏற்படும் தடைகள் அதை தொடர்ந்து மூன்று மதத்தினருக்கும் அந்த பிணத்தால் ஏற்படும்  சச்ரவுகளைகளை சொல்லிய விதத்தில் தமிழ் சினிமா இது வரை கண்டறியாத ஒரு கதைக் களத்தில் சமூகப் பார்வையுடன் வெளிப்படும் படைபாளியாக ப்ளு சட்டை இளமாறன் மிளிர்கிறார்.

படத்தில் வரும் ஒரு கறுப்பு சட்டை கதாபாத்திரம் இளமாறனின் குரலாக ஒலிக்கிறது. சரியான நேரத்தில் நச்சென்று வசனம் பேசி கவனம் பெறுகிறது.

அரசியல்வாதிகள் மக்களை ஓட்டுப் போடுகின்ற ஒரு ஜந்துவாக பார்ப்பதற்கு மேலாக எந்த மதிப்பும் வைக்கவில்லை என்றும், அவர்கள் எந்த வித மனிதத் தன்மையும் அற்றவர்களாக உருமாறிவிட்டனர் என்றும் படம் சொல்கிறது. இதில் ஓரளவு உண்மை இருந்தாலும் இது முழு உண்மையல்ல.

மீடியாக்களின் பரபரப்புச் செய்தி என்ற பசி சமூக அமைதிக்கே சாத்தானாக உள்ளது என்பதும் நன்றாக சொல்லப்பட்டு உள்ளது.

பந்தல்கார ஒல்லி இளைஞனாக வரும் கதாபாத்திரம் பேசும் வசனங்கள் வேற லெவல்! மீனவ குப்பத்தில் பாடப்படும் கானா பாடல்களும்,சாவு நடனங்களும் அதற்குரிய இயல்பில் பதிவாகியுள்ளன.

இப்படி பல சிறப்பு அம்சங்கள் சில இருந்தாலும், கலை நேர்த்தியில் படம் சற்றே பின் தங்கியுள்ளதை சொல்லாமல் இருக்க முடியவில்லை. ராதாரவியின் நடிப்பு ஈடுபாடில்லாமல் மிக செயற்கையாக உள்ளது. அவர் தோன்றும் காட்சிகளும், நடத்தும் உரையாடல்களும் 1980 களில் பார்த்த தூர்தர்ஷன் நாடகங்களை நினைவுபடுத்துகின்றன. போலீஸ் உயர் அதிகாரியான நடித்துள்ள நரேனிடம் இன்னும் சிறப்பான பெர்பான்ஸை இயக்குனர் வாங்கி இருக்கலாம்.

காவல்துறையின் பவர் என்ன என்பதும், கலவரக்கார அரசியல் மற்றும் மத வியாபாரிகளை அவர்களால் வழிக்கு கொண்டுவர முடியும் என்பதும் உள்ளபடியே நம்பத்தகுந்த வகையில் சொல்லப்பட்டு உள்ளது. ஆனால், காவல்துறை தலைவர் எடுக்கும் முடிவு அனைவருக்கும் ஏற்புடையதாக இருக்க முடியாது.

அந்தப் பிரேதத்தை அரசே பொறுப்பெடுத்து கண்ணியமாக அடக்கம் செய்யும் என சொல்லி செய்து இருந்தால், அது எந்த எளிய குப்பத்து மனிதர்களால் வரவேற்கப்பட்டு இருக்கும்.

சமூக அரசியல் யதார்த்தங்களைப் பேசும் எந்த ஒரு கலை படைப்பும் இறுதியில் நம்பிக்கையை விதைக்க வேண்டும். கடைசி கிளைமக்ஸ் மூலம் அதை தவறவிட்டுள்ளார் இளமாறன். ஆளும் கட்சி, எதிர்கட்சி என முழுக்க, முழுக்க எல்லா அரசியல்வாதிகளுமே அயோக்கியர்கள், வன்முறையை நம்புபவர்கள் என்பது இயற்கைக்கு மாறானதாகும்! ஆபத்தான சிந்தனை போக்காகும்.

தலை வாழை விருந்து வைத்து, கடைசியில் விஷத்தையும் சேர்த்து வைத்திருக்கத் தேவை இல்லை.

ஆண்டி இந்தியன் என்ற படத் தலைப்பை ‘ஆண்டி ஹீயுமன்’ என்று வைத்திருக்கலாம்!

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

 

 

Support Aram

நேர்மையான,வெளிப்படையான,சுதந்திரமான இதழியலுக்கு தோள் கொடுங்கள்.

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time