கேள்வி கேட்டு அறிவை விசாலப்படுத்துவது தான் கற்றலின் அடிப்படை இலக்கணம். ஆனால், ஆசிரியர்களையே கேள்வி கேட்கவோ, விபரம் தெரிந்து கொள்ளவோ வழியற்ற புள்ளி விபரப் புலிகளாக்கி வருகிறது கல்வித்துறை. அரசின் அனைத்து நிர்வாகச் செயல்பாடுகள் நிறைவேற்றத்திற்கும் ஆசிரியர்களே பலியாடுகள்! இதனால், அரசுப் பள்ளி ஆசிரியர்களை அரசாங்கம் அறிவிக்கப்படாத ஒரு கொத்தடிமையாக கருதுகிறதோ என்ற சந்தேகம் கூட அவ்வப்போது வரத் தான் செய்கிறது.
பேரு தான் வாத்தியார்! ஆனா, வருஷம் முழுக்க எங்களுக்கு வழங்கப்படும் பணிகளைக் கேட்டால் மலைச்சு போயிடுவீங்க!
சட்டமன்ற தேர்தலா? பாராளுமன்ற தேர்தலா? உள்ளாட்சி தேர்தலா? கூப்பிடு வாத்தியார்களைன்னு எங்களைத் தான் தேர்தல் பணிகளில் ஈடுபடுத்துகிறார்கள்!
இது போதாது என்று மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிக்கும் நாள் கணக்கில் பள்ளிக்கு விடுமுறை போட்டு வீடுவீடா சுத்தவிடறாங்க…!
தற்போது கொரானா தடுப்பூசி பணிக்கும் எங்களை ஈடுபடுத்துகிறார்கள்!
பள்ளிக் கூடம் என்று எடுத்துக் கொண்டால் கூட, எங்களை எங்க பாடம் நடத்த அனுமதிக்கிறாங்க! மாணவர்களுக்கு ஆதார் அட்டை, சாதிச் சான்றிதழ், சிறுபான்மை மற்றும் ஆதி திராவிடர் உதவித் தொகை, அரசு வழங்கும் 14 வகையான இலவசங்களை பெற்றுத் தருவது ஒரு பெரும் பணியாகும்!
விலையில்லா பாடநூல்கள் குறிப்பேடுகள் சீருடைகள் காலணிகள் புத்தகப் பைகள் கணக்கு உபகரணப்பெட்டி போன்ற பல்வேறு பொருட்கள் மாணவர்களுக்கு ஆண்டுதோறும் அல்லது பருவம் தோறும் வழங்கப்படுகின்றன. இவை அனைத்தும் ஒரே நாளில் வழங்கப்படுவதில்லை. வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு தவணைகளில் வழங்கப்படும் பொழுது அவற்றை பள்ளிக்கு கொண்டு வந்து சேர்ப்பது தலைமையாசிரியர்களுக்கு கடந்த சில ஆண்டுகளில் மிகப்பெரிய பணியாக உள்ளது. இது கற்பித்தல் சாராத பணியாக இருந்தாலும் மாணவர்களுக்கு பயனளிக்கும் பணி என்பதனால் தலைமையாசிரியர்கள் இதை செய்வதற்கு மறுப்பதில்லை. ஆனால் இந்தப் பணிகளாலும் கற்பித்தல் பாதிக்கப்படுகிறது என்பது மறுக்க முடியாத உண்மை.
இத்தனை தொடர் பணிகளுக்கிடையே ஆசிரியர்களுக்கான பயிற்சி வகுப்பு என்று ஐந்து நாட்கள் போக வேண்டும்!
இவை ஒருபுறமிருக்க தினசரி EMIS கல்வி மேலாண்மை தகவல் முகமையில் பல தகவல்களை பதிவேற்றுவது ஒரு சவாலான விஷயமாக மாறிவிட்டது.
இந்த அளவுக்கான வேலைகளை அரசுப் பள்ளி ஆசிரியர்கள் மீது திணித்துவிட்டு அரசு பள்ளி ஆசிரியர்கள் சுளையாக சம்பளம் வாங்கிட்டு சரியாக பாடம் நடத்துவதில்லை என்ற குற்றச்சாட்டை சுமத்திவிடுகிறார்கள்! மேற்கண்ட எந்த பணிச் சுமையும் தனியார் மெட்ரிக் பள்ளிகளின் ஆசிரியர்கள் செய்வதில்லை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
முதலாவதாக கல்வித்துறை நினைவில் நிறுத்த வேண்டிய விஷயம். அரசு தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் அலுவலக உதவியாளர் அல்லது இளநிலை உதவியாளர் பணியிடமும் கிடையாது. பள்ளி சார்ந்த அத்தனை பணிகளையும் தலைமையாசிரியரும் அதில் பணியாற்றும் ஆசிரியர்களின் செய்ய வேண்டும். பள்ளிக்கூட மணி அடிப்பதில் இருந்து அலுவலகத்திற்குத் தேவையான அனைத்து ஆவணங்களையும் தயார் செய்யும் பணியையும் ஆசிரியர்களே செய்ய வேண்டும்.
கடந்த சில ஆண்டுகளாக பள்ளி பற்றிய விவரங்களை இணையதளத்தில் பதிவேற்றும் பணி நடைபெற்று வருகிறது. அதன் காரணமாக அனைத்து பள்ளி செயல்பாடுகளும் இணையத்தில் ஏற்றப்பட வேண்டும். ஆசிரியர் வருகை மாணவர் வருகை கால அட்டவணை, தினசரி வரவு செலவு இவை அனைத்தும் தினமும் இணையதளத்தில் பள்ளி நேரத்திலேயே பதிவேற்றம் செய்யப்பட வேண்டும். இதுதவிர மாணவர் பற்றிய முழு விவரங்களும் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. இவை அனைத்தும் தலைமை ஆசிரியராலும், அவருக்கு உதவும் மற்ற சில ஆசிரியர்களாலும் செய்யப்படுவதால் கற்பித்தல் நேரம் குறைந்து போகின்றது.
கடந்த சில ஆண்டுகளாக தினம்தோறும் புள்ளிவிவரங்கள் பள்ளிகளிலிருந்து கோரப்படுகின்றன. அதுவும் போதிய அவகாசம் அளிக்கப்படாமல் உடனடியாக தகவல்களை திரட்டி வழங்க ஆணையிடப்படுகின்றது. அதுவும் தொடக்கக் கல்வித் துறையை பொறுத்தவரை இரு முனைகளில் இருந்து அழுத்தம் வருகின்றன.
ஒரு முனையில் வட்டார கல்வி அலுவலகங்களிலிருந்து காலையில் விவரங்கள் கோரப்பட்டால், மறு முனையிலிருந்து பிற்பகலில் எஸ் எஸ் ஏ மற்றும் ஆர் எம் எஸ் ஏ என அழைக்கப்படும் அனைவருக்கும் கல்வி இயக்க அலுவலர்களிடமிருந்து வேறு விபரங்கள் கோரப்படுகின்றன.
இந்த விபரங்கள் அவர்கள் அளிக்கும் படிவங்களின் படி உடனடியாக திரட்டி தருவதற்கு நிர்பந்திக்கப்படுவதால் ஆசிரியர்களுக்கு ஒருவித பதற்றம் உருவாவதோடு கற்பித்தல் கால அளவு கபளீகரமாகின்றது!
தனியார் பள்ளிகளையும், அரசு பள்ளிகளையும் ஒப்பிடும் கல்வியாளர்கள் இந்த இரண்டு வகை பள்ளிகளிலும் உள்ள ஆசிரியர்களின் பணிகளை ஒப்பிடுவது கிடையாது. தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு ஊதியம் குறைவு என்றாலும், அவர்களுக்கு கற்பித்தல் தவிர வேறு எந்த பணியும் அளிப்பது கிடையாது. இதனால் தனியார் பள்ளி மாணவர்களுக்கு கற்றல் கற்பித்தல் நேரம் அதிகமாக உள்ளது. அரசுப் பள்ளி மாணவர்களை பொருத்தவரை அவருடைய ஆசிரியர்கள் பெரும்பாலும் ஆவணங்கள் மற்றும் புள்ளி விவரங்கள் தயார் செய்வதிலேயே காலம் கழிப்பதால் அவர்களுடைய கற்றல் நேரம் நிர்வாகச் செயல்பாடுகளால் வெகுவாக களவாடப்படுகிறது. அரசு பள்ளி மாணவர்கள் என்ன பாவம் செய்தனர்?
அப்படி என்னதான் புள்ளிவிவரம் கேட்கப்படுகின்றது? அதற்கு ஆசிரியர்களின் எதிர்வினை என்னவென்று கேட்டால் அது மிகப்பெரிய வேடிக்கையாக உள்ளது.
மாணவர்களிடம் மட்டுமே கேள்வி கேட்க தெரிந்த ஆசிரியர்கள்.
வகுப்புத் தேர்வு ,வார தேர்வு, மாதத்தேர்வு , அரையாண்டு தேர்வு, முழு ஆண்டுத் தேர்வு என பல வகைகளில் மாணவர்களிடம் வினா எழுப்புவதில் கேள்வி மன்னர்கள் நமது ஆசிரியர்கள்.
பாடம் நடத்தி முடித்த பிறகு வகுப்பறையில் கேள்வி கேட்டு மாணவர்கள் பதில் கூறவில்லை என்றால், கண்கள் சிவக்க தமது ரத்த அழுத்தத்தை எகிற வைத்துக் கொள்ளும் தன்மை உடையவர்கள் ஆசிரியர்கள்.
இப்படிப்பட்ட ஆசிரியர்கள் கல்வி அலுவலர்களிடம் மட்டும் கேள்வி கேட்காமல் கடமையாற்றுவார்கள்! தங்களிடம் அலுவலர்களால் தினமும் கேட்கப்படும் புள்ளி விவரங்களை ஏன் எதற்கு என்று கேள்வி கேட்காமல் சளைக்காமல் அளித்துக் கொண்டே இருப்பார்கள்!
புள்ளிவிவரம் சேகரிக்கப்பட்ட பிறகு இந்த விஷயத்துக்காக தான் புள்ளி விவரம் சேகரிக்கப்பட்டது இதை வைத்து இந்த விஷயம் திட்டமிடல் செய்யப்பட்டது என்ற விபரமும் தலைமையாசிரியர்களிடம் தெரிவிப்பது கிடையாது
ஒரு புள்ளிவிவரம் கேட்கப் படுகிறது என்றால், எதற்காக அந்த புள்ளி விவரம் என்று தலைமை ஆசிரியர் வட்டார கல்வி அலுவலரை கேட்பது கிடையாது. வட்டார கல்வி அலுவலர் மாவட்ட கல்வி அலுவலரை கேட்பது கிடையாது. மாவட்டக் கல்வி அலுவலர் முதன்மைக் கல்வி அலுவலரை கேட்பது கிடையாது.
ஏதாவது ஒரு புள்ளிவிவரம் கேட்கப்படும்போது தப்பித்தவறி ஆயிரத்தில் ஒரு தலைமை ஆசிரியர் வட்டார கல்வி அலுவலரை எதற்காக இந்த விவரம் கோரப்படுகிறது என்று கேட்பார். அதற்கு அவரது பதில் “மேலே கேட்கிறார்கள் அதனால் நான் உங்களிடம் கேட்கிறேன்” என்பதாகத்தான் இருக்கும். பதிலின் தன்மை படிநிலை உயர உயர மாறுபடும்.
மெல்ல கற்கும் மாணவர்கள் எத்தனை பேர் என்றால் உடனே விவரம் கொடுப்போம். ஆனால், அதை எதற்காக கேட்டார்கள் என்ற விவரம் நமக்கு தெரியாது. கட்டிடம் சரியாக இருக்கிறதா என்று விவரம் கேட்பார்கள். சரியாக இல்லை என்று பதில் அளித்த எத்தனை பள்ளிகளுக்கு கட்டிடம் கிடைத்தது என்ற விவரம் நமக்கு தெரியாது.
வேறு எந்தத் துறையிலும் இந்த அளவுக்கு தினமும் ஒரு புள்ளிவிவரம் சேகரிக்கப்படுகிறதா என்று தெரியவில்லை. இத்தனைக்கும் இன்று மாணவன் குளித்தானா இல்லையா என்ற தகவலைத் தவிர மற்ற அனைத்து தகவலும் எமிஸ்(EMIS) இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதனையும் மீறி கூடுதலாக என்ன தகவல் தலைமையாசிரியர்களிடம் இருக்கப் போகிறது?
இந்த புள்ளி விவரங்களை தயார் செய்வதற்கே தலைமையாசிரியர்களுக்கு நேரம் சரியாக இருக்கும். இதனால் கண்டிப்பாக கற்பித்தல் பணி பாதிக்கப்படும்.
இந்த புள்ளி விவரங்களை தொகுத்து வழங்குவதற்கு தான் வட்டார கல்வி அலுவலர்களின் நேரம் சரியாக இருக்கும். அதனால் அவர்கள் பள்ளியை பார்வையிடும் நேரம் வெகுவாக குறைகிறது.
Statistical department ஐ விட அதிக புள்ளி விவரங்கள் தேவைப்படும் துறை கல்வித்துறையாக தான் இருக்கும் போலிருக்கிறது.
ஒவ்வொரு முறையும் அலுவலகத்திலிருந்து புள்ளிவிவரம் கேட்கப்படும் போது தலைமையாசிரியர்கள் மனதில் தோன்றும் கேள்வி “நாம் சென்ற முறை கொடுத்த தகவல் என்ன ஆனது? ” என்பதுதான்.
ஒவ்வொரு முறையும் பள்ளியில் இருந்து தான் விவரங்கள் சேகரிக்கப்பட வேண்டும் என்றால், அலுவலகத்தில் பள்ளிகளைப் பற்றி எந்த தகவலும் இல்லை என்று எடுத்துக் கொள்ளலாமா?
இதற்கு விடிவு காலம் எப்போது?
அதுவும் அதிகார தோரணையில் பதினொன்றரை மணிக்குள் அந்தத் தகவலை கொடு மூன்றரை மணிக்குள் இந்த தகவலை கொடு என கேட்டுக் கொண்டே இருப்பார்கள்.
தலைமை ஆசிரியர்களும் வழக்கம் போல எந்தக் கேள்வியும் கேட்காமல் பரபரப்பாக தகவல்களை குறித்த நேரத்தில் கொடுத்துக் கொண்டே இருப்பார்கள்.
இப்படித் தான் ஆசிரியர்கள் நடத்தப்படுவார்கள் என்றால், கல்வித்துறைக்கு ஏது கதி மோட்சம்?
கட்டுரையாளர் நாகை பாலா
மாவட்ட ஒருங்கிணைப்பாளர்
குழந்தைநேயப் பள்ளி கூட்டமைப்பு
நாகப்பட்டினம் மாவட்டம்.
Leave a Reply