பாரதியும், இதழியலும்!

- மணா

‘எமக்குத் தொழில் கவிதை’ என்று தன்னுடைய தொழிலைப் பற்றிப் பிரகடனப்படுத்திக் கொண்ட பாரதி இதழியல் துறைக்குள் வந்தது தற்செயலாகத்தான்.

காசியிலிருந்து எட்டயபுரத்துக்குத் திரும்பிய பிறகு எட்டையபுர மன்னருக்குத் தினமும் பத்திரிகைகளைப் படித்து, அதிலுள்ள செய்திகளைப் படித்துச் சொல்லும் வேலை பார்த்து விட்டு, மதுரை, சேதுபதி பள்ளியில் தற்காலிகமாக மூன்று மாதங்கள் வேலை பார்த்து, அந்த வேலையும் முடிவுக்கு வந்தபோதுதான் அவருடைய 22ஆம் வயதில் சென்னையில் சுதேசமித்திரன் பத்திரிகையில் உதவி ஆசிரியர் வேலை கிடைத்தது. அதனால், சமகாலத்துடன் நெருக்கமான உறவு கொள்வதற்கான சூழ்நிலை உருவாகியது.

இதழியல் ஊடகம் இப்போது பரபரப்பு என்கிற ஒரே நோக்கத்தின்கீழ்ச் சிக்கிவிட்டது. தங்களை நிலைநிறுத்திக் கொள்ள நடக்கும் அசுரத்தனமான போட்டிக்கு இடையில் இதழியல் நெறிமுறைகள் ஒதுக்கப்பட்டுவிட்டன. இந்தப் போட்டியில் யார் யாருடைய தலைகளோ உருள்கின்றன. யார் யாரோ இரையாகிறார்கள். எப்படியாவது வியாபாரப் போட்டியில் எந்தவிதத் தந்திரங்களுடன் நிலைநிறுத்த வேண்டும் என்பது இப்போதுள்ள இதழியலின் இலக்கு.

இத்தொடர் போட்டியில் – இதழியல் நேர்மையை அதற்கான நெறிமுறைகளைத் தூக்கிக்கொண்டு விதிவிலக்கான சில பத்திரிகையாளர்கள் மூச்சிரைத்தபடி ஓட முடியாதபடி இருப்பது இன்றைய சூழல்.

ஆனால், பாரதி வாழ்ந்த காலத்தில் இதழியல் மதிப்பீடுகள் இந்த அளவுக்குச் சரிவைச் சந்திக்கவில்லை. அந்தக் காலகட்டப் பத்திரிகைகளின் இலக்கு வேறு; செயல்பாடுகள் வேறு.

கண் பார்வை மங்கிய நிலையிலும் காலனியாதிக்கத்திற்கு எதிரான குரலைத் தமிழில் எழுப்பிய ஜி.சுப்பிரமணிய அய்யரின் வழிகாட்டுதலின் கீழ் அவர் பணியாற்றியது பாரதியின் வாழ்க்கையில் முக்கியமான திருப்பம். மற்றத்தொழில்கள் வேலைகளைவிட, இதழியல் துறைக்குள் அவர் நுழைந்தது அவரைப் பல விதத்தில் செழுமைப்படுத்தியது; காலத்திலிருந்து துண்டித்துக் கொள்ளாமல் காலத்திற்கு ஏற்ப அவரைப் புதுப்பித்துக் கொள்ள வைத்தது.

திலகர் நடத்திய  ‘மராட்டா கேசரி’, வங்கத்தில் ‘யுகாந்தர்’. ‘வந்தே மாதரம்’ என்று தேசம் முழுக்க ஆங்கிலேய அடக்கு முறைக்கு எதிரான குரல் இதழியலில் எதிரொலித்த நிலையில் தமிழில் ‘சுதேசமித்திரன்’ அதே வேலையைச் செய்தது. வணிக ரீதியிலான வெற்றி என்பதை விட, அன்றைக்குச் சுதந்திர வேட்கைதான் அதன் செயல்பாட்டிற்கான இலக்காக இருந்தது. தாய்மொழியில்தான் இதற்கான வேட்கையைப் பரப்ப முடியும் என்கிற விவேகம் சுதேசமித்திரனுக்கு இருந்தது.

காங்கிரஸ் மகா சபையின் முக்கியப் பொறுப்பிலும் சுப்பிரமணிய ஐயர் இருந்ததால் – சுதந்திர உணர்வு தகதகக்கிற அடுப்பின் பக்கத்திலிருந்து அந்த வெப்பத்தை உள் வாங்குகிற அனுபவம் பாரதிக்கு ஏற்பட்டது.

அதனாலேயே ‘நவீன நாகரீகத்தில் முக்கியச் சின்னங்களில் ஒன்றாகிய பத்திரிகைத் தொழில்’ என்று சுதேசமித்திரனில் எழுதுகிற அளவுக்கு இதழியல் மீது பாரதிக்கு ஈர்ப்பிருந்தது.

ஆங்கிலத்திலிருந்து செய்திகளைத் தமிழில் மொழிபெயர்ப்பதில்தான் பாரதியின் இதழியல் பணி தொடங்கினாலும் – அதில் அவர் அலட்சியமாக இல்லை.

பிறப்பும், வளர்ப்பும் புகுத்தியிருந்த கற்பிதங்களைக் கால மாற்றத்திற்கேற்பக் களைய பாரதி தயங்கவில்லை. பெண்களை வெளியில் அழைத்துச் செல்வதை அப்போதைய சம்பிரதாய மரபுகள் தடுப்பதை நிவேதிதா சுட்டிக்காட்டியதும், பெண்களுக்கேயான ‘சக்கரவர்த்தினி’ பத்திரிகையின் ஆசிரியராகி புதுமைப் பெண்ணுக்கான இலக்கணங்களை அடையாளப்படுத்தினார்.

பழமையின் பிடிப்போடு தன்னுள் படர்ந்த நூலாம்படைக்கும், செழுமையான வேருக்குமான வித்தியாசத்தை உணர்ந்து கொண்டார். அதையும் மீறிச் சில சனாதனக் கருத்துகள் அவருக்குள் ஆதிக்கம் செலுத்தி, அது பேச்சிலும், எழுத்திலும் கசிந்திருக்கலாம். இருந்தாலும், இன்றைக்குக் காலம் உருவாக்கிக் கொடுத்திருக்கிற உயரத்திலிருந்தபடி – பாரதியைப் பார்த்து இந்த உயரத்திற்கு ஏன் அன்றைக்கே அவர் வரவில்லை என்கிற கேள்விகளை எழுப்புவது வெகு சுலபமானது. ஆனாலும், அன்றைக்கு இருந்த கனமான மதிப்பீடுகளை உதறி எறிய அவர் தயாராக இருந்த மனநிலைதான் மிக முக்கியமானது.

ஆங்கிலேயரின் ஆட்சி நடந்துகொண்டிருந்தபோது ஆங்கிலம் கற்று, ஆங்கிலம் பேசி, எழுதித் தன் வாழ்க்கையை மாற்றியமைத்துக்கொள்ள ஒரு சமூகம் முற்பட்ட காலத்தில், ஆங்கில தினசரி நடத்துவதற்கு வாய்ப்பிருந்தும் தமிழில் பத்திரிகையை விடாமுயற்சியுடன் நடத்திய ஜி. சுப்பிரமணிய அய்யருக்கு இருந்த வேகம் பாரதியிடம் செயல்பட்டதாலேயே, “இயன்றவரை தமிழில் பேசுவேன், சிந்தனை செய்வது தமிழில் செய்வேன்” என்று தன்னைப் பற்றியே சொல்லிக் கொள்ள முடிந்திருக்கிறது.

இதழியலின் சாத்தியங்களை உணர்ந்ததால் கூடுதலான சுதந்திரமுள்ள வாய்ப்புகளைத் தேடிப் போனார். இதனாலேயே ‘சுதேசமித்திரன்’, ‘சக்கரவர்த்தினி’ பத்திரிகைகளிலிருந்து விலகி. ‘இந்தியா’ பத்திரிகையின் அறிவிக்கப்படாத ஆசிரியரானார்.

மேற்கத்திய முறையிலான தினசரியில் அதே மாதிரி ‘கார்ட்டூன்’ என்கிற கருத்துப் படங்கள் பாரதியின் மேற்பார்வையில் ‘இந்தியா’வில் வெளிவந்தன.

“பாரதி தாம் பொறுப்பேற்று நடத்திய ‘இந்தியா’ என்கிற அரசியல் வார இதழில் கருத்துப் படங்களை வெளியிட்டுத் தமிழ் இதழியலில் மட்டுமல்ல, இந்திய இதழியல் துறையிலும் முன்னோடியாக விளங்கினார் என்பது பரவலாக அறியப்படாத செய்தி” என்கிறார் ‘பாரதியின் கருத்துப் படங்கள்’ நூலில் ஆய்வாளரான ஆ.இரா. வேங்கடாசலபதி.

பாரதி இதழியல் துறைக்குத் தந்த கொடை அவருடைய மொழி வீச்சு. எந்தச் சிக்கலும் இல்லாமல் சமதளத்தில் ஓடுகிற அருவி போன்ற நடை அது. எழுதுகிற எழுத்தில் தன்னுடைய மேதா விலாசமும், தன் அடையாளமும் வெளிப்பட வேண்டும் என்பதை விட, படிக்கிற வாசகர்கள் புரிந்து கொள்வதற்கு எந்தச் சிக்கலும் வரக்கூடாது என்பதையே தன் எழுத்துகளின் அளவுகோலாக அவர் மதிப்பிட்டிருப்பது வாசகர்களின் மீதிருந்த மதிப்பையும், மாறுதலுக்குத் தயாராக இருந்த அவருடைய மனதையும் வெளிக்காட்டுகிறது.

“நீ எழுதப் போகிற விஷயத்தை இங்கிலீஷ் தெரியாத ஒரு தமிழனிடம் வாயினால் சொல்லிக் காட்டு. அவனுக்கு நன்றாக அர்த்தம் விளங்குகிறதா என்று பார்த்துக் கொண்டு பிறகு எழுது. அப்போதுதான் நீ எழுதுகிற எழுத்து தமிழ்நாட்டுக்குப் பயன்படும். இல்லாது போனால் நீயும் சிரமப்பட்டு, மற்றவர்களுக்கும் பயனில்லாமல் போகிறது.” என்று பாரதியே எழுத்தைப் பற்றி எழுதியிருக்கிறார்.

நல்ல சிறுகதையில் தென்படும் அழகை வசனத்தில் வெகு இயல்பாகக் கொண்டு வந்தவர். இவரைப் பற்றி ‘நான் காணும் பாரதி’ கட்டுரையில் சுந்தர ராமசாமி எழுதுகிறார்;

சுந்தர ராமசாமி

“எடுத்த எடுப்பிலேயே பாரதியின் வசன நூல்கள் என்னைப் பெரிதும் கவர்ந்தன. அவருடைய சத்திய உணர்வு என்னைக் கவர்ந்தது. அவருடைய நடையழகும் என்னைக் கவர்ந்தது. வாக்கிய அமைப்புகள் சரம் போலப் புறப்படும் ஆரம்பமும், நமக்கென்ற முடிவும் என்னைக் கவர்ந்தன. இதற்கெல்லாம் மேலாக அவருடைய கருத்துகளும் என்னை ஆகர்ஷித்தன.”

நவீன இலக்கியத் தளத்தில் இயங்கும் யாரும் புறக்கணிக்க முடியாத தரத்தில் இன்றும் இருக்கிறது பாரதியின் மொழி நடை.

“பாரதிக்கு முன்பிருந்தே உரைநடையில் நல்ல முயற்சிகளும், சாதனைகளும் நிகழ்ந்திருப்பினும் நான் பாரதியில் ஆரம்பித்து பாரதிக்குப் பின் ஏற்பட்டுள்ள உரைநடை முயற்சிகளையே கவனிக்க முற்பட்டிருப்பதற்கு ஒரு காரணம் உண்டு. தமிழ் இலக்கிய மறுமலர்ச்சி கவி.சுப்பிரமணிய பாரதியிலிருந்தே தொடங்குவதாக ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது” என்கிறார் வல்லிக்கண்ணன், ‘பாரதிக்குப் பின் தமிழ் உரைநடை’ என்கிற நூலில்.

தொடர்ந்து பொருளாதாரச் சிக்கல், துரத்துகிற வறுமை, காவல்துறையின் நெருக்கடிகளுக்கு இடையில் ‘பால பாரத்’ என்கிற ஆங்கிலப் பத்திரிகைக்கு ஆசிரியராகி, பிறகு ‘விஜயா’, ‘கர்மயோகி’ என்று பல பத்திரிகைகளுக்குப் பொறுப்பேற்று இடை விடாமல் அவருடைய எழுத்துப் பணி தொடர்ந்திருக்கிறது.

1909 அக்டோபர் 30 அன்று வெளிவந்த ‘விஜயா’ இதழில், தான் ஆரம்பித்த பத்திரிகையின் நோக்கத்தைச் சொல்கிறார். ‘தமிழ் ஜனங்கள் அறிவு, செல்வம், வல்லமை, ஸ்வதந்திரம் முதலிய நன்மைகள் அனைத்தும் பெற வழிகாட்டுவது’ என்கிறார். பாரதியின் நோக்கம் உன்னதமாக இருந்தாலும் – அவருடைய ஆசிரியப் பொறுப்பில் வெளிவந்த சில பத்திரிகைகளும் அரைகுறைக் கனவுகளாய், வர்ணஜால நீர்க்குமிழிகளாகச் சீக்கிரமே நின்று போயின. அதனால் மறுபடியும் இதழியலைத் தொடங்கிய இடமான சுதேசமித்திரனுக்கே வந்து சேர வேண்டிய அவசியம் பாரதிக்கு ஏற்பட்டது.

1921 செப்டம்பர் 21-ந் தேதி பாரதி காலமாவதற்கு முன்பு கூட ஆப்கானிஸ்தானில் அப்போது ஆட்சி புரிந்த அமானுல்லா கானைப் பற்றிய கட்டுரையொன்றைச் சுதேசமித்திரனுக்கு எழுதி அனுப்புவதிலே ஆர்வமாக இருந்திருக்கிறார். 39 வயதுக்குட்பட்ட காலத்தில் அவர் எழுதி வைத்து விட்டுப் போனவை காலத்தின் பார்வைக்கு விரிந்து கிடக்கிறது.

முரண்பாடுகள் இல்லாமல் பாரதியின் வாழ்க்கையும் இல்லை .பஞ்சாபில் பத்திரிகையாளர்கள் மீது ஆங்கிலேய அரசின் அடக்குமுறைச் சட்டம் பாய்ந்தபோது அதை எதிர்த்துச் சென்னையில் நடந்த கூட்டத்தில் பேசுகிறார், எழுதுகிறார்.

“பஞ்சாப் பத்திராதிபர் போலவே இந்நாட்டு 30 கோடி ஜனங்களும் தத்தம் இயன்றபடி சுதேசத்தின் பொருட்டுக் கஷ்டமடைய வேண்டும்” என்று எழுதிய பாரதியின் எழுத்துக்கே நெருக்கடி வந்தது. பாரதி கைது செய்யப்பட்டபோது, ஆங்கிலேய அரசுக்கு உறுதிமொழி கொடுத்துவிட்டு வந்திருக்க வேண்டுமா? என்பது குறித்த விமர்சனங்கள் எழுந்தன.

இது குறித்து ‘தமிழ் இதழ்கள்’ நூலில் தகவல் ரீதியாக எழுதியிருக்கிறார் பாரதி ஆய்வாளரான ரா. அ. பத்மநாபன்.

”பாரதியார் கடலூர்ச் சாலையில் கைது செய்யப்பட்டார், யுத்த காலச் சட்டம் ஒன்றின்படி. ஆனால், சென்னையில் ஏ. ரெங்கசாமி ஐயங்கார், சி.பி. ராமஸ்வாமி ஐயர், அன்னிபெசண்ட் போன்ற பெரும் தலைவர்கள் அவருக்காகச் சென்னை அரசாங்கத்திடம் பரிந்து பேசினார்கள். அரசும் பணிந்து வந்தது. பாரதியார் நேரடியான அரசியல் நடவடிக்கைகளில் குறித்த காலம் வரை ஈடுபடுவதில்லை என்று உறுதிமொழி பெற்று, அவரை விடுவித்தார்கள்.”

இருந்தாலும் பொருளாதாரம் சீர்குலைந்து வாழ்க்கையின் அலைக்கழிப்புகள் மேலோங்கிய நிலையில், எதிர்காலம் குறித்த நம்பிக்கைகள் தளர்ந்த நிலையில் இந்த முடிவுகளை பாரதி எடுக்க நேர்ந்திருக்கலாம். அதனால், இன்று உருவாகியிருக்கிற பாதுகாப்பான சூழலின் இடைவெளியிலிருந்து பாரதியின் வாழ்வைச் சுலபமாக விமர்சித்துவிட முடியாது. இவை எவற்றையும் மறைத்து விடவும் பாரதி முயலவில்லை.

சில ஏற்ற இறக்கங்கள் இருந்தாலும், வெப்பத்துடன் நம்மைக் கடந்து போகிற காற்று போல – தமிழ் இலக்கிய உலகிலும், இதழியலிலும் அதிர்வுகளை ஏற்படுத்திவிட்டுக் கடந்து போயிருக்கிறார் பாரதி.

“பொய்மை, இரட்டுற மொழிதல், நயவஞ்சனை, நடிப்பு இவற்றால் பொருளீட்டிப் பிழைத்தல் நாய்ப் பிழைப்பென்று கொள்வேன்.” என்று சொல்லி இடையறாத தொழில் புரிந்த பாரதியின் சிறு கத்தி போன்ற மொழி வீச்சும், பத்திரிகை குறித்து அடர்த்தியான கனவும், கனல் போன்ற உண்மை வேட்கையும் நிதானித்துப் பார்க்க அவகாசமில்லாமல் ஓடியபடி இருக்கும். தற்போதைய இதழியலைக் கொஞ்சமாவது பாதிக்குமா?

அவர் காலத்தை விட எவ்வளவோ நவீன வசதிகள் கூடியிருக்கின்றன தமிழ் இதழியல் துறையில். ஆனால், அன்றைக்கு எளிமையுடன் இதழியல் துறை இருந்தபோது பாரதியிடம் இருந்த கம்பீரம் இப்போது இல்லை.

கட்டுரையாளர்; மணா, மூத்த பத்திரிகையாளர்

 கே.எஸ்.இராதாகிருஷ்ணன் தொகுப்பாசிரியாக இருந்து கொண்டு வந்துள்ள ‘கரிசல் காட்டில் கவிதை சோலை பாரதி’ என்ற 748 பக்கங்கள் கொண்ட நூலில்இடம் பெற்றுள்ள 113 கட்டுரைகளில் இதுவும் ஒன்று!

இந்த நூலில் பாரதியைப் பற்றி ராஜாஜி, வ.உ.சி, காமராஜர்,திரு.வி.க, ஜீவா, உ.வே.சா, வ.வே.சு ஐயர், வ.ரா. சாமிநாத சர்மா, அண்ணா, கருணாநிதி, நாமக்கல் கவிஞர், டி.கே.சி, ம.பொ.சி, கண்ணதாசன், ஜெயகாந்தன், மு.வரதராசனார் போன்ற பல தலைவர்கள், அறிஞர்களின் அரிய கட்டுரைகளும் இடம் பெற்றுள்ளன.

கலைஞன் பதிப்பகம் வெளியிட்டுள்ளது.

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time