ஜாகீர் உசேன் இன்னும் ஓர் இஸ்லாமியராகத் தொடர்வது சரியா..?

-சாவித்திரி கண்ணன்

நடனக் கலைஞர் ஜாகீர் உசேன் பெருமாள் பக்தன் என்பது உண்மை தான் என்றாலும், அவர் ஏன் இன்னும் முஸ்லீமாக தொடர்கிறார்..? என்ற கேள்விக்கு என்ன பதில்? அப்படி இந்துவாக மாறி இருந்தால் அவர் ஸ்ரீரங்கம் கோவிலில் இருந்து வெளியேற்றப்பட்டிருக்கவே வாய்ப்பில்லையே..? என்ற கேள்விகள் பல நண்பர்களிடம் இருந்து கேட்கப்படுகிறது.

கடவுள் என்பவர் இந்து, முஸ்லீம், கிறிஸ்த்துவர் மட்டுமின்றி அனைத்து ஜீவராசிகளுக்கும் பொதுவானவர் என்பது மெய்யா? பொய்யா?  பெயர் ஜாகீர் உசேன் என்பதால் பெருமாள் அவரை புறக்கணிக்கத்திருந்தால் இன்று அவர் இவ்வளவு பெயரும், புகழும் பெற்று இருக்க முடியுமா? ஜாகீர் உசேசனின் பெயர், புகழ், அந்தஸ்த்து அனைத்துக்கும் அடித்தளமே அவரது அசைக்க முடியாத பெருமாள் பக்தி தான்! அப்படி அவரை ஆகர்ஷித்துள்ள பகவான் – அவர் நெஞ்சில் நீங்காமல் குடியிருக்கும் பகவான் – நீ இஸ்லாமியப் பெயரை துறந்துவிடு என்ற கட்டளை தராத போது – அவரை ஜாகீர் உசேனாகவே ஏற்கும் போது – அதை கேள்வி கேட்கும் உரிமை நமக்கில்லை என்பது மட்டுமல்ல, அது சிறுமையிலும் சிறுமை! மடமையிலும் மடமை!

மதம் என்பது மனிதன் உருவாக்கிக் கொண்ட சவுகரியம் தானே! மதம் கடந்து அனைவருக்கும் பொதுவானதே தெய்வம்!

பிறப்பு என்பது ஒரு விபத்து. அவர் இஸ்லாமியராக பிறந்தது இறைவனின் சித்தம். இஸ்லாமியருக்கு பிறந்த குழந்தையை தனக்கு கலைப்பணியாற்றும்படி ஆட்டுவித்தது அகம் மகிழ்ந்து கொண்டிருப்பதும் அவன் சித்தமே! ஜாகீர் உசேனை எந்த நிபந்தனையுமின்றி, அவரை  அவராகவே ஆண்டவன் ஏற்ற பிறகு மத அளவு கோலை வைத்து பார்ப்பது நம் அறியாமை!

ஸ்ரீரங்கம் கோவிலுக்கு உள்ளேயே துலுக்க நாச்சியாருக்கு வழிபாடு உண்டு. அவரை இந்து நாச்சியாராக ஏன் பெயர் மாற்றம் செய்யாமல் நம் முன்னோர்கள் ஏற்றார்கள் என யோசித்தால், நாம் ஜாகீர் உசேனை புரிந்து கொண்டு அவரை அவராகவே ஏற்கலாம்!

உலக மதங்களிலேயே அதிக நெகிழ்வுத் தன்மையும், சகிப்புத் தன்மையும் கொண்டது இந்து மதம் என்ற பெருமைக்கு களங்கமாகிவிட்டது ஜாகீர் உசேன் மீதான தாக்குதல். சாத்வீகத்தை விரும்பும் எந்த இந்துவும் ஜாகீர் உசேன் அவமானப்படுத்தப்பட்டதை ஒரு போதும் ஏற்கமாட்டான்! தெய்வ வழிபாட்டையே ஏற்க மறுக்கும் நாத்திகர்களுக்கு கூட கோவில்கள் மீது தன்னையுமறியாத ஒரு ஈர்ப்பு இருந்து கொண்டே இருக்கும். எனக்கு தெரிந்து கோவில் வளாகத்தில் சும்மா அமைதியாக உட்கார்ந்துவிட்டு எழுந்து செல்லும் சில நாத்திகர்களை நான் அறிவேன். இந்த மண்ணில் பிறந்த எந்த ஒரு ஜீவராசிக்குமே கோவில் பொதுவானது. அதற்கு அங்கே ஏதோ ஒரு நிம்மதி, மன சாந்தி  கிடைக்கிறது என்றால், அவை தன்னையுமறியாமல் அங்கு வந்து அதை பெற்றுச் செல்லும். அந்த வகைத் தன்மையுடன் தான் நம் முன்னோர்களால் கோவில் கட்டப்பட்டு உள்ளது.

நம்மிடம் உள்ள பக்தியும், ஆன்மீகமும் அம் மனதில் அன்பை அதிகப்படுத்துவதற்கும், பாகுபாட்டு உணர்வை பட்டுப் போக வைப்பதற்கும் உதவாவிட்டால், அந்த பக்திக்கும், ஆன்மீகத்திற்கும் என்ன பெருமை அல்லது பயன் இருக்க முடியும்?

ஜாகீர் உசேன் என்பவர் நம் தேசத் தலைவர்கள் காந்தி, நேருவுடன் இணைந்து விடுதலைக்கு பாடுப்பட்ட தலைவர். இந்தியாவின் கல்வி மறுமலர்ச்சிக்கு வித்திட்ட மாபெரும் கல்வியாளர். உதவி ஜனாதிபதி. அவர் நினைவாக தனக்கு தன் பெற்றோரால் வைக்கப்பட்ட பெயரால் தான் நம்முடைய நடனக் கலைஞர் ஜாகீர் உசேன் இன்று உலகம் முழுக்க அறியப்பட்டு உள்ளார்.

ஜாகீர் உசேன் கால்படாத பெருமாள் திருத்தலங்கள் மிகக் குறைவு. அவர் பெருமாள் கோவில் திருப்பணிகளுக்கு அள்ளிக் கொடுத்த பணத்திற்கு கணக்கு வழக்கில்லை. அதே ஸ்ரீரங்கத்திலேயே அனேகமுறை வந்து பெருமாளை சேவித்து சென்றவர் தான் அவர்.

இது தொடர்பாக ஜாகீர் உசேன் தன் பேஸ்புக்கில் எழுதியதை படித்த பொழுது உண்மையிலேயே மனம் நெகிழ்ந்தது; ”நான் என் தாய்வீடாக கருதும், தினம் என் நாவிலும், நெஞ்சிலும் ஏற்றித் தொழும் தென்னரங்கனை, என்னரங்கனாகக் கணப் பொழுதும் மறவாது கருதிக் கொண்டிருக்கும் திருவரங்கத்தில் இருந்து ஒரு மதவெறியனால் வலுக் கட்டாயமாக வெளியேற்றப்பட்டடேன். காரணம் என் பெயர். முதன்முறையாக நான் இம்மதத்திற்கு தொடர்புடையவன் அல்ல, என ஒரு மிகப் பெரும் சமூகமே பார்த்துக் கொண்டிருக்க அரங்கனைக் காண தடை செய்யப்பட்டு, பல அவமானங்களுக்கு இடையே துரத்தப்பட்டேன். இக்காயம் என்னை என்றென்றும் உறுத்திக் கொண்டே இருக்கும். ஆனாலும், என் பற்று அரங்கனையும்,ஆண்டாளையும் விட்டு அணுவளவும் அகலாது. காலம், திருப்பாணனை உள்ளழைத்தது போல என்னையும், என் நம்பிக்கையையும் ஒரு நாள் ஏற்கும். அரங்கன் என்றும் எமக்குத் துணை” என பதிவிட்டு உள்ளார்.

பாஜக மற்றும் இந்துத்துவ இயக்கங்கள் தோற்றுவிக்கும் பாஸிச கலாச்சாரத்தின் கோர முகங்களில் ஒன்று தான் தற்போது நடந்துள்ள சம்பவம். தெய்வம் தன்னை நாடிவரும் அனைவருக்குமானது. பொதுவானது என்பதை நந்தன் காலத்தில் இருந்தும், திருப்பாணத்தாழ்வார் காலத்தில் இருந்தும் மறுதலிப்பவர்கள் இன்று பலம் பெற்று வருகின்றனர் என்பது தான் இந்த சம்பவத்தின் வாயிலாக நாம் உணர வேண்டியது. அன்று திருப்பாணத்தாழ்வார் கல்லால் தாக்கப்பட்டார். இன்று ஜாகீர் உசேன் சொல்லால் தாக்கப்பட்டு, ரத்த கொதிப்பு நிலை உச்சத்திற்கு சென்று மருத்துவ சிகிச்சை எடுத்துள்ளார்.

ஸ்ரீரங்கம் கோவில் சார்பாக திருச்சி மாநகர காவல் ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டும் ரங்கராஜன் நரசிம்மன் மீதான நடவடிக்கை இன்னும் காலதமாதப்பட்டுக் கொண்டே உள்ளது. ரங்கராஜ நரசிம்மன் மீது இது வரை 21 புகார்கள் அளித்தும் நடவடிக்கை இல்லை என கோவில் இணை ஆணையர் தெரிவித்து உள்ளார். அப்படியானால் தமிழக காவல்துறை மீதான அதிகாரம் மத்திய அரசுக்கு உள்ளதா? அல்லது மாநில அரசுக்கு உள்ளதா? என்ற கேள்வி தவிர்க்க முடியாததாகிவிடும்.

இந்த சம்பவம் குறித்து ரங்கராஜ் பாண்டே, ஜாகீர் உசேனிடம் செய்த நேர்காணல் அவர் கோவிலில் பெற்ற அவமானத்தைவிட பல மடங்கு கொடூரமானதாக இருந்தது. மதத்தை அதிகாரத்திற்கு பயன்படுத்தி வருபவருக்கும், அன்புக்கு இலக்கணமாக பார்ப்பவருக்கும் இடையிலான வித்தியாசத்தை அது நன்கு வெளிப்படுத்தியது.

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

 

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time