தனியார்மயமாக்கப்படும் வங்கிகள்! கேள்விக் குறியாகும் மக்கள் பணம்!

- சாவித்திரி கண்ணன்

பொதுத் துறை வங்கிகளை தனியார்மயமாக்கியே தீருவது என்பதில் படிப்படியாக முன்னேறி வருகிறது பாஜக அரசு. அரசுத்துறை வங்கிகளை அணுவணுவாக பலவீனப்படுத்தி, தனியார் வங்கிகளை மட்டுமே தழைத்தோங்கச் செய்வதே அரசின் திட்டமாக அரங்கேறி வருகிறது!

சமீபத்தில் கூட ஐடிபிஐ வங்கியின் பங்குகளை விற்ற நிலையில், அவ்வங்கி தனியார் மயமாக்கப்பட்டது.

தற்போது நடந்து கொண்டிருக்கும் பாராளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் பொதுத் துறை வங்கிகளில் அரசின் பங்கை குறைப்பதற்கான சட்டதிட்டங்களை அரசு கொண்டு வர திட்டமிட்டு உள்ளது. இதை எதிர்த்து தான் இந்தியா முழுமையும் வங்கி ஊழியர்கள் இரண்டு நாள் வேலை நிறுத்த போராட்டம் செய்து கொண்டுள்ளனர்.

இன்றைய இந்தியாவில் பொதுத்துறை வங்கிகளில் 8 லட்சத்து 5 ஆயிரத்து  ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். சில ஆண்டுகளுக்கு முன்னால் இந்த எண்ணிக்கை சுமார் 10 லட்சமாக இருந்தது. இது இன்னும் குறைய வாய்ப்பு உள்ளது! ஏனெனில், தற்போது  அதிகாரிகள், கிளார்க், துணை ஊழியர்கள் ஆகிய 3 பிரிவுகளில் ஒட்டுமொத்தமாக 41 ஆயிரத்து 177 பணியிடங்கள் நிரப்பப்படவில்லை. காலியிடமாக வைக்கப்பட்டுள்ளது! அது நிரப்படும் என்பதற்கான உத்திரவாதமும் இல்லை. பணியாளர் பற்றாகுறை அதிகரிக்கும் போது வேலை பளுவால் சேவையும் பாதிக்கப்படும். பொதுத் துறை வங்கிகளிடம் பிடிமானத்துடன் உள்ள மக்களை மெல்ல விரக்தியடைய வைத்து, தனியார் வங்கிக்கு மடைமாற்றும் திட்டமே இது!

தனியார் வங்கிகளில் சேவை நன்றாக இருக்கிறது. ஆகவே, பொதுத்துறை வங்கிகளே தேவையில்லை என முடிவெடுப்பது மிகவும் ஆபத்தானது. கடந்த சில ஆண்டுகளில் ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி, யெஸ் வங்கி மற்றும் லக்ஷ்மி விலாஸ் வங்கியில் நிகழ்ந்த முறைகேடுகள் வெளிச்சத்துக்கு வந்தன. தனியார் வங்கிகளில் பணிகள் சிறப்பாக நடைபெறுகின்றன என்பதைக் காட்டிலும் போட்ட பணத்திற்கான பாதுகாப்பு தான் மிகவும் முக்கியமானது.

அதனால் தான் இன்றும் ஏழை,எளிய, நடுத்தர மக்களின் ஒரே தேர்வாக பொதுத் துறை வங்கிகள் உள்ளன. மகளீர் சுய உதவிக் குழுக்களுக்கு பணம் தந்தவை பொதுத் துறை வங்கிகளே! மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் சுமார் ஆறு கோடி ஏழை கூலி தொழிலாளர்களின் கணக்கை பராமரிப்பதும் பொதுத் துறை வங்கிகளே. பிரதமரின் ஜனதன் கணக்குகளின் மொத்த எண்ணிக்கை 44 கோடி. அதில் 43 கோடியை பராமரிப்பது பொதுத் துறை வங்கிகளே. கிராமபுற மக்களின் வங்கி தேவையில் 93 சதவிகிதத்தை பொதுத் துறை வங்கிகளே பூர்த்தி செய்கின்றன. தனியார் வங்கிகள் வெறும் 7 சதவிகித கிராம மக்கள் தேவைகளைத் தான் – அதுவும் வசதி படைத்தவர்களின் தேவையைத் தான் – கவனிக்கின்றன.

பொதுத் துறை வங்கிகள் சந்திக்கும் மிகப் பெரிய பிரச்சினை வாராக் கடன்களே! 2020 நிலவரப்படி நமது வங்கிகளின் வாராக்கடன் 6,87,317 கோடியாகும். இது தவிர கடந்த ஏழு ஆண்டுகளில் மோடி ஆட்சியில் இனி வரவே வராது என்று தள்ளுபடி செய்யப்பட்ட பெரு நிறுவனங்களின் கடன்கள் 10.72 லட்சம் கோடிகளாகும்!

வாரா கடன்களை மீட்க கடுமையான சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு பதிலாக, ஐபிசி (Insolvency and bankruptcy code) போன்ற சட்டங்களை உருவாக்குவது, பெரு முதலாளிகளிடம் சமரசம் பேசி இழப்பை ஏற்படுத்துவது என்பதெல்லாம் பொதுத் துறை வங்கிகளை அழிக்கும் ஒரு பெரிய சதித்திட்டத்தின் அங்கமாகவே ஆட்சியாளர்களால் நிகழ்த்தப்படுகிறது.

இப்படி தாங்கள் விரும்புகிற கார்ப்பரேட் முதலாளிகளுக்கு பணத்தை அள்ளித் தந்து, அதை திருப்பித் தரத் தேவையில்லை என்று தள்ளுபடி செய்த அரசாங்கம் தான் அதே முதலாளிகளை அழைத்து வங்கியையே தூக்கிக் கொடுக்கிறது.

நம் வீட்டுப் பணத்தை கொள்ளையிட்ட திருடனிடமே வீட்டை ஒப்படைக்க முடியுமா? ஆனால், அப்படியான ஒரு செயலாகத் தான்  இந்த காரியத்தை மத்திய பாஜக அரசு செய்கிறது.

பொதுத் துறை வங்கிகள் கார்ப்பரேட் நிறுவனங்களுக்குத் தரும் கடன் விவகாரங்களில் சட்ட திட்டங்களை கறாராக அமல்படுத்தவும், தரமறுப்பவர்களை தண்டிக்கவும் வழிகள் உருவாக்கப்பட்டாலே போதுமானது.

1955 ல் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவை அரசு பொதுத் துறை வங்கியாக்கியது. நிறைய தனியார் வங்கிகள் மக்களை தொடர்ந்து ஏமாற்றி வந்த காரணத்தால் 1969ல் 14 தனியார் வங்கிகள் தேசியமயமாக்கப்பட்டன. அதாவது சுதந்திரம் பெற்றது முதல் தேசியமயமாக்கப்பட்ட வரையிலான இந்த இடைப்பட்ட காலத்தில் மட்டுமே 559 தனியார் வங்கிகள் திவாலாகி மக்கள் பணம் பறிபோயுள்ளது.

இத்தனைக்கும் 1969ல் வங்கிகள் தேசியமயமாக்கப்பட்ட வரையில் தனியார் வங்கிகள் வழங்கியிருந்த கடன்கள் வெறும் 3,987 கோடிகள் தாம்! ஆனால், அதற்குப் பிறகு இந்த ஆண்டு வரை மக்களுக்கு வழங்கப்பட்ட கடன்கள் 1,07,10,000 கோடிகள்! ( ஒரு கோடியே ஏழு லட்சத்து 10,000 கோடிகள் )

இது வரை 52,000 கிராமங்களில் வங்கி கிளைகள் உருவாக்கப்பட்டு உள்ளன. அவற்றை ஒரு லட்சமாக்க வேண்டுமே அல்லாது இருப்பதையும் மூடிவிடக் கூடாது.

ஏற்கனவே 28 ஆக இருந்த தேசிய வங்கிகளை 12 ஆகக் குறைத்து, சிதைத்து, சின்னபின்னமாக்கி உள்ள நிலையில், தற்போது இருக்கும் 12 வங்கிகளை ஒன்றோடு ஒன்று இணைக்கிறேன் என்ற சாக்கில் எட்டு வங்கிகளை காலியாக்கத் துடிக்கிறது பாஜக அரசு. இதையும் கடந்து, தற்போது துணிந்து வங்கிகளை தனியாருக்கே எடுத்து கொடுக்கிறது. இது தவறு. தனியார்கள் புதிய வங்கிகளை எவ்வளவு வேண்டுமானாலும் உருவாக்கிக் கொள்ளட்டும். ஆனால், இருக்கின்ற பொதுத் துறை வங்கிகளை அவர்களிடம் தூக்கி கொடுப்பது மாபாதகமாகும். இந்த பாதகம் நிறைவேறினால் நாடு பார்க்க இருக்கும் துயரங்களை சொல்லிமாளாது.

வங்கி ஊழியர்கள் மட்டுமே இந்த அநீதியை எதிர்த்து போராடினால் பலனில்லை. இது மக்களை பெரிதும் பாதிக்கும் பிரச்சினை. ஆகவே, இதை எதிர்த்து மாபெரும் மக்கள் போராட்டம் கட்டமைக்கப்பட வேண்டும். விவசாயத்தை கார்ப்பரேட் முதலாளிகளுக்கு காவு கொடுக்க சட்டம் போட்டு முயன்ற போது கடும் போராட்டம் நடத்தி பின்வாங்க வைத்தனர் விவசாயிகள். அடுத்த கட்டமாக தொழிலாளர்களின் அனைத்து உரிமைகளையும்,பாதுகாப்பையையும் சில சட்ட திருந்தங்களின் மூலம் நீர்த்து போக வைத்துள்ளது இந்த அரசு. தற்போது பொதுத் துறை வங்கிகளில் பாதுகாப்பாக உள்ள அனைத்து பணத்தையும் அப்படியே தனியாரிடம் தாரை வார்க்க சட்ட திருத்தம் கொண்டு வருகிறது பாஜக அரசு. இதன் மூலம் அழிவு காலத்திற்குத் தான் அச்சாரமிடுகிறது பாஜக அரசு!

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time