மாரிதாஸ் கடுமையான தண்டனைக்குரியவர்

-ஹரிபரந்தாமன்

மாரிதாஸ் விவகாரத்தில் அவசரகதியில் எப்.ஐ.ஆரையே நீக்கி, வழக்கை ரத்து செய்து நீதிபதி நடந்து கொண்டது விசித்திரமானது. இந்த வழக்கில் அரசு மேல் முறையீடு செய்யலாம். அத்துடன் கொரானாவையும், இஸ்லாமியர்களையும் சம்பந்தப்படுத்திய வழக்கில் அவரை கடுமையாக தண்டிக்க வாய்ப்புள்ளது.

வழக்கமாக குற்றவியல் வழக்குகள் உட்பட எந்த வழக்குகளும் இந்த மின்னல் வேகத்தில் இறுதி தீர்ப்பு வழங்கப்படுவதில்லை. புலன் விசாரணைக்கு தடை அளிக்கப்பட்டாலே, சிறையில் இருப்பவர் வெளியில் வந்துவிடுவார்.

காவல்துறை குற்றத்தை புலன் விசாரணை  செய்வதற்கான முதல்படியே முதல் தகவல் அறிக்கைதான்,. கடுமையான பிரிவுகளின் கீழ் குற்றச்சாட்டு சாட்டப்பட்டதால்,  அவர் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டார்.

உடனே 09.12.2021 அன்று மதுரை உயர்நீதிமன்ற கிளையில், முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்யக்கோரி மாரிதாஸ் வழக்கு போட்டார்.

வழக்கமாக, முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்யக்கோரும் வழக்குகளை விசாரணைக்கு ஏற்க மறுத்து மிக பெரும்பாலான வழக்குகளை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்யும்.  விசாரணைக்கு ஏற்கும் வழக்குகளில் கூட, முதல் தகவல் அறிக்கையை  உயர்நீதிமன்றம் ரத்து செய்யாது.  மிக அரிதான வழக்குகளில்தான் முதல் தகவல் அறிக்கை ரத்து செய்யப்படும்.

நாட்டின் முப்படை தளபதி 08.12.2021 அன்று நடந்த மிக கொடூரமான எலிகாப்டர் விபத்தில் இறந்து போனார். அந்த விபத்தில், அவருடைய மனைவியும், ராணுவ அதிகாரிகளும் இறந்தனர். நாடே துக்கத்தில் மூழ்கியது. தமிழக முதல்வர் ஸ்டாலின் உடனே விரைந்து நடவடிக்கையில் ஈடுபடுகிறார். தமிழக பாஜக தலைவர்களோ, கவர்னரோ கூட அங்கு செல்லவில்லை.

இந்நிலையில், யூடியூபர் மாரிதாஸ்  சரிச்சைக்குரிய “ட்விட்” போட்டார். அதில், முப்படை தளபதியின் இறப்பை திமுக மற்றும் திராவிடர்  கழகத்தினர் கொண்டாடுகின்றனர் என்றும், தமிழகம் ஒரு காஷ்மீராக மாறிவருகிறது என்றும், பிளவுவாத சக்திகள் எல்லாவிதமான சதிச்செயல்களிலும் ஈடுபடுவதற்கு ஏற்ற இடமாக தமிழ்நாடு உள்ளது என்றும் கூறியிருந்தார்.  இந்த ட்விட்டை உடனடியாக நீக்கிவிட்டார்.

நவீன தொழில்நுட்பட  யுகத்தில் சமூக வலைத்தளங்களில் ஓரிரு நிமிடங்கள் இருந்தாலே, அது மின்னல் வேகத்தில் பரவிவிடும்.

உடனடியாக திமுகவின் IT wing – ஐ  சேர்ந்தவர் காவல் துறையில் மாரிதாசின்  மீது  புகார்  அளித்தார்.  அந்த புகார் முதல் தகவல் அறிக்கையாக (FIR)  பதிவாகிறது. இந்திய தண்டனை சட்டம்  பிரிவுகள் 124 A , 153A , 505 (1) (b), 505 (2) மற்றும் 504 – இன் கீழ் அவர் குற்றம் புரிந்ததாக முதல் தகவல் அறிக்கை கூறுகிறது.

09.12.2021 அன்று மதியமே அவசர வழக்காக மாரிதாஸ் வழக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. சான்றளிக்கப்பட்ட முதல் தகவல் அறிக்கைக்கு பதிலாக, நகல் (xerox) தாக்கல் செய்வதற்கு நீதிமன்றம் அனுமதி அளித்தது. பின்னர், திங்கள் அன்று  முதல் வழக்காக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதில்  தவறேதும் இல்லை;

திங்கட்கிழமை வழக்கு  விசாரணைக்கு  வந்தபோது, புலன் விசாரணைக்கு  இடைக்கால தடை கோரிய மனுவை  விசாரித்து,  தடை அளிக்க பட வேண்டிய வழக்கு எனக் கூறி தடை அளித்திருக்கலாம். இதுவே வழக்கமான நடைமுறை.

அதற்கு மாறாக, முதல் தகவல் அறிக்கையை தாக்கல் செய்யக்கோரும் முதல் வழக்கை (main case) நீதிமன்றம் இறுதி விசாரணைக்கே எடுத்துக்கொண்டது. வழக்கை 14.12.2021 முதல் வழக்காக எடுத்துக்கொண்டது. மாரிதாஸ் வழக்குரைஞர், அரசு வழக்குரைஞர், புகார்தாரரின் வழக்குரைஞர் ஆகியோரின் வாதுரைகளை கேட்டு முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்து இறுதி தீர்ப்பை  அன்றே வழங்கியது.

முதல் தகவல் அறிக்கையை  ரத்து  செய்யக்கோரி போட்ட வழக்கிற்கு ஆட்சேபனைகளை தெரிவிப்பதற்கு  இரண்டு வாரங்கள் முதல் 4 வாரங்கள் வரை அரசுக்கும், புகார்தாரருக்கும் எழுத்து பூர்வமான வாய்ப்பு தந்து, இறுதி தீர்ப்பு வழங்கி இருந்தால்  விவாதமே எழாது. ஏன் அவசரம் காட்டப்பட்டது?

எந்த அரசாக இருந்தாலும், இந்திய தண்டனை சட்டம்  பிரிவு 124A – ஐ  தவறாகவே பயன்படுத்துகிறது. மிக அதிகமாக இப்பிரிவை பாஜக ஆளும் மாநிலங்கள் பயன்படுத்துகிறது.  அந்நியர்கள் ஆட்சி செய்தபோது, சுதந்திர இயக்கத்தை நசுக்குவதற்காக பிரிட்டிஷ் ஆட்சியில் இந்திய தண்டனை சட்டத்தில் சேர்க்கப்பட்டதுதான் “தேச துரோகம்” என்ற  இப்பிரிவு. இச்சட்ட பிரிவை, சட்ட புத்தகத்திலிருந்தே நீக்க வேண்டும் என்று சிவில் சமூகம் கோரிவருகிறது.

எனவே, இப்பிரிவு ஊடகவியலாளர் மேல் பாய்வது தவறு என்று  இறுதித்தீர்ப்பில் கூறியது முற்றிலும் சரியானதே.  ஆனால் கூடங்குளம் அணுமின் நிலைய திட்டத்தை எதிர்த்து இடிந்தகரை மீனவ மக்கள்  போராடியபோதும், மது ஒழிப்பிற்கான பாடலை  கோவன் பாடியபோதும் இந்த சட்டம் பாய்ந்தது. அந்த வழக்குகளில் பிணையில்கூட  உடனடியாக இவர்கள் விடுவிக்கப்படவில்லை என்பது வருத்தத்திற்குரிய உண்மை என்பதை கவனப்படுத்துகிறேன்.

இதே போல, இந்திய தண்டனை சட்ட பிரிவுகள் 153 A மற்றும் 505 ஆகியவைகள் பற்றிய இறுதி தீர்ப்பு கூறுவதும் சரியே. இரு  மதத்தினருக்கு / சாதியினருக்கு /  சமூகத்தினருக்கு இடையில் மோதல் உண்டாக்கும் வகையில் செயல்படுவது குற்றச்செயல் என்பதே இப்பிரிவுகள். எனவே, இந்த வழக்கிற்கு பொருந்தாது என்பது தீர்ப்பு.

மாரிதாஸ் வழக்கின் இறுதி தீர்ப்பில், இந்திய தண்டனை சட்டம்  504 பிரிவின் கீழ் மாரிதாஸ் குற்றம் செய்ததாக கருத முடியாது என்று கூறுவதை தவறு என கருதுகிறேன்.

இந்திய தண்டனை சட்டம் பிரிவு  504 – ன் கீழ் குற்றம் சுமத்தப்பட வேண்டுமென்றால், நேருக்கு நேர் மாரிதாஸ்  திமுக, தி. கவினருக்கு கூறி இருக்க வேண்டும் என்றும்,  இப்பிரிவின் கீழ்  மாரிதாஸ் குற்றமற்றவராவார் என்றும் தீர்ப்பு கூறுகிறது. இதற்கு ஆதரவாக, 1941, 1949 மற்றும் 1952 – ஆம் ஆண்டுகளில்  வழங்கப்பட்ட  சென்னை  உயர்நீதிமன்ற  தீர்ப்புகளை சார்ந்து உள்ளது தீர்ப்பு. ’’ 70 ஆண்டுகளுக்கு முன், சமூக ஊடகமும், நவீன தொழில் நுட்பமும் இல்லை என்றும், எனவே இக்காலத்திற்கு பொருந்தாது’’ என அரசு தரப்பு வாதிட்டத்தை நிராகரித்து விட்டார் நீதிபதி. நீதிபதியின் இந்த கருத்தை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

புலன் விசாரணைக்குப் பிறகு, காவல்துறையே இறுதி அறிக்கை / குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும்போது, இப்பிரிவுகளை – 124 A . 153A, 505 பிரிவுகளை – அதில் குறிப்பிடாமல் இருக்கலாம். அதாவது, எஞ்சியுள்ள பிரிவு 504 – ஐ மட்டுமே குற்றச்சாட்டாக  குற்றப்பத்திரிகையில் கூறலாம்.

புலன் விசாரணை நடக்கும்போது, முதல் தகவல் அறிக்கையை குற்றம்  சுமத்தப்பட்டவர் சிறையில் இல்லாமல் வெளியில் இருப்பதன் மூலம் அவரின் தனிநபர் உரிமையை  பாதுகாப்பதையே சட்டத்தை பேணும் சமூகம் எதிர்பார்க்கிறது.

புலன் விசாரணையே தேவையில்லை என்பது மிகமிக அரிதான  விதிவிலக்கான ஒன்று.

புலன் விசாரணைக்குப்பின்  தாக்கல் செய்யப்படும் குற்றப்பத்திரிகையை ரத்து  செய்யக்கோரியும், விசாரணையை  எதிர்கொள்வதற்கான முகாந்திரம்  இல்லை என்றும் குற்றம் சாட்டப்பட்டவர்  வழக்கு தாக்கல் செய்து, தடைபெறலாம்; இறுதி தீர்ப்பில் குற்றப்பத்திரிகையிலிருந்தும்  விடுபடலாம். உள்துறை அமைச்சர் அமித்ஷா  அவர்கள் ஒரு encounter  வழக்கில் விடுவிக்கப்பட்டது இப்படிதான்.  அந்த உத்தரவிற்கு மேல்,  உயர்நீதிமன்றத்திற்கு   CBI முறையீடுகூட செய்யவில்லை என்பது தனிக்கதை.

மாரிதாஸ் வழக்கில் மின்னல் வேகத்தில்  முதல் வழக்கு விசாரிக்கப்பட்டு இறுதித்தீர்ப்பு வந்ததில்கூட சிவில் சமூகம் ஆட்சேபனை செய்ய இயலாது. இதுபோன்று  அனைத்து  வழக்குகளிலும் செயல்பட வேண்டும் என்பதே சிவில் சமூகத்தின் நோக்கமாக இருக்கும். ஆனால், மின்னல் வேக விசாரணைக்கு, உச்சநீதிமன்றத்தின் அர்னாப் கோஷ்வாமி தீர்ப்பை நீதிபதி சார்ந்து நிற்கிறார். அத்தீர்ப்பு மிகவும் விமர்ச்சினத்திற்கு உள்ளானது.

நமது சபாநாயகர் அப்பாவு 2016 – இல் வெற்றி பெறத்தக்க அளவிலான வாக்குகள் பெற்றும் தபால் வாக்குகள் புறக்கணிக்கப்பட்டதால் தேர்ந்தெடுக்கப்பட்டும் 2021 வரை வழக்கு   நிலுவையில் இருந்ததால் அவர் MLA – வாக செயல்பட இயலவில்லை. இதைப்பற்றி அவரிடம் கேட்டபோது அவர், நான் ஒன்றும் அர்னாப் கோஷ்வாமி இல்லை என்றார்.

மிக முக்கியமாக, இத்தீர்ப்பின் குறைபாடாக நான் பார்ப்பது, இத்தீர்ப்பு  மாரிதாசை  ஏதோ மிகப் பிரபலமான ஊடகவியலாளர் என்றும், தேசபக்தர் (Nationalist ) என்றும், பிரிவினை வாதத்திற்கு எதிராக களம்காணும் உன்னத புருஷனாகவும் நீதிபதியே சித்தரிப்பதுதான்.

தேசியவாதியாக , தேச நலனை காக்கும் நோக்குடன், முப்படை தளபதி இறந்த துக்கத்தில் அனுபமின்றி (naive) போடப்பட்ட “ட்விட் ” என்று தீர்ப்பு கூறுவதை ஏற்க இயலாது.

மிக தீவிரமான அரசியல் ஈடுபாட்டுடன் சமூக ஊடகங்களில் செயல்படும் மாரிதாஸின் ட்விட்டை இப்படி வகைப்படுத்துவது சரியாகாது.

மேலும், ‘தேச நலனில்  அக்கறை கொண்டு போட்ட ட்விட்டை அவர் ஏன்  நீக்கிவிட்டார்’ என்று மாரிதாசின்  தரப்பில் ஏதும்  கூறியதாக நீதிபதி தீர்ப்பில் கூறவில்லை.

மிக மோசமாக, அராஜகமான முறையில் திமுக மற்றும் திராவிடர் கழகத்தினர் மேல் தேசவிரோதிகள் என்று சித்தரிக்கும் வகையில் அவர்கள் முப்படை தளபதியின் இறப்பை  கொண்டாடினார்கள் என்று மாரிதாஸ் ட்விட்  போட்டதற்கு  மாரிதாஸ் மன்னிப்பு கோரியிருக்க வேண்டும். அல்லது நீதிபதி மன்னிப்பு கோரினால் முதல் தகவல் அறிக்கையை  ரத்து செய்வதாக நிபந்தனை விதித்திருக்க  வேண்டும்.  திமுக மற்றும் திராவிடர்  கழகத்தின் பேரில் சுமத்தப்பட்ட களங்கங்களை பற்றி  கண்டு கொள்ளாமல் கடந்து செல்வது சரியல்ல.

குறிப்பாக, தீர்ப்பின் இறுதியில் புகார்தாரரை  நறுக்கென்று ஒரு குட்டு குட்டும்  நீதிபதி, மாரிதாசுக்கு   மகுடம் சூட்டுவது ஏற்புடையதல்ல.  அதாவது, மிக அவசரகதியில்   புகார் அளித்ததாக புகார்தாரை விமர்சித்து  எள்ளல் நடையில் தீர்ப்பு இருக்கையில், மாரிதாசுக்கும்  ஒரு குட்டு குட்ட வேண்டாமா! வெளிமாநிலங்களிலும்   பிற்காலத்திலும் இத்தீர்ப்பை வசிப்போர் தேசிய நலனுக்காக நின்றவர்  மாரிதாஸ்  என்றும், இறப்பை கொண்டாடிய அற்பமான மனித தன்மை அற்ற தேச விரோதிகள் திமுக / திராவிடர் கழகத்தினர் என்றும் அல்லவா கருதுவர்.

மாரிதாஸின் தற்போதைய கைது நியாயமானது தான்! கொரோனா பரவ ஆரம்பித்த காலகட்டத்தில் இஸ்லாமியர்கள் தான் – குறிப்பாக தப்லிக் ஜாமாத் இயக்கம் தான் கொரோனாவை பரப்புகிறது எனப் பேசினார். இது சட்டப் பிரிவு  504 ன் கீழ் கடுமையான குற்றமாகும்.

அந்த குற்றச்சாட்டின் மூலம் அன்று இஸ்லாமியர்களை சமூக நீரோட்டத்தில் இருந்து தனிமைப்படுத்தி குற்றவாளியாக சித்தரிக்கும் முயற்சியில் மாரிதாஸ் ஈடுபட்டார். ஆகவே, அந்த வழக்கை இப்போதாவது நியாயமாக விசாரித்து, சமூக நல்லிணக்கத்திற்கு கேடு விளைவித்த நோக்கத்திற்காக  சட்டப் பிரிவு 504ன் கீழ் அவர் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்.

கட்டுரையாளர் ; ஹரி பரந்தாமன், முன்னாள் நீதிபதி

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time