பெண் குழந்தைகளுக்கு நெஞ்சுரம் தரும் ‘உள்ளுரம்’

- பாரதி செல்வா

சென்ற ஞாயிறு மாலை நேரம்..தேனாம்பேட்டை பிரதான பகுதியில் அமைந்திருந்த அலுவலக மேல் மாடியில் அந்த அரங்கநாடகம் துவங்கிய நேரத்தில் உள் நுழைந்தேன். உட்கார இடம் இல்லாமல் நண்பர்களின் துணையுடன் ஓரிடத்தில் அமர்ந்து கொண்டேன்.

நாடகம் துவங்கிய சில நிமிடங்களில் உள்நுழைந்தேன். ஒவ்வொருநாளும், ஒவ்வொரு நிமிடமும் நம்மைச் சுற்றி நிகழும் நிகழ்வுகளில் ஊடாட்டம் செய்ய வேண்டியது பற்றி படர்ந்து விரிந்து சென்றது ‘உள்ளூரம்’. இது வழக்கமான நாடகம் போல இல்லை, வாழ்க்கையை  நேர்பட பார்க்கத் தரும் ஒரு வாய்ப்பாக இருந்தது.

நாடகவியலாளர்அ.மங்கை ஒருங்கிணைப்பில் இந்திய மாணவர் சங்கம் மத்திய சென்னை மாவட்டகுழு, மரப்பாச்சி நாடகக்குழுவுடன் ஒருங்கிணைந்து ஒரேநாளில், மூன்று கலைஞர்கள் பங்கேற்ற ‘உள்ளுரம்’ மூன்று நிகழ்வுகள் நடந்தேறியது.

அன்றைய நாளின் நிறைவு நிகழ்வாக நாடகக் கலைஞர் மிருதுளா பங்கேற்று நடித்த அமர்வில் பார்வையாளராக பங்கேற்றேன். மிக இயல்பாக ‘உள்ளுரம்’  தொடங்கிய உடன் மனம் இயல்பாக நாடகத்திற்குள் உள் நுழைந்தது. மிருதுளா உள்ளாடைகளை சரிசெய்தவாறு பார்வையர்களிடம் பேச துவங்கினார். பெண் உடல்பற்றி சமூகத்தின் புரிதல்களை கேள்விக்கு உள்ளாக்கி,  துவங்கியது உரையாடல்.

தன் ஆடைகளை சரி செய்தவாறு, சிறு குழந்தைகள் முதல் வயதான பெண்கள் வரை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்படும் அவலம் பற்றி பேசியவாறு மேலாடையை மாற்றி கண்ணாடியில் முகத்தை ஒப்பனை படுத்திக் கொண்டேபேசும் தோரணை புதியவடிவமாய் காட்சி தந்தது.

காலம் காலமாய் பெண் உடல் மேல் செலுத்தப்படும் ஆதிக்கத்தின் நீட்சியாகவே இன்றும் ஏராளமான பெண் குழந்தைகள் பாலியல் துன்புறுதலுக்கும், அச்சுறுதலுக்கும் ஆளாகின்றனர். சமீபத்தில் பள்ளி ஆசிரியர்களின் பாலியல் குரூரமான நடவடிக்கைகளால் மாணவிகள் தற்கொலைகளுக்கு தள்ளப்பட்டனர். இந்தக் கொலைகள் சமூகத்திற்குப் பெரும் அதிர்வை உருவாக்கினாலும், ஏதும்செய்ய இயலாமையை உருவாக்கியது.

கல்வி நிலையங்கள் என்பதையும் தாண்டி குடும்பம், பொதுவெளி, அலுவலகம்.. என ஒவ்வொரு இடங்களிலும் பெண்ணுடல் மீது அரங்கேறும் அத்துமீறல்களுக்கு எதிராக கிளர்ந்தெழ வேண்டிய பொதுச் சமூகம் அமைதி காத்துக் கொண்டிருக்கிறது.

இந்தப் பிரச்சினைகளை இயல்பாக பொதுவெளியில் பேசுவதற்கு பதிலாக பாதிக்கப்பட்டவர்களே உள்ளூரப் புதைத்து, அழுது ,நொந்து புலம்ப வேண்டிய அவலத்திற்கு நாகரிகச் சமூகம் வைத்துள்ளது. இத்தகு நிலையில்தான் பேச வேண்டிய பொருளை, அதைப் பேச வேண்டிய அவசியத்தை, ‘உள்ளுரம்’ கொண்டு உரையாடலை முன்னெடுக்க வேண்டியதின் முக்கியத்துவத்தை முக்கிய புள்ளியாக வைத்து நாடகம் நகர்கிறது.

மாணவர்களுக்கு பாலியல் கல்வி சொல்லித் தரவேண்டியது குறித்து பலதளங்களில் உரையாடல்கள் முன்னுக்கு வருகின்றன. அதே நேரத்தில் ஆசிரியர்கள் பொதுசமூகம் என எல்லோரும் பாலியல்கல்வி சார்ந்த உரையாடலில் பங்கேற்க வேண்டியதின் தேவையை இன்றைய தகவல் தொழில் நுட்ப உலகத்தில் வளர்த்தெடுக்க வேண்டியதின் அவசியத்தை தான் நம்மை சுற்றி நிகழும் நிகழ்வுகள் சுட்டிக் காட்டி கொண்டிருக்கின்றன.

இந்த இடத்தில்தான் ‘உள்ளுரம்’ பாலியல் சார்ந்த உரையாடல்களில் பாதிக்கப்பட்ட நபர்கள் மட்டுமின்றி, கல்வி நிலையங்கள்,பொதுச் சமூகம் எந்தத் தளத்தில் இயங்கவேண்டும் என்ற புள்ளியைத் தொட்டு உரையாடலை பரப்புகிறது ‘உள்ளுரம்’. இதன்வழி இன்றைய சூழலுக்கு உகந்த தேவையான அறிவியல்பூர்வமான விவாதத்தை துவக்கிவைத்துள்ளது இந்த நாடகம்.

மிக இயல்பாக உருவாக்கப்பட்டதளத்தில் நின்று உரையாடலை நாடககலைஞர் மேற்கொள்ளும் வகையில் கச்சிதமாக வடிவமைக்கப்பட்டுள்ளதால், பார்வையாளர்கள் தங்களை ஈடுபடுத்திக் கொள்ளவும், சிந்திக்கவும், விவாதிக்கவும் நாடகம் தூண்டுகிறது.

நாடகத்திற்கான தரவுகள், கருத்தோட்டங்கள் பலநபர்களின் கூட்டுஉழைப்பால் உருவாக்கப்பட்டதை மங்கை பதிவுசெய்தார். அவரது நெறியாள்கை போற்றத்தக்கதாக இருந்தது. கதையின் தளத்தை  உள்வாங்கி கலைஞர்களின் நடிப்பு அமைந்திருந்தது சிறப்பு. கல்வி நிலையங்கள், தொழிற்கூடங்கள், ஆசிரியர், தொழிற்சங்க அமைப்புகள், பொதுவெளி என பலதளங்களில் நாடகம் பயணிக்க வேண்டியுள்ளது.

நம் சமூகத்தில் பெண் குழந்தைகளை பயிற்றுவிக்க ‘உள்ளுரம்’ இன்றைய அவசியத் தேவை.

– பாரதி செல்வா

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time