21 வயதில் தான் பெண்ணுக்கு திருமணம்! – அரசாங்கம் தீர்மானிப்பதா?

- சாவித்திரி கண்ணன்

இனி பெண்களுக்கு 21 வயதில் தான் திருமணம் செய்ய வேண்டும் என சட்டம் கொண்டு வருகிறார்கள்! பல வகைகளில் இது நன்மையாக இருந்தாலும், நடைமுறையில் எல்லா சமூகத்திற்கும் சட்டம் சாத்தியப்படுமா..? என துளியும் யோசித்ததாகத் தெரியவில்லை.

ஒரு பத்திரிகையாளராக, களப் பணியாளராக சமூகத்தின் பல தளங்களில் பயணப்பட்டவன் என்ற வகையில் இந்த சட்டம் பொதுப் படையாக பார்க்கும் போது சிறந்தது தான் என்றாலும், பெரும்  பாலான மக்களால் மீறப்படக் கூடிய சாத்தியக் கூறுகள் நிறையவே உள்ளது என்பதே நிதர்சனம்!

இன்றைய தினம் உண்ணும் உணவின் காரணமாக ஹார்மோன்கள் வளர்ச்சியால்,பெண்கள் சீக்கிரமாகவே வயதுக்கு வந்துவிடுகிறார்கள். இன்றைய தாரளமயப்படுத்தப்பட்ட நெகிழ்வான சமூகச் சூழல் காரணமாக ஆண், பெண் பழக்க வழக்கங்கள் அதிகரித்துள்ளது. நவீன விஞ்ஞான சாதனங்கள், பேஸ்புக், வாட்ஸ் அப், டிவிட்டர், டெலிகிராம், இன்ஸ்டிராகிராம் போன்ற சமூக வலைத் தள செயல்பாடுகள் அவர்களுக்கு இடையிலான தொடர்புகளை எளிதாக்கியுள்ளதோடு, வலுப்படுத்தியும் வருகிறது.

இந்த சட்டம் தொடர்பாக பெற்றோர்களிடம் பேசினால், மிகப் பெரும்பான்மையினர் கருத்து, ”நல்லது தான். ஆனால், 21 வயது வரையிலும் இன்று பெண்களை அடைகாத்து வைப்பது ரொம்ப கஷ்டம். பெண்ணை பெற்றவர்கள் வயிற்றில் நெருப்பை கட்டிக் கொண்டு வாழ்கிறோம். எதுவும் ஏடாகூடமாக நடக்கும் முன்பே நல்லபடியாக பெண்ணை கரையேற்றினால் தான் நிம்மதி. 18 வயசு வரைக்கும் பண்ணக் கூடாது என்பது சரி தான். 21 வயது வரை பொறுக்க சொல்வதும் சரி தான். ஆனால், இதை சட்டம் போட்டு நிர்பந்திக்கக் கூடாது. நிர்பந்தித்தால், இது கடுமையான எதிர்ப்பை பெறும். அவரவர் சமூக மற்றும் குடும்பச் சூழல்கள் தான் இந்த முடிவை தீர்மானிக்க முடியுமே அன்றி, அரசாங்கமல்ல. தனி நபர் உரிமையில் அரசாங்கம் தலையிடுவதாகக் கூட குற்றம் சாட்டுவோம்…’’ என்கிறார்கள்.

பெண்களின் திருமண வயது உயர்த்தப்படுவது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி,  ”இந்த அரசாங்கம் எப்போதும் தேசத்தின் மகள்கள், சகோதரிகளின் உடல்நலனில் அக்கறை கொண்டுள்ளது. ஊட்டச்சத்துக் குறைபாட்டில் இருந்து பெண்களைக் காக்க, அவர்கள் சரியான வயதில் திருமணம் செய்து கொள்வதை உறுதி செய்வது அவசியம். அரசாங்கம், குழந்தைத் திருமண தடுப்புச் சட்டம் மற்றும் இந்து திருமணச் சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது. அவ்வாறு திருத்தம் மேற்கொண்டு பெண்ணின் திருமண வயது 21 ஆக உயர்த்தப்படும்” என்று கூறியிருந்தார்.

ஜெயா ஜேட்லி

பெண்ணின் திருமண வயதை 21 ஆக அதிகரிக்க ஜெயா ஜேட்லி தலைமையில் நிதி ஆயோக் செயற்குழுவை அமைத்திருந்தது.  அந்தக் குழுவின் பரிந்துரைகளின்படியே பிரதமரும் பெண்ணின் திருமண வயதினை உயர்த்துவது தொடர்பாக உறுதியளித்திருந்தார். இந்நிலையில், பெண்ணின் திருமண வயதை 18ல் இருந்து 21 ஆக உயர்த்தும் யோசனைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துவிட்டது. இது விரைவில் இனி இது நாடாளுமன்றத்தில் சட்ட மசோதாவாக தாக்கல் செய்யப்பட்டு சட்ட வடிவம் பெற உள்ளது.

பெண்ணின் திருமண வயதை அதிகரிப்பதால் அவளின் பொருளாதார, சமூக, ஆரோக்கிய மேம்பாடு உறுதி செய்யப்படும் அது குடும்பம், சமூகம், குழந்தைகள் மீது நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இது பெரும்பாலான சமூக ஆர்வலர்களால் வரவேற்கப்பட்டும் உள்ளது.

”ஆனால், இது போன்ற விவகாரத்தை பொதுமைப்படுத்தி எல்லோருக்கும் பொருந்தக் கூடியது என சொல்ல முடியாது..”என்கிறார் யூனிசெப் அமைப்பின் குழந்தைகள் நலப் பிரிவின் முக்கிய செயற்பாட்டாளர் தேவநேயன், ”யூனிசெஃப் தீர்மானத்தின்படி, 18 வயது உட்பட்டவர்களுக்கு திருமணம் செய்துவைப்பது என்பது மனித உரிமை மீறலாகும். தற்போது, 21 வயது என்பதையும் ஆரோக்கியமான அணுகுமுறையாகவே நான் பார்க்கிறேன். ஆனால்,சமூக தளத்தில் சாத்தியப்படுமா? எனத் தெரியவில்லை. ராஜஸ்தானில் பாஜக பெண்ணின் திருமண வயதை 16 ஆக குறைப்போம் என தேர்தல் வாக்குறுதி கூட தந்துள்ளது. பல சமூகங்களில் இன்னும் பெண்ணின் திருமண வயதை 18 என்பதைக் கூட ஏற்கும் மனநிலை இல்லாமல் உள்ளது. முக்கியமாக பழங்குடிகள் விஷயத்தில் இதை அமல்படுத்துவது கடினம். போதுமான விவாதம் நடத்தாமலே இந்த சட்டம் கொண்டு வரப்படுவதாகவே கருதுகிறேன்” என்கிறார்.

தேவநேயன்

உலகின் மிகப் பெரும்பாலான நாடுகளில் பெண்ணின் திருமண வயது 18 என்றே ஏற்கப்பட்டு உள்ளது. அமெரிக்காவிலேயே கூட மாகாணத்திற்கு மாகாணம் திருமண வயது மாறுபடுகிறது. சில மாகாணங்கள் 16 வயதில் திருமணத்தை ஏற்கிறது. அமெரிக்காவிலேயே பெண்ணின் திருமண வயது 21 வயது என்பது சாத்தியமில்லை என்றால், இந்தியாவில் எப்படி சாத்தியப்படும். ஆகவே, இந்த முடிவை அந்தந்த மாநிலங்களிடம் மத்திய அரசு விட்டுவிட வேண்டும் என்பது தான் சரியாக இருக்கும்.

தேசிய குடும்ப நலத்துறையின் 2011-ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, இந்தியாவில் 2.3 கோடி பெண் குழந்தைகளுக்கு திருமணம் நடந்துள்ளது. நாட்டில் நடக்கும் திருமணத்தில் 26.8 சதவீதம், 18 வயது நிரம்பாத பெண் குழந்தைகளுக்குதான் நடக்கிறது என்று கூறுகிறது.

சிதம்பரம் தீட்சிதர்கள் இப்போதும் குறிப்பிட்ட வயதுக்கும் முன்பே பெண்களுக்கு திருமணம் செய்து வைக்கின்றனர். இதே போல நகர்புற கீழ்தட்டு மக்களிடையே குழந்தை திருமணம் என்பது சர்வசாதரணமாக உள்ளது. இந்த பகுதியில் 15,16 வயதிலேயே சில பெண்கள், பையன்களுடன் ஓடிவிடுவது சர்வசாதரணமாக உள்ளது. கிராமங்களிலும் இது தான் நிலைமை!

”அதிக காலம் வரை பெண்களை பிறந்த வீட்டில் வைத்திருக்க முடியாது. அரசாங்கம் என்ன வேண்டுமானால் சட்டம் கொண்டு வரட்டும். ஆனால், அது நடைமுறையில் எப்படி சாத்தியமாகும். 21 வயசுக்குள்ள கல்யாணம் செய்தால் தண்டனை என்றால், நாட்டின் ஜனத் தொகையில் கணிசமானவர்களை சிறையில் தான் தள்ள வேண்டியிருக்கும். சிறைச்சாலைகள் போதாது’’ என அதிரடி காட்டி பேசியவர்களையும் பார்க்க நேர்ந்தது.

1978 வரை, ”15 வயதில் திருமணம் தடையில்லை” என்ற நிலை தான் இருந்தது. இதனால், ‘பெண்களுக்கு கல்வி மறுக்கபடுகிறது. குடும்ப வன்முறைக்கு பலியாவது மற்றும் குழந்தை பிறப்பின் போது மரணமடைவதற்கான வாய்ப்புகள் அவர்களுக்கு அதிகமாகிறது’ என்பது அனுபவ பூர்வமாக உணரப்பட்டு தான் 18 வயது என சட்டம் கொண்டுவரப்பட்டது. படித்த மேல் சாதி மற்றும் உயர் வர்க்க குடும்பங்களில் 21 வயது என்பதற்கு பெரிய ஆதரவு நிலவுகிறது. அந்த சமூகத்தின் பெண்களே திருமண வயதை 27, 28 என்றெல்லாம் தள்ளிப் போடும் நிலை கூட நிலவுகிறது.

இன்றைக்குள்ள நிலவரப்படி 18 வயதானப் பெண் மேஜராகிவிட்டாள். ஆகவே, அவள் தன் திருமணம் குறித்து சுயமாக முடிவு எடுக்கலாம். அதில் பெற்றோரோ, காவல் துறையோ, நீதிமன்றமோ கூட தலையிட முடியாது என்ற நிலை உள்ளது.

இந்த சூழலில் சுமார் ஏழு ஆண்டுகளுக்கு முன்பு மதுரை உயர் நீதிமன்றத்தில் ஒரு பெற்றோர் தன் மகளை அவளது காதலனிடம் இருந்து மீட்டுத் தரக்கோரி பெற்றோர் தொடுத்த வழக்கில் நீதிமன்றம் கீழ்கண்டவாறு தன் தீர்ப்பில் கூறி இருந்தது;

“திருமண வயதைப் பொறுத்தமட்டில் ஆணுக்கு 21 வயதும், பெண்ணுக்கு 18 வயதும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பல இளம் பெண்கள் 18 வயதில் காதல் வயப்பட்டு வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொள்கின்றனர். இதுபோன்ற விவகாரங்களில் பெண் ‘மேஜர்’ என்பதால் கோர்ட்டு தலையிட முடியவில்லை. திருமணம் என்பது புனிதமானது. தன்னுடைய மகள், மகனுக்கு திருமணம் செய்து வைக்க பெற்றோருக்கு உரிமை உள்ளது.

காதலன் கைவிட்டு விட்டால் நாங்கள் தான் பெண்ணுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என்று பெற்றோர் தங்கள் உணர்வை வெளிப்படுத்துவது நியாயமானது தான். கல்வி உட்பட அனைத்து தேவைகளையும் பெற்றோர்கள் தான் செய்து கொடுக்கின்றனர். குடும்ப பாரம்பரியம், நல்ல பழக்கவழக்கம், அன்பு போன்றவற்றையும் பெற்றோர்கள் தான் கற்றுக்கொடுக்கின்றனர்.

18 வயது நிறைவடைந்த பெண்ணுக்கு வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம் போன்றவை வழங்குவதில் எந்த தவறும் இல்லை. அதற்கு உரிய மனநிலை அவர்களிடம் இருக்கும். ஆனால், திருமண பந்தத்தில் அடியெடுத்து வைக்க ஒரு பெண்ணுக்கு 18 வயதில் மனம் மற்றும் உளவியல் ரீதியாக வளர்ச்சி இருக்காது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் பெண்ணின் திருமண வயது 18 என்று எந்த அடிப்படையில் அரசு நிர்ணயித்துள்ளது என்பது தெரியவில்லை. எனவே, பெண்ணின் திருமண வயது 18 என்பதை உயர்த்த வேண்டும். அரசு இதுகுறித்து பரிசீலிக்க வேண்டும்.’’ இவ்வாறு மதுரை உயர் நீதிமன்ற கிளை அன்றே கூறியுள்ளது.

உச்ச நீதிமன்ற வழக்கறிஞரான சிராஜிதீனிடம் பேசிய போது, ”21 வயதில் தான் பெண்ணுக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என நிர்பந்திப்பது அரசியல் சட்டம் வழங்கியுள்ள தனிமனித உரிமைக்கு எதிரானதாகவே கருதுகிறேன். இஸ்லாமிய சமூகம் உள்ளிட்ட பல சமூகங்களில் இதற்கு கடுமையாக எதிர்ப்பு எழும். இது சாத்தியமே இல்லை” என்றார்.

ஆக, பெண்ணின் திருமண வயது 21 என்பதற்கு ஆதரவு,எதிர்ப்பு இரண்டுமே சமதளத்தில் உள்ளது! மக்களில் கணிசமானவர்கள் எதிர்ப்பார்கள் என்றால், அதை அமல்படுத்தும் தைரியம் எந்த அரசியல் கட்சிக்கும், அரசாங்கத்திற்கும் இருக்காது. பார்ப்போம் என்ன நடக்கப் போகிறது என்று!

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

 

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time