மேதா பட்கரின் தமிழகப் பயணம் சொல்லும் செய்திகள்!

 - ம.வி.ராஜ துரை

நாடறிந்த மக்கள் உரிமைப் போராளி மேதா பட்கர். ” நர்மதா பச்சாவோ அந்தோலன்” அமைப்பின் செயல்பாடு வாயிலாக உலகம் முழுவதும் உள்ள சமூக ஆர்வலர்களின் கவனம் பெற்றவர்!

நர்மதா நதியில் கட்டப்பட்ட அணைக்கட்டுகளால் பாதிக்கப்பட்ட  பழங்குடி மக்கள், ஏழை, எளியவர்களுக்காக போராடி, பல்லாயிரக்கணக்கான மக்களின் வாழ்வாதாரம் காப்பாற்றப் பட  முக்கியக் காரணமாக இருந்தவர்.

இவர் மராட்டிய மாநிலத்தை பூர்வீகமாக கொண்டிருந்தாலும்,நாட்டின் எந்த மூலையில் ஒடுக்கப்பட்ட,ஏழை, எளிய மக்கள் பாதிக்கப்பட்டாலும் அங்கு சென்று அவர்களுக்காக குரல் கொடுக்கத் தயங்காதவர். இதற்காக அவர் நிறுவிய அமைப்பு “மக்கள் இயக்கங்களின் தேசிய கூட்டமைப்பு”. இந்த அமைப்பு  இந்தியாவில் உள்ள எல்லா மாநிலங்களிலும் செயல்படுகிறது.

தமிழ்நாட்டில் இந்த அமைப்பின் முன்னணி நிர்வாகிகளில் ஒருவராக தோழர் அருள் உள்ளார். மக்கள் இயக்கங்களின் தேசிய கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பு மற்றும் செயற்பாட்டாளராக உள்ளார்.

டிசம்பர் 12 மற்றும் 13  ஆகிய இரு தினங்களிலும் மேதா பட்கர் தமிழ்நாட்டில் சுற்றுப்பயணம் செய்தார்.  சென்னை, ஈரோடு ஆகிய நகரங்களில் நடைபெற்ற முக்கிய நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.

மேதாபட்கர்  இங்கு கலந்து கொண்ட நிகழ்ச்சிகள் மற்றும் யாரையெல்லாம் சந்தித்துப் பேசினார், முதலமைச்சர் ஸ்டாலினுடன் அவர் பேசியபோது முன்வைக்கப்பட்ட கருத்துக்கள், கோரிக்கைகள் என்ன? ஆகிய விவரங்களை நம்முடைய அறம் இதழில் பதிவு செய்ய விரும்பினோம்.

இதன்பொருட்டு மேதாபட்கர் தமிழகத்தில் கால் பதித்தது முதல் அவர் விடை பெற்று  இந்தூருக்கு புறப்படும் வரை உடன் இருந்து அனைத்து நிகழ்வுகளையும் ஒருங்கிணைத்த சமூக செயற்பாட்டாளர் அருள் அவர்களை சந்தித்துப் பேச தொடர்பு கொண்டோம்.

நாங்கள் இருவரும் தோழர் நல்லக்கண்ணு அவர்கள் வீட்டில் சந்தித்தோம். சிறிது நேரம்  பேசிக் கொண்டிருந்துவிட்டு, மேதா பட்கரின் சுற்றுப்பயணம் குறித்து தனியாக பேசுவது என்று எழுந்தோம். அப்போது தோழர் நல்லகண்ணு குறுக்கிட்டு, இங்கேயே பேசலாமே! நானும் நடந்த விவரங்களை முழுதுமாக தெரிந்துகொள்வேனே!  என்றார் சிரித்தபடி!

அருள் நமக்கு அளித்த பேட்டியிலிருந்து.

” கேரள மாநிலத்தில் மேற்கொண்ட இரண்டு நாட்கள் சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு டிசம்பர் 12 அன்று காலை ஈரோடு வந்தார் மேதா பட்கர்.

மறைந்த டாக்டர் ஜீவானந்தம்  நினைவு கூட்டம்,  அவர் பெயரில் ஏழை மக்கள் பயன்பெறும் வகையிலான மருத்துவமனை திறப்பு, அவர் பெயரில் நூலகம் தொடக்கம் மற்றும் நூல்  வெளியீடு உட்பட ஈரோட்டில் நடைபெற்ற  எட்டு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.

மேதா பட்கரின் செயல்பாடுகளில் மிகுந்த ஈர்ப்பு கொண்டவரான டாக்டர் ஜீவானந்தம், மக்கள் இயக்கங்களின் தேசிய கூட்டமைப்பில் அவருடன் பயணித்தவர். பொதுவுடமைவாதி. ஏழை, எளிய, பாட்டாளிகள், விவசாயிகள் மற்றும் பழங்குடிமக்கள் நலனுக்காக  பாடுபட்டு அரும்பணிகள் ஆற்றியவர்.

அனைத்து நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு அவருக்கு புகழ் அஞ்சலி செலுத்தினார் மேதாபட்கர். அவருடன் பெரும் திரளாக பொதுமக்களும் பங்கேற்று  மரியாதை செலுத்தினர்.

டாக்டர் ஜீவானந்தம்  பெயரில் புத்தகத்தை மேதாபட்கர் வெளியிட்ட நிகழ்ச்சியில்  நீதியரசர் சந்துரு, முன்னாள் அமைச்சர் சுப்புலட்சுமி ஜெகதீசன், முன்னாள் துணைவேந்தர் மார்க்கண்டேயன், எழுத்தாளர் ஜெயமோகன் உள்ளிட்ட பிரமுகர்கள் கலந்து கொண்டனர். இந் நிகழ்ச்சியின்போது, எழுத்தாளர் சமஸ், இசையமைப்பாளர் டி. எம் .கிருஷ்ணா, சூழலியல் ஆர்வலர் இசைப்பிரியா ஆகியோருக்கு  அவர்களுடைய செயல்பாடுகளை பாராட்டும் வகையில் விருதுகளை மேதா பட்கர் வழங்கினார்.

பெண்கள் மேம்பாட்டுக்காக பெரியார் மேற்கொண்ட பணிகளை மேதாபட்கர் எப்போதும் புகழ்ந்துரைப்பது வழக்கம்.  இந்த பயணத்தின்போது பெரியார் நினைவு இல்லத்தை பார்வையிட்டு மகிழ்ந்தார்.  பெண் விடுதலை, தீண்டாமை ஒழிய  பெரியார் மேற்கொண்ட அரும்பணிகளை- துணிச்சலான செயல்பாடுகளை ,பல இந்திய ஆளுமைகளுடன் பெரியாருக்கு இருந்த தொடர்புகளை புகைப்படங்கள் வாயிலாக கண்டு வியந்தார்.

தொடர்ந்து திருநகர் காலனி, சித்தார்த்தா பள்ளிக்குச் சென்று அங்கு திரண்டிருந்த இளைஞர்கள் மத்தியில் உரையாடினார். இளைஞர்கள் பலர் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்தார்.

” படித்து முடித்து உயர் பதவிகளுக்கு செல்ல வேண்டும், தொழில் துறையில் சாதிக்க வேண்டும், ஆகிய நோக்கங்களுடன்  கூடவே  ஒவ்வொரு இளைஞரும்  இந்த சமூகத்திற்கும் ஆற்ற வேண்டிய கடமைகளையும்  மறந்துவிடக் கூடாது, என்று வலியுறுத்திய மேதாபட்கர், வருங்கால உலகம் பாதுகாக்கப்பட வேண்டுமென்றால் சுற்றுச்சூழல் நலனில் நாம்  பெரிதும் அக்கறை காட்ட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். ஈரோடு மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகள் காடுகள்  நிறைந்தவை. இங்கு வசிக்கும் யானைகள் அடிக்கடி இறந்துபோகும் தகவல்கள் வருகின்றன. இதை அனுமதிக்கக் கூடாது,” என்றார்.

ஒரு இளைஞர் கேட்ட கேள்வியை அடுத்து, நர்மதா பள்ளத்தாக்கு பழங்குடி மக்களுக்கான வாழ்வுரிமை போராட்டத்தில் தான் பங்கேற்ற அனுபவங்களை விவரித்தார்.

இதையடுத்து,  விவசாயிகள் பங்கேற்ற  கூட்டத்தில் கலந்து கொண்டார். இதில் சி.வி. பொன்னையன், கண குறிஞ்சி, செல்ல. செல்வகுமார், சுப்பு, அறச்சலூர் செல்வம் உள்ளிட்டோர்  கலந்து கொண்டனர்.

டெல்லியில் நடைபெற்ற விவசாயிகளின் மாபெரும் போராட்டத்திற்கு தலைமை தாங்கியவர்களில் மேதாவும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. உலகமே உற்று நோக்கிய இப்போராட்டத்தில் பல்லாயிரக்கணக்கான பெண்களும் பங்கேற்றனர். அவர்களுக்கு இவர் தலைமை தாங்கி வழிநடத்தினார்.

ஒட்டுமொத்த போராட்ட ஒருங்கிணைப்பாளர்கள் குழுவில் இவரும் இடம் பெற்றிருந்தார். அந்த அனுபவங்களை அந்தக் கூட்டத்தில் பகிர்ந்து கொண்டார்.

நாட்டின் விவசாயிகள் வருங்காலத்தில் எதிர்கொள்ள இருக்கும் சவால்களை அப்போது விளக்கினார்.

போராட்டத்தின் போது விவசாயிகள் மீது பல்வேறு வழக்குகள் போடப்பட்டன. அவற்றைத் திரும்பப் பெறுவதாக தெரிவித்தார்கள். அவர்கள் சொன்னபடி வழக்குகளை முழுவதுமாக திரும்பப் பெற்று விட்டார்களா என்பதை பார்க்க வேண்டும். இந்த மாபெரும் போராட்டம் அமோக வெற்றி பெறுவதற்கு தமிழக விவசாயிகளும் காரணமாக இருந்தார்கள். நீங்களும் பல்லாயிரக்கணக்கில் வந்திருந்தீர்கள். உங்களுக்கு இத்தருணத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்’ என்றார்.

இந்நிகழ்ச்சியை அடுத்து இரவு 9 மணியளவில்,டாக்டர் ஜீவானந்தம் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களிடம்  விடைபெற்றுக்கொண்டு ஏற்காடு விரைவு ரயிலில் புறப்பட்டு மறுநாள்(13.12.21) காலை சென்னைக்கு வந்தோம்.‌

காலை 7 .30 மணி அளவில் முதல் நிகழ்ச்சியாக,  தோழர் ஆர். நல்லகண்ணு  அவர்களை சந்தித்தார். இச்சந்திப்பிற்கு முன்னதாக , உடன்வந்த தோழர் உதயகுமார் (கூடன்குளம் அணு உலை எதிர்ப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர்)தோழர் நல்ல கண்ணு  மற்றும்  அவருடைய பொது வாழ்க்கை குறித்து விவரமாக மேதா பட்கரிடம் எடுத்துக் கூறினார்.

தோழர் நல்லகண்ணு இந்த சந்திப்பு பற்றி விவரிக்கையில் மேதாபட்கர் ஒரு சுய நலமற்ற மக்கள் போராளி. அவர் என்னை வந்து சந்தித்ததில் பெரு மகிழ்ச்சி அடைந்தேன். அவர் என்னிடம், ’’இவ்வளவு வயதிலும் தாங்கள் ஆரோக்கியமாக இருப்பதற்கு என்ன காரணம்’’ என்று வினவினார். அதற்கு நான் “பொதுமக்களுடன் பயணித்ததுதான்” என்றேன். சிறிது நேரம் இருவரும் உரையாடிக்கொண்டிருந்தோம்.சந்திப்பின் போது, மகாகவி பாரதி மற்றும் வ .உ. சிதம்பரனார் குறித்து ஆங்கிலத்தில் எழுதப்பட்ட கட்டுரை ஒன்றை நான் அவருக்கு நினைவு பரிசாக வழங்கி வாழ்த்தினேன்.

கோட்டையில் முதலமைச்சர் மு. க. ஸ்டாலினை சந்திப்பதற்கு எங்களுக்கு  நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது. முதலமைச்சருடன் அந்த அறையில் தலைமைச் செயலாளர் இறையன்பு மற்றும் முதல் அமைச்சரின் தனிச் செயலாளர்கள் அனைவரும்  இருந்தனர்.

காலை 10.05 முதல் 10. 30 மணி வரை நடைபெற்ற சந்திப்பின் போது,  மேதாபட்கர் தெரிவித்த பல்வேறு கருத்துக்களையும் கோரிக்கைகளையும் முதலமைச்சர் ஸ்டாலின் கரிசனத்துடன் கேட்டார். அவ்வப்போது, தம் கருத்துக்களையும் தெரிவித்தார்.

மேதா பட்கர் தெரிவித்த கருத்துக்களை முதல்-அமைச்சரின் செயலாளர்கள் குறித்துக் கொண்டனர். அதுவும் தலைமைச் செயலாளர் இறையன்பு துல்லியமாக அனைத்தையும் குறித்துக் கொண்டார். சில கோரிக்கைகள் தொடர்பாக தமிழக அரசு எடுத்த நடவடிக்கைகளை தலைமைச் செயலாளர் இறையன்பு விளக்கினார்.

டெல்லியில் நடைபெற்ற விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தமைக்கு முதலமைச்சரிடம்  நன்றி தெரிவித்துக்கொண்டார் மேதா. விவசாயிகளுக்கு எதிராக சட்டங்களை கொண்டு வந்தது போல தொழிலாளர்கள் நலனுக்கு எதிராகவும் சட்டங்களை மத்திய அரசு கொண்டுவர உள்ளது. இதற்கும் தாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கவேண்டும். இது தொடர்பாக சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற  வேண்டும் என்று முதல்வரிடம் கேட்டுக் கொண்டார். இந்திய அரசமைப்பு சட்டத்தை மாற்ற மோடி அரசு முயல்கிறது. பொதுத்துறை நிறுவனங்கள் , மாநில அரசின் அதிகாரத்தை பறித்து தன் வசப்படுத்த நினைக்கிறது. மாநில சுய ஆட்சி உரிமை பறிக்கும் மத்திய அரசுக்கு எதிராக நாம் ஒன்றிணைய வேண்டும் என்பதையும் குறிப்பிட்டார்.

தங்கள் தந்தையார் கலைஞர் அவர்கள் தொழிலாளர்கள் நலனுக்காக பல்வேறு வாரியங்களை அமைத்தார். மத்திய அரசு தீட்டியுள்ள  தொழிலாளர் நலச் சட்டங்கள் அமலுக்கு வந்தால், இந்த வாரியங்களின் செயல்பாடு முடங்கிப் போய்விடும். எனவே, இதை அனுமதிக்கக் கூடாது என்று  வலியுறுத்தினார்.

மத்திய அரசு மேற்கொள்ளும் அதிகார துஷ்பிரயோகத்திற்கு எதிராக மேற்கு வங்கம், மற்றும் மராட்டிய அரசுகள் சட்டம் இயற்றி செயல்படுவது போல தமிழக அரசும் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

விளை பொருட்களுக்கு உரிய ஆதார விலை வழங்க  வேண்டும் என்பது டெல்லியில் நடைபெற்ற விவசாயிகள் போராட்டத்தில் முன் வைக்கப்பட்ட கோரிக்கை. தமிழகத்தில் இது நிறைவேற தங்கள் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சென்னை மாநகரத்தில் வசித்து வந்த குடிசை வாழ் மக்களை  காலி செய்து வெளியில் ஒரே இடத்தில் ஒருசேர குடியமர்த்துவது அவர்கள் நல்ல முறையில் வாழ வகை செய்யாது. அந்த மக்கள் காலங்காலமாக வாழ்ந்து வந்த இடத்திலோ அல்லது அருகிலேயோ  அவர்களுக்கு வீடுகள் கட்டிக் கொடுக்க வேண்டும். அப்படி கட்டப்படும் வீடுகள் தரமானதாக இருக்கும் வகையில் அரசு பார்த்துக் கொள்ள வேண்டும்.

மதுக்கடைகளால் ஏழை எளிய மக்கள் மிகக் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள். எனவே, மதுவிலக்கை  அமல்படுத்தும் வகையில் புதிய கொள்கையை அரசு வகுத்து உடனே செயல் படுத்த வேண்டும்.”என்றார்.

“தொடர்ந்து பல மாநிலங்களில் பயணம் மேற்கொள்கிறேன். தாங்கள் பதவியேற்றதும் மேற்கொண்ட நடவடிக்கைகளை அனைவரும் உன்னிப்பாக கவனிக்கிறார்கள். இது பற்றி பேசுகிறார்கள். குறிப்பாக, ஹைட்ரோ கார்பன் மற்றும் மீத்தேன் திட்டங்களை ரத்து செய்தது, நீட் தேர்வுக்கு எதிரான நடவடிக்கை, எட்டு வழி சாலை திட்டத்தை ஏற்க மறுத்தது போன்றவை மிகுந்த வரவேற்பு பெற்றுள்ளது. கூடங்குளம் அணுவுலை கழிவுகளை இங்கே கொட்டக்கூடாது என்று திமுக நாடாளுமன்ற உறுப்பினர் பாலு மத்திய அரசுக்கு எழுதியுள்ள கடிதத்தை வரவேற்கிறேன். அணுவுலை திட்டமே சுற்றுச்சூழலுக்கு எதிரான ஒரு திட்டமாகும். எனவே,  மக்கள் நலன் கருதி  புதிய கொள்கை ஒன்றை தமிழக அரசு வகுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

ஸ்டெர்லைட் ஆலை வேண்டாம் என்றது தங்களுடைய நல்ல முடிவு. எக்காரணம் கொண்டும் வேதாந்தம் குழுமத்தை மீண்டும் அனுமதித்து விடக் கூடாது.

தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி மக்கள் நலனுக்காக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறீர்கள். ஆனாலும்கூட, ஆங்காங்கு அவர்களுடைய பாதுகாப்புக்கு சிக்கல்கள் தொடர்கிறது. அது அறவே நீங்கும் வகையில் உரிய நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும்.

யானைகள்  மற்றும் வன விலங்கு வாழ்விடம்  அண்மைக்காலமாக ஆக்கிரமிக்கப்பட்டு வருவது வருத்தம் தருகிறது, இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் “என்று மேதா பட்கர் கேட்டுக் கொண்டார்.

எங்கள் குழுவில் இடம்பெற்றிருந்த தோழர் உதயகுமார், கூடங்குளம் அணுவுலை எதிர்ப்புப் போராட்டத்தின்போது போடப்பட்ட சில வழக்குகள் வாபஸ் பெறப்படாமல் இருப்பதை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு வந்து , அவற்றை திரும்பப் பெற உரிய நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்தார்.

இந்த சந்திப்பைத் தொடர்ந்து  வெளியில் திரளாக காத்திருந்த பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி அளித்தார். ” “முதலமைச்சர் உடனான சந்திப்பு மிகுந்த மன நிறைவு தந்ததாக தெரிவித்து, முதலமைச்சரிடம் தெரிவித்த கோரிக்கைகளை குறிப்பிட்டார்.

அடுத்த நிகழ்வாக ரயில்வே தொழிலாளர் அரங்கில் குழுமியிருந்த தொழிலாளர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் பேசினார்.

மாலையில் சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில் செய்தியாளர்களுடனான சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் பங்கேற்று   பேட்டியளித்தார்.

சுற்றுச்சூழலுக்கு எதிரான அணுஉலைகளை அகற்ற வேண்டிய அவசியம், சிறுபான்மையினர் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து அப்போது தன் கருத்துகளை விரிவாக  தெரிவித்தார்.

குடந்தை அரசன், பொன்னையன், திருமுருகன் காந்தி, கரீம், பொழிலன், உதயகுமார், பூவுலகின் நண்பர்கள் சுந்தர்ராஜ், சுரேஷ் உள்ளிட்டோர் அப்போது உடனிருந்தனர்.

நூற்றுக்கணக்கான பெண்கள் பங்கு கொண்ட கூட்டம் புனிதர் பிரான்சிஸ் கான்வென்ட்டில் அன்று மாலை நடைபெற்றது. அதில் பங்கேற்று பேசினார். அண்மைக்காலமாக சமுதாயத்தில் அதிகரித்து வரும் பாலியல் வன்முறை குறித்தும் அதைத் தடுப்பதற்கான வழிமுறைகள் குறித்தும் மேதா எடுத்துரைத்தார்.

இந்நிகழ்வின் போது, சட்ட மன்ற உறுப்பினர்கள்  பேராசிரியர் ஜவாஹிருல்லா, இனிகோ இருதயராஜ், மற்றும் தமிமுன் அன்சாரி ஆகியோர் வருகை தந்து, சிறுபான்மை மக்கள் படும் இன்னல்கள் மற்றும் பல்வேறு கோரிக்கைகளை தெரிவித்தனர். அதை நீக்குவதற்கு துணை நிற்க வேண்டும் என்று அவரிடம் கேட்டுக் கொண்டனர்.

அன்றிரவு அண்ணாநகரில் உள்ள வைகோ வீட்டுக்கு மேதா  சென்று அவரை சந்தித்தார். அப்போது துரை வையாபுரியும் உடனிருந்தார். அவரை அன்புடன் வரவேற்று உபசரித்த வைகோ, நாட்டு நிலவரம் குறித்து அவருடன்   விவாதித்தார்.

சாமானிய மக்கள் நலனுக்காக ஓங்கி ஒலிக்கும் தங்கள் குரலுக்கு என்றும் பக்க துணையாக இருப்பேன் என்று வைகோ அவரிடம் உறுதியளித்தார்.

இச்சந்திப்பைச் தொடர்ந்து அமைச்சர் மனோ தங்கராஜ் மேதா பட்கரை சந்தித்துப் பேசினார்.

இச்சந்திப்பு முடியும்போது மணி நள்ளிரவை தொட்டுக் கொண்டிருந்தது.

தொடர்ந்து இரண்டு நாட்கள் ஓய்வின்றி பயணித்த சமூக உரிமைப் போராளி மேதா பட்கர் மறுநாள் அதிகாலையில் விமானம் மூலம் மத்திய பிரதேச மாநிலம் இந்தூருக்கு புறப்பட்டுச் சென்றார்.

மேத்தா பட்கர் தமிழகத்தில் மேற்கொண்ட இரண்டு நாள் சுற்றுப்பயணத்தின்போது ,முதலமைச்சர் மு. க. ஸ்டாலினுடனான  சந்திப்பு மிகுந்த முக்கியத்துவம்  வாய்ந்தது.

சாமான்ய, ஏழை, எளிய , பாட்டாளிகள், தாழ்த்தப்பட்ட , பழங்குடி மக்கள் நலனுக்காக மேதாபட்கர் எடுத்துச் சொன்ன அத்தனை கருத்துக்களையும் தமிழக முதல்வர் மு .க. ஸ்டாலின் மிகுந்த அக்கறையுடன்.  கேட்டதும்  இச்சந்திப்பின்போது தலைமைச் செயலாளர் உள்பட முதலமைச்சரின்  தனிச் செயலாளர்கள்  அனைவரும் உடனிருந்து  அவருடைய கருத்துக்களை  பதிவு செய்து கொண்டதும் குறிப்பிடத்தக்கது.

இதன் விளைவாக,பல லட்சம் அடித்தட்டு மக்களின் கோரிக்கைக்கு தீர்வு கிடைக்கும் என்று நம்புகிறேன்” என்றார் அருள்.

கட்டுரையாளர்; ம.வி.ராஜ துரை

 

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time