ராஜேந்திர பாலாஜியிடம் ரகசிய பேரமா? என்ன நடக்கிறது…?

-சாவித்திரி கண்ணன்

ஊழல், அதிகார துஷ்பிரயோகம், அராஜகம், கொலை வழக்கு உள்ளிட்ட எதிலும் திமுக ஆட்சியில் ராஜேந்திர பாலாஜி மீது எந்த நடவடிக்கையும் இல்லை. ஆனால், ஒரு சீட்டிங் வழக்கிலே கைது செய்யப் போனார்களாம், தப்பித்துவிட்டாராம்! என்ன நடக்கிறது இந்த ஆட்சியில்?

கமிஷன் , கலெக்‌ஷன், கரப்ஷன் ஆகிய  மூன்றையும் மூச்சாகக் கொண்டு செயல்பட்ட அதிமுக அமைச்சர் ராஜேந்திரபாலாஜியின் ஊழல்களைப் பற்றி சி.ஏ.ஜி. எனப்படும் மத்திய தணிக்கைத் துறையின் அறிக்கையே துல்லியமாக அம்பலப்படுத்தியுள்ளது.

ஏழை, எளிய பால்விவசாயிகளையும், அடிநிலைத் தொழிலாளிகளையும் சுரண்டித்தான் பல நூறு கோடி சொத்து சேர்த்துள்ளார் ராஜேந்திர பாலாஜி.

தமிழக அரசியலில் திமுகவிற்கு எதிராக வன்முறை வார்த்தைகளை பிரயோகித்ததில் கே.டி.ஆருக்கு இணையாக இன்னொருவரை சொல்ல முடியாது!

”திமுகவினரை வீடு புகுந்து அடிங்க’’

”திமுக ஒரு தேச விரோதக் கட்சி. தடை செய்யப்பட வேண்டிய கட்சி. இந்துக்கள் மனதை புண்படுத்தும் கட்சி”

”தமிழகத்தில் தீவிரவாதத்தை வளர்ப்பதே திமுக தான்.அதை அழிக்காமல் ஓயமாட்டேன்”

இப்படி எல்லாம் வரிந்து கட்டி திமுகவை வசை பாடிய ராஜேந்திர பாலாஜி மீதான வலுவான புகார்கள் எதற்குமே வடிவம் தர மறுத்து வந்து கொண்டிருப்பது தான் திமுக ஆட்சி!

வருடத்திற்கு 65,000 கோடி வரவு,செலவுகளுடன் இயங்கினாலும் பால் சப்ளை செய்யும் விவசாயிகளை எப்போதும் வறுமையின் பிடியில் தான் வைத்திருந்தார். குறிப்பாக பால்வளத்துறையிலே ஆடம்பரமாக தேவையற்ற செலவினங்களை செய்து ஆவினுக்கு பல கோடி ரூபாய் இழப்பை ஏற்படுத்தியிருப்பது ஆவின் தணிக்கைத்துறையின் 1000க்கும் மேற்பட்ட பக்கங்களில் அறிக்கையாக உள்ளது!

ஒரு சின்ன சாம்பிள் சொல்ல வேண்டும் என்றால், ராஜேந்திர பாலாஜி தன் அலுவலக அதிகாரிகள் மற்றும் உயரதிகாரிகளுக்கு 2019-20நிதியாண்டில் மட்டும் தீபாவளி பரிசு வழங்க லெதர் பேக் வாங்கிய வகையில் சுமார் 49லட்சம் ரூபாய் செலவு செய்திருப்பதாக கணக்கு காட்டியிருக்கிறார்.

இதற்கெல்லாம் உச்சமாக ஆவினில் தேவையற்ற 236 பணியிடங்களை உருவாக்கி அதில் வேலை தர பல கோடிகள் லஞ்சம் பெற்றார். இறுதியாக பதிவியைவிட்டு இறங்கும் தருவாயில் கூட – திமுக பதவிஏற்புக்கு சில நாட்கள் முன்பு கூட – 100 புதிய போஸ்டிங்குகளை உருவாக்கி காசு பார்த்தார்.

நியாயப்படி இந்த பணி நியமனங்களை திமுக ஆட்சி ரத்து செய்திருக்க வேண்டும். ஆனால் செய்யவில்லை. லஞ்ச ஒழிப்புத் துறை ராஜேந்திர பாலாஜி மீதான புகார்களில் களம் இறங்கி இருக்க வேண்டும். எதுவுமே நடக்கவில்லை. எப்பவோ 2013 ஆம் ஆண்டு இவர் வருமானத்திற்கு அதிகமாக 7 கோடி சொத்து சேர்த்த வழக்கு தான் இப்போதும் நடந்து கொண்டு உள்ளது. அதற்கு பிறகு சர்வசாதாரணமாக சுமார் ஆயிரம் கோடிக்கு சொத்து சேர்த்து சிவகாசியையே வளைத்து போட்டிருக்கும் ராஜேந்திர பாலாஜி மீது ஏன் நடவடிக்கை இல்லை.

ராஜேந்திர பாலாஜி குறித்து எழுதிய குமுதம் ரிப்போர்டரின் நிருபர் கார்த்திக் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தினார் ராஜேந்திர பாலாஜி. அன்று ஸ்டாலின் உள்ளிட்ட அனைத்து தலைவர்களும் இதைக் கண்டித்து அறிக்கை வெளியிட்டனர். அந்த வழக்கையும் அப்படியே தான் கிடப்பில் வைத்துள்ளனர்.

ஆனால், வெறும் 30 லட்ச ரூபாய் ஏமாற்றிய வழக்கில் தற்போது அவர் தேடப்படுகிறாராம்! அந்த 30 லட்ச ரூபாயை அவர் திருப்பித் தர முடியாதவரா என்ன? ஒரு வேளை கைதானாலும் கூட அந்த பணத்தை திருப்பித் தந்தால் விடுவிக்கபடக் கூடிய வழக்கு தானே! ஏதோ திசை திருப்பும் முயற்சியாகவே அவரது தமறைவும்,தேடுதலும் தெரிகிறது.

ராஜேந்திர பாலாஜி ஊழல்களை அறிக்கையாக லஞ்ச ஒழிப்பு துறைக்கு பரிந்துரைக்கும் அளவுக்கு கூட இந்த ஆட்சியாளார்கள் அசைந்து கொடுக்கவில்லை என்பதையும் இணைத்து தான் கவனத்தில் கொள்ள வேண்டி உள்ளது!

இது குறித்து நாம் ஏற்கனவே அறம் இதழில்,

ஆவின் ஊழல்; ராஜேந்திர பாலாஜியை காப்பாற்றும் அமைச்சர் நாசர்

என எழுதி இருந்தோம்.

இதை எல்லாம் எப்படி புரிந்து கொள்வது?

பால் முகவர் சங்கத் தலைவரும், மக்கள் நீதி மைய தொழிற்சங்க பேரவைத் தலைவருமான சு.ஆ. பொன்னுசாமியிடம் பேசிய போது, ராஜேந்திர பாலாஜியின் மலையளவு அநீதிகளை, அக்கிரமங்களை எல்லாம் விட்டுவிட்டு ஏதோ ஒரு சாதாரண புகாரில் அவரை தேடப்படும் குற்றவாளியாக சொல்கிறார்கள். எனக்கு என்னவோ, இந்த ஆட்சியாளர்களுக்கும் இவரைப் போன்ற முன்னாள் அமைச்சர்களுக்கும் 40;60 என்ற டிலீங்  நடந்ததாக சொல்லப்படுவது உண்மையோ என நினைக்கத் தோன்றுகிறது’’ என்றார்.

ராஜேந்திர பாலாஜி என்ற இந்த மனிதர் கண்டிப்பாக தண்டிக்கப்பட வேண்டியவர். அந்த அளவுக்கு வாயைத் திறந்தால் வந்து விழுவது ஆஸிடோ..என அஞ்சத்தக்க பேச்சுக்களை உதிர்த்தவர். இஸ்லாமியர்களை அடிக்கடி இழிவுபடுத்தி பேசியவர் என்பதால், இந்துத்துவ இயக்கங்கள் இவரை தங்கள் செல்லப் பிள்ளையாக உச்சி மோர்ந்தன.  இப்போதும் கூட அவரை காப்பாற்ற பாஜகவினர் மறைமுக ‘லாபி’ செய்து கொண்டிருக்கலாம்.

ஆங்கார முகபாவத்துடன் அனல் கக்கும் பேச்சுக்கள்.. அதே சமயம் பக்திப் பழம் போல நெற்றியில் குங்குமம், கை நிறைய கலர்கலராக வேண்டுதல் கயிறுகள்! கோயில் கோயிலாக பயணங்கள், பூஜை, பரிகார பூஜை..என ஏகப்பட்ட  தடபுடல்கள் என திகழ்ந்த போதிலும் முற்றிலும் மனிதத் தன்மையின்றி செயல்பட்டவர்.

கே.டி.ஆரும், திமுகவும் இன்னும் எத்தனை நாள் தான் கண்ணாம்பூச்சி விளையாட்டை விளையாடப் போகிறார்கள் என பார்க்கத் தானே போகிறோம். இது ரொம்ப ஆபத்தான அரசியல் நாடகம்!

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

 

 

Support Aram

நேர்மையான,வெளிப்படையான,சுதந்திரமான இதழியலுக்கு தோள் கொடுங்கள்.

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time