நம் அரசாங்கங்கள் யாருக்கானவை..?

-சாவித்திரி கண்ணன்

மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறையினர், அமைச்சர்கள், சட்டங்கள்.. ஆகிய எதுவும், யாரும் நெருங்க முடியாத சர்வ அதிகாரத்துடன் வெளிநாட்டு நிறுவனங்கள் இயங்குகின்றன. தொழிலாளர்கள், அவர்களுக்கு பழுதடைந்தால் வீசி எறிந்து விடத்தக்க நடமாடும் இயந்திரங்களே..!

தொழில் தொடங்க சிறப்பு பொருளாதார மண்டலங்கள் அமைத்து தந்து வெளி நாட்டு நிறுவனங்களுக்கு பல நூறு ஏக்கர் நிலங்கள் வழங்கி, அந்த நிறுவனங்களுக்கு சலுகை விலையில் மின்சாரம் உள்ளிட்ட பலவும் செய்து தந்து ஊக்குவிக்கின்றன மத்திய மாநில அரசாங்கங்கள்!

ஆனால், இப்படி தங்களுக்கு தரப்பட்ட சலுகைகளைக் கொண்டு நம் நாட்டிற்குள்ளேயே ஒரு கொத்தடிமை ராஜ்ஜியத்தை ஸ்தாபித்துக் கொள்கின்றனர், இந்த நிறுவனங்கள்! எந்த விதிமுறைகள், சட்டத்திற்கும் அப்பாற்பட்டவர்களாக அவர்கள் செயல்படுவதைப் பார்த்தால் இந்தியா இன்னும் சுதந்திரம் பெறவில்லையோ என்று கூட நமக்கு சந்தேகம் வந்துவிடுகிறது.

சமீபத்தில் பாக்ஸ்கான் தொழிற்சாலை பிரச்சினையில் கூட இந்த உண்மை தான் பட்டவர்த்தனமாக வெளிப்பட்டது.

தைவானை தலைமை இடமாக கொண்டு செயல்படும் ஃபாக்ஸ்கான் நிறுவனம் எலக்ட்ரானிக் பொருட்களை உற்பத்தி செய்வதில் முன்னணி நிறுவனமாக உள்ளது. இந்த நிறுவனத்தின் தொழிற்சாலை சென்னை அருகே உள்ள ஸ்ரீபெரும்புதூரில் இயங்கி வருகிறது.

15 ஆயிரம் ஊழியர்கள் பணியாற்றி வரும் ஃபாக்ஸ்கான் ஆலையில் 90 சதவீதம் பேர் பெண்கள் ஆவர். ஃபாக்ஸ்கான் ஆலையில் பல்வேறு நிறுவனங்களை சேர்ந்த செல்போன்கள் தயாரிக்கப்பட்டு வருகிறது. அதுவும் கடந்த மூன்றாண்டுகளுக்கு மேலாகத் தான் 12 வகையான ஐபோன் உதிரி பாகங்கள் தயாரித்து வெளி நாடுகளுக்கு அனுப்பப்படுகின்றன.

சென்ற வருடம் கூட இந்த நிறுவனத்தில் காண்டிராக்ட் லேபர்கள் சம்பளம் தாரத காரணத்தால் பெரும் கலகத்தில் ஈடுபட்டனர் என்ற செய்தி பத்திரிகளில் வந்தது. அதற்கு மேல் ஏன் சம்பளம் தராமல் ஏழைத் தொழிலாளர்கள் வஞ்சிக்கப்படுகின்றனர் என்ற எந்த விசாரணையிலும் அரசோ, ஊடகங்களோ இறங்கவில்லை.

இங்கே வேலை செய்யும் பெண்கள் பல்வேறு இடங்களில் தங்க வைக்கப்பட்டு இருந்தனர். 8 மணி நேர வேலை, வாரத்திற்கு ஒரு நாள் விடுமுறை, உழைப்புக்கேற்ற கூலி எதையும் உறுதிபடுத்திக் கொள்ள முடியாத வகையில் இவர்கள் வேலை வாங்கப்பட்டு வருவதை ஏன் அரசு அனுமதிக்க வேண்டும்…?

மேற்படி சம்பவம் குறித்து அந்த பகுதியில் உள்ள பத்திரிகையாளத் தோழர்கள் சிலரிடம் தொடர்பு எடுத்து பேசிய போது, குறிப்பிட்ட தினத்தன்று உணவு உட்கொண்ட நூற்றுக்கணக்கானோர்க்கு வாந்தி,மயக்கம்,வயிற்றுபோக்கு, தலை சுற்றல் ஏற்ப்பட்டு உயிருக்கு போராடுகின்றனர் என நிர்வாகத் தரப்பிற்கு பலமுறை தகவல் தரப்பட்டும் அவர்களை மருத்துவமனை கொண்டு செல்லவோ, உதவவோ நிர்வாகத் தரப்பில் எந்த உதவியும் கிடைக்கவில்லை. அவர்களே தட்டுத் தடுமாறி, வெளியே வந்து பூந்தமல்லி அரசு மருத்துவமனை, காஞ்சிபுரம் அரசு மருத்துவமனை என வேவ்வேறு இடங்களுக்கு பயணப்பட்டு உள்ளனர்.

அடுத்த நாள், அதற்கடுத்த நாள் சென்றும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர்கள் நிலை குறித்து நிர்வாகத் தரப்பில் எந்த அனுசரணையான உதவியோ, ஒத்துழைப்போ இல்லை என்பது மட்டுமல்ல, வேலைக்கு வராதவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்ற போது தான் கொந்தளிப்பு ஏற்பட்டு உள்ளது.

நம்மை மனுஷப் பிறவியாகவே இந்த தொழிற்சாலை கருதவில்லை… நாம் எவ்வளவு துன்பத்திற்கு உள்ளானாலும் இவர்களுக்கு இரக்கம் இல்லை…இன்னும் சிலர் உயிருக்கே போராடிக் கொண்டு இருக்கிறார்கள். தங்கள் தாய் தந்தை, உற்றார்,உறவினர் அனைவரையும் துறந்து இந்த நிறுவனத்திற்காக வந்து வேலை செய்ததற்கு கிடைக்கும் மரியாதை இது தானா? என்று உரைத்தது. அந்த வலி தான் கொட்டும் டிசம்பர் பனியிலும் நடுரோட்டில் பசி,பட்டினியோடு அந்த இளம் பெண்களை போராட வைத்து உள்ளது.

மிக முக்கிய சாலையில் போக்குவரத்தை நிறுத்திய உடன் தான் காவல்துறை வருகிறார்கள். கலெக்டர் வருகிறார். அமைச்சர்கள் வருகிறார்கள். இளம் பெண்களின் குமுறல்களை கேட்டு விக்கித்து போகின்றனர். நிர்வாகத் தர்ப்புக்கு போன் போட்டு அழைத்தால், அங்கிருந்து வந்து பேச யாரும் தயார் இல்லை.

களத்திலே இருந்த முகமது கெளஸ் என்ற பத்திரிகையாளரிடம் பேசிய போது, ”கலெக்டர், அமைச்சர், காவல்துறை உயர் அதிகாரிகள் அகிய அனைவரும் சேர்ந்து மாற்றி, மாற்றி நிர்வாகத் தரப்பில் போன் செய்து நிலைமையை எடுத்துச் சொல்லி தயவு செய்து வாருங்கள், நிலைமையை சீர்படுத்தும் பொறுப்பு உங்களுக்கு உள்ளது என்ற போதும் அவர்கள் யாருமே வரத் தயார் இல்லை. ஆக, இப்படிப்பட்ட பொறுப்பில் உள்ளவர்களின் குரலே அவர்களிடம் எடுபடாது என்றால், இந்த எளிய பெண்களின் குரலுக்கு நிர்வாகத்தில் என்ன மதிப்பு இருக்கும்? என்பதை அன்று எல்லோரும் பட்டவர்த்தனமாக உணர்ந்தோம்’’ என்றார்.

பாதிக்கப்பட பெண்களுக்காக களத்தில் இறங்கிய தொழிற்சங்கத்தினரைத் தான் போலீசார் கைது செய்தனர்.  ஃபாக்ஸ்கான் விடுதி போராட்டத்தில் ஈடுபட்ட 67 பெண் தொழிலாளர்கள் மற்றும் போராட்டத்திற்கு தூண்டுதலாக இருந்தாகக் கூறி பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த 22 பேர் என மொத்தம் 89 பேர் மீது வழக்கு பதிவு செய்து ஒரகடம் போலீசார் கைது செய்தனர். போலீசாரால் கைது செய்யப்பட்ட பெண் தொழிலாளர்கள் சொந்த ஜாமீனில் விடுவிக்கப்பட்டு உள்ளனர். ஆனால், கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர்கள் உள்பட மொத்தம் 22 பேர் கைது செய்யப்பட்டு காஞ்சிபுரம் சிறையில் அடைக்கப்பட்டனர்.

சம்பவம் குறித்து திருவள்ளுவர் மாவட்ட கலெக்டர் வெளியிட்ட  அறிக்கையில், விடுதியின் உணவு உண்டதில் வயிற்றுப்போக்கு காரணமாக மொத்தம் 256 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களில், 159 பேர் உள்நோயாளிகளாக பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். டிசம்பர் 18-ம் தேதி 159 பேரில் 155 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர், மீதமுள்ள 4 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அந்த 4 பேரும் அபாய கட்டத்தை தாண்டி விட்டதாக” தெரிவிக்கப்பட்டது. ஆனால், தெளிவாக இது உறுதிபடுத்தப்படவில்லை.

மத்திய பாஜக அரசிடம் இருந்து என்ன நிர்பந்தமோ, மாநில அரசின் தலைமை இந்த நிர்வாகத்தின்  மீது நடவடிக்கை எடுக்க முடியாமல் கைபிசைந்து நிற்கிறது. முதல்வர் ஸ்டாலின் வழக்கம் போல அமைதி காத்தார். கடைசி வரை கலெக்டரால் கூட நிர்வாகத் தரப்பை நேரில் சந்திக்க முடியாமல் கான்பிரன்ஸில் தான் பேச முடிந்ததாம். பிரச்சினைக்கு தீர்வு காண இயலாத கையாகாலத்தனத்தின் விளைவு அந்த பெண்களை அவசரமாக ஊருக்கு அனுப்பி உள்ளனர்.

உண்மையில் நாம் சுதந்திர இந்தியாவில் தான் உள்ளோமா? அப்படியானால் இங்கு மட்டுமல்ல, கோவை பாஞ்சாலைத் தொழிற்சாலையிலும் இது போல சுமங்கலி திட்டத்தின் கீழ் கொத்தடிமைகளாக நடத்தப்படும் பெண் தொழிலாளர்களுக்கு ஏன் குறைந்தபட்ச நீதி கூட கிடைப்பதில்லை. வல்லான் வகுத்ததே சட்டம் என்பது தானே நிகழ்ந்து கொண்டு உள்ளது. நாம் ஓட்டுப் போட்டு அதிகாரம் தந்துள்ள ஆட்சியாளர்கள் யாருக்காக வேலை பார்க்கிறார்கள் என்ற கேள்வி எழத் தான் செய்கிறது.

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

 

 

Support Aram

நேர்மையான,வெளிப்படையான,சுதந்திரமான இதழியலுக்கு தோள் கொடுங்கள்.

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time