சிலியில் சிலிர்த்தெழுந்த இடதுசாரி ஜனநாயகம்!

-ச.அருணாசலம்

ஒரு மாணவத் தலைவரான கேப்ரியல் போரிக் மாபெரும் சர்வாதிகாரியும், அமெரிக்க ஆதரவு பெற்றவருமான அன்டனியோ காஸ்ட்டை தோற்கடித்தார். மக்கள் சக்தி ஒருங்கிணைந்தால் பணபலம், அதிகாரபலம் அத்தனையும் தூள்தூளாகும் என சிலி மக்கள் நிருபித்துள்ளனர்!

இழுபறியாகவே முடியும் , என்று அனைவராலும் ஆருடம் கூறப்பட்ட சிலி நாட்டு அதிபர் தேர்தலில் அனவரது எதிர்பார்ப்புகளையும் முறியடித்து இடதுசாரி இயக்கத்தை சார்ந்த  35 வயதான இளைஞர் கேப்ரியல் போரிக் மாபெரும் வெற்றியடைந்துள்ளார்.

கம்யூனிஸ்ட் என்று வலதுசாரி அரசியல்வாதிகளால் முத்திரை குத்தப்பட்ட மாணவர் தலைவர் கேப்ரியல் போரிக் இடதுசாரி சிந்தனை உள்ளவர் என்பதை அனைவரும் ஒத்துக்கொள்வர். ஆனால், சிலி கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினரல்ல.

சிலி நாட்டின் புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மாணவர் தலைவர் போரிக் ஒரு புதிய வரவேற்கத்தக்க, – ஏழை எளிய மக்களின் வாழ்வில் –  ஒளியேற்றும் பாதையை உருவாக்குவார் என்பது அனைவரின் எதிர்பார்ப்பாகும்!

சிலி நாட்டு கம்யூனிஸ்ட் கட்சியை உள்ளடக்கிய இடதுசாரி கூட்டணியின் சார்பாக அதிபர் பதவிக்கு போட்டியிட்ட போரிக் 55.9% வாக்குகளை பெற்று வெற்றிவாகை சூடியுள்ளார்.

ஐம்பத்தாறு சதவிகித வாக்காளர்கள் பங்குபெற்ற இந்த இறுதி தேர்தலில், தன்னை எதிர்த்து போட்டியிட்ட 55 வயதான அன்டனியோ காஸ்ட் என்ற வலதுசாரி வேட்பாளரை விட ஏறத்தாழ 10 லட்சம் வாக்குகள் அதிகம் பெற்று வென்றுள்ளார் கேப்ரியல் போரிக். இது லத்தீன் அமெரிக்கா என்றழைக்கப்படும் தென் அமெரிக்காவின் சிறப்பாகும். அன்டனியோ காஸ்ட் பெற்ற வாக்கு விகிதம் 44.1%. முடிவு அறிவிப்பதற்கு முன்னரே தோல்வியை ஒப்புக்கொண்டு போரிக்கிற்கு வாழ்த்தும் தெரிவித்தார் .

இந்த வெற்றி சாதாரணமானதல்ல என்பதாக உலகெங்கிலும் உள்ள அரசியல் நோக்கர்கள்  கருதுகின்றனர் . அரை நூற்றாண்டுகால சோக வரலாறும் , கடந்த முப்பது ஆண்டுகளாக நடந்த சீரழிவும் ,அதை எதிர்கொண்ட போராட்டமும் இந்த வெற்றியை மேலும் மெருகூட்டுவதாக பார்வையாளர்கள் கருதுன்றனர்.

1970ல் சிலி நாட்டின் அதிபராக பதவியேற்ற சல்வடோர் கிலர்மோ அலென்டே , மார்க்சீய சிந்தனையாளர் , மருத்துவர், ஜனநாயகத்தில் தீராபற்றுக் கொண்டவர். இந்த சோசலிஸ்ட் அதிபரை அவரது பதவிக்காலம் முடியமுன்னரே பதவியிறக்க சதிசெய்து தோல்வியடைந்த (ஜூன்1973) வலதுசாரிகள் மீண்டும் செப்டம்பர் 1973ல் அகஸ்டினோ பினோசெட் தலைமையில் அதிபர் மாளிகையை குண்டு வீசி தாக்கி ஆட்சியை கவிழ்த்தனர். அலென்டேயை கொன்றுவிட்டு அவர் தற்கொலை செய்து கொண்டார் என்று நாடகமாடினர். பினோசெட் தலைமையில் கொடுங்கோல் ஆட்சி அன்று முதல் சிலியை ஆட்டிப்படைத்தது.

சல்வடோர் கிலர்மோ

இந்த ஆட்சி கவிழ்ப்பிற்கும்,கொடுங்கோலாட்சிக்கும் மூளையாகவும்,பக்க பலமாகவும், பணபலமாகவும் இருந்தது புகழ்பெற்ற சி ஐ ஏ அமைப்பும் அமெரிக்க அரசும்தான். ஆம், இன்று (டிசம்பர்9,10,2021) ஜனநாயகத்திற்கான உச்சி மாநாடு THE SUMMIT FOR DEMOCRACY  கூட்டும் அமெரிக்காதான் அன்று இந்த ஜனநாயகப் படுகொலையை செய்தது!!

கிட்டத்தட்ட 17 ஆண்டுகள் ஆட்சி செய்த இவனது  கொடுங்கோலாட்சியில் சிலி நாட்டு மக்கள் அடைந்த துயரங்களும் அனுபவித்த இன்னல்களும் சொல்லி மாளாது. பல்லாயிரக்கணக்கில் மக்கள் சிறைபிடிக்கப்பட்டு ,சித்திரவதைக்குள்ளாயினர், 3,500க்கும் மேற்பட்டோர் தூக்கிலிடப்பட்டனர். ஏழை எளியோர்,தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் வருவாய் குன்றி அல்லலுற்றனர். ஆனால், பெரும் பண முதலாளிகளுக்கு சலுகைகளும், லாபமும் குவிந்தன.பினோசெட் கடைபிடித்த தாராளமய பொருளாதாரக்கொள்கையின் தொடர்ச்சி அவன் பதவி இறங்கிய (1990) பின்னரும்  தொடரந்தது.

அதே தாராளமயம்,தனியார்மயம், பொதுசொத்துகளும் நாட்டு வளங்களும் தனி முதலாளிகளுக்கு தாரை வார்த்தல் என்ற தாராளமய சீர்திருத்தங்களின் விளைவாகஏழை மக்கள் மேலும் ஏழையாகவும் பணக்கார முதலாளிகள் மேலும் பெருத்த முதலைகளாகவும் மாறினர்.

ஏழை பணக்காரர் இடையே உள்ள ஏற்றத்தாழ்வு உலகிலேயே அதிகம் காணப்படும் நாடாக சிலி மாறியது. இந்த பின்புலத்தில்தான் முப்பது ஆண்டுகளாக (1990–2020) பல போராட்டங்களையும், அடக்குமுறைகளையும் கடந்து சிலி இன்று புதிய திருப்பத்தில் வந்து நிற்கிறது.

இத்திருப்பத்திற்கு மிக் முக்கிய காரணம் மாணவர் போராட்டங்கள்தான். 2011ல் வீதிகளுக்கு வந்த மாணவர்கள் முதலில் கையிலெடுத்தது கல்வி உரிமை தான். FREE UNIVERSITY EDUCATION  உயர் கல்வி உரிமை அரசு வழங்க வேண்டும் என்று மாணவர்கள் வீதிக்கு வந்தனர்.இந்தப் போராட்டத்தில் களங்கண்டு போராட்ட தலைமை பொறுப்பிற்கு வந்தவர்தான் இன்று அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள கேப்ரியல் போரிக் என்ற இளந்தலைவர்.

மாணவர்களை உழைக்கும் மக்களோடு அவர்தம் போராட்டங்களோடு ஒன்றிணைத்தார்.

இதன் விளைவாக பேருந்து கட்டணம் மற்றும் போக்குவரவு கட்டண உயர்வை எதிர்த்த மாபெரும் மாணவர் போராட்டங்களில் உழைக்கும் மக்கள் உட்பட அனைவரும் பங்கெடுத்தனர். தலைநகர் சாண்டியாகோ மாநகரத்தில் 15 லட்சத்திற்கு மேற்பட்டோர் திரண்டனர். அரண்டு போன செபாஸ்டியன் பினரோ தலைமையிலான அன்றைய சிலி அரசாங்கம் கட்டண உயர்வுகளை தறகாலிகமாக நிறுத்தி வைத்தது.

செபாஸ்டியன் பினரோ

ஆனால், மக்களின் ஒற்றுமை , போராட்டத்தை மேலும் ஒருபடி உயர்த்தி’ அரசியல் அமைப்பை மாற்ற வேண்டும் ,அதற்கான புதிய அரசியல் சாசனம்  வேண்டும் ‘என்று கோரிக்கை முன்னெடுக்கப்பட்டது.

பல நாட்கள் கழித்து, அடக்குமுறைகள் கைகொடுக்காத்தால் அரசு , பினோசெட் காலத்தில் கொண்டு வரப்பட்ட அரசியல் சட்டத்திற்கு (Constitution)  மாற்றாக புதிய அரசியல் சட்டம் ஏற்படுத்த தேசீய வாக்கெடுப்பு நடத்த (Referendum) ஒத்துக்கொண்டது.

2020 அக்டோபர் மாதத்தில் நடந்த வாக்கெடுப்பில்,  80% மக்கள் புதிய அரசியல் சட்டம்   இயற்றப்பட வேண்டும் என வாக்களித்தனர்.

இதற்கிடையில் கொரோனா பெருந்தொற்று சிலி நாட்டையும் விட்டுவைக்கவில்லை. எனவே, புதிய அரசியல் சட்டம் இயற்ற நிர்ணய சபை உறுப்பினர்களை தேர்வு செய்யும் தேர்தல் மே 2021க்கு தள்ளி வைக்கப்பட்டது.

மே 15 மற்றும் 16 தேதிகளில் நடைபெற்ற நிர்ணய சபை தேர்தலில் வெற்றி பெற்றவர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் சுயேட்சைகள் அவர்கள் பெரும்பாலும் இடதுசாரி சிந்தனை உடையவர்களாயிருந்தனர். இச்சபை ஒருவருட காலத்திற்குள் புதிய அரசியல் சாசனத்தை வடிவமைக்க வேண்டும்.

இந்த காலநிலையில் அதிபர் தேர்தல் சூடு பிடிக்க ஆரம்பித்தது. அதிபர் தேர்தல் நாள் நவம்பர் 21, 2021. என குறிக்கப்பட்டது.

இளைஞர்கள் மத்தியில் பெருமதிப்பு பெற்றிருந்த போரிக் , இடதுசாரி முற்போக்கு கூட்டணியின் வேட்பாளராக தேர்வாகி அறிவிக்கப்பட்டார். இக்கூட்டணியில் சிலி நாட்டு கம்யூனிஸ்ட் கட்சியும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த கூட்டணியை எதிர்த்து வலதுசாரிகள் அன்டனியோ காஸ்ட் (55) என்பவரை வேட்பாளராக நிறுத்தினர்.

அனைவரையும் உள்ளடக்கிய ஒற்றுமை, முன்னேற்றம், சமத்துவம்,பாலின சமத்துவம், இயற்கையோடு இயைந்த வளர்ச்சி ஆகிய கொள்கை கோஷங்களை முன்னிறுத்தி கேப்ரியல் போரிக் களமிறங்கினார்.

எதிரணியினரோ அடையாள அரசியலை முன்னிறுத்தி மக்களை இனரீதியில் பிளவுபடுத்த முயன்றனர்.

நவம்பர் 21 தேர்தலில் யாருக்கும் அறுதி பெரும்பான்மை (போரிக் 25.7% ; காஸ்ட் 28%) கிடைக்காத்தால் தேர்தல் இரண்டாம் மற்றும் இறுதி சுற்றுக்கு டிசம்பர் 19க்கு விடப்பட்டது.

இந்த தேர்தலின் முடிவுதான் நாம் ஏற்கனவே குறிப்பிட்டபடி கேப்ரியல் போரிக் 55.9 சதவிகித வாக்குகள் பெற்று, தன்னை எதிர்த்து போட்டியிட்ட வேட்பாளரைவிட 10 லடசத்திற்கும் மேலான வாக்குகள் பெற்று வெற்றிவாகை சூடினார்.

புதியவரும், இளைஞரும் முற்போக்கு சிந்தனை உள்ளவருமான போரிக்கிற்கு குவியும் பாராட்டுதல்களில் நாமும் இணைவோம் !

புதிய அரசியல் சட்டமும் புதிய முற்போக்கு தலைமையும் சிலி மக்கள் வாழ்வில் புத்தொளி பாய்ச்ச நாமும் வாழ்த்துவோம்!

கட்டுரையாளர்; ச.அருணாசலம்.

 

 

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time