அரசுரிமையாக்கப்படுமா..? தரமற்ற அரசு உதவி பெறும் பள்ளிகள்!

- கிருபா

தரமற்ற கட்டிடங்கள், தகுதியற்ற நிர்வாகம், பகல் கொள்ளையடிக்கும் தாளாளர்கள், பரிதாபத்திற்குரிய ஆசிரியர்கள், பரிதவிக்கும் மாணவர்கள்..! இது போன்ற நிலையில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளை அரசே பொறுப்பெடுத்துக் கொண்டால் என்ன..?

திருநெல்வேலி டவுன் செல்லும் சாலையில்  பாளையங்கோட்டையில் ஷாப்ஃடர் மேல்நிலைப்பள்ளி என்ற அரசு உதவிபெறும் பள்ளியில் டிசம்பர் 17 காலை பள்ளி கட்டிடத்தின் கழிப்பறை சுவர் இடிந்து விழுந்துள்ளது.

இதில் மூன்று மாணவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மேலும் 4 பேர் படுகாயம் அடைந்த நிலையில் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

இது தொடர்பாக பள்ளியின் தாளாளர், பள்ளி தலைமை ஆசிரியர், ஒப்பந்தாரர் ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சமீபத்தில் நம்மை உலுக்கிய இந்த துயர சம்பவத்தில் இருந்து நமது அரசு கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்கள் நிறைய உள்ளன.

தமிழகத்தில் உள்ள உதவி பெறும் பள்ளிகளின் எண்ணிக்கை 8300. அரசு புள்ளிவிவரப்படி உதவி பெறும் பள்ளியில் இந்த ஆண்டு பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை சுமார் 24 லட்சம்! தமிழகத்தில் ஏசி வகுப்பறை உள்ள உதவிபெறும் பள்ளிகளும் உண்டு. இன்றோ, நாளையோ என சிதிலமடைந்த கட்டிடத்தில் செயல்படும் உதவிபெறும் பள்ளிகளும் உண்டு.

இந்த மாதிரி பழுதடைந்த பள்ளிக் கட்டிடங்கள் பற்றி அதிகாரிகள் கவனத்திற்கு பலமுறை கொண்டு செல்லப்பட்டு உள்ளது. ஆனால், இந்த துயர சம்பவத்திற்குப் பிறகு தான் விழித்துக் கொண்டிருக்கிறது அரசு. தற்போது பல மாவட்டங்களில் சிதிலமடைந்த நிலையில் உள்ள பள்ளிக் கட்டிடங்கள் கணக்கெடுக்கப்பட்டு இடிக்கப்பட்டு வருகின்றன.

அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு சுதந்திர இந்தியாவில் நீண்ட வரலாறு உண்டு. அதுவும் தமிழகத்தை பொறுத்தவரை கல்வியை கிராமங்கள் தோறும் கொண்டு சேர்த்ததில் சிறுபான்மை மற்றும் சிறுபான்மையற்ற உதவிபெறும் பள்ளிகள் ஆற்றிய பங்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.

அனைத்து சாதியினரும் சமூக நீதியோடு பயில்வதற்கு கிருத்துவ உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் அடித்தளம் அமைத்துக் கொடுத்தன என்பதை மறுக்க முடியாது.

கல்வி துறை நிர்வாகம் பற்றி அறிமுகம் இல்லாதவர்கள் புரிந்து கொள்வதற்கு வசதியாக மகேந்தினின் “உதிரிப்பூக்கள்” திரைப்படத்தில் ஒரு உதவி பெறும் பள்ளியில் ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் தாளாளரால் என்னென்ன கொடுமைகள் நடக்கின்றன என்பதை கதை ஓட்டத்தோடு கூறியிருப்பார்.

ஒரு உதவி பெறும் பள்ளி எப்படி சிறப்பாக நெறியுடன் நடைபெறுகிறது என்பதை பாலுமகேந்திரா “ராமன் அப்துல்லா” படத்தில் பாலுமகேந்திரா காட்டி இருப்பார்.

ஒரு காலத்தில் கல்வி நிறுவனங்களின்  தாளாளர்கள் சேவை நோக்கத்தோடு அந்தப் பகுதி மக்கள் கல்வி அறிவு பெற வேண்டும் என்ற பரந்த நோக்கத்தோடு செயல்பட்டு வந்தனர்.  ஆனால் தற்போது நிலைமை அப்படி இல்லை என்பது அங்கு பணியாற்றும் ஆசிரியர்களுக்கும் அங்கு பயிலும் மற்றும் பயின்ற மாணவர்களுக்கும் நன்றாகவே தெரியும். கல்வி நிறுவனங்களை கொண்டு விரைவில் பணக்காரர்களாக வேண்டும் என்பதை இக்காலத்து கல்வி வள்ளல்கள் குறிக்கோளாகக் கொண்டுள்ளனர்.

அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்கள் தனியார் நிர்வாகத்தின் கீழ் இருந்தாலும் இலவச பாட புத்தகங்கள், இலவச பஸ் பாஸ் உள்ளிட்ட பல சலுகைகளை அரசு தந்து கொண்டுள்ளது. ஆயினும் அரசு உதவி பெறும் சில பள்ளிகளில்  மாணவர்களிடம் சட்டத்திற்கு விரோதமாக கட்டணம் பெற்று வருகின்றனர்.

உதவி பெறும் பள்ளிகளில் பணி நியமனம் செய்யப்படும் ஆசிரியர்களுக்கு அரசுப்பள்ளி ஆசிரியர்களை போல அனைத்து சலுகைகளும் உண்டு. நிரந்தரமான பணி உத்தரவாதத்துடன் மாதந்தோறும் அரசு தான் அவர்களுக்கு ஊதியத்தை அளித்து வருகிறது. தாளாளர்கள் தங்கள் சொந்த பணத்தில் இருந்து ஊதியம் வழங்குவது கிடையாது. ஆனால் யாரை ஆசிரியராக நியமிக்க வேண்டும் என்ற உரிமை உதவிபெறும் பள்ளி தாளாளருக்கு உண்டு.

விரல் விட்டு எண்ணக்கூடிய சில உதவி பெறும் பள்ளிகளில் மட்டுமே நேர்மையான முறையில் பணி நியமனம் செய்யப்படுகின்றது.  அதை தவிர, மற்ற பள்ளிகளில் ஒவ்வொரு ஆசிரியர் பணியிடமும் எத்தனை லட்சங்களுக்கு விலை போகின்றன என்பதை பள்ளி வட்டாரங்களில் விசாரித்தால் தெரிந்துகொள்ளலாம்.

இந்தத் தவறுக்கு அனைத்து தரப்புமே பொறுப்பேற்க வேண்டும்‌. ஒரு ரூபாய் கூட லஞ்சம் பெறாமல் நேர்மையான முறையில் சிறந்த  ஆசிரியரை நியமிக்க வேண்டும் என்று நினைக்கும் தாளாளர்களைக் கூட பணத்தாசை காட்டி ஆசிரியர்கள் நியமனத்தை முடிவு செய்யும் இடைத்தரகர்கள் ஒவ்வொரு மாவட்டத்திலும் இருக்கின்றனர்

வாழ்க்கை போராட்டத்தில் எப்படியாவது பணம் திரட்டி ஆசிரியர் பணியில் சேரத் துடிக்கும் ஆசிரியர்களின் நிலையை  பள்ளித்  தாளாளர் பயன்படுத்தி பணம் பார்க்கிறார். இந்த ஏற்பாடு கிட்டத்தட்ட ஒரு இயல்பான நடைமுறையாக மாற்றப்பட்டு இருப்பது தான் கொடுமை. அரசு உதவிபெறும் பள்ளிகளை பொறுத்தவரை வேலை வாய்ப்பக  முன்னுரிமை எல்லாம் பெயரளவில்தான்.

இப்படியாக  பணி நியமனங்களுக்கு பெறப்படும் பெரும் தொகையில் ஒரு பகுதியை பள்ளியின் உட்கட்டமைப்புக்கு செலவு செய்தாலே உதவி பெறும் பள்ளிகளின் உட்கட்டமைப்பு சர்வதேச தரத்துடன் விளங்கும் என்பதில் ஐயமில்லை. ஆனால் அவ்வாறு நடப்பதில்லை என்பது தான் கவலைக்குரிய விஷயம்.

கும்பகோணம் கொடூர தீ விபத்திற்கு பிறகு பள்ளிகளில் நான்குவகை சான்றிதழ்களை கல்வித் துறையும், அரசும் கட்டாயப்படுத்தியது. சுகாதாரச் சான்றிதழ் தீயணைப்புத் துறை சான்றிதழ் அனுமதி பெற்ற பொறியாளரிடம் இருந்து கட்டிட உறுதித் தன்மை சான்றிதழ் மற்றும் வட்டாட்சியரிடம் இருந்து கட்டிட உரிமம் சான்றிதழ். கும்பகோணம் தீ விபத்திற்கு பிறகு அமைக்கப்பட்ட சம்பத் கமிஷன் இந்த நான்கு வகை சான்றிதழ்களை முறையாக வழங்கினால் பள்ளிகளும், மாணவர்களும் பாதுகாப்பாக இருக்கலாம் என்று பரிந்துரை செய்தது.

ஆனால், நெல்லை பள்ளி விபத்திற்கு உள்ளான பள்ளியில் நான்குவகை சான்றிதழும் பெறப்பட்டு இருந்தன. இது காசு கொடுத்தால் கண்ணை மூடிக் கொண்டு சான்றிதழ் தரும் ஊழல் நிர்வாகத்திற்கு சரியான உதாரணமாகும்.

ஆக, இந்த நான்கு வகை சான்றிதழ்கள் எதனடிப்படையில் இந்த பள்ளியில் பெற்றார்கள் என்பது வெட்ட வெளிச்சம். இந்தப் பள்ளி மட்டுமல்ல, படு மோசமான நிலையில் உள்ள பெரும்பாலான பணிகளும் இந்த நான்கு வகை சான்றிதழை குறிப்பிட்ட காலக் கெடுவுக்குள் புதுப்பித்து நடைமுறையில் வைத்துள்ளனர் என்பது கசப்பான உண்மை!

உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு அரசாங்கமே ஊதியத்தையும் மற்ற சலுகைகளையும்  வழங்கினாலும் கட்டிட மற்றும் உட்கட்டமைப்பு பராமரிப்பு மற்றும் சீர் செய்வதை அரசு பொறுப்பேற்பது இல்லை. அது அந்த உதவி பெறும் பள்ளியில் நிர்வாகத்தையே சேரும்.

சில பள்ளிகள் பள்ளியின் உட்கட்டமைப்பில் கவனம் செலுத்தினாலும், பெரும்பாலான பள்ளிகள் இதில் கவனம் செலுத்துவது கிடையாது.

சில அரசு உதவிபெறும் பள்ளிகளில் அதன் ஆசிரியர்களை தங்களது ஊதியத்திலிருந்து செலவு செய்து பள்ளியை பராமரிக்க கூறும்  மனசாட்சியற்ற கொத்தடிமைத்தனங்களும் நடைபெறுகின்றன! அத்துடன் ஆசிரியர்களின் மே மாத சம்பளத்தை சில தாளாளர்கள் அடாவடியாக பறித்துக் கொள்கின்றனர். இந்தப் பகல் கொள்ளை தாளாளர்களை எதிர்க்கத் துணிவின்றி ஆசிரியர்கள் வயிறு எறிந்து சாபம் விடுவதோடு சரி!

எந்த வகை பள்ளிகள் என்றாலும், அந்தப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் உயிர் மதிப்பு மிக்கது.  அவர்களைப் பாதுகாக்க வேண்டியது அரசின் கடமை.

நான்கு வகை சான்றிதழ் பெறுவது என்பது ஒரு சில பள்ளிகளை தான் கட்டுப்படுத்துகிறது. மற்ற பள்ளிகள் எப்படியோ இந்த சான்றிதழை பெற்று விடுகின்றனர்.

உட்கட்டமைப்பு மற்றும் பிரதான கட்டிடங்களை உதவி பெறும் கல்வி நிறுவனங்களுக்கு குறுகிய காலக் கெடு கொடுத்து உடன் புதிய கட்டிடங்கள் கட்ட வற்புறுத்த வேண்டும். குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் புதிய கட்டிடங்கள் கட்டாத பள்ளி நிர்வாகங்களை அரசே ஏற்று நடத்துவது தான் சிறந்த தீர்வாக இருக்கும்.

உதவி பெறும் கல்வி நிறுவனங்களை ஏற்று நடத்துவதால் அரசுக்கு புதிதாக செலவு எதுவும் ஏற்படப் போவதில்லை. புதிதாக வகுப்பறைகள் கட்டும் செலவு மட்டுமே இருக்கும்.

உதவி பெறும் பள்ளி நிறுவனங்களை அதன் நிர்வாகிகள் அரசுக்கு ஒப்படைக்க நினைத்தாலும் அது சிரமமான காரியமாக இருக்கிறது. ஏனென்றால், பள்ளியை எவ்வித எதிர்பார்ப்புமின்றி அரசிடம் ஒப்படைக்க நினைக்கும் தாளாளர் 70 வகையான ஆவணங்களை தற்போது தயார் செய்ய வேண்டும்.  அது ஒரு நீண்ட சிக்கலான நடைமுறை.

வெறும் கவுரவத்திற்காக மட்டும் இந்த பள்ளிகளை நடத்தி சிரமப்படுபவர்கள் உள்ளனர். அரசு இந்த நடைமுறையை எளிமையாக்கினால், பிரச்சினையில் தவிக்கும்  கல்வி நிறுவனங்கள் தங்களது நிர்வாகத்தை அரசிடம் ஒப்படைப்பது அதிகமாகும்.

கல்வியும் மருத்துவமும் கணிசமான அளவில் அரசின் கட்டுப்பாட்டுல் இருப்பது தான் வளர்ந்து வரும் ஜனநாயக நாடுகளுக்கு உகந்ததாக இருக்கும்.

கட்டுரையாளர்; கிருபா

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time