மு.கருப்பசாமி, அருப்புக் கோட்டை, விருதுநகர் மாவட்டம்
கருணாநிதியின் உதவியாளர் சண்முகநாதன் குறித்த உங்கள் மதிப்பீடு என்ன?
ஒரு ஆண் எத்தனை பெண்ணோடு தொடர்பு கொண்டவனாகத் தான் இருந்தாலும், தனக்கான மனைவி பத்தினியாக இருக்க வேண்டும் என எதிர்பார்ப்பான்! அதே போல கருணாநிதி எப்படிப்பட்ட ஊழல் செய்யும் தலைவர் என்பதை அருகிருந்து அணுவணுவாக உணர்ந்த போதிலும் தன்னை பொருத்தவரை ஒரு நேர்மையாளராக நிலை நிறுத்திக் கொண்டவர் சண்முகநாதன்! கருணாநிதியின் சாதனைகள் பலவற்றுக்கு அவரது மனைவி, மக்கள், சகாக்களை விட அதிக உறுதுணையாக இருந்த ஒரே நபர் சண்முகநாதன் தான்!
கருணாநிதியின் வேகத்திற்கும், புத்தி கூர்மைக்கும், குற்றம், குறையுள்ள குண இயல்புகளுக்கும், அயராத உழைப்பிற்கும் சரியாகத் தன்னைப் பொருத்திக் கொண்டு சண்முகநாதன் வாழ்ந்தது ஒரு காவிய வாழ்க்கை என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அவரே கூறியிருப்பது போல இந்தப் பிறவி நான் எடுத்ததே தலைவருக்கு தொண்டாற்றுவதற்குத் தான் என்பதற்கு மேல் வேறன்ன சொல்ல! இப்படிப்பட்ட ஒரு உதவியாளரைப் பெற கருணாநிதி என்ன பாக்கியம் செய்தாரோ!
தன் உதவியாளர் மகாதேவ தேசாய் இறந்த போது அவரை தன்னைக் காட்டிலும் உன்னத மனிதன் என மகாத்மா காந்தி தன் மனதாரச் சொன்னார். சண்முகநாதன் முன் கூட்டியே இறந்திருந்தால் கலைஞர், சண்முகநாதன் குறித்து மிக உயர்வாகவே பதிவு செய்திருப்பார். அதை ஸ்டாலின் சரியாகவே பதிவு செய்துள்ளார்.
அ.அறிவழகன், மயிலாடுதுறை
இந்திய மக்கள் வேறெந்த உணவைக் காட்டிலும் பிரியாணியைத் தான் அதிகமாக ஆர்டர் செய்திருக்கிறார்கள், அதாவது ஒரு நொடிக்கு இரண்டு ஆர்டர்கள் வீதம் என ஸ்விக்கி சொல்லி இருக்கிறதே?
மற்ற உணவெல்லாம் வீட்டில் அடிக்கடி சமைக்கக் கூடியது என்பதால் பிரியாணிக்கு அதிக ஆர்டர்கள் கிடைத்திருக்கும். வழக்கமாக வீட்டில் சாப்பிடுவதற்கு மாற்றான உணவை வெளியில் இருந்து பெற வேண்டும் என நினைத்திருக்கிறார்கள் என்பதற்கு மீறி ஒரு காரணமும் இல்லை.
தமிழகத்தில் தினசரி காலையில் ஒரு கோடிக்கும் அதிகமான இட்லிகள் ஹோட்டல்களிலும், சிறிய மெஸ்களிலும், தெருக் கடைகளிலும், திண்ணைக் கடைகளிலும் விற்பனையாகின்றன! கிட்டதட்ட அதற்கு இணையாக இரவு நேரங்களில் பரோட்டாக்கள் படுஜோராக விற்பனையாகின்றன! என்னவென்பது?
எம்.ரகுமான்கான், சேலம்
அன்புமணியை பாமக தலைவராக்கப் போகிறார்களாமே..?
அந்த அளவுக்கு ராமதாஸ் விரக்தியின் விளிம்பிற்கே சென்றுவிட்டாரா என்ன?
பாமகவிற்கு முடிவுரை எழுத முடிவெடுத்துவிட்டார்களா என்ன..?
விதி வலியது, ஒன்றும் சொல்வதற்கில்லை.
ஆர்.ராகவன், ஆதம்பாக்கம், சென்னை
எப்படிப் பார்த்தாலும் மோடி திறமைசாலி என்பதை ஏற்கத் தானே வேண்டும்?
எப்படிப் பார்த்து திறமைசாலி என்கிறீர்கள்..?
நாடாளுமன்ற விவாதங்களில் கலந்து கொள்ளவே அஞ்சுவதை வைத்தா?
பத்திரிகையாளார்களை பார்க்கவே பயப்படுவதை வைத்தா?
சொந்தமாக உரை தயாரிக்க திறனின்றி மற்றவர்கள் எழுதி தருவதை நன்றாக மனப்பாடம் செய்யும் ஆற்றலைக் கொண்டா?
உள் நாட்டு விவகாரங்கள் ஒன்றும் தெரிய வேண்டியதில்லை உங்களுக்கு! வெளிநாடுகளாக சுற்றிக் கொண்டு இருங்கள் என கட்டளையிட்ட ஆர்.எஸ்.எஸ்க்கு அடி பணிந்து, வெளிவிவகார அமைச்சராக மாறிப் போன திறமையை சொல்கிறீர்களா?
தற்போது என்ன செய்கிறார் மோடி ?
உ.பியில் ராமர் கோவிலுக்கு அடிக்கல் நாட்டுவது!
குஜராத்தில் சோம்நாத் கோவில் பணிகளை தொடங்கி வைப்பது!
உத்திராகண்டில் கேதார் நாத் சிவன் கோவிலை புனரமைக்க சென்றது.
ஜம்முவில் பழமையான கோவில்களை புதுப்பித்துக் கொண்டு இருப்பது …, என,
இங்கே தமிழகத்தில் சேகர்பாபு செய்து கொண்டிருப்பதை அவர் அகில இந்திய அளவில் செய்கிறார். அதாவது ஒரு அறநிலையத் துறை அமைச்சராக மட்டுமே!
ஆம், பதவி ஏற்று ஏழாண்டுகள் கடந்தும் இன்னும் பிரதமர் பொறுப்பே என்னவென்று தெரியாமல் – உணராமல் – இருப்பதற்கும் ஒரு திறமை வேண்டும் அல்லவா? என்றால், இதற்கு பெயர் சாமார்த்தியம் தானேயன்றி திறமை அல்ல!
க.அப்துல்நாசர், ஹைதராபாத்
நாம் தமிழர் கட்சி திமுகவுடன் அதிகமான உரசல் போக்கை கையாள்வதன் காரணம் என்ன?
பத்தாண்டுகளாக அதிமுக ஆட்சியில் நடந்த அதீத ஊழல்களையும், அடிமைத் தனத்தையும், அலங்கோலங்களையும் கண்டு கொள்ளாமல் கடந்து சென்ற கட்சி தான் நாம் தமிழர். எய்தவன் இருக்க அம்பை நொந்து பயனில்லை.
கோமதிநாயகம், கோயம்பத்தூர்
கொட நாடு வழக்கில் சசிகலாவின் அண்ணன் மகன் விவேக் விசாரணைக்கு அழைக்கப்பட்டு உள்ளாரே?
வழக்கு இப்போது தான் சரியான கோணத்தில் அணுகப்பட்டு வருவதாகக் கருதுக்கிறேன். கொட நாட்டு பங்களாவில் என்னென்ன இருந்தன? அதில் என்னென்ன களவு போயுள்ளன என்பது சசிகலாவுக்கும், அவரது குடும்பத்தாருக்குமே தெரியும். அவை களவாடப்பட்டது தொடர்பாக அவர்கள் கமுக்கம் காட்டி வருவது சந்தேகத்திற்கு உரியதே. சசிகலாவும் விசாரிக்கப்பட்டால் தான் உண்மை தெரிய வரும்.
எஸ். ராஜலட்சுமி, மதுரவாயல்
சமீபத்தில் நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் 12 எம்.பிக்கள் நீக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக செய்த தொடர் அமளியால் 50 மணி நேர அலுவல் நேரம் விரயமானதாக வெங்கய்யா நாயுடு வேதனை தெரிவித்து உள்ளாரே?
12 எம்.பிக்கள் நீக்கப்பட்டது அக்கிரமம் தான். அந்த அக்கிரமத்திற்காக மக்களுக்கு பணியாற்ற வேண்டிய அலுவல் நேரத்தை அடாவடியாக அமளியில் ஈடுபட்டு வீணடித்தது ஏற்புடையதல்ல என்பதைவிடவும், அந்த அமளியை பயன்படுத்தி விவாதிக்காமலே பல அட்டூழியமான மசோதாக்களை பாஜக அரசு பாஸ் பண்ணிவிடுவது தான் நடக்கிறது. வெங்கய்யா நாயுடு வேதனை ஏற்படுவது போல தோற்றம் காட்டுகிறார். ஆனால், அவர்கள் விரும்பியதைத் தான் எதிர்கட்சிகள் நடத்தி கொடுத்துள்ளனர்! நாடாளுமன்றப் பணிகள் பாதிக்கப்படாமல் தங்கள் எதிர்ப்பை காத்திரமாக வெளிப்படுத்தும் வழிமுறைகளை எதிர்கட்சிகள் கண்டறிய வேண்டும்.
மு.ரத்தினவேல், விருதாச்சலம்
வங்கிகளை தனியார்மயப்படுத்த பாஜக அரசு தீவிரம் காட்டுகிறதே?
திருடன் கையில் சாவியை தந்துவிட்டீர்கள்! ”அய்யோ திருடுகிறானே” என புலம்பலாமா? சுத்தமாக தேசத்தை சுரண்டி செல்லத் தானே ஆட்சிக்கு வந்தார்கள்!
எல்.ஞானசேகரன், ஈரோடு
கர்நாடக சட்ட மேலவை தேர்தலில் காங்கிரஸும் பாஜகவும் கிட்டதட்ட சமபலம் காட்டியுள்ளதை கவனித்தீர்களா?
பாஜக 12 இடங்கள்! காங்கிரஸ் 11 இடங்கள். தேவகவுடாவின் மாஜத ஒரே இடம். மாஜக மடிந்து போவது கர்நாடகத்தில் காங்கிரஸ் காலூன்ற வாய்ப்பாக அமையலாம்!
ஆர்.ரமேஷ், பெங்களூர்
காசி விஸ்வநாதர் கோவில் வளாகம் 600 கோடி செலவில் புதுப்பிக்கப்பட்டு ஜொலிக்கிறதை பார்த்தீர்களா?
கண்டேன், கார்பரேட் அலுவலகமா? கண்கவர் நட்சத்திர ஹோட்டல் வளாககமா? என திகைத்தேன். தெய்வீகத்தை தொலைத்த ஆடம்பரம் அயர்ச்சியை தந்தது.
ஆர்.தணிகாச்சலம், திருக்கோவிலூர், விழுப்புரம்
நான் சோனியாவை சந்திப்பேனேயன்றி ராகுலை எல்லாம் சந்தித்து பேசமாட்டேன் என மம்தா சொல்லி உள்ளதை கவனித்தீர்களா?
அப்படி சொன்ன மம்தா மஹாராஷ்டிரா சென்ற போது முதல்வர் உத்தவ் தாக்கரே உடல் நலமின்றி இருந்த நிலையில் அவர் மகன் ஆதித்தியாவை மட்டுமே சந்தித்து திரும்பியதையும் கவனித்தேன்.
வேல்முருகன், சுங்குவார்சத்திரம், காஞ்சிபுரம்
சாதாரண மனிதனில் இருந்து அரசியல்வாதிகள் எப்படி வித்தியாசப்படுகிறார்கள்?
பொய், திருட்டு, அநீதிகளை மக்களின் ஏற்போடு செய்யும் திறமை பெற்றவர் அரசியல்வாதி.
Also read
எஸ்.கோபிநாத் ஆத்தூர், சேலம்
ஊடகங்களிடம் நீங்கள் அதிகமாக வெறுக்கும் விஷயம் என்ன..?
சராசரிக்கும் கீழானவர்களைக் கூட மாபெரும் தலைவர்களாக கட்டமைப்பது.
எம்.சத்தீஸ், கூடுவாஞ்சேரி, செங்கல்பட்டு
மம்தா பானர்ஜி மற்ற மாநிலங்களில் வெற்றி கொடி நாட்டுவாரா?
திரிபுராவில் தீயாய் சுழன்று காங்கிரஸ் தலைகளை கட்சியில் இணைத்தார்கள். ஆனால், நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் ஓரிடம் கூட திரிணமுள் காங்கிரஸால் வெல்ல முடியவில்லை. காங்கிரஸை பலவீனப்படுத்தியது மட்டுமே அங்கு திரிணமுள் கண்ட பலன்!
கோவாவிலும் காங்கிரஸ் தலைவர்களை கட்சிக்குள் இழுத்தே அரசியல் சதுரங்கம் ஆடுகிறது திரிணமுள்! ஆனால், கோவா மக்கள் மேற்கு வங்க அரசியல்வாதியை அன்னியராகவே பார்க்கின்றனர். கோவாவில், திரிணமுள் ‘கோ அவே’ தான்!
”உங்கள் வங்க மகளுக்கு வாக்களியுங்கள். அந்நிய பிஜேபியை அடித்து விரட்டுங்கள்’’ என மேற்கு வங்கத்தில் பிரச்சாரம் செய்துவிட்டு, மற்ற மாநில அரசியலுக்குள் தன்னை எப்படி பொருத்திக் கொள்ள முடியும் மம்தாவால்?
குறிப்பு;
https://forms.gle/g3i6Bd5S4DD9FGWD8
கேள்வி கேட்க ஆர்வமுள்ள வாசகர்கள் மேலேயுள்ள லிங்கை சொடுக்கி, சுலபமாகத் தங்கள் கேள்வியை கேட்கலாம்.
1 Comment