அழித்தொழிக்கும் பேச்சுக்கள்! அமைதி காக்கும் அரசியல் தலைவர்கள்!

- சாவித்திரி கண்ணன்

மற்ற மதத்தினரை கொன்றொழிக்க வெளிப்படையாக அறைகூவல் விடுத்த பிரபல இந்து சாமியார்களின் கொலைவெறிப் பேச்சுகள் அதிர்ச்சியளிக்கின்றன என்றால், அதற்கு எதிர்வினையாற்றாமல் இருக்கும் முக்கிய அரசியல் கட்சித் தலைவர்களின் மெளனம் ஜன நாயகத்தில் நம்பிக்கை உள்ளவர்களை கலவரப்படுத்துகிறது.

உத்திரகண்ட் மாநிலத்தின் ஹரித்வாரில் பிரபல இந்து சாதுக்களின் அமைப்பான தர்மசந்த் நடத்திய மதப் பாராளுமன்றம் என்ற நிகழ்வில் மிக அதிர வைக்கும் இந்து சாமியார்களின் வன்முறையை தூண்டும் வெறித்தனமான பேச்சுகள் வெளிப்பட்டுள்ளன!

இந்து ரக்‌ஷ சேனா என்ற அமைப்பின் தலைவரான சுவாமி பிரபோதானந்த் கிரி, பிரபல சாமியார் யதி நரசிங்காந்த், சுவாமி ஆனந்த் வாரூப், சாத்வி அன்னபூர்ணா ஷாகுன் பாண்டே இவர்களுடன் பிரபல வழக்கறிஞரும் பாஜக தலைவருமான அஸ்வினி உபாத்யாயா, போன்றோர் பங்கேற்றுள்ளனர்.

இந்து சாதுக்கள் அனைவரும் ஒன்றுகுழுமியுள்ள அந்த நிகழ்வில் இறைவனின் பெருமைகள், அன்பின் மகத்துவம், எளியோருக்கு இரங்கும் கருணை, பொது நலத்திற்கான அர்ப்பணிப்பு, தியாகம் ஆகியவை பேசப்படுவதற்கு மாறாக வெறுப்பு, துவேஷம் ஆகியவற்றை விதைக்கும் பேச்சுகள் வெளிப்பட்டு உள்ளன என்பது அதிர்ச்சியளிக்கிறது.

இந்து மதம் பற்றிய புரிதல், இறைவன் மீதான பக்தி கொண்ட யாருமே அஞ்சி நடுங்கும் வகையில் இந்த பேச்சுகள் அமைந்துள்ளன.

பிரபோதானந்த் கிரி,              சாகுன் பாண்டே,                                   ஆனந்த ஸ்வரூப்

சுவாமி பிரபோதானந்த் கிரி பேசும் போது, ”டெல்லி எல்லையில் இந்துக்களை கொன்று தூக்கிலிடுகிறார்கள் என்ற ஒரு பொய் தகவலைக் கூறி, கூட்டத்தினரை உசுப்பேற்றும் விதமாக, இது நம்ம மாநிலம், ஒவ்வொரு இந்துவும் ஆயுதத்தை தூக்க வேண்டும்.வேறு வழியே இல்லை. இந்த துடைத்தழிக்கும் செயல்திட்டம் நிறைவேற வேண்டும். இதை தவிர வேறு தீர்வு இல்லை” என பேசியுள்ளார்.

ஷாமிலி என்பவர் பேசும் போது, ”ஒவ்வொரு முஸ்லீமும் ஜிகாதி தீவிரவாதி, அவர்களுக்கு நாம் தகுந்த பாடம் வழங்க வேண்டும்” என்கிறார்.

பூஜா ஜாகுன் பாண்டே என்பவர், ”இஸ்லாமியர்களை கூண்டோடு அழிக்க வேண்டும் இன அழிப்புக்கு தயாராகுங்கள். ஆயுதங்கள் இல்லாமல் எதுவும் நடக்காது அவர்களின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும். கொலை செய்யத் தயாராகுங்கள், சிறை செல்ல தயாராகுங்கள். கோட்சே வழியே நம் வழி! அப்போது தான் நாம் வெற்றி பெறுவோம். இது தான் நேரம். நாம் 100 பேர் தயாரானால், 20 லட்சம் இஸ்லாமியர்களை கொல்ல முடியும். தாய்மார்களே உங்கள் கைகளில் கொலை வாளினை எடுங்கள். உங்கள் மகனின் கரங்களில் தாருங்கள்” என பேசியுள்ளார்.

சுவாமி ஆனந்த்வாரூப் என்பவர் பேசும் போது, ”இது இந்து நாடாக வேண்டும். அதற்கு இந்த அரசு ஒத்துழைக்க வேண்டும். இல்லாவிட்டால் 1857 ல் நடந்தது , மீண்டும் நடக்கும். இந்துவாக இல்லாதவர்கள் உத்திரகாண்ட் மாநிலத்திற்குள் நுழைய தடை விதிக்க வேண்டும்.” என பேசியுள்ளார்.

இவரது பேச்சை பாஜக எம்.எல்.ஏ அஜேந்திரா அஜய் ஆதரித்து, ”இது இந்துக்களின் புனித பூமி. ஆகவே பாதுகாக்கபப்ட வேண்டும். நாங்கள் இந்திய எல்லையில் இருப்பதால் நாட்டை பாதுகாக்கவே இந்த பேச்சை ஆதரிக்கிறோம்” எனக் கூறியுள்ளார்.

”நான் முஸ்லீம்களுக்கு சொல்ல வருவது இது தான். முஸ்லீம்களே எங்களோடு நீங்கள் இருக்க விரும்பினால், குரான் படிப்பதை நிறுத்துங்கள். உங்கள் தொழுகையை நிறுத்துங்கள். ஹிந்துக்களே நீங்கள் முஸ்லீம்களிடம் இருந்து எதையும் வாங்குவதில்லை என உறுதி பூண்டால் அவர்களை சமூக, பொருளாதார ரீதியாக அழித்துவிடலாம். எனவே இஸ்லாமியர்கள் வேறு வழி இல்லாமல் இந்துவாக மாறித் தான் ஆக வேண்டும்” என்றார்.

முதல்வர் யோகியுடன் சுவாமி பிரபோதானந்த் கிரி

தர்மராஜ மகராஜ் என்பவர், ”மன்மோகன் சிங் சிறுபான்மையினருக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என பாராளுமன்றத்தில் பேசிய போது நான் அங்கு இருந்திருந்தால், அவர் உடலில் ஆறு தோட்டாக்களை செலுத்தி இருப்பேன்” என்றார்.

ஆனந்த் ஸ்வரூப் மகராஜ் என்பவர், ”ஹரித்துவாரில் எங்கேனும் கிறிஸ்துமஸ் கொண்டாடங்கள் நடந்தால், அவ்வளவு தான் தொலைச்சுட்டோம். அது ஹோட்டலோ, விடுதியோ எதுவோ அப்புறம் அந்த சொத்தின் மீது அவர்கள் உரிமை கொண்டாட முடியாது என்ற தோடு தன்னை எல்.டி.டி.இ பிரபாகரனாக உருவாக்கிக் கொள்ளும் இளைஞருக்கு ஒரு கோடி பரிசளிப்பேன். அவர் பிரபாகரனாக ஓராண்டு செயல்படுவதாக இருந்தால் நூறுகோடி அளவுக்கு அவருக்கு நிதி ஏற்பாடு செய்வேன்” என்றார்.

”நாம் அலட்சியமாக இருந்துவிட்டால் 2029 ல் ஒரு இஸ்லாமியர் பிரதமராகிவிடுவார். அப்புறம் 20 ஆண்டுகளில் 50 சதவிகித மக்கள் இஸ்லாமியராக்கபடுவார்கள். 40 சதவிகித இந்துக்கள் கொல்லப்படுவார்கள். 10 சதவிகிதமானவர்கள் அகதிகளாக்கபடுவார்கள்” என சில சாமியார்கள் பேசி கலவர மனநிலைக்கு பார்வையாளர்களை கொண்டு சென்றுள்ளனர்.

பூஜா ஷாகுன் பாண்டே

தேவை இல்லாமல் பீதியை உருவாக்குவது,வெறுப்பை வளர்ப்பது, கலவங்களுக்கு வித்திடுவது ஆகிய நோக்கத்தில் இந்து மதத்தின் முக்கியஸ்தர்களாக அறியப்படும் சில சாமியார்களே பேசி இருப்பது மிகுந்த அதிர்ச்சியும்,வேதனையும் தருகிறது.இந்த பேச்சுக்களின் வீடியோ மற்றும் எழுத்து வடிவங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி கோடிக்கணக்கானோர் பார்வைக்கு சென்று உள்ளன. ஆகவே, மக்கள் மத்தியில் பெரும் விவாதப் பொருளாகி உள்ளது.

ஆகவே, இந்த சம்பவம் தொடர்பாக பிரியங்கா, சசிதரூர், கார்திக் சிதம்பரம் போன்றோர் டிவிட்டரில் ஒரு சில வரிகளில் தங்கள் கண்டனத்தை சுருக்கமாக வெளியிட்டு உள்ளனர்.

பிரியங்கா காந்தி, “இதுபோன்ற வெறுப்பையும் வன்முறையையும் தூண்டுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். எங்கள் முன்னாள் பிரதமரைக் கொலை செய்வதற்கும், வெவ்வேறு சமூகங்களுக்கு எதிராக வன்முறையைக் கட்டவிழ்த்து விடுவதற்கும் அவர்கள் வெளிப்படையாக பேசி இருப்பது வெறுக்கத்தக்கது” என்று அவர் ட்வீட் செய்துள்ளார்.

இது போன்ற டிவிட்டுகளை மார்க்சிஸ்ட் தலைவர்கள் ஒரு சிலரும் செய்து உள்ளனர்.

சுயராஜ்ஜிய கட்சித் தலைவரான யோகேந்திர யாதவ், இந்த ஆபத்தான பேச்சுகள் குறித்து ஊடகங்கள் மெளனம் காக்கின்றன. காவல்துறை உரியவர்களை கைது செய்யவில்லை. ஆளும் அரசியல் தலைவர்களோ ஊக்குவிக்கிறார்கள். இப்படி அனைவரும் உடந்தையாக இருந்தால், இந்த சட்டவிரோத வெறுப்பு பிரச்சாரம், நாட்டில் நாசத்தை விளைவிக்கும் எனக் கூறியுள்ளார்.

அசாருதீன் ஒவைசி சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்டப் பிரிவு 153 A வின்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதோடு உள்ளூரில் உள்ள தன் கட்சிக்காரரை இது சம்பந்தமாக காவல்துறையில் புகார் அளிக்க கோரியுள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக இது வரை காவல்துறைக்கு புகார் தந்துள்ள ஒரே அரசியல் கட்சி திரிணமுல் தான்! அத்துடன் குல்பர்கன் என்ற சமூக சேவகர் புகார் தந்துள்ளார்.

பாரதிய முஸ்லீம் மகிளா அந்தோலன் என்ற அமைப்பின் பெண் தலைவர் ஜாகியா சோமன் என்பவர் இந்த வெறுப்பு பேச்சுகள் தொடர்பாக பிரதமர், உள்துறை அமைச்சர், உத்திரகாண்ட் முதல்வர் ஆகியோர் அலட்சியம் காட்டாமல் அவசியம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என துணிச்சலாகவும், பொறுப்பாகவும் கடிதம் எழுதியுள்ளார்.

நிற்க, நாம் இந்த விவகாரத்தில் பார்ப்பது எல்லாம் இவ்வளவு ஆபத்தான வெறுப்பை கக்கும் இந்த பேச்சுகளை பேசி இருக்கும் இந்த இந்து சாமியார்கள் பாஜக மாநில முதல்வர்கள், பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர்  அமித்ஷா ஆகியோருக்கு நெருக்கமானவர்கள். அவர்களுடன் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டிருப்பவர்கள். ஆக, மொத்தத்தில் வட இந்தியப் பிரபலங்கள்!

இவர்களின் இந்த அதி ஆபத்தான பேச்சுக்களை சமாஜ்வாதி கட்சி, பகுஜன்சமாஜ் கட்சி, காங்கிரஸ் கம்யூனிஸ்ட் கட்சிகளின்  உச்சபட்ச தலைவர்கள் கண்டிக்கவில்லை. காவல் துறையில் புகார் அளிக்க தமது கட்சியினருக்கு அறிவுறுத்தவும் இல்லை. காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியும், சோனியா காந்தியும் இது குறித்து இது வரை பேசவில்லை. காங்கிரஸார் காவல்துறைக்கு புகார் தரவும் இல்லை.

”இப்படி பேசிய சாமியார்களுக்கு இந்து மக்களிடம் பெரும் செல்வாக்கு உள்ளது. அவர்களை கண்டித்தாலோ, எதிர்த்தாலோ வரக் கூடிய உத்திரபிரதேச தேர்தலில் அது கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் முக்கிய கட்சியின் தலைவர்கள் எதிர்க்காமல் அமைதி காக்கிறார்கள்” என உத்திரபிரதேசத்தின் பத்திரிகையாள நண்பர் ஒருவர் தெரிவித்தார். அனைவரையும் அமைதி காக்க வைக்கும் பாஜகவின் அரசியல் வியூகம் மட்டுமல்ல, உண்மைகளை ஊமையாக்கும் , அறச் சீற்றங்களை அடக்கிவிடும், ஓட்டு அரசியலின் சக்தியை எண்ணி நொந்து கொள்வது மட்டுமே இப்போதுள்ள ஒரே வழி.

மனித நேயமுள்ள மக்கள் சக்தி விழிப்படைந்தால் தான் இதற்கு தீர்வு!

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time