தலை சிறந்த தமிழக ஓவியர்கள் குறித்த ஒப்பற்ற பதிவு!

-சாவித்திரி கண்ணன்

தமிழகத்தின் தலை சிறந்த ஓவியராக ஜொலித்திருக்க வேண்டியவர் எப்படி தனக்குள் இருக்கும் நடிப்பு தாகத்தை கண்டறிகிறார், சினிமாவிற்குள் நுழைகிறார் என்பதையும், தன் சமகால சாதனை ஓவிய பிரம்மாக்கள் பலரையும் அறியத் தருகிறார்…!

சிவகுமாரை நடிகனாக தமிழகம் நன்கறியும், சிறந்த சொற்பொழிவாளராகவும் தற்போது அறிந்து கொண்டுள்ளது! ஆனால், அடிப்படையில் அவர் ஒரு அற்புதமான ஓவியக் கலைஞர் என்பது மட்டுமல்ல, அதில் சாதனை படைத்தவர் என்பதை வெகு சிலரே அறிவர். ஆனால், இந்த புத்தகத்தின் வாயிலாக அவர் தன் சமகால ஓவியர்கள் குறித்தும், தனக்கு முந்தைய முன்னோடிகள் குறித்தும் எவ்வளவு ஆழமாக அறிந்து வைத்துள்ளார் என்பதையும், அவர்களுடனான தன் ஆத்மார்த்தமான நட்பை எப்படி அவர் பேணி வந்துள்ளார் என்பதையெல்லாம் அறியத் தருகிறார்.

கோவை மாவட்டத்தின் சூலூர் அருகே உள்ள சின்னஞ்சிறு கிராமமான காசிகவுண்டன் புதூரில் பிறந்து வளர்ந்த சிவகுமார் பள்ளிப் பருவத்திலேயே பார்ப்பவர்கள் வியக்கும் வண்ணம் தன்னிச்சையாக ஓவியங்கள் வரைந்துள்ளார் என்ற வகையில் ஒரு பிறவிக் கலைஞனாக அவரைக் கருதுவதில் பிழையில்லை என்றே தோன்றுகிறது.

பள்ளிக் கூடச் சிறுவன் சிவாஜி, எம்.ஜி.ஆர், ஜெமினி, பத்மினி போட்டோக்களை பத்திரிகைகளில் பார்த்து அப்படியே தத்ரூபமாக போஸ்ட் கார்டில் வரைந்து சம்பந்தப்பட்டவர்களுக்கு அனுப்பியதில் ஆரம்பிக்கிறது அவரது கலையுலகப் பயணம்.

சென்னை வந்து சிவாஜி சிபாரிசில் மோகன் ஆர்ட்ஸில் சேர்ந்து, பிறகு ஓவியக் கல்லூரியில் ஆறாண்டுகள் பயின்று தமிழகத்தின்  முக்கியத் தளங்கள் மட்டுமின்றி இந்தியாவின் முக்கிய இடங்களுக்கு பயணப்பட்டு ஆன் தி ஸ்பாட் ஸ்கெட் அதிலும் வண்ணம் குழைந்து அரிதிலிலும் அரிதான ஓவியங்களை வரைந்துள்ளார்!

லைப் மாடல் ஸ்கெட்ச், போட்ராய்ட் ஆயில் பெயிண்டிங் என எட்டாண்டுகள் ஓவியக் கலைப் பயணத்தில் – அவர் எட்டிவிடுவார் ஒரு சிகரத்தை என முன்னோடி ஓவியர்கள் சிலர் கணித்து வைத்திருந்த காலகட்டத்தில் – ஓவிய ஆசிரியர் சந்தானராஜ் சிவகுமாருக்குள் இருந்த நடிப்பு தாகத்தை உணர்ந்து அவரை சினிமா பக்கம் செல்ல அறிவுறுத்தி ஆற்றுப்படுத்துகிறார். ஓவியக் கலைஞன் நடிகனாக பரிணமித்த அந்தத் தருணங்களை ஒரு தேர்ந்த எழுத்தாளருக்கே உரிய பாணியில் அவர் எழுத்தில் வடித்துள்ளார்.

காந்தியின் கோட்டோவியம், காஞ்சியின் ஓவியங்கள், மதுரை மீனாட்சி கோயில், திருப்பரங்குன்றம் முருகன் கோவில், செஞ்சி, திருவண்ணாமலை, மலைக்கோட்டை, ஸ்ரீரங்கம், திருப்பதி கோவில், மும்பை ஹார்பார்…என அவர் வரைந்தவை காலத்திற்கும் அவர் புகழ் சொல்லும் ஓவியக் காவியங்கள்!

அவர் சினிமாவில், நாடகங்களில் தீவிரமாக நடிக்கும் காலங்களிலும் கூட சுமார் ஏழாண்டுகள் ஓவியங்களை வாய்ப்புள்ள போதெல்லாம் வரைந்து கொண்டே வந்துள்ளார். ஓவியக் கலையை ஜீவனத்திற்காக கொள்ளாமல் தன் ஜீவனாகவே வரிந்து கொண்டிருந்திருக்கிறார். பாம்பேக்கு நடிக்கச் சென்றவர் இடைப்பட்ட நேரத்தில் அங்கு இந்தியன் எக்ஸ்பிரஸ் மாடியில் இருந்து கேட்வே ஆப் இந்தியாவை வரைந்துவிட்டார்.

இந்த நூலில் அவர் தன் ஓவிய வாழ்க்கையை மட்டுமே சொல்லிச் செல்லவில்லை. ஓவியத் துறையின் தன் சமகால கலைஞர்கள் பலரையும் மிக ஆழமாக அக்கறையோடு அறியத் தருகிறார். இந்த நூல் தமிழ் வாசகப் பரப்பிற்கு ஒரு அரிய வரலாற்று பொக்கிஷமாக அமையும் என்றால், அதற்கு இந்த நூலில் அவர் விவரித்துள்ள ஓவியர்கள் கோபுலு, மணியம், ஜெயராஜ், சில்பி, எஸ்.ராஜம், மணியன் செல்வன், ஆதிமூலம், டிராஸ்கி மருது, ஜெயராமன், ஜீவா, சேனாதிபதி போன்ற பலர் குறித்து நாம் அறிந்திராத தகவல்களை அறியத் தருவது மட்டுமல்ல, அவர்களின் அரிய படைப்புகளையும் நூலில் காட்சிபடுத்தியுள்ளார் என்பதில் தான் இருக்கிறது. அதிலும் மதுரை ஓவியர் மனோகரன் குறித்து அவர் கூறிய தகவல்கள் மிரட்டல் ரகம்! கண்ணில் நீர் கசிய வைக்கும் காவியத் தரம்! இந்த அரிய ஓவியரையும் அவர் வரைந்துள்ள அரிய ஓவியங்களையும் நம் பார்வைக்கு தருகிறார்.

பொதுவாக நடைமுறையில் ஒரு கலைஞன் பிறிதொரு கலைஞனை அங்கீகரிப்பது அரிதிலும் அரிதான சூழலில், அவர்களை தலையில் தூக்கி வைத்துக் கொண்டாட எவ்வளவு பரந்த மனம் வேண்டும். அது சிவகுமாரிடம் வஞ்சனையின்றி உள்ளது. ஒரு பத்திரிகையாளருக்கு உரிய தேடலில் அவர் தன் சக ஓவியர்கள் குறித்த சகல தகவல்களையும் திரட்டி சுவையாக தந்துள்ளார்.

தமிழ் வாசகப் பரப்பிற்கு இந்த நூல் ஒரு வித்தியாசமான அனுபவங்களை தரும். ஓவியக் கலைக்குள் கால் பதித்தவர்களுக்கும், கால் பதிக்க நினைப்பவர்களுக்கும் இந்த நூல் ஒரு அரிய பொக்கிஷம். இந்து தமிழ் திசை மின்னிதழில் தொடராக வந்த போதே வாசித்தது தான் எனினும், அதை நூல் வடிவில் முழுமையாக படிக்கும் போது மிக நுட்பமான அனுபவங்களைத் தருகிறது!

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time