அகிம்சைக்கு பேர் போன புத்த மதத்தினர் நிறைந்துள்ள மியான்மரில் தான் இன்றைய தினம் உலகத்திலேயே அதிகமான படுபாதக கொலைகள் நடக்கின்றன! நாளும், பொழுதும் சொந்த நாட்டு மக்களையே ராணுவம் கொத்து, கொத்தாக தீ வைத்து கொன்று குவிக்கிறது. என்ன நடக்கிறது?
இந்த இடத்தில் 30 பேர் தீ வைத்து எரிக்கப்பட்டனர், அந்த இடத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் எரிக்கப்பட்டனர்..என்று இடையறாது செய்திகள் மியான்மர் குறித்து வந்து, மனித இதயங்களை உலுக்குகிறது.
மியான்மர் என்று சொல்லப்படுகிற பர்மா தமிழர்களுக்கு மிக நெருக்கமான நாடாகும். அதிக தமிழர்கள் பிரிட்டிஷ் காலகட்டத்தில் அங்கு கூலிகளாக குடியேற்றப்பட்டதும், பிறகு அந்த நாடு சுதந்திரம் பெற்றதும் வெளியேற்றப்பட்டதும், அவர்களுக்கு என்று இங்கு குடியிருப்புகளும், தொழில் வாய்ப்புகளும் உருவாக்கப்பட்டு கொடுக்கப்பட்டதற்கான சாட்சியாக இன்றும் பர்மா காலனி, பர்மா நகர் என்ற குடியிருப்பு பகுதிகளும், பர்மா பஜார் என்ற வணிகவளாகப் பகுதிகளுமே சாட்சியாகும். இதே காலகட்டத்தில் தமிழகத்தின் நகரத்தார் என்ற செட்டியார் சமூக வணிகர்களும் அங்கு பெருமளவில் குடியேறி வணிகம் செய்து செல்வத்தில் திளைத்ததும் நடந்தது!
பிரிட்டிஷ் காலனியாதிக்கத்தில் இருந்து விடுப்பட்ட பின்பு அனேகமாக அங்கே நிம்மதி தொலைந்தது என்று தான் சொல்ல வேண்டும். இதற்கு முக்கிய காரணங்களில் ஒன்று பிரிட்டிஷ் காலனியாதிக்க ஆட்சி கால தாக்கங்கள் என்றால், மற்றொன்று சீனாவின் தாக்கம் என சொல்லலாம்.
பிரிட்டிஷார் ஆதிக்கம் செய்த போது பர்மாவிற்கு அருகில் இருந்த ராக்கைன் என்ற இஸ்லாமியர்கள் அதிகம் வசித்த பிரதேசத்தில் கூடுதலாக வங்க தேச இஸ்லாமியர்களை குடியேற்றம் செய்தனர். அத்துடன் பாகிஸ்தான் பிரிவினை, பாகிஸ்தானில் இருந்து வங்க தேச பிரிவினை காலகட்டங்களில் மேலும் இஸ்லாமியர்கள் அங்கு குடியேறினர். ஆகவே அந்த பகுதியை தனியொரு இஸ்லாமிய ஆட்சிப்பகுதியாக அங்கீகரிக்க வேண்டும் அல்லது வங்கதேசத்துடன் இணைத்துவிட வேண்டும் என இஸ்லாமியர்கள் கேட்டனர். ஆனால், அந்தப் பகுதி பர்மாவுடன் இணைத்துக் கொள்ளப்பட்டது.
அத்துடன் இஸ்லாமியப் பரவலை பெளத்த மதத்திற்கான அச்சுறுத்தலாக பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டு வெறுப்பும், துவேசமும் வளர்த்தெடுக்கப்பட்டது. வன்முறைகள் கட்டவிழ்த்துவிடப்பட்டன. நீண்ட நெடுங்காலமாகவே பர்மாவின் அரசு ஆதரவு பெற்ற பெளத்த மதவெறியர்கள் ராக்கைன் பகுதிக்குள் நுழைந்து அதிபயங்கர வன்முறைகள் நிகழ்த்தி கொத்துக் கொத்தாக மக்களை கொன்று குவித்தனர். அதற்கு எதிர்வினையாக இஸ்லமியர்கள் தரப்பிலும் திருப்பி அடிக்கப்பட்டது! அதன் விளைவாக மேலதிக கொடூர தாக்குதலே பதிலுக்கு பெற்றனர். நாட்டில் இருந்தே வெளியேற்றப்பட்டனர்.
இது ஒருபுறமிருக்க, மியான்மரில் பிரிட்டிஷ் காலனியாதிக்கத்திற்கு பிறகு ஜனநாயக ஆட்சி முறை என்பதே கேள்விக் குறியாகிவிட்டது. இராணுவ ஆதிக்கம் தான் அங்கு மக்கள் வாழ்க்கையை தீர்மானிக்கும் சக்தியாக உள்ளது! இரண்டாம் உலகப் போர் கால கட்டத்திலேயே இந்த பெளத்தர்கள் ஜப்பான், ஜெர்மனை ஆதரித்தவர்கள் என்பது கவனத்திற்கு உரியது! அதாவது பாஸிச பயிற்சி என்பது முன்னமே அவர்களுக்கு கிடைத்துள்ளது. மதமும், இராணுவமும் பின்னிப் பிணைந்த ஒரு ஆட்சிமுறை அங்கு ஆரம்பத்திலேயே கட்டமைக்கப்பட்டுவிட்டது. அதை ஒட்டிய வகையிலேயே ஆங்சான் சூயி ஆட்சியும் இருந்தது! பெளத்த வழிபாடே அங்கு மிக ஆடம்பரமாக தான் இருக்கும்!
ராணுவ சர்வாதிகாரத்தை எதிர்த்த மக்கள் கொடூரமாக கொன்று குவிக்கப்பட்டனர். இராணுவம் கட்டற்ற அதிகாரம் கொண்டதான ஒரு ஆட்சி முறை ஆரம்ப காலம் முதல் நிகழ்கிறது. இடையிடையே ஜனநாயக ஆட்சிக்கான சிறிய நம்பிக்கை கீற்று தென்பட்டாலும் அவை நிலைப்பதில்லை.
ஆங்சான் சூயி;
தேசிய ஜனநாயக லீக் கட்சியின் தலைவராக அறியப்படும் இவரது தந்தை ஆங்சான் என்பவர் பிரிட்டிஷ் ஆட்சியில் அமைச்சராக இருந்து சேவை செய்தவர். இவர் 1947 ஆம் ஆண்டிலேயே சுட்டுக் கொல்லப்பட்டார். அப்போது இரண்டு வயது குழந்தையாக சூயி இருந்தார். இவர் பிரிட்டனில் கல்வி பயின்று அந்த நாட்டவரையே கல்யாணமும் செய்து கொண்டார். தாய் நாட்டோடு பெரிய தொடர்பின்றி இருந்தார். தாயின் மரணத்திற்காக தாய் நாடு வந்தவர் ராணுவ ஆட்சிக்கு எதிரான மக்கள் உணர்விற்கு உருவகமாக பார்க்கப்பட்டார். திடீர் தலைவரானார்.
1990 தேர்தலில் ஆங்சான் சூயி நின்று, அவரது கட்சி வெற்றி பெற்ற நிலையில் அவர் வெளி நாட்டவரை திருமணம் செய்ததை காரணமாக்கி ஆட்சிக்கு தடுக்கப்பட்டதோடு, வீட்டுச் சிறையிலும் வைக்கப்பட்டார். பல ஆண்டுகள் வீட்டு சிறைவாச காலகட்டத்தில் இவரை மேற்கத்திய ஊடகங்கள் பிரம்மாண்டமான ஆளுமையாக சித்தரித்தன. நியாயமில்லாமல் இவர் அமைதிப் போராளியாகவும், மனித நேயத்தின் உச்சமாகவும் ஊடக பிம்பம் கட்டமைக்கப்பட்டு அமைதிக்கான நோபல்பரிசு உள்ளிட்ட உலகின் மிக உயர்ந்த பரிசுகளுக்கு தேர்வானார்.
2010 ஆம் ஆண்டு தேர்தலில் இவரது கட்சி மீண்டும் போட்டியிட்டு வெற்றிபெற்றது. அவரே மீண்டும் 2015ல் தேர்வானார். அந்த நாட்டின் திருத்தப்பட்ட சட்டத்திற்கு ஒப்ப பாராளுமன்றத்தில் 25 சதவிகித இராணுவ பிரதிநிதிகளுக்கு இடம் தர்ப்பட்டதோடு, வெளிவிவகாரத் துறை, இராணுவம், உள்துறை ஆகியவற்றை ராணுவ அதிகாரிகளே நிர்வகித்தனர். ஏதோ குறைந்தபட்ச அதிகாரத்தில் ஆங்சான் சூயி ஆட்சி செய்தார்.
2020 தேர்தலில் அவர் மீண்டும் பெருவாரியான மக்களால் தேர்ந்து எடுக்கப்பட்டார். அதாவது மொத்தமுள்ள 476 தொகுதிகளில் 396 தொகுதிகளை கைப்பற்றினார். ஆனால், இந்த வெற்றி பித்தலாட்டம் செய்து பெற்ற வெற்றி என இராணுவம் கூறியது. ராணுவ அதிகார மேற்பார்வையின் கீழ் தான் தேர்தல் நடந்தது. அதில் தவறுகள் நடந்திருந்தால் ராணுவத்தால் அதை தடுக்க முடியும் அல்லது நிருபணப்படுத்த முடியும் தானே! ஆனால், எந்த உண்மையும் இன்றி வெறும் அழுகுணி ஆட்டம் ஆடி ஆங்சான் சூயியையும் ஏழு மாநில முதல்வர்களையும் கைது செய்து சிறையில் அடைத்து ஆட்சியை அபகரித்துக் கொண்டது ராணுவம்! எதிர்த்துப் போராடும் மக்களை உயிரோடு எரித்துக் கொல்கிறது. அதாவது மியான்மரின் பெளத்த மதகுருமார்கள் வழிகாட்டலில் நடக்கும் ராணுவம் தன் சொந்த மக்களை கொன்று குவிக்கிறது.
சில அடிப்படையான கேள்விகள்;
அமைதிக்கான நோபல்பரிசு உள்ளிட்ட உலகின் தலை சிறந்த விருதுகளை ஒருங்கே பெற்றவரான ஆங்சான் சூயி த ஆட்சி காலத்திலாவது மத நல்லிணக்கத்தை வலுவடைய வைத்து ஒரு இணக்கமான சூழலை குடிமக்களிடம் உருவாக்கி இருக்கலாம். மாறாக வரலாற்றில் இல்லாத அளவுக்கு அவரது ஆட்சி காலமான 2012 – ல் தான் ராக்கைன் பகுதிவாழ் ரோகிங்கியோ இஸ்லாமியர்கள் அதிகமாக கொன்றொழிக்கப்பட்டனர். சுமார் 10 லட்சத்திற்கும் மேலானவர்கள் அகதிகளாக நாட்டில் இருந்து வெளியேறினார்.
இந்த நூற்றாண்டின் மிகப் பெரிய மனித பேரழிவாக, பேரவலமாக தன் நாட்டு இஸ்லாமிய மக்கள் சொல்லொணா துன்பத்திற்கு ஆளாக்கப்படுவது தொடர்பாக அவர் குற்ற உணர்வே கொள்ளாதவராக இருந்தார். இது இந்த உலகத்தில் எப்படிப்பட்ட மனிதர்களுக்கு விருதுகளும், விளம்பரங்களும் தரப்படுகின்றன என்ற புரிதலை பட்டவர்த்தனமாக நிருபித்த போதிலும், உலக ஊடகங்கள் ஆங்சான் சூயியை கேள்விக்கு உட்படுத்தவே இல்லை. ஏன்?
Also read
மியான்மரின் பொருளாதாரத்தில் இன்று சீன நிறுவனங்களும், சீன இறக்குமதி பொருட்களும் தான் பேராதிக்கம் செலுத்துகின்றன. சீன நிறுவனங்களுக்கு மக்கள் தீவைத்து போராடி துப்பாக்கி குண்டுக்கு பலியாவதில் இருந்தே இதை உணரலாம். மியான்மர் ராணுவத்தின் காட்டு மிராண்டித்தனத்தின் பின்னுள்ள சீனாவின் தாக்கம் பெரிதாக விவாதிக்கப்படவில்லை. ஏன்?
அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளின் செல்லப் பிள்ளையாக ஆங்சான் சூயி இருந்ததும், அதை சீனா விரும்பாததும் கூட அவரது ஆட்சி கவிழ்ப்புக்கு காரணமாக இருக்க கூடும் என்ற விமர்சனங்கள் ஏன் அலட்சியபடுத்தப்படுகின்றன?
இன்றைக்கு மியான்மரில் நடக்கும் மனித பேரழிவுகளுக்கு பின்னணியில் மதங்களும், வல்லரசு நாடுகளின் ஆதிக்க போட்டியும் தான் காரணம் என்பதே தெளிவான உண்மையாகும்!
சாவித்திரி கண்ணன்
அறம் இணைய இதழ்
‘அகிம்சைக்கு பேர்போன புத்தமதம்…’என்று கட்டுரை ஆரம்பிக்கின்றது.
மகம் மற்றும் மதகுருமார்கள் வழிகாட்டுதலின் பேரில் எங்கெல்லாம் ஆட்சி நடக்கின்றது அங்கெல்லாம் மனிதாபிமானத்திற்கு இடம் இருக்காது என்பதுதான் தற்போதைய மியான்மார் நாட்டின் அவலநிலை எடுத்துக்காட்டுகிறது.
“எங்கெல்லாம் மதம் இருக்கின்றதோ அங்கெல்லாம் மனிதம் இருக்காதேன்பது உண்மை”
Another important question, where is UN Peace Keeping Force..?