தமிழகத்தில் மட்டுமல்ல,அகில இந்திய அளவிலும்,ஒரு ஆபத்தான போக்கு தலைதூக்கி வருகிறது! ’’அரசியல் அதிகாரம் பெறுவதற்குச் சாதி அடையாள அரசியலை முன்னெடுக்க வேண்டும்’’ என்ற கருத்து வலுப்பெற்று வருகிறது.
விடுதலை சிறுத்தைகள் கட்சிக்குள்ளும் அந்த சிந்தனைப்போக்கு தற்போது தலை தூக்கியுள்ளது. அந்தப் போக்கு அதை மைய நீரோட்டத்திலிருந்து தனிமைப்படுத்திவிடுமோ… என்ற கேள்வியும் கூடவே எழுந்துள்ளது!
அக்கட்சியின் முன்னணித் தலைவர்களில் ஒருவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ரவிக்குமார் விசிகவை ஒரு வலுவான சாதி அடையாளத்துடன் கூடிய கட்சியாகக் கட்டமைக்க வேண்டும் எனப் பேசியுள்ளார்.
அவர் தன் பேச்சில்,எப்படி வன்னியர்களுக்கென்றும்,தேவேந்திரக்குள வேளாளர்களுக்கென்றும், அருந்ததியர்களுக்கென்றும் அரசியல் இயக்கம் உள்ளதோ… அது போல நாமும் பறையர்களுக்கான அதிலும் குறிப்பாக ஆதி திராவிடர்களுக்கான அரசியல் இயக்கமாக அடையாளப்பட்டால் தான் வெற்றி காணமுடியும் எனப் பேசியுள்ளார்.
எந்த சாதிக் கட்சியாலும் அந்தக் குறிப்பிட்ட சாதியில் அடி நிலையில் உள்ளவர்கள் பயன்பெற்றர்களா? என்றால், ’’இல்லை’’ என்ற யதார்த்தம் தான் பதிலாகக் கிடைக்கிறது.
வன்னியர்களுக்காக ராமதாஸ் முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக அரசியல் கட்சி வைத்துள்ளார். அதனால்,சில எம்.பி, எம்.எல்.ஏக்கள் வாய்ப்பு சில வன்னியர்களுக்குக் கிடைத்துள்ளது என்பதைத் தவிர அந்த சமூகம் எந்தளவு அந்தக் கட்சியால் மேலெழுந்து வந்தது? மேலும், முக்கியமாக அந்தக் கட்சியில் எல்லா வன்னியர்களும் சேர்ந்துவிடவில்லை என்பதையும் நாம் பார்க்க வேண்டும். இந்த நிலை தான் மற்ற சாதிக் கட்சிகளுக்கும் பொருந்தும்!
Also read
விசிக பொதுவாகத் தலித் கட்சி என்று அடையாளப்பட்டிருந்தாலும்,அந்த அடையாளத்தையும் மீறி அதற்குச் சிறப்பான சில அடையாளங்கள் உண்டு!
ஒட்டு மொத்த தமிழர் நலன் சார்ந்த கட்சி,முற்போக்கு,இடதுசாரி சித்தாந்தங்களோடு தன்னை பிணைத்துக் கொண்ட கட்சி,அடிமைத் தளைக்கு எதிரான கட்சி,மதவெறிக்கு எதிரான கட்சி..என்ற அடையாளங்கள் உள்ளன!
திருமாவளவன் பேசினால்,அது தலித் மக்கள் மட்டும் கேட்கக்கூடிய பேச்சல்ல, அனைத்து தரப்பினரையும் ஈர்க்கக்கூடிய பேச்சாகத் தான் உள்ளது.
தற்போது சாதி அடையாளத்தைக் கூர்மைப்படுத்தி, முற்ற முழுக்க விடுதலை சிறுத்தைகள் கட்சி சாதிக் கட்சியாக மாறுவது அதன் அதிகார அரசியலுக்கு உதவும் என்று ரவிக்குமார் வாதம் வைக்கிறார். ’’ஆதிதிராவிடர்களாய் ஒன்றிணைவோம்’’ என்கிறார். தமிழகத்தில் பறையர்கள் எண்ணிக்கை இருபது லட்சமென்றால்,ஆதிதிராவிடர்களின் எண்ணிக்கை சுமார் 60 லட்சத்திற்கும் அதிகமாகும்.இது தவிர வள்ளுவர்,சாம்பவர் ஆகியோரும் உள்ளனர். பறையர்களைத் தவிர, இவர்களையெல்லாம் கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலான தங்கள் அரசியலில் விடுதலை சிறுத்தைகள் ஒரு பொருட்டாக மதிக்காமல்விட்டு இப்போது தான் ஞானோதயம் ஏற்பட்டதா…? எனத் தெரியவில்லை!
பொதுவாக இந்தியாவில் ஒவ்வொரு சாதிக்குள்ளும் பல உள் சாதிகள் உள்ளன! இந்த உள் சாதிகளையெல்லாம் அடையாளப்படுத்தித் தான் ஒரு பொதுப் பெயர் வைப்பார்கள்!அந்த வகையில் தலித் என்பது இந்திய அளவில் அறியப்பட்ட ஒரு பொதுப் பெயராகும். இந்த பொதுப் பெயருக்குள் சுமார் 1350 சாதிகள் உள்ளன! தமிழகத்தைப் பொருத்த அளவில் 74 சாதிகள் உள்ளன! அதுவும் தலித்துகள் மதங்களைக் கடந்தவர்கள் இந்து,கிறிஸ்துவம், இஸ்லாம், சீக்கியம்,புத்தமதம்… ஆகிய அனைத்து மதங்களுக்குள்ளும் தலித்துகள் கலந்துள்ளார்கள். தங்கள் சமூக விடுதலைக்காகப் பல மதங்களுக்குச் சென்றவர்கள் தலித்துகள்! இந்தியாவில் தலித்துகள் கிறிஸ்துவராக மாறினாலோ, முஸ்லீம்களாக மாறினாலோ தலித்துகள் என்ற சாதி அடையாளத்தை இழப்பார்கள் என்ற ஒரு சட்டம் உள்ளது.அதாவது சட்டத்தைப் பொருத்தவரை அவர்கள் மதம் மாறினால், அவர்களின் சாதியையும் அது தானாகவே மாற்றிவிடுகிறது. இது இந்து மதத்தைக் காப்பாற்றுவதற்கான அச்சத்தின் பொருட்டு உருவாக்கப்பட்ட சட்டமாக தான் அர்த்தமாகிறது.
விடுதலை சிறுத்தைகள் கட்சிக்குள் நிறைய இஸ்லாமியர்கள்,கிறிஸ்துவர்கள்..உள்ளனர். இவர்கள் இந்த சாதி அடையாளத்திற்கு அப்பாற்பட்டாலும்,ஒடுக்கப்பட்டவர்களில் ஒருவராக தங்களை கருதுவதால் கூட, விசிகவில் இணைந்திருக்கலாம். இவை தவிர அந்த சாதிக்கு வெளியிலும் பல விசிக நலவிரும்பிகள் உள்ளனர்.
இவர்களையெல்லாம் தர்மசங்கடத்திற்கு ஆளாக்கி,அதிகார அரசியலை அடைந்துவிட முடியும் என விசிக நினைக்கிறது போலும்!
Also read
பொதுவாகத் தமிழக சாதிகளிலேயே பறையர்கள் அறிவில் சிறந்தவர்கள்! வள்ளுவர் தொடங்கிப் பல மேதைகள் பிறந்த மரபு அது! அயோத்தி தாசர்,இரட்டைமலை சீனிவாசன்..போன்ற பேரறிஞர்கள் தோன்றிய வம்சம் அது!
சனாதனவாதிகள் பறையர்களைக் கண்டு தான் மிகவும் பயந்தனர்.ஏனெனில், உண்மையான ஞானசித்தர்கள் இந்த மரபில் தோன்றி மக்கள் செல்வாக்கு பெற்றதை அவர்களால் தாங்கமுடியவில்லை. ஆனால்,இன்று பிழைப்புவாதிகளின் அடையாளத்திற்கு இந்த சாதி பயன்படுகிறது.தங்கள் அரசியல் அதிகார விருப்பத்திற்கான ஒரு கருவியாகவே ஒவ்வொரு சாதிக்கட்சிகளும் செயல்படுகின்றன! எந்த ஒரு சாதிக் கட்சியாலும் அந்த சாதி முன்னேறியதாகச் சரித்திரமே இல்லை! சாதிக்கட்சிகள் பிழைப்புவாதிகள் காட்டில் தான் மழை பொழிந்துள்ளது! ஆகவே அனைத்து மக்களுக்குமான கட்சி தான் இன்றைய தேவை!அடி நிலையில் உள்ளவர்களைச் சாதி கருதாமல் தூக்கிவிடும் கட்சி தான் தேவை!
தமிழகத்தில் தலித்துகளுக்காக அதிகம் பாடுபட்ட கட்சி கம்யூனிஸ்டு தான்! அந்த காலத்தில் தஞ்சை மாவட்டத்தில் கொத்தடிமைத் தளையிலிருந்த தலித் விவசாயக் கூலிகளை விடுவித்த மகத்தான சரித்திரம் அந்தக் கட்சிக்கு உண்டு! அந்த காலத்தில் அந்தக் கட்சியில் இந்த மகத்தான காரியத்தை முன்னெடுத்தவர்களில் பிராமணர்களும் இருந்தனர். அன்று கம்யூனிஸ்டு கட்சியைப் பள்ளர்,பறையர் கட்சி என்று நிலக்கிழார்கள் சொல்வதுண்டு! வெண்மணி சம்பவம் ஒன்று போதுமே! இதே போலக் காந்தியின் இயக்கத்தால் தலித்துகள் பெற்ற விடுதலையும், மதிப்பும் அதிகம்! காங்கிரஸ் இயக்கத்திலும் தலித்துகளை முன்னேற்ற வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள் கணிசமாக இருந்துள்ளனர்.காமராஜர் தலித்துகள் என்றோ, நாடார்கள் என்றோ சொல்லியா கட்சி நடத்தினார்? ஆனால்,அவர் ஆட்சியில் தான் இந்த சாதியினர் சமூகத் தளத்தில் மேலெழுந்து வந்தனர் என்பதே நிதர்சனம்!
கக்கன், பரமேஸ்வரன்,இளையபெருமாள்…என எண்ணற்ற மணியான தலைவர்கள் காங்கிரசில் அதிகாரம் பெற்றனர். மற்ற சாதிகள் தங்களுக்கு என்று ஒரு கட்சி காண்பதை விடவும் தலித்துகள் தங்களுக்குத் தனி சாதி கட்சி காண்பது அவர்களைப் பொறுத்தவரைப் பின்னடைவில் தான் முடியும்! எல்லா கட்சிகளிலும் தலித்துகள் இருக்க வேண்டும்.அவற்றில் உயர்ந்த தலைமை பதவிக்கும் வர வேண்டும்.அதற்கான தகுதிகள் அவர்களுக்கு உண்டு. திமுக,அதிமுக காங்கிரஸ்,கம்யூனிஸ்ட் போன்ற வெகுஜன கட்சிகளுக்குத் தலைமை தாங்கும் தாங்கும் வாய்ப்பை அவர்கள் பெற வேண்டும். து.ராஜா இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய முக்கிய தலைவராக உள்ளார் என்பதை நினைவில் கொள்ளுங்கள்!
விசிக பிழைப்புவாத மன நிலையிலிருந்து விடுபட்டு உண்மையாகவே தலித்துகளின் மேன்மைக்கான கட்சியாக அடையாளப்பட வேண்டும். அதற்கு சகலசாதிகளோடும் நல்லிணக்கம் பேண வேண்டும். கட்ட பஞ்சாயத்துக் கட்சி என்ற அதன் அடையாளம் மாறி. சட்ட பஞ்சாயத்துக்கான கட்சி என்ற பெயர் வர வேண்டும். ‘’அத்துமீறு,அடங்கமறு’’ என்ற கோஷத்திற்கு மாற்றாக ’’அன்பு செய், அரவணைத்துச் செல்’’ என்ற கோஷம் முன்னெடுக்கப்பட வேண்டும்! நீங்கள் மைய நீரோட்டத்திற்கு வாருங்கள்! மேலும் தனிமைப்படுத்திக் கொள்ளும் முயற்சிகளை எடுக்காதீர்கள்!
Leave a Reply