மனசாட்சியுள்ளவர் காவல் துறையில் இயங்க முடியுமா? – ‘ரைட்டர்’

- தயாளன்

அப்பாவிகளை குற்றவாளியாக சித்தரிக்க, சம்பவங்களை ஜோடித்து எழுதும் காவல்துறை ரைட்டர் பணியில் ஒரு மனசாட்சியுள்ள போலீஸ்காரன் எதிர்கொள்ளும் உளவியல் போராட்டங்களை வெகு துல்லியமாக காட்சிப்படுத்திய வகையில், புதிய விவாதங்களை எழுப்புவதோடு, மனசாட்சியை உலுக்குகிறது..!

காவல் துறையின் சீரழிவை எழுத்தர் ஒருவரின் பார்வையில் விவரிக்கிறது, நீலம் தயாரிப்பில் இயக்குனர் ப்ராங்க்ளின் ஜேக்கப் இயக்கத்தில் வெளியாகியுள்ள ‘ரைட்டர்’ திரைப்படம்! படத்தின் திரைக்கதையில் இது நல்ல சினிமா என்பதற்கான  உதாரணங்கள்  நிறையவே வெளிப் படுகின்றன!

இதற்கு முன் தமிழில் போலீஸ் கதைகள் என்பவை எப்படிப்பட்டவையாக இருந்தன? ரஜினியின் அலெக்சாண்டர், கமல் நடித்த ‘காக்கி சட்டை’, ஹரி இயக்கிய ‘சாமி’ படங்களின் போலீஸ்கள்,

“ஓங்கி அடிச்சா ஒன்றரை டன்”

“போலீஸ் இல்ல பொறுக்கி”

என்பதான ஹீரோயிச ‘பஞ்ச்’ டயலாக்குகளுடன் ஒரு புறமும், என்கவுண்டர் செய்யும் போலீசை ஹீரோவாக கொண்டாடும் அரச பயங்கரவாத ஆதரவு கவுதம் மேனன் வகையறா போலீஸ் கதைகள் இன்னொரு புறமும் என்றுதான் தமிழ் சினிமாவில் அண்மைக்காலம் வரை கோலோச்சியது.

பிறகு, கைதி பாயிண்ட் ஆப் வியூ கதைகளில், பாரதிராஜாவின் ‘ஒரு கைதியின் டைரி’ கமர்ஷியல் ஆக்‌ஷன் ஹீரோ கதை. அது போலவே, சமீபத்தில் வெளியான லோகேஷின் ‘கைதி’ படமும் அபத்தக் களஞ்சியம்.

ஆனால், போலீஸ் கதைகளில் வெற்றி மாறனின் “விசாரணை” சிறிய மாற்றத்தை கொண்டு வந்தது. அதிலுமே கூட, அந்த கைதி கதாபாத்திரம் ஹீரோயிசத்துடன் செயல்படும் அபத்தம் நிகழ்ந்தது.

சில மாதங்களுக்கு முன் வந்த ‘ஜெய் பீம்’ இந்த வகையில் புதிய எதார்த்தமான சிறைக் கொட்டடியையும், போலிஸ் வன்முறையையும் இரத்தமும் சதையுமுமாக பதிவு செய்த படம்.

இப்போது “ரைட்டர்”. அதாவது, ‘எழுத்தர்’ என்று அழைக்கப்படும் போலிஸ் வேலைப் பிரிவில் ஒரு கேரக்டர். முதன் முதலாக ஒரு போலீஸ் கதாபாத்திரத்தின் பார்வை நோக்கில் காவல்துறை சீரழிவை நமக்கு படம் முன் வைக்கிறது , மனசாட்சியுள்ள அந்த ‘ரைட்டர்’ கதாபாத்திரத்தின் பார்வையிலேயே படம் முழுக்க நிகழ்கிறது.

காட்சி அமைப்புகளில்  போலீஸ்காரர்கள் “அய்யா” என்று அழைத்துக் கொண்டே ஓடுவது, உயரதிகாரிகளுக்கு வணக்கம் வைப்பதும் இயல்பாக படம் முழுவதும் நிகழ்கிறது. ”சாருக்கு டீ சொல்லு..” என்பது நுட்பமாக பல இடங்களில் பதிய வைக்கப்படுகிறது. சாதரண போலீஸ்காரர்களை உயரதிகாரிகள் எப்படி மனிதத் தன்மையின்றி ‘டீல் செய்கிறார்கள்’ என்பது இந்த படத்தைப் போல வேறெந்த படத்திலும் இவ்வளவு துல்லியமாக சொல்லப்பட்டிருக்குமா? தெரியவில்லை.

படத்தில் வரும் “கிரைம் சீன்” எழுதும் ரைட்டர் போலீஸின் பணிகள் மிகத் துல்லியமாக காட்சியாக விரிகின்றன. “கிரைம் ரேட்”டை குறைப்பதற்காக எப்படி அதிகார துஷ்பிரோயாகம் நிகழ்கிறது என்பதை விவரணையாக முன்வைக்கிறது,படம்!

முதல் சில காட்சிகளிலேயே, செயின் திருடும் க்ரைம் சீன், டிவிஎஸ் 50க்கு பதில் டிவிஎஸ் சாம்ப்  என்று தொடங்கி, கையில் அகப்பட்ட கொலைக் கருவிக்கு தகுந்தாற்போல் எழுதப்பட்ட க்ரைம் சீன்கள்… என்று மிக விரிவாக பதிவு செய்யப்படுகிறது. இவை படத்தின் எஸ்டாப்ளிஷ்மெண்ட் காட்சிகளாக மாறுகின்றன. சில மாதங்களுக்குள் ஓய்வு பெறப் போகும் போலீஸ்காரரின்  நீதி, நியாயத்திற்காக போராடும் உளவியல் தடுமாற்றம் விவரிக்கப்படுகிறது.

இவ்வாறு புதுசு புதுசா கிரியேட்டிவிட்டியாக க்ரைம் சீன் எழுதும் ரைட்டர் தங்கராஜுக்கு  மீண்டும் க்ரைம் சீன் எழுதும் சூழல் நிகழ்கிறது. அங்கே தான்,  ரைட்டர் கதாபாத்திரம்  தனது பாயிண்ட் ஆப் வியூவில் தேவகுமாரைப்  பார்க்கிறார்.  தேவகுமாரன் பாத்திரத்தின் பார்வையில் கதை நகரவில்லை. அதே போல இனியா கதாபாத்திரத்தின் பார்வையிலும் அது நகரவில்லை. கதையின் ஆதார உணர்ச்சி, பணி நிர்பந்தத்தால் அறம் தவறி செயல்பட நிர்பந்திக்கப்படும் போது தவித்து மருகும் ரைட்டர் தங்கராஜின் குற்ற உணர்ச்சியே. அதுவே படத்தின் கிளைமாக்சிலும் நிகழ்கிறது.

முனைவர் பட்ட ஆய்வுக்காக சென்னைக்கு வரும் தஞ்சாவூர் பகுதி இளைஞர் தேவகுமாரன், சட்டத்திற்கு புறம்பான காவலில் வைக்கப்படுகிறார். தேவகுமாரன் கதாபாத்திரம் ராம்குமாரை நினைவூட்டுவது போல் அமைக்கப்பட்டு உள்ளது. குற்றம் செய்திராத அப்பாவியை குற்றவாளியாக சமூகத்தின் முன் நிறுத்தும் காவல்துறையின் கபடத் தனம் தோலுரிக்கப் பட்டுள்ளது. இதில் ரைட்டராக வரும் ‘தங்கராஜ்’ சமுத்திரகனி, அவருக்கு தெரியாமலேயே தேவகுமாருக்கான க்ரைம் சீனை எழுதுகிறார்.  அந்த சீனை வைத்தே தேவகுமார் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறார்.

போலீஸ் துறையின் அவலங்களை, இதுவரை புறவயமாக காட்டிய சினிமாக்களின் வரிசையில், ரைட்டர் படம் முதன்முதலாக அகவயமாக நிகழ்த்திக் காட்டுகிறது. கேமரா  கோணங்களில் இந்த தன்மை முழுமையாக காட்டப்படுகிறது. சில காட்சிகளில் நாடகத் தன்மையும், மிகை நடிப்பும் இருந்தாலும் ஒரு அறிமுக இயக்குநரின் நேர்மையான கதைக்கு  இவை ஒரு பொருட்டில்லை.  எடிட்டிங்கில் ஆங்காங்கே பிசுறு தட்டுகிறது. பின்னணி இசை சில இடங்களில் எரிச்சலூட்டியது. அமைதி காக்க வேண்டிய இடத்தில் இசையும், தேவைப்படுகிற இடத்தில் இசை இல்லாமலும் கடுப்படித்தது.

படத்தின் ஒளிப்பதிவு ஆவணப்படத் தன்மையோடு அமைந்திருக்கிறது. இனியா குதிரையில் ஏறும் காட்சியில் கேமராவும், கோணங்களும் அசத்தல். ஜீப்பின் வழியாக காட்டப்படும் குதிரையின் துள்ளல் காட்சியில் ரசிகர்கள் ஆர்ப்பரிப்பதை புரிந்து கொள்ள முடிகிறது.

இந்தப் படம் ஒரிஜினல் ஒலியமைப்பில் எடுக்கப்பட்டிருந்தால் வேறு தளத்தில் பரிணமித்திருக்கும்.  நேரடி ஒலிப்பதிவு குறித்து இன்னும் தமிழ் சினிமாவுக்கு புரிதல் இல்லை.

சுப்பிரமணிய சிவா, சமுத்திரக்கனி இவர்களின் ஓவர் ஆக்டிங் மற்றும் நாடக பாணி வசன நடிப்பு சகிக்க முடியவில்லை! சினிமாவிற்கான காட்சி மொழியில் உணர்ச்சிகளை கடத்தும் நடிப்பாக இல்லாமல் வசனங்களின் பலத்தில் சமுத்திரக்கனி மிளிர்கிறார்!  ஆனால், ஹரி, கவிதா பாரதி, ரைட்டராக வரும் இன்னொருவர், ஆண்டனி, மற்ற போலிஸ்காரர்கள் ஆகியோர் மிக இயல்பாக பொருந்துகிறார்கள்.

குறிப்பாக, கவிதா பாரதியின் நடிப்பு நுட்பமானது. ஒரே ஷாட்டில், அதிகாரத்தையும், அதிகாரத்திற்கு வளைந்து நெளிவதையும் துல்லியமாக வெளிப்படுத்தி இருக்கிறார்.  காவல் நிலையங்களில்  “சாமி” கும்பிடும் அவரது பவ்யமும், அடுத்த நொடியில் விறைப்பாக மாறும் அதிகாரமும் அட்டகாசம்.  இந்த ஆண்டின் சிறந்த கேரக்டர் ஆர்ட்டிஸ்ட் விருதுக்கு அவர் பொருத்தமானவர்.

மேற்கு தொடர்ச்சி மலை ஆண்டனியின் கதாபாத்திரமும், வடிவமைப்பும் தமிழ் சினிமாவுக்கு புதிது. அவர் சீரியசாக பேசும் காட்சிகள் அனைத்துமே அவல நகைச்சுவையாக மாறுகிறது.

தேவகுமாராக நடித்திருக்கும் ஹரி அற்புதமான, நடிப்பை தந்திருக்கிறார். அவரை கைது செய்யும் போதும், நீதிபதி முன்னால் ஆஜர்படுத்தும் போதும், அவரது மனித உரிமைகள் மீறப்படும் போதும், கடைசியில் என்கவுண்டர் செய்யப்படும் போதும் உணர்ச்சிப் பிழம்பாக இருக்கிறார். வெறி பிடித்த மிருகங்களிடம் மாட்டிக் கொள்ளும், ஒரு மானைப் போல கண்கள் மலங்க மலங்க கை தேர்ந்த நடிகராக தன்னை நிலை நிறுத்துகிறார்.

சிறிது நேரமே வந்தாலும் இனியா நிறைவாக செய்திருக்கிறார். வெறும் பிரச்சார படமாக இல்லாமல், மிகத் தெளிவான உணர்வுப்பூர்வமான திரைக்கதையுடன் படம் நகர்கிறது. எந்த மோசமான அம்சங்களும் இன்றி – அருவெறுப்பான டூயட் காட்சிகள், சகிக்க முடியாத இரட்டை அர்த்த உரையாடல்கள், சண்டைக் காட்சிகள், ஹீரோயிச அறிமுகம் போன்றவை தவிர்க்கப்பட்டு –  மிக நல்ல மேக்கிங்கோடு இருக்கிறது.

காவல் நிலையங்களில் நிலவும் அதிகாரத்தையும், அதன் விளைவாக ஏற்படும் மன அழுத்தங்களையும், அசலான காவல் நிலையத்தின் வழியாக பதிவு செய்திருக்கும் அறிமுக இயக்குனர் ப்ராங்க்ளின் சினிமாவில் தடம் பதிப்பார்.

விமர்சகர்; – தயாளன், email: [email protected]

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time