உலக சமாதானத்திற்கும், சமத்துவத்திற்கும் பாடுபட்ட டெஸ்மன் டுடு!

- ம.வி.ராஜதுரை

சமத்துவம், சமூக நீதி, சகல சமூகத்தவர்களுடன் இணக்கம், அநீதிக்கு எதிரான அசராத போர்க் குணம் ஆகியவற்றின் அடையாளமாகத் திகழ்ந்தவர்! நெல்சன் மண்டேலாவுடன் இணைந்து நிறவெறிக்கு எதிராக சலிக்காமல் போராடிய டெஸ்மன் டுடு, நாம் நினைவில் கொள்ள வேண்டிய மாமனிதர்!

ஒரு பேராயராக உயர்நிலையில் வாழும் வாழ்க்கைச் சூழல் அவருக்கு இயல்பாக அமைந்த போதும், சக தென்னாப்பிரிக்க மக்களின்  சுதந்திரத்திற்காகவும், அவர்கள் அனுபவித்து வந்த நிறவெறிக்கு எதிராகவும்  ஓயாது குரல் கொடுத்து, அதனால் ஏற்பட்ட துன்பங்களை, இடையூறுகளை  சந்தித்து  மகத்தான வெற்றி கண்ட மாமனிதர் டெஸ்மன் டுடு (Desmond Tutu).

உடலால்  மறைந்து விட்டாலும் தமது   வாழ்க்கைப்  புத்தகத்தை, உலகமெங்கும் சமூக நீதிக்காக போராடும் மக்களுக்காக விட்டுச் சென்றுள்ளார்.

தென்னாப்பிரிக்காவின் கேப் டவுன் நகரில் கடந்த 26.12.21 அன்று தன் 90 வது வயதில் டுடு காலமானார். உலகம் முழுமையும் அவருக்கு புகழஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது.

1984 ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசை  இவருக்கு கொடுக்கப்பட்ட போது , சமூக நீதிக்காக இவர் அளித்த பங்களிப்பை உலகம் பார்த்தது. அந்தப் பங்களிப்பின் விளைவுகள் இப்போது தெரிவதால் உலகமே இவரைக் கொண்டாடி போற்றுகிறது.

1931 ஆம் ஆண்டு அக்டோபர் 7ஆம் தேதி ஏழ்மை நிறைந்த  ஒரு  கருப்பின  குடும்பத்தில் பிறந்தார் டெஸ்மன் டுடு. சிறுவயதிலே படிப்பதிலும், கதைகளைக் கேட்பதில் ஆர்வம் காட்டினார். சுயமாக சிந்தித்து எந்த முடிவையும் எடுக்கும் ஆற்றலைப் பெற்றிருந்தார். மருத்துவ படிப்பில் இடம் கிடைத்தபோதும் கட்டணம் கட்ட முடியாததால் அதில் சேரவில்லை.

ஆனால், படிப்பில் இருந்த ஆர்வம் காரணமாக வேறு துறையில் தொடர்ந்து பட்டப்படிப்பை முடித்து ஆசிரியர் பணிக்கு சென்றார். இறையியலில் நாட்டம் கொண்டு அந்தப் படிப்பில் தேர்ச்சி பெற்று “ஆங்கிலிக்கன்” கிறிஸ்தவ மதப் பிரிவில் பாதிரியாரானார்.

நற்சிந்தனை கொண்ட ஒரு மனிதன் எந்த நிலையில் இருந்தாலும்   தன்னை வளர்த்து ஆளாக்கிய சமூகத்திற்காக தன் பங்களிப்பை செய்யத் தவற மாட்டான். இது டெஸ்மனுக்கும் பொருந்தும்.

தன் ஆளுமைத் திறன் வாயிலாக ஜொகனஸ்பர்க் நகரின் ஆயராக, கேப்டவுன் நகரின்  பேராயராக உயர்நிலைகளை அடைந்த போதும் நிறவெறியாலும்  சமூக ஏற்றத் தாழ்வாலும் மிகவும் பாதிக்கப்பட்டு சர்வதேச அரங்கில் கெட்டப் பெயரை சுமந்து கொண்டிருந்த தன் தாய் நாட்டின் மீட்புக்காக டுடு பெரிதும் பாடுபட்டார்.

அவருடைய காலத்திற்கு ஒரு தலைமுறைக்கு முன்பு, இந்தியாவிலிருந்து வக்கீல் வேலை பார்க்க வந்த  காந்தியை , அவர் வெள்ளைக்காரர்கள் பயணிக்கும்  ரயில் பெட்டியில் ஏறினார் என்ற காரணத்தால் பிளாட்பாரத்தில் தள்ளிவிட்டவர்கள் அல்லவா.!

அப்படிப்பட்ட  இன வெறியர்கள் மேலும் அசுரபலம் கொண்டிருந்த காலகட்டத்தில் டுடுவின் இளமைக் காலம் நகர்ந்தது. ஒருபக்கம் நெல்சன் மண்டேலா  போன்ற தன்னலமற்ற போராளிகள் களத்தில் நின்று போராடிக் கொண்டு இருந்தனர்.

எண்ணிக்கையில் அந்த நாட்டின் பூர்வகுடி கருப்பின மக்கள் 80 சதவீதம் இருந்தபோதிலும் அந்நாட்டின் முக்கால்வாசிக்கும் மேலான  நிலங்கள்  சிறுபான்மை வெள்ளையரிடம் இருந்தன.

எனவே, ஆட்சி  அதிகாரத்துக்கு கருப்பின மக்கள் எக்காரணம் கொண்டும் வந்துவிடாமல் இருக்க அனைத்து சூழ்ச்சிகளையும் சிறுபான்மை அரசு செய்து கொண்டிருந்தது.

சமூக நீதிக்காக போராடியவர்கள் பலர் கொல்லப்பட்டனர். நெல்சன் மண்டேலா உள்ளிட்ட தலைவர்கள் நீண்டகால  சிறைவாசத்துக்கு அனுப்பப்பட்டனர்.

அடக்குமுறையால் தலைவர்களை ஒடுக்கி போராட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைத்துவிடலாம் என்று சிறுபான்மை அரசு எண்ணியது. அவர்களின் நோக்கத்தை முறியடித்ததில் டெஸ்மன் டுடு வுக்கு முக்கிய பங்கு உண்டு.

தலைவர்கள் கொடிய சிறைவாசத்தில் இருந்தபோது. போராட்டம் தொய்வின்றி நடைபெற இவர் முக்கிய பங்கு வகித்தார். நிறவெறிக்கு எதிராக நடைபெற்ற போராட்ட காலத்தில் 1980 -90  காலகட்டம் மிக முக்கியமானது.

“எய்தற்கு அரியது இயைந்தக்கால் அந்நிலையே

செய்தற்கு அரிய செயல் (குறள் 489)

என்ற வள்ளுவரின் வாய்மொழிக்கு ஏற்ப,

அந்த காலகட்டத்தில் மிக வேகமாக டுடு செயல்பட்டார்.

ஒரு மதகுருவாக தேவாலய மேடைகளில் பேசக் கிடைத்த  வாய்ப்பையும் கூட பயன்படுத்திக் கொண்டார். அவர் ஆற்றிய பிரசங்கங்கள் மனித சமுகத்தில் ஏற்றத்தாழ்வு எப்படி இருக்க முடியும்? என்ற வினாவை எழுப்பியது. இந்த வகையில் அவர் அமெரிக்க அதிபராக இருந்த ஒபாமா போன்றவர்களுக்கும் ஒரு இன்ஸ்பிரேஷனாக இருந்தார்!

மதகுருமார்கள் தேவாலயங்களில் பதிவு செய்யும் ஒவ்வொரு சொற்பொழிவும் சமாதானத்தை தான் அடிப்படையாகக் கொண்டிருக்கும். சமாதானம் என்பது சம நீதியின் அடித்தளத்தில் உருவாவது என்ற உண்மையை இவர் கூறியபோது, அது சிறுபான்மை எதேச்சாதிகார ஆட்சியாளர்களுக்கு வேப்பங்காயாக கசந்தது. உலக சமூகத்திற்கு பயந்து அவர்களால் எதுவும் செய்ய முடியவில்லை. அதேநேரத்தில் அந்த மண்ணில் நியாயம் கேட்டு நடைபெற்றுவந்த கருப்பின மக்களின் சுதந்திரப் போராட்டங்கள் தொடர்ந்து வீறுகொண்டு நடைபெற்றன.

டெஸ்மன் டுடு சமூக நீதிக்காக உள்நாட்டில் மட்டுமல்ல, சர்வதேச அரங்குகளிலும் பேசினார். பெளத்த மதத் தலைவர்  தலாய்லாமாவும் இவரும் சேர்ந்து பல இடங்களில் பேசியுள்ளனர்.

உலக நாடுகள் தென்னாப்பிரிக்காவின் நிறைவேறி  அரசுக்கு நெருக்கடி கொடுக்கத் தொடங்கிய பிறகு அதற்கு முட்டுக் கொடுத்துக் கொண்டிருந்த மேலைநாடுகளும் தன் நிலையை மாற்றிக் கொண்டன.

1984 ஆம் ஆண்டு சமாதானத்துக்கான நோபல்  பரிசு அவருக்கு கிடைத்தது. அதன் பிறகு அந்த மண்ணின் சமூக நீதிக்காக அவர் உதிர்த்த வார்த்தைகள் பிரளயமாக உலக நாடுகளில் எதிரொலித்தது.

தன் பிடியை படிப்படியாக குறைத்துக் கொண்டுவந்த சிறுபான்மை வெள்ளை அரசு சர்வதேச சமூகத்திற்கு பணிந்து 1990 ஆம் ஆண்டு நெல்சன் மண்டேலாவை விடுவித்தது. 27 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்து விட்டு வெளியில் வந்த அந்த மாபெரும் தலைவர் முதல் நாள் இரவை டெஸ்மன் டுடு வின் இல்லத்தில் கழித்தார்.

டெஸ்மன் டுடுவும், நெல்சன் மண்டேலாவும்

1994 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்று நாட்டின்  ஜனாதிபதியாக மண்டேலா பொறுப்பேற்றார். கடந்த ஆட்சியாளர்கள் போல் அல்லாமல்,  இரு சமூகத்திற்கும்  சமமான நீதி பரிபாலனம் வழங்கும் ஒரு ஆட்சியாளராக இருந்தால்தான் நாட்டிற்கு நல்லது  என்பதை உணர்ந்தார்.அதன் பொருட்டு உண்மை மற்றும் நல்லிணக்க ஆணையம் ஒன்றை ஏற்படுத்தி அதன் தலைவராக டெஸ்மண்ட் டுடுவை நியமித்தார். அப்பணியை டுடு சிறப்பாக செய்து முடித்தார்.

ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகும் நடைபெற்ற தவறுகளை அவர் விமர்சனம் செய்யத் தவறவில்லை. தன் தாய்நாடோடு நின்றுவிடாமல் உலக அளவில் எங்கு மனித உரிமை மீறல்கள் நடைபெற்றாலும் குரல் கொடுத்தார்.

திருநங்கைகள் உரிமைகளுக்காக இவர் தொடர்ந்து பாடுபட்டு வந்தார்.  இவருடைய முயற்சியால் உலகம் முழுவதும் பல நாடுகளில் அவர்களுக்கு சட்டரீதியான பாதுகாப்புகள் கிடைத்தன.

எப்போதும் மகிழ்ச்சியுடன் இருப்பது, நகைச்சுவை உணர்வுடன் மனதில் பட்டதை சமய சந்தர்ப்ப புத்தியுடன் வெளிப்படுத்துவது, பகைவரும் ஏற்றுக்கொள்ளும் வகையில் உண்மையை பட்டவர்த்தனமாக உரைப்பது போன்றவை டுடேவின் இயல்பான குணங்களாக இருந்தன.

உண்மையும் அகிம்சையும் அவரிடம் அடிப்படைக் குணங்களாக இருந்தால்  அவர் வெல்ல முடியாதவராக திகழ்ந்தார்.

இந்தியா உள்பட உலக நாடுகள் அனைத்தும் டெஸ்மன் டுடு புகழாரம் சூட்டி வருகின்றன. மொழியால், இனத்தால் உலகின் எந்த மூலையில் சிறுபான்மை மக்கள் பாதிக்கப்பட்டாலும், அவர்கள் மேம்பாட்டுக்காக நித்ய கலங்கரை விளக்கமாக டெஸ்மன் டுடு விட்டுச்சென்ற சுவடுகள் திகழும் என்பதில் ஐயமில்லை.

கட்டுரையாளர்; ம.வி.ராஜதுரை

Support Aram

நேர்மையான,வெளிப்படையான,சுதந்திரமான இதழியலுக்கு தோள் கொடுங்கள்.

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time