ஐந்தாண்டுகளில் இடிந்து விழக்கூடிய பல நூறு குடியிருப்புகள்!

- சாவித்திரி கண்ணன்

திருவொற்றியூரில் 25 ஆண்டு கட்டிடம் இடிந்து விழுந்துள்ளது என்றால்…, தற்போது இரண்டரை ஆண்டுகளில் இடிந்து விழத் தயாராக இருக்கும் கே.பி.பார்க் உள்ளிட்ட பல நூறு குடியிருப்புகள் விவகாரத்தில் திமுக அரசு மெளனம் கடைபிடிப்பது ஏன்?  கரப்ஷன் + கமிஷன் + கலெக்‌ஷன் = கழகங்கள்!

எந்தக் கட்டிடமும் முறையாகக் கட்டப்பட்டால் குறைந்தபட்சம் 75 ஆண்டுகள் தொடங்கி 100 ஆண்டுகள் நிச்சயம் தாக்குப் பிடிக்கும். ஆனால், அரசு கட்டிக் கொடுக்கும் குடிசை மாற்றுவாரியக் குடியிருப்புகள் மட்டும் ஏன் 25 முதல் 30 ஆண்டுகளில் வாழத் தகுதியற்றுப் போகின்றன..?

சமீபத்தில் திருவெற்றியூரில் நொறுங்கி விழுந்த குடிசை மாற்று வாரிய கட்டிடம் 1993ல் கட்டத் தொடங்கி 96 ல் கட்டி முடிக்கப்பட்டது. அதாவது 25 தே ஆண்டுகளில் அது வாழத் தகுதியற்றுப் போயுள்ளது என்றால், இவற்றை எந்த லட்சணத்தில் கட்டிக் கொடுத்துள்ளனர் என்பது பட்டவர்த்தனமாகத் தெரிய வருகிறது.

இது தான் தமிழகம் முழுமையும் பெருமளவிலான குடிசை மாற்று வாரியக் குடியிருப்புகள் சந்திக்கும் சவாலாக உள்ளது. குடிசை மாற்று வாரியம் என்ற திட்டமே முதன்முதலாக கருணாநிதி ஆட்சியில் 1970 ல் தான் உருவானது. அப்போது சென்னையில் மட்டுமே அவை அமல் படுத்தப்பட்டன. அந்த முதல் காலகட்டத்தில் கட்டப்பட்ட தண்டையார்பேட்டை வ.உ.சி நகர் குடிசை மாற்று வாரியக் குடியிருப்புகள் இப்போதும் கம்பீரமாகவே உள்ளன.

ஆனால், 1980, 1990, 2000, 2010 களில் கட்டப்பட்டவை தற்போது வாழத் தகுதியற்று போய்விட்டன! தமிழக அரசே சொல்லுகின்ற தகவல்கள்படி இந்த காலகட்டத்தில் கட்டப்பட்ட சுமார் 62 திட்டப் பணிகளில் உருவான 17,734 குடியிருப்புகள் தற்போது இடிக்க வேண்டிய நிலையில் உள்ளன.

ஆக, இவற்றை இடித்துவிட்டு மாற்று வீடுகள் படிப்படியாக கட்டித் தரவுள்ளோம் என அரசு சொல்கிறது. இத்தனை பெரிய எண்ணிக்கையில் புதிய மாற்று வீடுகள் கட்டி அனைத்து பயனாளிகளுக்கும் கட்டி முடிக்க எப்படியும் ஐந்தாண்டுகள் ஆகலாம். அதே சமயம் அந்த ஐந்தாண்டு காலகட்டத்தில் மேலும் சில ஆயிரம் வீடுகள் இடிக்கவும், அதற்கு மாற்றாக கட்டப்படவுமான தேவைகள் உருவாக வாய்ப்பு உள்ளது. அதற்கும் நிதி ஒதுக்கி செய்வார்கள். பொதுப் பணம் தானே எப்படி விரையமானால் என்ன? நமக்குத் தொடர்ந்து திட்டங்கள் வேண்டும் ,கமிஷன்கள் வேண்டும் என அரசு இயந்திரம் செயல்பட போகிறதோ? என்னவோ?

இவ்வளவு குறுகிய காலகட்டத்தில் இந்த கட்டிடங்கள் வாழத் தகுதியற்றுப் போனதற்கு காரணமானவர்கள் கேள்விக்கு உட்படுத்தப்பட மாட்டார்களா? இவ்வளவு தரமற்றக் கட்டிடங்களை உருவாக்கியதற்கான உண்மைக் காரணங்கள் என்ன? அவர்களை தண்டிக்கத் தவறினால் இனி கட்டப்படும் கட்டிடங்கள் இதைவிட மோசமான தரத்தில் தான் அமையும்! அதற்கு சில உதாரணங்களாக புளியந்தோப்பு கே.பி.பார்க், தண்டையார்பேட்டை சேனியம்மன் பகுதி மற்றும் பெரம்பலூர் கவுல் பாளையம் பகுதி குடிசை மாற்று வாரியக் கட்டிடங்கள் கட்டப்பட்ட சில மாதங்களிலேயே சிதிலமடையத் தொடங்கியுள்ளதை சொல்லலாம்!

பெரம்பலூர் கவுல்பாளையம்

கே.பி.பார்க் விவகாரம் புதிய தலைமுறை தொலைகாட்சியினால் வெளிக்கொண்டு வரப்பட்டது. அப்போது இந்த தவறுக்கு காரணமானவர்கள்  மீது ஐஐடி அறிக்கை வந்த பிறகு கண்டிப்பாக நடவடிக்கை எடுப்போம் என சட்டமன்றத்திலும், வெளியிலும் பலமுறை சொன்னார் அமைச்சர் த.மோ.அன்பரசன்.

கே.பி.பார்க் கட்டுமானத்தை ஆய்வு செய்த ஐஐடி குழு தன் அறிக்கையில், ‘தரமற்ற வகையில் குடியிருப்புகள்  கட்டப்பட்டுள்ளன. இதை கட்டிய பி.எஸ்.டி. கட்டுமான நிறுவனத்தை தடை பட்டியலில் சேர்க்க வேண்டும். அரசு ஒப்பந்தங்களில் சம்பந்தப்பட்ட நிறுவனத்துக்கு இனி ஒப்பந்தங்கள் வழங்கக் கூடாது’ என தெரிவித்ததோடு, நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்திடம் இறுதி ஆய்வறிக்கையை ஐஐடி குழு தாக்கல் செய்தது குறிப்பிடத்தக்கது.

ஆனால், என்ன நடக்கிறது..? அந்த ஆய்வறிக்கையை பொதுவெளியில் வைக்காமல் கமுக்கமாக வைத்துக் கொண்டது தமிழக அரசு.

புளியந்தோப்பு கே.பி.பார்க்

இது தொடர்பாக அறப்போர் ஜெயராம் வெங்கடேசன்,தொடர்ந்து பேசி வருகிறார்!

“இன்று வரை கே பி பார்க் கட்டுமானத்தில் ஊழல் செய்தவர்கள் மீது எந்தவிதமான நடவடிக்கையும் அரசு எடுக்கவில்லை. பி எஸ் டி நிறுவனம் மீது ஒரு வழக்கு கூட பதிவு செய்யப்படவில்லை. லஞ்ச ஒழிப்புத்துறையிடம் CUBE நிறுவனத்தின் முழு ஆய்வு அறிக்கையுடன் புகார் அளித்துள்ளோம்.

2007-ல் கே பி பார்க் கட்டுமானத்திற்கான டெண்டரில் ஒருவர் மட்டுமே பங்கெடுக்கும் வண்ணம் பி.எஸ்.டி நிறுவனத்திற்கு Single Bid Tender ஆக டெண்டர் வழங்கப்பட்டுள்ளது. 32,000 சதுர மீட்டருக்கு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. 89 கோடி 92 லட்சம் ரூபாய் A,B,C,D ஆகிய 4 ப்ளாக்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. ஒரு சதுர அடிக்கு 800 ரூபாய் சந்தை மதிப்பை விட அதிகமாக பிஎஸ்டி நிறுவனத்துக்கு கொடுக்கப்பட்டுள்ளது. அதனால் 27 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

ஐஐடி ஆய்வறிக்கை வந்த பிறகும் ஏன் இன்னும் FIR பதியப்படவில்லை ஏன்? கீழ்மட்ட அதிகாரிகள் மீது மட்டும் நடவடிக்கை எடுத்தால் போதாது, அப்போது துணை முதல்வராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் தொடங்கி அனைவர் மீதும் விசாரணை பாய வேண்டும். பி எஸ் டி நிறுவனம் மீது வழக்கு பதிவு செய்யாமல் இந்த விவகாரம் மூடி மறைக்கப்படுகிறது. அமைச்சர் தா மோ அன்பரசனுக்கும், பி எஸ் டி நிறுவனத்துக்கும் என்ன தொடர்பு என்பதை வெளிப்படையாக கேட்கிறோம். ஏன் வழக்கு பதியப்படாமல் உள்ளது? திமுக அரசு பி எஸ் டி நிறுவனத்தை காப்பாற்ற முயற்சிக்கிறது.,,’’ என பகிரங்கமாகவே குற்றம் சாட்டி வருகிறார்.

கே.பி.பார்க் விவகாரமாவது வெளியில் தெரிய வந்தது. ஆனால், அதன் பிறகு பல குடிசை மாற்று வாரிய குடியிருப்புகள் சேதாரங்கள் தொடர்பாக செய்திகள் வெளியாகாமல் அரசு தரப்பில் அழுத்தம் தரப்பட்டு வருவதாகத் தெரிகிறது.

1979-ம் ஆண்டு தண்டையார் பேட்டை சேனியம்மன் கோயில் பகுதியில் கட்டப்பட்ட குடிசை மாற்று வாரிய வீடுகள் சிதிலமடைந்ததைத் தொடர்ந்து, கடந்த 2018ஆம் ஆண்டு பழைய வீடுகளை இடித்துவிட்டு 44 கோடி ரூபாய் செலவில், 464 வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டன. கட்டி முடித்து ஓராண்டே ஆன நிலையில், வீடுகளின் சுவர்களில் விரிசல் ஏற்பட்டு, சிமெண்ட் கொட்டுவதாக குடியிருப்பு வாசிகள் வேதனையுடன் பல மனுக்கள் அனுப்பியும் முறையான    நடவடிக்கை இல்லை.

பெரம்பலூர் கவுல்பாளையம் பகுதி குடிசை மாற்று வாரியக் குடியிருப்பு பகுதியில் ரூ 41 கோடி செலவில் 504 வீடுகள் சென்ற ஆட்சியில் கட்டிக் கொடுக்கப்பட்டு உள்ளன. அவை ஒரு சில மாதங்களிலேயே உதிர்ந்து விழத் தொடங்கியுள்ளன.

 

ஜெயலலிதா ஆட்சி காலத்தில் 2011 தொடங்கி 2016 வரை காலகட்டத்தில் ஐந்து ஆண்டுகளில் 59,023 அடுக்குமாடி குடியிருப்புகள், தனிநபர் வீடுகள் குடிசை மாற்று வாரியம் மூலம் கட்டப்பட்டுள்ளது. அதாவது தனியார் நிறுவனங்களின் மூலம்! இத்தனை குடியிருப்புகள் தொடர்ந்து கட்டப்பட்டு வரும் நிலையில் அரசே ஒரு கட்டுமான நிறுவனத்தை உருவாக்கலாமே! அரசே மணல் கொள்முதல் செய்தால் செலவு குறைவு அல்லவா?

மேலும், 3,024 அடுக்கு மாடி குடியிருப்புகள் மற்றும் 7,513 தனி வீடுகள் என 10,537 வீடுகள்  2016 ஆம் ஆண்டு கட்டப்பட்டன. இதற்குப் பிறகு பன்னீர் செல்வம்,எடப்பாடி பழனிச்சாமி  ஆட்சி காலத்தில் 23 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளன. இவை யாவும் இன்னும் ஒரு சில வருடங்களில் நிலைபெற முடியாமல் சரிந்துவிடக் கூடியவையே என அரசு வட்டார நண்பர்கள் தெரிவித்தனர். இந்த குற்றங்களை மூடி மறைக்கும் திமுக அரசு, கே.பி.பார்க் கட்டிடங்கள் இன்னும் ஒரு சில வருடங்களில் சரிந்து தரைமட்டமாகும் போது என்ன சொல்லப் போகிறது?

கேட்பதற்கே பகீர் என்றுள்ளது. இதைக் கட்டித் தந்த நிறுவனங்கள், அதை ஒப்பந்தம் செய்து கமிஷன் பெற்ற ஆட்சி அதிகாரத் தலைமைகள், துறை அதிகாரிகள், லோக்கல் கட்சிக்காரர்கள்.. எதிர்கட்சித் தலைவர்கள் பலப்பல வகையிலும் இந்த விவகாரங்களில் அன்றே பலன் அடைந்திருப்பார்கள். அதனால் தான் இவர்கள் அனைவரும் சந்தை மதிப்பீட்டை விட மிக அதிகத் தொகை தந்தும், மிக மட்டமாக கட்டுமானம் செய்த நிறுவனத்தை கண்காணிக்கவும், முறைப்படுத்தவும் தவறிவிட்டனர் என்பதோடு இன்று தட்டிக் கேட்கவும் தயங்குகின்றனர்.

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time