நாம் நேசித்த, பிரமித்த, செல்வாக்குள்ள பல பிரபலங்களை பொதுவெளியில் நிறுத்தி , நீதி கேட்க முடியும் என நிரூபித்தது மீ டூ. ஆனால், ‘மீ டூ’ வைக் கையில் எடுத்த பெண்கள் சந்தித்த சவால்கள், பிரச்சினைகள் கொஞ்ச நஞ்சமல்ல! மொத்தத்தில் அது வெற்றியா? தோல்வியா? விரிவாக அலசுகிறார் சாந்தகுமாரி!
சமீப காலத்தில் உருவாகி பெரும் பரபரப்பை உருவாக்கிய ‘மீ டூ’ குறித்த ஒரு பரந்துபட்ட பார்வையாக சென்னை உயர்நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் முனைவர் கே.சாந்தகுமாரி எழுதிய நூல்’மீ டூ ‘. பெண்களின் மீதான பாலியல் வன்முறைக்கெதிராக தொடங்கப்பட்ட மீ டூ இயக்கம், அதன் அண்மைக்கால போராட்டங்கள், விளைவுகள்.. என்று விவரிக்கிற புத்தகம்.
நாம் எதிர்பார்த்திராத பிரபலங்கள் பலர், கலைத்துறை. இசைத்துறை, தொழிற் துறை, பத்திரிகைத்துறை என்று பல்வேறு துறையினரும் ஈடுபட்ட பாலியல் முறைகேடுகளை புத்தகம் படம்போல சித்திரிக்கிறது.
இந்தப் புத்தகத்தை வெளியிட வழக்கறிஞர் சாந்தகுமாரி படாத பாடுபட்டுள்ளார்! பல்வேறு பதிப்பகங்களின் கதைவடைப்பை மீறித்தான் இந்தப் புத்தகம் எதிர் வெளியீடு பதிப்பாளர்களால் வாசிப்புக்குக் கொண்டு வரப்பட்டிருக்கிறது.
உச்சநீதிமன்ற நீதிபதி ராமசுப்பிரமணியன் வெளியிட, தமிழக காவல்துறை டிஜிபி சீமா அகர்வால் பெற்றுக்கொண்டார். நீதிபதி சந்துரு, கவிஞர் வெண்ணிலா வாழ்த்துச் சொன்னார்கள்.
நீதிபதி ராமசுப்பிரமணியன் தனது கருத்துரையை வழங்கியபோது குறிப்பிட்ட Secondary Victimization என்கிற ஒரு விடயம் மனத்தில் அலைகளைக் கிளப்பிக்கொண்டேயிருந்தது. அதாவது, ஏற்கெனவே பாதிக்கப்பட்ட ஒருவரை மீண்டும் பாதிப்புக்கு ஆளாக்குவது.
‘மீ டூ’ குற்றச்சாட்டுகள் உலகெங்கிலும் எழுந்தபோது, அங்கிங்கெனாதபடி உலகம் முழுமையிலுமாக,‘ஆண் உலகம்’ அதை எதிர்கொண்ட விதம், ஏறக்குறைய ஒரே தொனியில் காதில் விழுந்தது.
‘பாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண் காலம் கடத்தியது ஏன்? ஏன் அதை உடனடியாக பொது வெளியில் சொல்ல முன்வரவில்லை? உண்மைக் குற்றச்சாட்டு எனில், நீதிமன்றத்தை நாடியிருக்கலாமே? அதைச் செய்யாதது ஏன்? தனி அறையில், அல்லது தகாத பொழுதினில் அவள் ஏன் சம்பந்தப்பட்ட நபரை தனியே சென்று சந்திக்கவேண்டும்? ‘
இவையெல்லாம் உலகம் நெடுகிலும் ‘மீ டூ ‘ பெண்களை நோக்கி, திரும்பத் திரும்பத் திருப்பப்பட்ட எதிர் வினாக்கள்.
இதைத்தான், இம்மாதிரியான எதிர்வினைகளைத் தான், பாதிக்கப்பட்டவரை மீண்டும் கழுவிலேற்றத் துடிக்கும் ‘SECONDARYVICTOMOZATION’ என்று தெளிவாகச் சொன்னார் நீதிபதி.
குறிப்பிட்ட அளவில் ஊழியர்கள் பணிபுரியும் ஒவ்வொரு நிறுவனத்திலும், ஒவ்வொரு அமைப்பிலும், பெண்கள் மீதான பாலியல் வன்முறை குறித்து புகார் அளிக்கவும், விசாரிக்கவும் விசாகா கமிட்டி அமைக்கப்பட வேண்டுமென்று சட்டம் இயற்றப்பட்டு பல வருடங்களாகின்றன. அது எவ்வளவு தூரம் கடைபிடிக்கப்பட்டிருக்கிறது என்பதை ஆராயும்போதும், விசாகா கமிட்டி என்றால் என்ன என்கிற விழிப்பு மக்களிடம் கொண்டு செல்லப்பட்டிருக்கிறதா என்பதை சிந்திக்கும்போதும், இந்தப் பிரச்சனையில் நாம் எவ்வளவு அலட்சியம் காட்டிவருகிறோம் என்பது தெளிவாகிவிடும்.
பாலியல் குற்றச்சாட்டை வெளியில் சொன்னாலே, தன் மீது தவறான பார்வை படிந்து விடும் என்கிற மனப்பாங்குதான் இன்றைக்கும் பெரும்பாலான பெண் மனங்களில் உளவியல் ரீதியாக விதைக்கப்பட்டிருக்கிற வேகத்தடை என்பது குறிக்கத்தக்க ஒன்று.
அவ்வாறு, அந்த சூழல் தடையை மீறி, தங்களுக்கு நேர்ந்த கொடுமையை பொது வெளியில் துணிவுடன் சொல்ல முற்படும் பெண்களுக்கு நாம் ஆற்றும் எதிர்வினை என்ன என்பதும் அடுத்த சிக்கலாகத்தான் பரிணமிக்கிறது.
அதற்கு, மீடூ குற்றச்சாட்டு குறித்து சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் ஈராண்டுகளுக்கு முன்னம் நிகழ்த்தப்பட்ட பத்திரிகையாளர் சந்திப்பில் ஆண் பத்திரிகையாளர்கள் காட்டிய எதிர் ஆவேசமே ஓர் உதாரணம். சந்திப்பை ஏற்பாடு செய்தோரும், பங்கெடுத்த பெண் பத்திரிகையாளர் பலரும் அந்த அவமதிப்பின் தாக்குதலைத் தாளமுடியாமல் தலைகுனிந்த செயலை நாம் ஊடகங்களில், இணைய வெளிகளில் படித்துத் திகைத்தோம்.
அவ்விதம், ஒரு பிரச்சனையை சமூக வெளியில் சுமந்து செல்லவேண்டிய பத்திரிகைத் தளமே, அதை முடக்குவதில், ஒடுக்குவதில் காட்டிய முனைப்பு என்பது, காலங்காலமாக ஆண் புத்தியில் திணிக்கப்பட்டுள்ள ஆணியச் சிந்தனைகளின் வெளிப்பாடன்றி வேறு அல்ல.
இத்தகைய பல்வேறு தடைக் கற்களைத் தாண்டித்தான் இதுகாறும் பெண்ணுரிமை முழக்கங்களும், பெண்ணிய வெற்றிகளும் நிறுவப்பட்டுள்ளன என்பதை உணரவேண்டும்.
வரலாறைப் பின்னுக்கிழுக்கிற சிந்தனையை நாகரிக மானுட சமூகமும், அறிவியலும் ஒருபோதும் ஏற்காது. பின்னடைவுகள் தாற்காலிகமானவையே அன்றி, நிரந்தரமானவை அல்ல.
இதைத்தான், இந்தியாவில், குறிப்பாக தமிழகத்தில், மீடூ இயக்கத்தின் ஜுவாலைகள் அடங்கிவிட்டன என்று கருதுவோர்க்கு, அது அணைந்துவிடவில்லை; அவற்றின் கங்குகள் நீறுபூத்த சாம்பலாகக் கனன்று கொண்டு தான் இருக்கின்றன என்று ஓர் இடைவெளிக் கிடையே உணர்த்தும் வெளிப்பாடு தான் இந்த ‘மீடூ’புத்தகமும்.
பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளானவர்கள் பலரும், சமூகத்தால் போர்த்தப்பட்ட பொன்னாடைகளுக்கு உள்ளிருப்பவர்கள் என்பது பிரச்சனையை தீவிரமாக்குகிறது.
PEEPING எனப்படும் ‘பிறர் அந்தரங்கத்தை அறிய முற்படும் மனோநிலை ‘, இந்த பாலியல் குற்றச்சாட்டுகள் விடயத்தில் ஒருவிதத்தில் நேர்மறை விளைவுகளைத் தந்திருக்கின்றன என்பது ஓரளவு எனது அனுமானம். அந்தப் புத்திதான் குற்றச்சாட்டுகளை செவிமடுக்கவும், பரவலாக்கவும் செய்துள்ளது என்பது அவலமான ஓர் உண்மை என்று எனக்குப் படுகிறது.
வாசித்த அனுபவத்திலிருந்து, புத்தகம் குறித்து கொஞ்சமாகச் சொல்லுகிறேன் :
‘மீடூ’வை தரனா பார்க் தொடங்கியது தொட்டு, வைரமுத்து மீது பாடகி சின்மயி உள்ளிட்ட பெண்கள் எழுப்பிய பாலியல் குற்றச்சாட்டுகள் வரை – பல்வேறு நிகழ்வுகளை புத்தகம் விரிவாக விவரித்துக் கொண்டே செல்கிறது.
மரபியல் அறிஞர் பிரான்சிஸ் அயலா, ஹாலிவுட் சினிமா தயாரிப்பாளர் ஹார்வி வெய்ன்ஸ்ட்டின் தொடங்கி, நம்மூரில் நடிகர்கள் நானா படேகர், அலோக்நாத் அர்ஜுன், கவிஞர் வைரமுத்து, சினிமா இயக்குநர்கள் ராஜ்குமார் ஹிரானி, சுசி கணேசன், பத்திரிகையாளர்களான எம்.ஜெ.அக்பர், ‘டெஹெல்கா’ தருண் தேஜ்பால், ஏகப்பட்ட பெண்களுக்கு பாலியல் தொல்லை தந்த டைம்ஸ் ஆப் இந்தியா கே.ஆர்.ஸ்ரீனிவாஸ்( சீரியல் வைலண்டர்), கர்நாடக இசைத்துறை சார்ந்த ஓ.எஸ்.தியாகராஜன், சித்ரவீணா ரவிகிரண், மாண்டலின் ராஜேஷ், இசையமைப்பாளர் அனுமாலிக் போன்ற பிரபலங்கள் மீடூவினால் கூண்டிலேற்றப்பட்ட நிகழ்வுகளை புத்தகம் விவரித்துச் செல்லுகிறபோது, நாம் திகைப்புடன் தொடர வேண்டியிருக்கிறது.
இந்தப் பெரிய மனிதர்களெல்லாம், சிலந்தி வலை பின்னுவது போல, மெள்ள மெள்ள முயற்சிகள் மேற்கொண்டு பெண்களை வசீகரிக்க முயற்சிப்பதும், மான் மீது பாயும் புலிபோல திடுமெனத் தாக்குதல் தொடுப்பதுமாக, தங்கள் காம இச்சையை வலிந்து திணிக்க முற்படும் வகைப்பட்ட காட்சிகள் புத்தகமெங்கும் திரைக்காட்சிகளைப்போன்று விரவிக் கிடக்கின்றன.
வெளியீட்டு நிகழ்வில், உச்சநீதிமன்ற நீதிபதி,”விருது அறிவிக்கப்பட்டவர்களைக்கூட அவ் விருதைப் பெறவிடாமல் தடுத்தது மீடூ! ” என்று சொன்னது போன்று, மீடூவின் குற்றச்சாட்டுகள் மாத்திரமல்லாமல் , அதன் வெற்றிகளும் நெடுகே பதிவு செய்யப்பட்டிருப்பது புத்தகத்தின் நோக்கத்தை வெளிப்படுத்துகிறது.
கேளுங்கள்….
ஆண்களின் பிடியிலிருக்கும் வலிய அமைப்பான ‘அம்மா’ என்கிற மலையாள திரைப்பட நடிகர் சங்கத்தின் எதிர்ப்பையும் மீறி, கேரளத் திரைத்துறை பெண்கள்மீதான பாலியல் அத்துமீறல்களைத் தோலுரிக்க, ‘விமன் இன் கலெக்டிவ்’ அமைப்பை நிறுவியிருக்கிறார்கள்.
நம் சென்னையில், நாடகத்துறையில் பெருகிவரும் பாலியல் துன்புறுத்தல்களுக்கு எதிராக சிடி போஷ் -CT Posh ( Chennai theatre prevention of sexual harrasment ) என்கிற அமைப்பு உருவாகி இருக்கிறது.
இந்திய கலைத்துறையில் பெண்மீதான் பாலியல் வன்முறை குறித்து வெளிப்படுத்த ஸீன் அண்ட் ஹெர்ட் (Seen and Heard ) என்கிற இன்ஸ்டாக்ராம் பக்கம் தொடங்கப்பட்டிருக்கிறது.
இவையெல்லாம், மீடூ இயக்கம் தனது வெற்றியாக , இந்தியப் பரப்பில் ஏற்படுத்தியிருக்கும் அதிர்வலைகள். இன்னமும் நீளும் பட்டியலை நீங்கள் புத்தகத்தில் வாசிக்கலாம்.
இதில் வியப்புக்குரியதென்னவென்றால், மீடூ’வின் தாக்கத்தால், பெண்களால் பாலியல் தொல்லைகளுக்கு ஆட்படும் ஆண்களுக்குப் பாதுகாப்பைத் தருவதற்காக, ‘ஹிம் டூ’ (Him too ) இயக்கமும் தோற்றுவிக்கப்பட்டிருப்பதாக புத்தகம் சொல்லும் சேதிதான்.
மீடூவுக்கு எதிரான அத்துணைக் கேள்விகளுக்கும், அய்யங்களுக்கும் இந்தப் புத்தகம் பதில் சொல்லுகிறது என்பதைச் சுட்டியாகவேண்டும்.
மீடூ இயக்கம் உலகளாவிய அளவில் பெண்களிடம் எத்தகைய மாற்றங்களை நிகழ்த்தியிருக்கிறது என்பதையும் புத்தகம் பட்டியலிட்டிருக்கிறது. மட்டுமின்றி, பெண்கள் இத்தகையப் பாலியல் சீண்டல்களையும், வன்முறைகளையும் எவ்வாறு எதிர்கொள்ளவேண்டுமென்கிற விழிப்பையும் ஏற்படுத்தத் தவறவில்லை.
அச்சம், மடம், நாணம் என்னும் பெண் தளைகளை ஆண்கள் எவ்வாறு தங்களுக்குச் சாதகமாக்கிக் கொள்கிறார்கள் என்பதை சுட்டிக்காட்டி, பெண்ணின் குரல்வளை நசுக்கப்படுவதற்கு எதிரான அறச்சீற்றத்தையும் பதிவு செய்திருக்கிறார் சாந்தகுமாரி. .
பெண்ணுரிமை பெருமளவில் உயர்த்தப்படுவதாகச் சொல்லப்படும் மேற்குலகில்கூட, மீடூவை முடக்க ஆயிரம் பிரயத்தனங்கள் செய்யப்படும்போது, இன்னமும் பத்தாம் பசலிச் சிந்தனைகளிலிருந்து விடுபடாத நம் போன்ற தேசங்களில், இந்த இயக்கம் என்ன பாடுபடவேண்டியிருக்கும் என்பதை படிப்போர் புரிந்துகொள்ள ஏலும்.
பெண் என்பவள் நுகர்பொருள் அல்ல, சக மனுஷிதான் என்று ஆண் நெஞ்சங்களில் பதியவைக்க இயன்றவரைக்கும் முயற்சிக்கிறது இந்த ‘மீடூ ‘ புத்தகம். அதை ஏற்பதும், சமூகத்தை ஏற்க வைப்பதும் நமது கடமை என்கிறேன்.
Also read
இந்தப் புத்தகம் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்படும் பணிகள் தொடங்கப்பட்டுவிட்டதாக சாந்தகுமாரி விழா மேடையில் அறிவித்தார்.
சகல துறை சம்போகிகள் மீதும் வெளிச்சம் பாய்ச்சிய சாந்தகுமாரி நீதித்துறையை விட்டுவைத்தது ஏன்? புத்தகத்து முன்னுரையிலும், வெளியீட்டு மேடையிலும் கேட்டேவிட்டார் நீதிபதி சந்துரு.
அதையும் செய்துவிடுகிறேன் என்று பதிலிறுத்திருக்கிறார் நூலாசிரியர்.
எனவே, பாலியல் குற்றங்களுக்கு எதிராக, தன்னளவிலான ஒரு போராட்டத்தை சாந்தகுமாரி தொடங்கிவிட்டார் என்றே கொள்கிறோம். பெண் வழக்கறிஞர்களுக்காக சங்கத்தின் முக்கிய பொறுப்பில் அகில இந்திய அளவிலும், சர்வதேச அளவிலும் தொடர்ந்து இயங்கி வருபவரான மூத்த வழக்கறிஞர் சாந்தகுமாரி இந்த நூலை எழுத மிகப் பொருத்தமானவர் தான்!
அவர் முயற்சிகளுக்கு ஆதரவு காட்டுவது, நம்மையும் இந்தப் பெண் போராட்டத்தின் ஓர் அங்கமாக மாற்றிக்கொள்வதாகவே பொருள்.
கட்டுரையாளர்; ரதன் சந்திரசேகர்
நூலின் பெயர் ; மீ டு
ஆசிரியர் ; சாந்தகுமாரி
பக்கங்கள் 320, விலை ரூ.350.
எதிர் வெளியீடு,
96, நியூ ஸ்கீம் ரோடு,பொள்ளாச்சி 642 002.
தொலைபேசி : 04259 -226012, 99425 11302.
#சாந்தகுமாரி
வழக்கறிஞர் தனது
“மீ..டூ..” புத்தகத்தில் குறிப்பிட்டுள்ள பிரபலங்கள் என்னதான் சாதனைகள் அவரவரது களத்தில் புரிந்திருந்தாலும் வரலாற்றில் செல்லாக்காசு ஆகிவிடுவார்கள் என்பதுதான் உண்மை. இந்நூலைப் படிக்கும் ஆண்கள், பெண்கள் விஷயத்தில் மிகவும் எச்சரிக்கையாக நடந்து கொள்ள வேண்டியது அவசியம் என உணர்வார்கள்.
பெண்கள் இது மாதிரியான சிக்கல்களிலிருந்து எவ்வாறு விடுபடுவது என்பது ஒரு கேள்விக்குறி.
அதற்கு அவர்கள் சுயசார்பு உடையவர்களாக மாற வேண்டும்.
இதற்கு ஒரே தீர்வு உண்டு என்றால் அது பெண்களுக்கான, ஆண்கள் சாராத அரசியல் ஆளுமை. பெண்களே நடத்தும் பெண்களுக்கு முழு வாய்ப்பு தரும் பாலின சமத்துவ ஜனநாயக அரசாட்சி அமைப்பு முறை அவசியம். பெண்களுக்கெ ன்றான பிரத்தியோக ‘பெண்கள் கட்சி’ காலத்தின் கட்டாயம்.
சாந்தகுமாரி போன்ற பெண் வழக்கறிஞர்கள்
முன்னெடுத்து உருவாக்கி அரசு பீடத்தில் அமரச் செய்யும் முயற்சி மேற்கொள்ள வேண்டும். புத்தகம் எழுதுவதோடு நின்று விடக்கூடாது.
சர்வசக்தி இந்தியா இயக்கம்
அன்புடையீர், வணக்கம்!
பெண் விடுதலை, உரிமை, ஆளுமை ஆட்சி அதிகாரம் போன்றவற்றால் மட்டுமே பெண்கள் பாலியல் ரீதியாக சுரண்டப்படுவதையும் அடிமைப் படுத்தப் படுவதையும் ஒழிக்க முடியும். பாலின சமத்துவத்தை நிலைநாட்ட முடியும்.
பெண்களின் அரசியல் ஈடுபாட்டை முழு அளவில்
முழு மனதுடன் ஆதரிக்கும் அனைவரும்
முழுக்க முழுக்க பெண்கள் ஆட்சிபீடத்தில் அமர்ந்து நாட்டின் செயல்திட்டங்களை வகுக்கும் ஆளுமை உடையவர்கள் என்ற நம்பிக்கையின் அடிப்படையில்
1. சர்வசக்தி பெண்கள் கட்சி Almighty Ladies Party
2. சர்வசக்தி ஆண்கள் கட்சி Almighty Gents Party
என்ற இரண்டு கட்சிகள் மட்டுமே உள்ள இரட்டைக் கட்சி அரசியலமைப்பை, சாதி மத வலது இடது போன்ற சித்தாந்த கொள்கைகள் கொண்ட பல கட்சி அரசியல் அமைப்புக்கு மாற்றாக, கொண்டு வருவோம்.
வருகிற நகர உள்ளாட்சி மன்ற தேர்தலில் பெண்கள் சார்பாக உங்கள் வார்டு பிரதிநிதி வேட்பாளராக, மற்றும் உள்ளாட்சி மன்ற தலைவர் பதவிக்கான வேட்பாளராக பெண்களை போட்டியிட தேர்வு செய்ய, கேட்டுக்கொள்கிறோம்.
அறிவுடைய ஆளுமை உடைய பெண்களே உங்கள் வார்டு அளவில் பெண்கள் கட்சியை துவக்கி அரசியலில் ஈடுபட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்
எம் சி எஸ் இராஜாராமன்
944 25 82 105
Almighty India Movement