2021 ல் தமிழ் சினிமா எப்படி இருந்தது..என்று பார்க்கும் போது, படு பிற்போக்கான ஹீரோயிசப் படங்கள், ரத்த வாடை வீசும் வன்முறை படங்களுக்கு மத்தியில், நம்மை பெருமிதம் கொள்ள வைத்த படங்களும் கணிசமாகவே வெளியாகியுள்ளன!
பெருந்தொற்று காலம் சற்றே மட்டுப்பட்ட ஜனவரி 2021 தொடங்கிய போது, அணை போட்டு தடுக்கப்பட்டிருந்த வெள்ளம் பீறிட்டு பாய்வது போல மாஸ்டர்,கர்ணன், ஈஸ்வர்ன், பூமி,காடன், அதிகாரம்..என வரிசையாக படங்கள் வெளியாயின! அதற்குப் பிறகு சற்றே தொய்வு ஏற்பட்டு, பிறகு மீண்டும் வீரியம் பெற்று ஆண்டு முழுவதற்குமாக சுமார் 180 படங்கள் வெளி வந்துள்ளன!
தியேட்டரில் வெளியாவதை மட்டும் நம்பியிராமல் ஒடிடி தளத்திலும் தற்போது கணிசமான படங்கள் வெளிவரத் தொடங்கிவிட்டன. தற்போது சிறிய பட்ஜெட் படங்கள் தொடங்கி பெரிய படங்கள் வரை ஒடிடி தளத்தில் வெளிவருவது தவிர்க்க முடியாததாக பெருந்தொற்று காலத்தில் உணரப்பட்டது.
பா.ரஞ்சித்தின் சார்பட்டா பரம்பரை, சூர்யாவின் ஜெய் பீம் போன்றவை அமேசான் பிரைமில் வெளி வந்து பெரும் கவனம் பெற்றன! டிக்கிலோனா, மலேசியா டு அம்னீசியா..போன்றவை ஜீ 5ல் வந்தன! நடுவன், சிவரஞ்சனியும்,சில பெண்களும் போன்றவை சோனி லைவ்வில் வந்தன. நவரச, ஜெகமே தந்திரம் போன்ற்வை நெட் பிளிக்கிஸில் வந்தன. தெலுங்கு, மலையாளத்தில் இருந்தும் சில படங்கள் ரீமேக் செய்யப்பட்டு வந்துள்ளன!
படங்கள் தயாரிக்கப்பட்டும், வெளியிடப்பட்டும் வந்தால் மட்டுமே திரைபடத் துறையை நம்பியுள்ள ஏராளமான கலைஞர்கள், தொழிலாளர்கள் வீட்டில் அடுப்பெறியும்! அந்த வகையில் பெரிய பட்ஜெட் படங்களை விட நடுத்தர மற்றும் சிறிய பட்ஜெட் படங்கள் தான் திரைப்படத் துறையை உயிர்ப்போடு வைத்துள்ளன!
பெரிய பட்ஜெட் படங்களில் உச்ச நடிகர் ஒருவரின் சம்பளமே தயாரிப்பு செலவில் சுமார் 60 சதவிகிதமாக இருக்கிறது. மிச்ச நாற்பது சதவிகிதத்தில் தான் தயாரிப்பு செலவு, அனைவரின் சம்பளம், விளம்பரம் எல்லாம் அடக்கப்படுகிறது.
இந்த தனி நபர் ஹீரோயிசப் படங்கள் காலப் போக்கில் மெல்ல காலாவதி ஆகலாம் என உணர்த்துமாறு தான் இந்த ஆண்டு வெளி வந்த ‘அண்ணாத்தே’ படம் அமைந்தது. ஆனால், படத்திற்கு மக்களிடம் பெரிய வரவேற்பு இல்லையென்றாலும் சன் பிக்சர்ஸ் தன் முரட்டுத்தனமான வியாபார அணுகுமுறைகளால் 240 கோடி வசூல் பார்த்ததாக சொல்கிறது. நஷ்ட கணக்கு மறைக்கபடுவதன் வழியே கருப்பு பணம் வெள்ளையாக்கப்படுவதும் உண்டு!
நடிகர் விஜய்யின் ‘மாஸ்டர்’ படம் தான் இந்த ஆண்டில் வசூலில் முதல் இடம் பிடித்த படம் எனப்படுகிறது. இரண்டாவதாக ‘அண்ணாத்தே’யும் மூன்றாவதாக சிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’ வசுலில் முதல் மூன்று படங்களாகும். நான்காவதாக மிகச் சிறிய பட்ஜெட்டில் தயாராகி, சுமார் 100 கோடி வசூல் ஈட்டித் தந்து தயாரிப்பாளரையும், தியேட்டர்காரர்களையும், விநியோகஸ்தர்களையும் லாபம் பார்க்க வைத்த படம் ‘மாநாடு’. இயக்குனர் வெங்கட் பிரபு, தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, சிம்பு மூவரின் கூட்டணியின் சின்சியரான முயற்சி வீண்போகவில்லை. மாரி செல்வராஜின் ‘கர்ணன்’, கார்தியின் ‘சுல்தான்’, சுந்தர் சி யின் ‘அரண்மனை 3’ ஆகியவையும் வசூலில் மனநிறைவைத் தந்த படங்களாக சொல்லப்படுகின்றன!
இந்த ஆண்டு வெளி வந்த படங்களில் அடித்தட்டு மக்களின் வலியை, மிக ஆழமாகச் சொல்லி வெற்றி கண்ட படங்களாக கர்ணன், சார்பட்டா பரம்பரை, ஜெய்பீம், ஜெயில், மண்டேலா..போன்றவை குறிப்பிடத்தக்கவையாகும்.
‘சார்பட்டா பரம்பரை’ வட சென்னை வாழ் உழைக்கும் மக்களிடையே அந்த காலத்தில் கோலோச்சிய பாக்ஸர்கள் பற்றியும், அதில் நிலவிய உள்ளீடாக உழன்ற சாதியப் பார்வைகள் மற்றும் அரசியல் போக்குகளையும் காட்சிபடுத்தியது.
தங்கள் கிராமத்தில் பேருந்து நின்று செல்ல வேண்டும் என்பதற்காக உயிரைக் கொடுக்கும் அளவுக்கு போராட்டம் நடத்த வேண்டிய அவல நிலையில் உள்ள எளிய தாழ்த்தப்பட்ட மக்களின் உயிர்வாதையை சொல்லிய முக்கியமான படம் ‘கர்ணன்’. இதில் ஹீரோயிச முன்னெடுப்பும், போலீஸ் மீதான மிகைப்படுத்தப்பட்ட ஒரு சார்பு பார்வையும் சற்றே தவிர்க்கப்பட்டிருந்தால், படம் இன்னும் முக்கியத்துவம் பெற்று இருக்கும்.
இது வரை சொல்லப்பாத பழங்குடி மக்களின் வாழ்வியலையும், செய்யாத குற்றத்திற்காக அவர்கள் காவல்துறையால் சித்திரவதை அனுபவிப்பதையும்,அவர்களின் நியாயத்திற்காக போராடும் வழக்கறிஞரையும் மிக தத்ரூபமாக காட்சிபடுத்தி முக்கியத்துவம் பெற்றது ‘ஜெய்பீம்’!
பெரு நகரங்களில் சேரிப் பகுதிகளில் வாழ்ந்த மக்களை அநியாயமாக கொத்தாக தூக்கி புறநகர் பகுதியில் வீசி எறிந்து, அவர்களின் உழைப்பெனும் சமூக பங்களிப்பை உதாசீனம் செய்வதோடு, அவர்களை சமூக விரோத சூழலுக்கும் கொண்டு செல்கிற சமகால சமூக அநீதியை காட்சிபடுத்த முயன்றதில் ‘ஜெயில்’ கவனம் பெற்றது.
ஒரு முடித்திருத்தும் தொழிலாளியை மையப்படுத்தி அதன் வழியாக சமகால அரசியலையும், சாதிய பாகுபாட்டு அணுகுமுறைகளையும் எள்ளலோடு சொல்லிய வகையில் யோகிபாபு நடித்த மண்டே;லா முக்கிய படமாகிறது. இந்தப் படம் ஆஸ்கார் விருதுக்காக அனுப்ப தேர்வு பெற்றுள்ளதாகவும் பேச்சு அடிபடுகிறது.
‘மாநாடு’ படம் இஸ்லாமியர்கள் குறித்து கட்டமைக்கப்பட்டுள்ள வெறுப்பு அரசியலை அழகாக கேள்விக்கு உட்படுத்தியது.
இவை தவிர பெண்ணியப் பார்வையில் அவர்களின் சொல்லப்படாத வலியை, புதைத்து வைத்த வேதனைகளை அழகியலோடு கலாபூர்வமாக சொல்லிய படங்களாக ‘ஐந்து உணர்வுகள்’, ‘சிவரஞ்சனியும், இன்னும் சில பெண்களும்’ படத்தை குறிப்பிடலாம்! பிரபல எழுத்தாளர் ஆர்.சூடாமணியின், ஐந்து சிறுகதைகளை அற்புதமாக காட்சிப்படுத்திய வகையில் குடும்பங்களிலும், பொது வெளிகளிலும் பெண்கள் சந்திக்கும் சவால்களை அழகாக காட்சிபடுத்தி இருந்தார் இயக்குனர் ஞான சேகரன்! அதே போல இயக்குனர் வசந்தும் குடும்பங்களில் பெண்கள் சந்திக்கும் அலட்சியங்களை, புறக்கணிப்புகளை மிக நுட்பமாக காட்சிப்படுத்தி இருந்தார்!
‘தலைவி’ என்ற பெயரில் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோரின் கவர்ச்சி அரசியலை நியாயப்படுத்தியும், ஜெயலலிதாவின் மக்கள் விரோத, ஊழல் மற்றும் அடிமை ராஜ்ஜியத்தை மறைத்தும் எடுக்கப்பட்ட படம் பெரும் தோல்வி கண்டது.
’83’ படம் கிரிக்கெட் வரலாற்றில் கபில் தேவின் சகாப்தத்தை பதிவு செய்து விளையாட்டு ஆர்வலர்களின் கவனம் ஈர்த்தது. பாரதிராஜா நடித்த ராக்கி கொடூர வன்முறை ரத்தம் தெறிக்கும் காட்சிகளை பதிவு செய்து ரவுடி அரசியலை மிகைப்பட காட்சிபடுத்தியது.
Also read
காவல்துறையின் அத்துமீறல்களை அதில் உழன்று கொண்டிருக்கும் மனசாட்சியுள்ள ஒரு ரைட்டரின் பார்வையில் சொல்லி மனதை அள்ளிய படம் ரைட்டர். இறந்து போன ஒரு மனிதனின் பிணத்தை அடக்கம் செய்வதில் ஏற்படும் மத அரசியலை நையாண்டியுடன் காட்சிபடுத்தியது புளு சட்டை மாறனின் ஆண்டி இந்தியன்!
மொத்தத்தில் இந்த ஆண்டு தமிழ் சினிமா குறிப்பிடத்தக்க அளவில் புதிய முயற்சிகளை முன்னெடுப்பதில், சமூக நலன் சார்ந்த பார்வையுடன் அணுகியுள்ளது என்பதை மறுக்கமுடியாது!
சாவித்திரி கண்ணன்
அறம் இணைய இதழ்
Leave a Reply