தேவதாசி முறையின் தீமையைச் சாடும் ஷ்யாம் சிங்கா ராய்!

- தயாளன்

தெலுங்கு படங்கள் என்றால், அதிரடி சண்டை, குத்தாட்டங்கள் கொண்ட காரசாரமான மசாலா படங்கள் தான் என்பதை தகர்த்துவிட்டது ஷ்யாம் சிங்கா ராய்! தேவதாசி முறையின் சுரண்டல், மென்மையான காதல், இடதுசாரி எழுத்தாளனின் ஆளுமை, தலித்கள் மீதான வன்கொடுமை, போன்றவற்றை கலையம்சத்துடன் சொல்கிறது! விறுவிறுப்பான ஒரு வணிக சினிமாவில் இவை காட்சிப்படுத்தப்படும் போது இப்படியும் தெலுங்கு சினிமா இருக்கிறதா..? என்று வியக்கத் தோன்றுகிறது.

பொதுவாகவே, மலையாளம், தமிழ், கன்னட, வங்காள மொழிப் படங்கள் நல்ல கலையம்சத்துடனும், கதைகளுடனும் வெளிவருகின்றன. அது போல தெலுங்கு மொழி சினிமாவில், நல்ல  கலாபூர்வமான காட்சி மொழியில் படங்கள் வெளிவருகின்றன என்பது மகிழ்ச்சியளிக்கிறது!

அந்த வகையில் சமீபத்தில் வெளியாகி தற்போது மிகவும் பேசப்படும்  ஷ்யாம் சிங்கா ராய் என்ற படம் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.  நானி, சாய்பல்லவி, கீர்த்தி ஷெட்டி, மடோனோ செபஸ்டியன் நடித்துள்ள இப்படத்தை ராகுல் சாங்கிரித்தியன் இயக்கியுள்ளார். தமிழ் உள்ளிட்ட ஐந்து மொழிகளில் வெளி வந்துள்ளது.

நேரடியாகவே, படம் பார்ப்பன மேலாதிக்கத்தை சாடுகிறது. கோவிலில் பெண்கள் பாலியல் சுரண்டலுக்கு உள்ளாவதை காட்சிப்படுத்தியிருக்கும் விதம் நம்மை பதை,பதைக்க வைக்கிறது.  மேற்கு வங்காளத்தில் இடதுசாரி இயக்கங்களின் வளர்ச்சியும், ஆட்சியும் இருந்தாலும் 1975 வரைக்கும் தேவதாசி என்னும் கொடுமையான பழக்கம் இருந்ததை படம் சொல்லும் போது, நமக்கு வியப்பும், அதிர்ச்சியும் ஏற்படுகிறது.

மேற்கு வங்கத்தை ஒப்பிட்டு பார்க்கும் போது, தமிழ்நாடு தான் எவ்வளவு முன்னால் இருந்திருக்கிறது? என்பதை நினைக்காமல் இருக்க முடியவில்லை.

படத்தின் கதை புனர் ஜென்மம் என்ற அடிப்படையில் சொல்லப்பட்டிருந்தாலும், இரண்டாம் பாதியில் வரும் ஷ்யாம் சிங்கா ராய் என்ற இடதுசாரி எழுத்தாளரின் கதை மிக அழுத்தமாக, வலுவாக சொல்லப்பட்டிருக்கிறது.

இளம் இயக்குனராக துடிக்கும் நானி, குறும்படம் ஒன்றை இயக்கி அதன் மூலம் பெரிய சினிமா இயக்கும் வாய்ப்பை பெறுகிறார். இந்த பாத்திரத்தில் நானி துள்ளலான நவீனமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். குறும்படத்தில் நடிக்க வைப்பதற்காக நடிகைகளை தேர்வு செய்யும் முதல் காட்சியில் தொடங்கி, இடைவேளை வரை கதாபாத்திரத்தின் நுட்பங்களை வெளிப்படுத்துகிறார்.

அவர் இயக்கிய படம் வெளியாகி மாபெரும் வெற்றி பெறுகிறது. அதன் பின்புதான் அவர் இயக்கிய கதை வேறொரு நிறுவனத்துடையது என்று அவர் கைது செய்யப்படுகிறார். ஆனால், இந்தக் கதை தான் எழுதியது என்று உறுதியாக சொல்கிறார் நானி. அப்போதுதான் ஷ்யாம் சிங்காராயின் கதை திரையில் விரிகிறது.

சிங்காராய் பாத்திரத்திலும் நானியே நடித்திருந்தாலும், முற்றிலும் மாறுபட்டவராக தோற்றம் காட்டுகிறார். இடைவேளை வரை நடித்த நடிப்பிலிருந்து உருமாறி, கொள்கைப் பிடிப்பும், உறுதியும் கொண்ட இடதுசாரி எழுத்தாளனாக வாழ்ந்திருக்கிறார்.

மிகப் பழமையான வங்காள நிலப்புரபுத்துவ சமூகத்தின் சாதிய கொடுமைகளை தட்டிக் கேட்கும் பாத்திரத்தில் அவர் மிளிர்கிறார். ஆயுதங்களை நம்பாமல் தன்னுடைய பேனாவையே ஆயுதமாக கருதும் எழுத்தாளராக வாழ்ந்து காட்டுகிறார்.

 1960களின் பிற்பகுதியில் நடக்கும் கதையில் வங்காளத்தின் கோவில்களில் தேவதாசி முறை இருந்ததாக படத்தின் கதை சொல்கிறது. அதில் தேவதாசியாக வரும் சாய் பல்லவியின் கண்களும் முகமும் அவர் காட்டும் பாவங்களும் இதுவரை திரையில் சொல்லப்படாதவை.

சாய்பல்லவிக்கென்றே அளந்து தைத்த பாத்திரம் அது. நடனக் காட்சிகளில் அவர் காட்டும் நளினமும், கோபமும், நானியை கூட்டத்தில் தேடும் போது காட்டும் நமட்டுச் சிரிப்பும், ஒடுக்குமுறைக்கு ஆளாகும் போது அவர் காட்டும் உறுதியும், சுயமரியாதையை வெளிப்படுத்தும் போது அவரிடம் வெளிப்படும் உடல் மொழியாகட்டும் இந்தியாவின் மிகச் சிறந்த நடிகைகளில் ஒருவராக சாய்பல்லவியை வரலாறு அடையாளம் காட்டக்கூடும்.

நானியுடன் காதல் வசப்பட்டு, அவரால் தேவதாசி முறையிலிருந்து விடுதலை ஆகி வெளியேறிய பிறகும், தன்னுடன் இருந்த தேவதாசிகளுக்காக நானியுடன் பேசுகிறார்.

ஷ்யாம் சிங்காராய் தனது கதைகளிலும், எழுத்துக்களிலும் தேவதாசி முறை ஒழிக்கப்பட வேண்டும் என்று கடுமையாக எழுதுகிறார். தேவதாசி முறை ஒழிக்கப்பட்டு கோவில்களில் இருந்த தேவதாசி பெண்களுக்கான மறுவாழ்வுக்கு நடவடிக்கைகள் தொடங்குகின்றன.

ஆனால், எழுத்தாளர் ஷ்யாம் சிங்கா ராய் தனது குடும்பத்தாராலேயே சாதி ஆணவக் கொலை செய்யப்படுகிறார். சாய் பல்லவி அவருக்காக காத்திருக்கிறார்.

இந்த சினிமாவில், கோவில்களில் தேவதாசி நடன முறை அற்புதமாக காட்சிப் படுத்தப்பட்டிருக்கிறது. கலை இயக்குனரும், உடை அலங்காரம் செய்பவரும் அவ்வளவு மெனக்கெட்டு இருக்கிறார்கள் என்பது படத்தின் ஒவ்வொரு ப்ரேமிலும் தெரிகிறது. சாய்பல்லவியும், அவரைச் சேர்ந்த பெண்களின் உடைகளும் வரலாற்று ஆவணங்களாய் நிற்கின்றன.

படத்தின் ஒளிப்பதிவும் நேர்த்தியும் துல்லியமாகவும் இருக்கிறது. 2021ல் நடக்கும் கதைக்கு என்று தனித்த ஒளிப்பதிவும், 1960களில் நடக்கும் கதைக்கு தனித்த ஒளிப்பதிவும் வண்ணமும் இணைக்கப்பட்டு காட்சிகள் மனதைக் கவருகின்றன. இசையும் பல்வேறு இடங்களில் கச்சிதமாக இருக்கிறது.

திரைக்கதையில் ஆங்காங்கே ஹிரோயிசம் எட்டிப் பார்க்கிறது. ஆனாலும், படத்தின் காத்திரமான கதைக்கு முன்னால் அது பெரிய விஷயமாக இல்லை.

தேவதாசி பெண்களை தனது பாலியல் இச்சைக்கு பயன்படுத்தும் வைதீக குருவை நானி புரட்டி எடுக்கிறார். திரையரங்கம் ஆர்ப்பரிக்கிறது.  நேரடியாகவே அந்த வைதீக குருவின் சாதிய மேலடுக்கு காட்டப்படுகிறது. ஒரு காலண்டர் காட்சிக்கே தமிழ் நாடு அல்லோகலப்பட்டது என்னும் போது இப்படி ஒரு காட்சியை தெலுங்கு சினிமா போகிற போக்கில் காட்டுகிறது. இயக்குனரின் துணிச்சல் வியப்பாக இருக்கிறது.

படத்தில் காந்தி, அம்பேத்கார், மார்க்ஸ் ஆகியோரின் படங்களும் அவர்களது பொன்மொழிகளும் காட்டப்படுகின்றன.

ஷ்யாம் சிங்காராயின் எழுத்துக்கள் மேற்கு வங்கத்தில் தேவதாசி முறையை ஒழித்திருக்கின்றன என்னும் கதை இந்தப் படத்தில் காத்திரமாக சொல்லப்படுகிறது. இதுவும் ஒரு வணிகதிரைப்படம்தான். ஆனாலும் எடுத்துக் கொண்டிருக்கிற கரு நம்மை கட்டிப் போடுகிறது.

தெலுங்கு சினிமா முன்பு போல மசாலா சினிமா இல்லை. அது தொழில் நுட்பத்திலும் கதையாடலிலும் உலகத் தரத்தை நோக்கி முன்னேறிக் கொண்டிருக்கிறது என்றால் மிகையில்லை.

தயாளன், 

[email protected]

 

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time