வள்ளுவர்களின் கணிப்புப்படி, சென்னை பெருமழையின் அறிகுறி என்ன?

-வெள் உவன்

சமீபத்திய மழையில் சென்னை ஸ்தம்பித்து, திணறியது! கால நிலை மாற்றங்கள்  நம்மை கலவரப்படுத்துகின்றன! இந்த மார்கழி மழையை பலர் மர்மாகவும், புதிராகவும் உணர்ந்தனர். நமது மரபில் மழை முன்கணிப்பிற்கு முன்னோர்களால் கடைபிடிக்கப்பட்டு வந்த கரு ஓட்ட கணக்குப்படி, மார்கழி கர்ப்போட்ட காலங்களில் கன மழை பொழிந்தால் என்ன விளைவுகள் ஏற்படும் என்பதற்கு தெளிவான விடை உள்ளது!

இந்த ஆண்டு பருவமழை காலங்களில் அதிகமான மழை பொழிவின் நீர்ப் பெருக்கால் சென்னை மிகவும் அல்லலுற்றது. இதற்குப் பல்வேறு காரணங்கள் பல்வேறு வகையினரால் சொல்லப்பட்டன. நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு, நீர் வழித்தடங்களில் உருவாக்கிய தடைகள், உலக வெப்பமயமாதல் என்பதான பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகின்றன!

இந்த கூற்றுகளில் உண்மை இல்லாமல் இல்லை.

சுற்றுச்சூழலில் ஏற்பட்டிருக்கும் பெரும் மாற்றங்களே  மழை பொய்த்துப் போக காரணமாக இருக்கிறது! உதாரணத்திற்கு தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை தொடங்கப்பட்டதில் இருந்து மழைப் பொழிவு கடும் பாதிப்புக்கானது. தற்போது மூன்றாண்டுகளாக ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டு உள்ளதால் வழக்கமான மழையை பார்க்க முடிகிறது.

ஆனால் 2021 ஆம் ஆண்டு முடியப் போகும் தருணத்தில் அதாவது டிசம்பர் மாதம் 30 ஆம் நாள் பெய்த வழக்கத்துக்கு மாறான பெருமழை  நமது மரபில் சிலவற்றை புரிந்து கொண்டால் அது எதற்கான அறிகுறி என்பது தெரியவரும்.

இந்த கரு ஓட்டம் ஒவ்வொரு மார்கழி மாதம் சூரியன் தனுர் ராசியில் நுழைந்து கடக்கும் 14 நாட்களில் காணப்படும் தட்பவெட்ப நிலையை பொறுத்து, எதிர்வரும் ஆண்டில் மாதங்களில் மழை பொழிவு எப்படி இருக்கும் என்பதை முன்கணிப்பு செய்யும் முறையாகும்!

அதன்படி இந்த ஆண்டுக்கான கருவுற்ற காலம் மார்கழி மாதம் 14ஆம் நாள் அதாவது டிசம்பர் 29ஆம் தேதி தொடங்கியது. மார்கழி மர்ம மழை டிசம்பர் 30 அன்று சென்னையில் பெரு மழையாக கொட்டியது. இது கரு ஓட்டம் தொடங்கிய மறு நாள் ஆகும்.

கரு ஓட்ட கணக்குப்படி கர்ப்போட்ட காலங்களில் கன மழை பொழிந்தால் குறிப்பிட்ட எதிர்வரும் மாதத்தில் மழை பொழிவு இல்லாமல் பொய்த்துப் போகும் என்று கணிப்பர். அதாவது அந்த குறிப்பிட்ட மாதத்திற்கான கரு கலைந்து போனது என்று சொல்லுவர். இந்த கூற்றின்படி மார்கழி மாத சென்னை மாநகரின் பெருமழைக்கு காரணம், மழை மேகக் கரு கலைந்தது தான் என்று கருத முடியும்.

இன்றைய காலகட்டத்தில் நாம் சுற்றுச்சூழலை வெகுவாக கெடுத்து வைத்திருக்கிறோம். இதன் விளைவாக கர்ப்போட்டக் கணிப்புகள் சிறிதே தவறிப் போகும் சாத்தியம் உண்டு!

நம் முன்னோர்கள் அந்தக் காலத்தில் மழை முன்கணிப்புக்கு  கணித்துக் கூறும் தொழில்நுட்பவாதிகளை வள்ளுவர் என்று குறிப்பிடப்பட்டனர். வள்ளுவர்கள் கணிக்கும் இந்த முறைக்கு “கருவோட்டம்” அல்லது “கர்ப்போட்டம்” என்று பெயர்!  இந்த வள்ளுவர்கள் யாரென்றால் தமிழகச் சாதிபிரிவில் ஒன்றான வள்ளுவ சாதியை சேர்ந்தவர்கள் ஆவர். பழைய காலத்தில் மன்னனின் குருவாகவும், அவனது ஆணையை அறிவிப்பு செய்பவராகவும் இவர்கள் இருந்திருக்கிறார்கள். பழங்கால அரச முறையில் ‘உள்படு கருமத்தலைவன்’ என்னும் பதவி ஒன்று இருந்திருக்கிறது. அது இந்த வள்ளுவர்களுக்கானது.

அறிவியலும், தொழில் நுட்பமும் வளர்ந்திருக்கிற தற்காலத்தில் சில நுட்பமான கருவிகள் துணை கொண்டு வானிலை ஆய்வு மையம் ஏற்படுத்தப்பட்டு சுமார் 130 ஆண்டுகள் ஆகின்றன. ஆனால் பெரும்பாலும் அந்த மையம் துல்லியமாக மழை குறித்து சொன்னதில்லை! வறட்சியை முன்கூட்டியே கணித்துக் கூறியதாகவும் தெரியவில்லை. இது ஒருபுறம் இருக்கட்டும்.

வானியல் ஆய்வு மையங்கள் எல்லாம் வருவதற்கு முன்னால் நம்மூரில் மழையை முன்கணிப்பு செய்வதில் சிறந்து விளங்கினர்! பாரம்பரியமாக ஆதியிலிருந்து முக்கிய வேலையாக நம்மூரில் இருந்து வருவது உழவே. அவ்வாறான உழவுக்கு அடிப்படை நீர். நீரின் மூலம் மழை. எனவே உழவுக்கு மழைப் பற்றிய முன்கணிப்பு மிகவும் தேவையாய் இருந்து வந்திருக்கிறது.

முதலில் இயற்கையை நுண்மையாக கவனித்து சில அனுபவங்கள் மூலம் அதைத் துல்லியமாகக் கணிக்கப் பழகினர். மழை பெய்தலுக்கும், பொய்த்தலுக்கும் இயற்கையின் சில நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டு சில நம்பிக்கைகளை உண்டாக்கி வைத்திருந்தனர். மழைக்கு அடிப்படை சூரியன் என்பதான இயற்கையின் புரிதலின் ஊடாக மழை பெய்தலுக்கான ஒரு நம்பிக்கையை உண்டாக்கி வைத்திருந்தனர். சூரியனையும், சந்திரனையும்  சுற்றி ஊர்கோள் வட்டம் அதாவது, ஒளிவட்டம் காணப்பட்டால், அது மழைக்கான அறிகுறி என்று கண்டனர். இதைப் பரிவேடம் என்றனர். இது போல் தட்டான் தாழப் பறப்பது, பருந்து சிறகு விரித்தபடி வெயிலில் நிற்பது..போன்றவை எல்லாம் மழைக்கான அறிகுறி என்று கொண்டனர்.

சூரியன் மறையும் போது பக்கத்தில் மற்றொரு பொய் சூரியனைக் கண்டால் மழைக்குரிய அடையாளம் என்பர். இந்த அறிகுறிகளின் அடிப்படையில் விவசாய வேலைகளுக்கான முன்னெடுப்புகளில் ஈடுபடுவர்.  அது போல் மழைப் பொய்ப்புக்கான அடையாளங்களையும் கண்டடைந்திருந்தனர்.

இப்படியான அடையாளங்களையும் தாண்டி, அந்தக் காலத்தில் வேறு ஒரு முறையையும் கையாண்டு வந்திருக்கின்றனர்.  பஞ்சாங்கத்தில் வானியல் தொடர்பான கணக்குகள் இடம் பெற்றுள்ளன ! அந்த வகையில் தட்பவெப்ப நிலையை பருவகால மாற்றங்களை முன்பே கணிக்கும் முறைகள் கூட அதில் சொல்லப்பட்டுள்ளன! கிராமப் புறங்களில் இன்றும் கூட இந்த முறையில் விவசாயிகள்  மழைக் கணிப்பு செய்து வருகிறார்கள் !

கோள்களின் நிலையை வைத்து வானியல் அறிவின் துணையுடன் எதிர்காலத்தைக் கணிக்கும் முறையிலும் தேர்ச்சிப் பெற்றிருந்தனர் வள்ளுவர்கள். ஜோதிடத்திற்கு வள்ளுவ சாத்திரம் என்ற பெயரும் உண்டு. இவைத் தவிர, பூசாரிகளாகவும், மதகுருவாகவும், வள்ளுவர்கள் இருந்திருக்கின்றனர். இவ்வாறு மதச் சடங்குகள் செய்தவர்களை வள்ளுவப் பண்டாரம் என்று குறிப்பிட்டனர். தற்காலத்தில் இவர்கள் ‘வள்ளுவ பறையன்’ என்ற பெயரில் பட்டியல் சாதிக்குள் இருக்கிறார்கள். அயோத்திதாச பண்டிதரும், முன்னாள் மாநில அமைச்சர் கக்கனும் இந்த சமுகத்தைச் சேர்ந்தவர்கள் என்பது கவனத்திற்குரியதாகும்.

வானிலையை கணிக்கும் வள்ளுவ பண்டாரங்கள்

’மார்கழி மாதம் தனுசு ராசியில் சூரியன் நகரும் பதினான்கு நாள்களில் காணப்படும் தட்பவெப்ப நிலையைப் பொருத்தே எதிர்வரும் ஆண்டின் குறிப்பிட்ட மாதங்களின் மழைப்பொழிவு இருக்கும் என்பது சூடாமணி பாடலில் சொல்லப்பட்டுள்ள கருத்து.

கர்ப்போட்ட முறையில் எதிர்வரும் 12 மாதங்களுக்கான (அதாவது ஒரு வருடம்) மழை நிலவரத்தை முன்கூட்டியே கணித்து விட முடியுமாம்.  பூமி சூரியனை சுற்றி வருகிறது என்பது அறிவியல். இந்த சுழற்சியை அடிப்படையாகக் கொண்டே கர்ப்போட்டம் கணிக்கப்படுகிறது. இவ்வாறான சுழற்சியில் ஒவ்வொரு ராசியை கடக்க முப்பது நாள்கள் ஆகின்றன. இப்படி 12 ராசிகளை கடக்கும் காலமே 12 மாதங்கள் கொண்ட ஆண்டாகக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு ஒவ்வொரு ராசியை கடக்கும் போதும் அதிலுள்ள நட்சத்திரங்களையும் கடந்து செல்கிறது. இதில் தனுசு ராசியை கடக்கும் போது அதிலிருக்கும் பூரடம் நட்சத்திரத்தைக் கடக்க 14 நாள்கள் எடுத்துக் கொள்ளப்படுகிறது.

இந்தக் கடவு மார்கழி மாதத்தில் நடைபெறுகிறது. இந்த 14 நாள்களிலும் (ஏறக்குறைய டிசம்பர் 28 முதல் ஜனவரி 11 வரை) காணப்படுகின்ற தட்பவெப்ப நிலையை அடிப்படையாக வைத்து  அடுத்த ஓராண்டிற்கான மழைக் கணிக்கப்படுகிறது

இந்த 14 நாள்களிலும் வானம் மப்பும் மந்தாரமுமாக இருத்தல், லேசான தூறல் இருத்தல், கருமேகங்கள் வானில் திரிதல், மேகமூட்டமாக இருத்தல் போன்றன அந்தத்த நாளுக்கான எதிர்வரும்  மாதத்தில் மழை இருக்கும் என்பதற்கான அறிகுறிகள் ஆகும்.

அந்த நாட்களில்  நல்ல வெயில் அடித்தல், கனமழை பெய்தல், வானத்தில் வெள்ளை மேகங்கள் திரிதல், வானம் வெட்டவெளியாக இருத்தல் போன்றன எதிர்வரும் மாதத்தில் மழை பொய்த்துப் போகும் என்பதற்கான அறிகுறிகளாகும். மேலும் கர்ப்போட்டகாலத்தில் காற்று, மழை, மின்னல், இடி, மேகமூட்டம் போன்றனவையும் கவனிக்க வேண்டிய பிற காரணிகள் ஆகும். அவை பற்றியும் அவற்றின் பலன்கள் பற்றியும் சொல்லப்பட்டிருக்கின்றன. அவற்றை விரிவாய் பார்ப்போம்

காற்றோட்டம்:

கர்ப்போட்ட காலத்தில், காற்று மழை மின்னல் இடி மேகமூட்டம்  போன்றனவற்றை தினமும் கவனித்து வர வேண்டும்.  இவற்றின் தன்மைக்கு ஏற்றப்படி எதிர்வரும் காலத்தில் பலன்கள் அமையும் என்று சொல்லப்படுகின்றன.  மிதமான நல்ல காற்று இருந்தால் நல்ல மழைக்கான அறிகுறி. வடக்கு, வடகிழக்கிலிருந்து குளிர் மிதமான காற்று வீசினால் நல்ல மழை அறிகுறி. அதிகமான காற்று காணப்பட்டால் மழை மேகங்கள் கூடி சிதறும். புழுதிப் புயலுக்கு மழை இருக்காது.

மழை;

பொதுவாக மார்கழி மாதத்தில் மழை இருக்காது. ஆனால் மார்கழியில் கர்ப்போட்ட காலத்தில் அதிகமாக மழை பெய்தால், அதற்கான எதிர்வரும் காலத்தில்   மழை கண்டிப்பாக பாதிக்கப்படும். இலேசான தூறல் அல்லது சாரல் இருந்தால்,  நல்ல மழை உண்டு.

மின்னல்;

கர்ப்போட்ட நாளில் மின்னல் மின்னினால், எதிர்வரும் காலத்தில் நல்ல மழை இருக்கும். காலையிலோ அல்லது மாலையிலோ வானவில் காணப்பட்டால் நல்ல மழைக்கு வாய்ப்பு..

இடி;

கர்ப்போட்ட நாளில் மெல்லிய உருட்டொலியாக இடி இடித்தால்  எதிர்வரும் காலத்தில் நல்ல மழைக்கான வாய்ப்பு உண்டு. பலத்த இடியோசையானால்  மழை மேகங்கள் உண்டாகி சிதறி விடும்.

மேகம்;

கர்ப்போட்ட நாளில் ஆகாயத்தில் மிகப்பெரிய, பிரகாசமான, அடர்த்தியான மேகங்கள் எதிர்வரும் நாளின் நல்ல மழைக்கான அறிகுறி. அது போல் ஊசி, கத்தி வடிவில் மேகங்கள் காணப்பட்டாலோ நல்ல மழை உண்டு.

கர்ப்போட்டம் மூலம் ஒவ்வொரு ஊரின் வானிலையையும் கணிக்க முடியும் என்பது சிறப்பு. இன்றைய வானிலை அறிவிப்புப் போல, பொத்தாம் பொதுவாக தென்தமிழகம், வடத்தமிழகம், கடலோர மாவட்டங்கள் என்று சொல்லும் குழப்பங்கள் இதில் இல்லை. அந்தக் காலத்தில் வள்ளுவர்கள் கர்ப்போட்டத்தை கவனித்து மழை பெய்யுமா? பெய்யதா? என்று  கணித்து ஊர் பொதுவில் அறிவிக்கும் வழக்கம் இருந்து வந்தது.

இப்படி தான்  வள்ளுவர்கள்.  கர்ப்போட்டம் மூலம் கணித்து அதாவது  மேகம் கருக்கொள்ளுமா? சூல்கொள்ளுமா? அதனால் மழை பொழியுமா என்று பலன்களை சொல்லி வந்தனர். இது தான் மழைக்கணிப்புக்கான நமது பாரம்பரிய அறிவு. இந்த மரபு வழியில் இன்றும் திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்ட விவசாயிகள் மழைப் பற்றி முன்கணிப்பு செய்து வருகிறார்கள்.

இதிலிருந்து நாம் புரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால்,

கர்ப்போட்டக் கணக்குப்படி சென்னையில் அதிரடியாக பெய்துள்ள மார்கழி பெருமழை என்பது அடுத்த ஆண்டு சென்னையில் ஜீன், ஜுலையில் பெய்யும் தென் கிழக்கு பருவ மழையை பொய்த்துப் போக வைக்கும். நெல்லையில் சாதாரண தூறல் இருப்பதால் அந்தப் பருவத்திற்கான மழை பொழிவு நல்லபடியாக இருக்கும் என்று புரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது.

மரபுசார் அறிவுத்துறைகள் குறித்தத் தேடலும் அறிதலும் மீண்டெழுந்துள்ள நிலையில் அழிந்துகொண்டிருக்கும் இந்தக் கர்ப்போட்ட கணிப்பு முறையை நாம் இன்று சோதித்துப் பார்க்கலாமே.

கட்டுரையாளர்; வெள் உவன்

‘தகதகாயத் தமிழ் மரபு’, ‘நெல்லை வட்டார வழக்குச் சொல் அகராதி’ ஆகிய நூல்களின் ஆசிரியர்.

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time