எஸ்பி.பியின் மறைவைச் சுலபத்தில் ஒரு சம்பவமாகக் கடந்து செல்லமுடியவில்லை! நினைவு தெரிந்தது முதல் 50 ஆண்டுகளாக கேட்டு பழகிய குரல்! அந்தக் குரல் காதுகளில் நுழைந்ததா? இதயத்தில் படர்ந்ததா…,ரகசியங்களைப் பரிமாறியதா…?மனதில் உற்சாகம் கரைபுரள வைத்ததா? கண்களில் கண்ணீர் வழிய வைத்ததா…?பயணங்களில் துணையாக வந்ததைச் சொல்வதா? இரவெல்லாம் தூக்கம் வரும் வரை துணை நின்ற கருணையை சொல்வதா? ’’நமச்சிவாய, நமச்சிவாய ஓம் நமச்சிவாய’’ எனப்பாடிய போது பக்தி மனநிலையில் மனம் கசிந்துருக வைத்ததை சொல்வதா…!
அவரது மறைவு கோடிக்கணக்கான இசை ரசிகர்களை அதிர்ச்சியிலும், மீளதுயரத்திலும் ஆழ்த்தியுள்ளது. அதில் நானும் ஒருவன்! நேரில் பார்த்தேயறியாத அந்த மனிதன் எப்படி என் நெஞ்சுக்கு நெருக்கமானவராகிப் போனார்…என்று வியந்து போகிறேன்!
ஆனால்,ஒன்று,ஸ்ரீபதி பண்டிதரதயுல பாலசுப்பிரமணியம் இந்திய திரையுலகில் செய்த சாதனைகளை இன்னொருவர் இனி மிஞ்சவே முடியாது. பொதுவாக ஒரு சாதனையாளரை மிஞ்சக் கூடிய மற்றொருவர் தோன்றுவது இயல்பு தான்! ஆனால்,அதில் எஸ்.பி.பி மட்டும் விதிவிலக்கு!
16 மொழிகளில் 42,000 பாடல்கள்! 45 படங்களுக்கு இசையமைப்பு! பல நூறு படங்களுக்கு கதாநாயகனுக்கு பின்னணி குரல்! 73 திரைப் படங்களில் நடிப்பு! சுமார் 9 தொலைக்காட்சி தொடர்களில் நடிப்பு! நான்கு மொழிகளில் ஆறு தேசிய விருதுகள்,பல்வேறு மாநில அரசின் எண்ணற்ற விருதுகள்…இனி யாருக்கு கிடைக்கும் இந்த அரிய வாய்ப்பு! ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக ஒற்றை மனிதன் திரை இசை ராஜ்ஜியம் நடத்தினார் என்பதை எதிர்காலத் தலைமுறை மிகவும் ஆச்சரியத்துடன் தான் பார்க்கும்!
Also read
எஸ்.பி.பி அளவுக்கு இந்தியாவில் படுவேகமாக இயங்கிய ஒரு பாடகர் கிடையாது! ஒரே நாளில் 21 பாடல்களை19 பாடல்களையெல்லாம் பாடிக் கொடுத்த பெருமைக்குரிய ஒரே பாடகர்! ஒரு ஸ்டியோவிற்குள் நுழைந்தார் என்றால், 12 நிமிடத்தில் பாடலைப் பாடி வெளியேறிய சம்பவங்களும் நடந்துள்ளன! அந்த அளவுக்கு டூமச் பிஸி ஷெட்யூல்ட் கொண்ட பாடகராக அவர் விளங்கிய போதும் சிறிதும் கர்வமில்லாமல் எளிய மனிதனைப் போலவே நடந்து கொண்டார்.
1980 தொடங்கி கடைசி வரையில் விமானத்தில் அதிகமாகப் பறந்து,பறந்து, சென்னை, ஹைதராபாத், மும்பை, பெங்களுர்…என்று பாடல் ரிக்கார்டிங்குகளுக்காக பயணித்த பாடகர் அவர் ஒருவர் தான்!ரிகார்டிங்குகளுக்காக மட்டுமின்றி, இசைக் கச்சேரிகளுக்காகவும் அவர் உலகம் முழுக்க பயணித்துள்ளார்.அவர் பயணிக்காத நாடுகளே இல்லை என சொல்லக் கூடிய அளவுக்குப் பயணித்துள்ளார். ரஷ்யா போகமுடியவில்லை என நெடுங்காலமாக நினைத்திருந்தார்.அதுவும், நிறைவேறியது! ரஷ்ய ஜனாதிபதி மாளிகைக்கே சென்று பாடும் வாய்ப்பு பெற்றார்!
உலக அளவில் பேசப்பட்ட காந்தி திரைப்படத்தில், காந்தியாக நடித்த பென்கிங்ஸ்லிக்கு தான் குரல் கொடுத்த அனுபவத்தை பெருமையாகக் கருதினார் எஸ்.பி.பி! கமலஹாசனுக்கு மட்டும் 120 தெலுங்கு படங்களில் பின்னணி குரல் கொடுத்துள்ளார். தெலுகு மக்களைப் பொறுத்தவரைக் கமலையும்,எஸ்.பி.பியையும் பிரித்தே பார்க்கமுடியாது என்று சொல்லுமளவுக்கு மிக நெருக்கமாக இருந்துள்ளனர். இந்த வகையில் சுமார் இருபதிற்கும் மேற்பட்ட பெரிய நடிகர்களுக்கும் எஸ்.பி.பி பின்னணி குரல் கொடுத்துள்ளார்.
55 ஆண்டுகளில் நான்கு தலைமுறையைச் சேர்ந்த பல மொழிகள் பேசும் நூற்றுக்கணக்கான கதாநாயகர்களின் பாட்டுக் குரலாக அவர் ஒலித்துள்ளார். நான்கு தலைமுறை இசை அமைப்பாளர்களுடன் இணக்கமாக இயங்கியுள்ளார். நான்கு தலைமுறை பெண் பின்னணி பாடகிகளோடும் ’டூயட்’ பாடியுள்ளார்.தலைமுறை இடைவெளி அவரை தடுக்கவில்லை! மாறிய இசை கலாச்சாரத்தோடும் முடிந்த அளவு அவர் இணைந்து பயணிக்கவே செய்தார்! திரை இசையில் தாத்தா காலம் தொடங்கி கொள்ளுபேரன்கள் காலம் வரை அவர் இணைந்து பயணித்த ஒரு அபூர்வக் கலைஞர் என்று தான் சொல்ல வேண்டும்!
அவரது ஆரம்பக்கால பாடல்களில் ’’இயற்கை எனும் இளைய கன்னி’’ ’’தொடுவதென்ன தென்றலோ மலர்களோ…’’ ‘’முள் இல்லா ரோஜா…’’ பொட்டு வைத்த முகமோ’’…’’ அவள் ஒரு நவரச நாடகம்…’’ ’’வெற்றி மீது வெற்றி வந்து என்னைச் சேரும்’’.’’ஆயிரம் நிலவே வா…’’பாடும் போது நான் தென்றல் காற்று… ஆகியவை மிகவும் இளமை ததும்பும் கீதங்களாகும்!
உன்னைத் தொட்டக் காற்று வந்து என்னைத் தொட்டது என்று சுசிலா பாடும் ஒரு பாடலில் ஆஹா..ஹா…ஒகோ..கோ…என்று பாடல் முழுக்க ஹம்மிங் கொடுத்திருப்பார்! அதே போல காதல்,காதல் என்று பேச கண்ணன் வந்தானோ…காலம் பார்த்து ஜாலம் செய்ய மன்னன் வந்தானோ என்ற பாடலிலும் முழுக்க,முழுக்க ஹம்மிங் மட்டுமே தந்திருப்பார்.! அவை அப்படியே நம்மை சொக்க வைக்கும்..!
இளையராஜா இசையில் கிராமியப் பாடல்களைப் பாடுவதில் உச்சம் தொட்டார்! மாமன் ஒரு நாள் மல்லிகைப்பூ கொடுத்தான், மாங்குயிலே பூங்குயிலே, நெஞ்சுக்குள்ளே இன்னாருன்னு சொன்னா தெரியுமா..பச்சமலப் பூவு..என எக்கச்சக்கமாகப் பாடியுள்ளார்!
அதே போல துள்ளல் பாடல்களை பாடுவதில் அவருக்கு நிகர் அவர் தான்!
உன்னை நான் பார்த்தது வெண்ணிலா வேளையில்
சொர்க்கம் மதுவிலே….சொக்கும் அழகிலே
அவள் ஒரு பச்சைக் குழந்தை பாடும் பறவை..
என் காதலி யார் சொல்லவா…இசையென்னும்
தினம் தினம் உன் முகம் நினைவினில் மலருது நெஞ்சத்தில் போராட்டம்
தங்கத் தாமரை மலரே…
அத்தங்கர மரமே…அதிலுறங்கும் கிளியே அலமரக் கிளியே..
மானூத்து மந்தையிலே மாங்குட்டி பெத்த மவளே..
ஒவ்வொன்றிலும் குரலை வித்தியாசப்படுத்தி காட்டியிருப்பார்!
இப்படி எண்ணற்ற பாடல்களை பட்டியலிடலாம்! அதே போல மனதை வருடும் பாடல்கள் என்றால்…
இளைய நிலா பொழிகிறதே…
மலையோரம் வீசும் காற்று மனசோடு பாடும் பாட்டு
பூந்தேனில் கலந்து பொன் வண்டு எழுந்து…
வலையோசை கலகலவென்று
நீதானே எந்தன் பொன் வசந்தம்
பனி விழும் மலர் வனம்..உன் பார்வை ஒரு வரம்
பூவில் வண்டு கூடும் கண்டு பூவும் கண்கள் மூடும்
அதே போல மனதை உலுக்கும் சோகப்பாடல்கள் ஏராளம்!
உச்சி வசுந்தெடுத்து பிச்சிப்பூ வச்ச கிளி
நான் பாடும் மெளன ராகம் கேட்கவில்லையா
உனக்கென்ன மேலே நின்றாய் ஓ நந்தலாலா
உன்ன நெனச்சேன் பாட்டு படிச்சேன் தங்கமே ஞானத் தங்கமே
நிலாவே வா செல்லாதே வா
எம்.எஸ்.விஸ்வநாதனுக்கும், கே.வி.மகாதேவனுக்கும் எஸ்.பி.பி செல்லப் பிள்ளை என்றால், இளையராஜாவுக்கு உயிர் நண்பன். இசை ஞானியை, ’’வாடா,போடா..’’ என்றழைக்கும் அளவுக்கான உரிமை பெற்ற ஒரே பாடகர் எஸ்.பி.பி மட்டும் தான்!எம்.எஸ்வி,கே.வி.எம் தொடங்கி யுவன் சங்கர் ராஜா,அனிருத் வரை எஸ்.பி.பியை விரும்பினர்.
எஸ்.பி.பி தன் முன்னோடிப் பாடகர்களின் மீது மிகப் பெரிய மரியாதை வைத்திருந்தார். கண்டசாலாவை கடவுளைப் போல பாவித்தார்.பி.பி.சீனிவாசசைக் கொண்டாடினார். முகமதுரபியின் மீது பைத்தியம் என்றே சொல்லலாம்.’’டி.எம்.எஸ் அண்ணா மட்டும் தான் அபஸ்வரமாக பாடாத ஒரே அபூர்வமான பாடகர்’’ என்பார். ஜேசுதாஸ் மீது பெரும் பக்தி கொண்டிருந்தார் என்று தான் சொல்ல வேண்டும்.ஒரு முறை ஜேசுதாசுக்கு பாதபூஜை செய்து வணங்கினார்! யார் மீதும் அவருக்கு எள்ளளவும் பொறாமை இருந்ததில்லை!
ஆனால்,அவர் மீது மற்றவர்களுக்கு பொறாமை இல்லாமல் போயிருக்குமா என்ன? 1981ல் ஏக் துஜே கேலியே படப் பாடல்கள் மூலம் இந்தி ரசிகர்களுக்கு அறிமுகமான அவர் சுமார் 15 ஆண்டுகளுக்கும் அதிகமாக இந்தியில் கொடிகட்டிப் பறந்தார்! அவருக்கு இந்தியில் மிகப் பெரிய ரசிகர்பட்டாளம் உண்டு! குறிப்பாக சல்மான்கானுக்கு எஸ்.பி.பியின் குரல் மிகவும் பொருந்திப் போனது.ஆனால், ஒரு தென் இந்தியன் வந்து இங்கு கொடி நாட்டுவதா…? என பாலிவுட்டில் கேள்விகள் எழுப்பட்டன! அதன் பிறகு மீண்டும் ஒரு பதினைந்து ஆண்டு காலம் அவருக்கு முற்றிலும் வாய்ப்பு இந்தியில் மறுக்கப்பட்டது! இளையராஜாவே கூட ஒரு கட்டத்தில் எஸ்பி.பிக்கு மாற்றாக அவரை இமிடேட் செய்து பாடிய மனோவை அதிகமாக வளர்த்துவிட்டார். ஆனாலும்,எஸ்.பி.பி வேண்டும் என அடுத்து வந்த ஏ.ஆர்.ரகுமான்,தேவா போன்றவர்கள் அள்ளி எடுத்துக் கொண்டனர்!
ஆனால்,கடைசி வரை எஸ்.பி.பி தன்னை எனர்ஜிடிக்காக வைத்துக் கொண்டார். ஆனால்,இதற்காக எந்த மெனக்கெடலும் செய்யவில்லை என்பதே ஆச்சரியம் தான்! எஸ்.பி.பி தன் குரலைக் காப்பாற்ற எந்த பிரயத்தனமும் செய்யமாட்டாதது மட்டுமின்றி,. சிறு குழந்தை போல ஐஸ்கிரீம் விரும்பி சாப்பிடுவார்.ஸ்வீட்,காரம் ஆர்வத்துடன் சாப்பிடுவார். ஊருகாய்,கொங்குரா சட்னி சூடான டிகிரி காபி என பாடகர்கள் தவிர்க்க வேண்டிய அனைத்தையும் விட்டுவைக்காமல் சாப்பிடுவார். நண்பர்கள் சேர்ந்தால் கொஞ்சம் பீர்…என்று கூட சாப்பிடுவார் என்றாலும்,இவை அவரது குரல் வளத்தை பாதிக்கவில்லை! அதிகபட்சம் ஐந்தே நிமிடத்தில் தன் மதிய உணவை முடித்துவிடுவாராம்! அசைவம் சாப்பிடுவதை தவிர்த்ததில் மட்டும் உறுதி காட்டியுள்ளார்!
எஸ்பி.பி முதலில் இன்ஞினியராக விரும்பி கல்லூரியில் சேர்ந்தவர் டைபாயிடு காய்ச்சல் காரணமாக படிப்பதில் இடை நின்றார். பிறகு சினிமாவில் பாடும் வாய்ப்பு தேடி சென்னை வந்தார்.1966 ஆம் ஆண்டு முதலில் தெலுங்கு படத்திலும்,பிறகு கன்னடப் படத்திலும் பாடும் வாய்ப்பு பெற்றார். அந்த காலத்தில் வாய்ப்பு கிடைத்து திறமையை நிரூபித்த பிறகும் தொடர் வாய்ப்புகள் அமையவில்லை! அதனால்,ஒரு இசைக்குழு வைத்திருந்தார்.அதில் இளையராஜா, பாஸ்கர்,கங்கை அமரன்…உள்ளிட்டோர் இசைக் கருவிகளை இசைத்தனர். கல்யாணங்களில் கச்சேரி செய்ய மொத்த இசைக்குழுவிற்குமான கட்டணம் ரூபாய் 250 வாங்குவார். அதில் அனைவருக்கும் தலா பத்து ரூபாய் பிரித்துக் கொடுத்துவிட்டு, தனக்கு பதினைந்து ரூபாய் சம்பளமாக எடுத்துக் கொள்வார்.இந்த அளவுக்கான போராட்ட வாழ்க்கையையும் பார்த்தவர் தான் அவர்!
சங்கராபரணம் படப் பாடல்கள் மட்டும் சரியாக அமையாமல் போகுமானால், நான் உயிரோடு வாழமாட்டேன்..என்ற அளவுக்கு அதில் சிரத்தை எடுத்த்ப் பாடினார்.அவர் முறைப்படி கர்நாடக சங்கீதம் கற்காதவர் எனினும் கேள்வி ஞானத்தைக் கொண்டு சங்கராபரணம்,ருத்திர வீணா, சாகரசங்கமம் ஆகிய மூன்று கர்நாடக சங்கீதம் சம்மந்தப்பட்ட படங்களில் பாடி தேசியவிருதைப் பெற்றார்.
கர்நாடக இசை கச்சேரியொன்றைச் சென்னை சபாக்கள் ஏதேனும் ஒன்றில் பாடவேண்டும் என்று பல ஆண்டுகளாக அவ்வப்போது ஆர்வத்துடன் சொல்லிக் கொண்டிருந்தார்! ஆனால்,கடைசி வரை அவர் ஆசையை நிறைவேற்ற யாரும் முன்வரவில்லை! சென்னை சபாக்களில் ஆதிக்கம் செலுத்திய குறிப்பிட்ட சமூகத்தினர் இதை ஏன் பொருட்படுத்தவில்லை எனத் தெரியவில்லை! எஸ்.பி.பி மறைந்தாலும் அவர் குரல் தினசரி இன்னும் ஒரு நூற்றாண்டுக்கேனும் தொடர்ந்து ஒலித்தபடி தான் இருக்கும்!
Leave a Reply