கண்ணீரை வற்ற வைக்கும் காஷ்மீர் படுகொலைகள்! தீர்வு என்ன?

-ச.அருணாசலம்

தினசரி துப்பாக்கி சூடு, சுட்டுக் கொலை, போலீஸ் என்கவுண்டர் என்பதாக கடந்த 27 நாட்களில் காஷ்மீரில் 26 என்கவுன்டர்கள் நடந்துள்ளன. இத்தகைய நடவடிக்கைகளில் இறப்பது பெரும்பாலும் பதின்பருவத்து இளைஞர்களே என்பது வேதனை…!

இது போன்ற செய்திகள் நம்மை காயப்படுத்துகிறது அல்லவா? இந்த மனித இழப்புகள் ஏன் இந்த நாட்டில் தொடர்கின்றன? அதுவும் காஷ்மீரில் கடந்த 30 ஆண்டுகளாக இவை தொடர்வது ஏன்?

பிரச்சினையை தீர்த்தேவிட்டோம் ;இனி தீவிரவாதமும் , வன்முறையும் தலைதூக்காது என்று அமீத் ஷா ஆகஸ்ட் 5,2019ல் அறிவித்த பின்னரும் தொடர்வது மட்டுமல்ல, கூடிக் கொண்டிருப்பது கவலையளிக்கிறது அல்லவா?

பொய்மையும், புனைதலும் ஒருநாளும் பிரச்சினைகளுக்கு தீர்வை தராது. தோல்விகளுக்கான  காரணத்தை அறியாமல், தோல்விகளை மறைத்து மற்றவர்மீது பழி போடுவது அப்பாவிகளை பலிகடாவாக்குவது என்பதெல்லாம் நமது உளவு துறை, மற்றும் துணை ராணுவத்தினர், எல்லை பாதுகாப்பு படையினருக்கும் உரித்தான நடைமுறையாகிவிட்டது!

ஒண்ணேகால் கோடி மக்கள்தொகை கொண்ட காஷ்மீரில் இன்று 9 லட்சம் ராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளதாக சில தகவல்கள் தெரிவிக்கின்றன. உலகிலேயே குறுகிய இடப்பகுதியில் அதிக துருப்புகள் இருக்கும் பகுதி காஷ்மீர்தான் என மேலை நாட்டு ஊடகங்கள் குறிப்பிடுகின்றன.

டிசம்பர் 30 செய்திப்படி ஹைதர்போரா என்கவுண்டரில் பலியானவர்களின் உறவினர்கள் அரசு விசாரணைக்குழு அறிக்கையை ,போலியானது ,கண்துடைப்பு என்று கூறி ஆர்ப்பாட்டம் செய்தனர்!.

இது ஒரு போலி என்கவுண்டர் என்பதை  – பா ஜ க ஆதரவு கட்சி உட்பட – அனைத்து கட்சிகளும் கண்டனம் எழுப்புகின்றனர்.

இது ஒரு புறமிருக்க, 2020 டிசம்பர் 30ந்தேதி நடந்த என்கவுண்டரில் கொலை செய்யப்பட்ட ஏதர் முஷ்டாக்(17), அஜாஸ் முகமது (24), மற்றும் ஜுபேர் அகமது லோன் (22)

ஆகிய மூன்று இளைஞர்களின் பெற்றோர் எங்களுக்கு நியாயமான நீதி விசாரணை வேண்டும், காவல்துறையால் கொலை செய்யப்பட்ட எங்களது மகன்களின் உடல்களை எங்களிடம் ஒப்படைக்க  வேண்டும் என்று போராடுகின்றனர். என்கவுண்டரும், போலி நீதி விசாரணையும், கொல்லப்பட்டவர்கள் தீவிரவாதிகள் என்று காவல்துறை சொல்வதையும் யாரும் ஏற்கவில்லை.. இதுவரை கொல்லப்பட்டவர்கள் அனைவரும் சந்தேகத்தின் அடிப்படையிலேயே அழிக்கப்பட்டுள்ளனர்.

நீண்ட நெடுங்காலமாகவே நமது ராணுவம் காஷ்மீரில் கவுண்டர் இன்சர்ஜன்சி  ஈடுபட்டுள்ளதால், அவர்கள் எதிர்ப்பாளர்களை கொன்றொழிப்பதில்தான் அதிக மும்முரம் காட்டி வருகின்றனர். ராணுவத்தினரின் பதவியும், பரிசும் ,கௌரவமும், விருதும் அவர்கள் எத்தனை அழித்தல்களை நிகழ்த்தியுள்ளனர்  என்பதை பொறுத்தே வழங்கப்பட்டன.

இதுதான் மறைந்த தலைமை தளபதி பிபின் ராவத்தின் அணுகுமுறை!

எத்தனையோ ராணுவ அதிகாரிகளுக்கு , அவர்கள் கொன்றொழிப்பின் எண்ணிக்கை குறைவாக உள்ள காரணத்தால் பதவி உயர்வு மறுக்கப்பட்டுள்ளன. ஏன் அவர்கள் பிறரின் பரிகாசத்துக்கும் உள்ளாயினர் என்பதை யாரும் மறுக்க இயலாது. அதிக காஷ்மீரிகளை கொன்றவர்களுக்குதான் மெடலும், விருதும் என்பது எழுதப்படாத புது ராணுவ விதி!

தீவிரவாதமும் அதற்கெதிரான போரும் எப்பொழுதுமே ஒரு கண்ணிவெடிப்பாதை என்பதில் சந்தேகமில்லை.ஒவ்வொரு சரியான அடியும் தீவிரவாத்தை நிராயுதபாணியாக்கும். ஆனால், ஒவ்வொரு தவறான அடியும் மனித கூட்டத்தையே புதைகுழிக்கு இட்டுச்செல்லும்.

காஷ்மீரத்தில் இந்திய பாதுகாப்பு அமைப்புகள் தோல்வியடைந்துள்ளன. இன்னமும் தொடர்ந்து தோல்வியை தழுவுகின்றன. ஆம், ஜனநாயகத்தின் அடிநாதமான , ‘செயலுக்கான பொறுப்பு ஏற்பு ‘என்ற பரீட்சையில் தொடர்ந்து தோல்வியை பாதுகாப்பு படையினர் – ராணுவம் உடபட- சந்தித்து வருகின்றனர்.

ஜம்மு காஷ்மீர், பஞ்சாப் போன்ற வடக்கு,மேற்கு எல்லைப்பகுதிகள், அதுபோன்று நாகலாந்து, அருணாச்சல் பிரதேசம், அசாம்,மணிப்பூர் மற்றும் மிசோரம் ஆகிய வட கிழக்கு பகுதிகளில் உள்ள ராணுவம் ,துணை ராணுவத்தினர் மற்றும் உளவுத்துறையினரின் நடவடிக்கை நம்பிக்கை அளிப்பதாக இல்லை என்பதை கடந்த 70 ஆண்டு வரலாறு நிரூபிக்கிறது என்கின்றனர் வல்லுனர்கள்.

இதுமட்டுமின்றி உள்நாட்டில் மாவோயிஸ்டுகள் பிரச்சினை, மும்பை குண்டு வெடிப்பு, பாராளுமன்ற தாக்குதல், சம்ஜுதா ரயில் குண்டு வெடிப்பு..போன்ற  வழக்குகளில் உளவுத்துறை, தேசீய புலனாய்வு அமைப்பு, மத்திய புலனாய்வு அமைப்பு (  N I A I B , C B I)  ஆகியவற்றின் செயல்பாடு, ஆட்சியில் உள்ளவர்களின் ஆணைகளை அனுசரித்தே நடக்கிறது . உண்மை குற்றவாளிகள் வெற்றிநடை போடுவதும், அப்பாவிகளும் , வேண்டாதவர்களும் கொட்டடியில் வதைபடுவதும் நல்ல நேர்மையான செயல்பாட்டின்  அடையாளமாகாது.

மேற்கூறிய குற்றசெயல்களில் செகயூரிட்டி ஏஜன்சீஸ் பங்கு எத்தகையது என்று வெளிவந்துள்ள பல தகவல்கள் இவர்களின் மீதான நம்பிக்கையை முற்றிலுமாக கேள்விக்குறியாக்குகிறது. மக்களின் மறதியே பிரதான மூலதனமாக நினைத்து வெற்று அறிவிப்புகள் மற்றும் தீர்வுகள் வருகின்றன.

நாம் உண்மையில் பிரச்சினைகளை சுமுகமாக  தீர்க்கவிழைகிறோமா இல்லையா என்பதே கேள்வி? சுமுகமாக, நியாயமாக இருதரப்பு நியாயங்களையும் கணக்கில் எடுத்துக்கொண்டு  விட்டுகொடுத்தல் என்ற ரீதியில் தீர்வை எட்ட வேண்டுமெனில், நாம் சில உண்மைகளை – அவைகள் எவ்வளவு கசப்பாயிருந்தாலும் – ஒத்துக்கொள்ள வேண்டும்.

முதலாவதாக ஷேக் அப்துல்லா என்பவர் காந்தி அடிகளின் வார்த்தைகளில் கூறுவதாயிருந்தால் “அவர் காஷ்மீர் மக்களின் தனிப்பெருந்தலைவர் ,இந்து, சீக்கியர்,முகமதியர் மற்றும் காஷ்மீர் வாழ் பௌத்தர்களுக்கும் பொதுவான தலைவர்.”ஆக இருந்தார்! னேருவின் நெருங்கிய நண்பர்.

நேரு, இந்திராவுடன் ஷேக் அப்துல்லா

பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கெதிராகவும் , மகாராஜா ஹரி சிங்கின் (காஷ்மீர் மன்னர்) கொடுங்கோல் ஆட்சிக்கெதிராகவும், அனைத்து மக்களையும் திரட்டிய ஒரே காஷ்மீர் தலைவர்!

இந்தியா – பாகிஸ்தான் என இந்தியா பிளவுபடாவிட்டாலும் காஷ்மீர் தனி நாடாக விளங்கும் என்று முழங்கியவர். இந்திய-பாகிஸ்தான்  பிரிவினை நேர்ந்தபோது பெரும்பான்மை முஸ்லீம் மக்களைக் கொண்ட காஷ்மீரம் மத அடிப்படையில் உருவான பாகிஸ்தானுடன் இணைய விரும்பவில்லை! அதற்கு மூலகர்த்தா ஷேக் அப்துல்லாவும் அவரது கட்சியுமே என்பது வரலாற்று உண்மை.

மதச்சார்பின்மையை முன்னிறுத்திய காந்தியும், நேருவும் நம்பகமானவர்களே என்ற எண்ணத்தில் சில நிபந்தனைகளுடன் அவர் இந்தியாவுடன் இணைய ஒப்புதல் அளித்தார் .

காஷ்மீர் மாநிலம் ஒன்றுதான் வரலாற்றில் சுதந்திர இந்தியாவுடன் இணைய பேச்சு வார்த்தை நடத்தி சில நிபந்தனைகளுடன் இணப்பிற்கு ஒப்புக்கொண்டது.

அப்படி வந்தவைதான் தனி மாநில அந்தஸ்தும் , 35A பிரிவு சட்டமும் 370 ஷரத்து பாதுகாப்பும் .

ஷேக் அப்துல்லா– காஷ்மீர் சதி வழக்கு

1948, 1949 நீண்ட நிகழ்வுகளுக்குள் நாம் நுழையா விட்டாலும், அதற்குப் பின் 1953ல் காஷ்மீர் பிரதமராக இருந்த ஷேக் அப்துல்லா பதவியிறக்கப்பட்டார். ஷேக் அப்துல்லாவிற்கு சட்ட அவையில் பெரும்பான்மையை நிரூபிக்க வாய்ப்பளிக்காமல் பதவி நீக்கம் செய்யப்பட்டார் . கைது செய்யப்பட்டு கொடைக்கானலில் காவலில் அடைக்கப்பட்டார்.  ஓராண்டு ஈராண்டு அல்ல 11 ஆண்டுகள். சதி செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்டு “காஷ்மீர் சதி வழக்கு ” Kashmir Conspiracy Case”.  போடப்பட்டது.

தங்களுடைய அரசியல் ஆதாயத்திற்காக, ஆட்சியாளர்களின் (நேர்மறை) ஆளுமையை நிலை நாட்ட, காஷ்மீரை பந்தாடுவதை டெல்லி அன்று துவங்கி வைத்தது.

1964ம் ஆண்டு ஷேக்அப்துல்லா விடுவிக்கப்பட்டார், காஷ்மீர் சதி வழக்கு கைவிடப்பட்டது. பாகிஸ்தானுடன் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்த பாக் அதிபர் அயூப்கானை சந்திக்க பிரதமர் நேருவால் ஷேக் அப்துல்லா அனுப்பப்பட்டார் .

பாக் அதிபரின் வருகை ஏறத்தாழ 1964 ஜூனில் நடக்கலாம் என்ற நிலையில் பிரதமர் நேரு மே மாதம் 27ம் நாள் காலமானார் . அனைத்து முயற்சிகளும் கைநழுவி விட்டன.

1965ம் ஆண்டு மீண்டும் ஷேக் அப்துல்லா லால் பகதூர் சாஸ்திரி அரசால் கைது செய்யப்பட்டார், அதை இந்திரா காந்தி தொடர்ந்தார். பின்னர் 1971 -72ல் மீண்டும் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்டார் .

1954 முதல் உதாசீனப்படுத்தப்பட்டு, டெல்லியின் தலையாட்டி பொம்மை அரசுகளால் ஆளப்பட்டு நடைமுறையில் உரிமைகள் மறுக்கப்பட்ட காஷ்மீர் மக்கள் தங்கள் மாநில சுய உரிமைகளுக்காக போராடத் தயாரானதில் வியப்பில்லை.

நேசக்கரம் நீட்டிக்கொண்டே,  கொடுத்த வாக்குறுதிகளையும், அதிகாரங்களையும் உயிரிழக்கச் செய்தது இந்திய அரசு!

வங்காள தேசம் உருவானதும் இந்திய துணை கண்டத்தில் ஏற்பட்ட மாறுதல்களும் ஷேக் அப்துல்லாவின் எண்ணங்களில் சில மாற்றங்களை ஏற்படுத்தின போலும்; அவர் வாக்கெடுப்பு  கோரிக்கையை கை விட்டு சுய அதிகாரங்களுடன் கூடிய மக்களால்  தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு காஷ்மீரத்திற்கு வேண்டும் என்றுணர்ந்து அன்றைய பிரதமர்  இந்திராவுடன் நேசக்கரம் நீட்டினார் . இதன் விளைவாக 1974 இந்திரா -ஷேக் ஒப்பந்தம்  கையெழுத்தானது. தேர்தல் அறிவிக்கப்பட்டது, ஷேக் அப்துல்லா மாபெரும் வெற்றியடைந்து முதல்வரானார்.

வெற்றி மாலையுடன் ஷேக் அப்துல்லா

ஆனால், அவரது சகாக்கள் சிலரும் காஷ்மீர் மக்களில் ஒரு பகுதியினரும் ஷேக் அப்துல்லா முதல்வர் பதவிக்காக காஷ்மீரின் வாக்கெடுப்பு உரிமையையும் தனி  உரிமையையும் டெல்லியிடம் அடகு வைத்துவிட்டார் என நினைத்தனர். பொது நீரோட்டத்திலிருந்து ஒதுங்கினர்.

1982ல் ஷேக் அப்துல்லா மறைந்தார் , அவரது மகன் பரூக் அப்துல்லா பொறுப்பிற்கு வந்தார் .

பரூக் பதவி இறங்கினார் . மீண்டும் டெல்லி தர்பார் காஷ்மீரை காயப்படுத்தியது. பொது நீரோட்டத்திலிருந்து ஒதுங்கிய மக்களின் எண்ணிக்கை பலவாகப் பெருகியது. ராணுவம் குவிக்கப்பட்டது, ராஷ்டிரிய ரைபில்ஸ் என்ற தனி ராணுவதுணைப்பிரிவு ஆரம்பிக்கப்பட்டு காஷ்மீரெங்கும் குவிக்கப்பட்டனர். டெல்லி மீதான காஷ்மீர் மக்களின் அதிருப்தியும் ,வெறுப்பும் பெருகி நீரு பூத்த நெருப்பாக கழன்றத்தொடங்கியது.

தேர்தல் மோசடி;

இந்திரா படுகொலைக்குப்பின் காங்கிரஸ் பரூக்குடன் கை கோர்த்துக்கொண்டது . தேர்தல் அறிவித்து கூட்டாக போட்டியிட்டனர் .1987ம் ஆண்டு தேர்தல் நடைபெற்றது.

டெல்லி மீது வெறுப்படைந்த காஷ்மீர் மக்கள் பலர் டெல்லியிடம் விலை போன பரூக் , மற்றும் பரூக்-ராஜீவ் கூட்டணியை முறியடிக்க, முஸ்லீம் யுனைட்டெட் பிரண்ட்  Muslim United Front MUF  என்ற அமைப்பின்கீழ் திரண்டு தேர்தலில் குதித்தனர்.

இந்திய துணைகண்டம் மட்டுமல்ல, உலகே உற்று நோக்கிய இந்த தேர்தல்-காஷ்மீர் வரலாற்றில் ஒரு திருப்பத்தை, பெரும் பாதிப்பை ஏற்படுத்திய தேர்தல்- மிக முக்கியமானது.

ஒட்டு மொத்தமாக அனைத்து பிரிவு காஷ்மீர் அரசியல் சக்திகளும் ஜனநாயகத்தில் நம்பிக்கை கொண்டு தேர்தலில் பங்கெடுத்தன!

ஒரு வரலாற்று சிறப்பு என்றே கூற வேண்டும் .

ஆனால், தோல்வி பயத்தில் காங்கிரசும், பரூக் அப்துல்லாவும் இணந்து  வாக்குச்சீட்டையும், வாக்கப்பெட்டிகளையும் கைப்பற்றி, தேர்தலை சீர்குலைத்தனர்.

இதற்கு அரசு இயந்திரம் பாதுகாப்பு அமைப்புகள் யாவும் ஒத்துழைத்தன அல்லது அநியாயத்தை கண்டவுடன் தடுக்காமல் முகத்தை திருப்பிக்கொண்டனர். ஜனநாயகப் படுகொலை வெற்றிகரமாக நடந்தேறியது.

பரூக் காங்கிரஸ் “அமோக வெற்றி” பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

ஆனால், காஷ்மீர் மக்களையும் , ஒரு தலைமுறை காஷ்மீர் இளைஞர்களையும்  ஜனநாயகப் பாதையில் இருந்தே விரட்டி அடித்தது இந்த தேர்தல் மோசடி என்றால், அது மிகையல்ல.

Gaw Kadal Massacre காகடல்  படுகொலை 1990 இந்த மோசடியை தொடர்ந்து 1990ல் நடந்த காகடல் படுகொலை – ஜனவரி 19, 1990ல்  காகடல் Gaw kadal  பகுதியில் அமைதியான முறையில் நடந்த பேரணி மீது மத்திய ரிசர்வ் போலீஸ் படை சரமாறியாக சுட்டதில் 52 பேர் மாண்டனர். 250க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இந்த நிகழ்வு இந்தியா மீதான நல்லெண்ணத்தை காஷ்மீர் மக்களின் மனதில் இருந்து விரட்டியடித்தது.

 

இந்தப் படுகொலைகள் தொடர்பாக முறையான விசாரணை நடத்தி யாரும் தண்டிக்கப் படவில்லை!

1990 முதல் இன்றுவரை ஆண்டுதோறும் அந்த தினத்தை கருப்பு நாளாக பாவித்து கண்ணீர் அஞ்சலி செலுத்துகின்றனர் காஷ்மீர் மக்கள்!

காஷ்மீர் விவகாரத்தில் காங்கிரஸ் இவ்வாறாக நடந்து கொண்டது என்றால், இதற்கு நேர்மாறாக மோடி – அமித்ஷா கூட்டோ மூர்க்கத்தனமாக, தடாலடியாக செயல்பட்டு, காஷ்மீர் மக்களை வென்றெடுப்பதற்கு பதிலாக, அடையாளமின்றி சிதைப்பதன் மூலம் -370. ரத்து, 35A  பறிப்பு, மாநிலப் பிரிவினை மற்றும் துண்டாடல் யூனியன் பிரதேசங்களாக மாற்றுதல்,- காஷ்மீரத்தை இந்தியாவுடன் ஒன்றாக கரைத்துவிடலாம் என முயற்சிக்கின்றனர்.

இந்துக்களின் ஆட்சி என்ற இவர்களின் கொள்கையை நிலை நாட்ட, காஷ்மீர் மக்களின் அடையாளத்தை சிதைக்க விழைகின்றனர். இதற்காக அம்மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாகவும் அவற்றில் ஒன்றிற்கு சட்டசபை இல்லாமலும் பிரித்து, முஸ்லீம்களை அங்கு சிறுபான்மை ஆக்குவதற்கு முயல்கின்றனர். இதற்கு அவர்கள் பாதுகாப்பு அமைப்புகளை ராணுவம் மற்றும் துணை ராணுவ அமைப்புகளான BSF, RR, CRPF,ITBPIB, R&AW, CBI, NIA ஆகியவற்றை உபயோகிக்கின்றனர்

இவ்வித நெருக்கடியில் தொலை தொடர்பு தடை, இண்டர்நெட் தடை, போக்குவரத்து தடை, கூட்டம் கூடுவதற்கு  தடை, எழுதுவதற்கு தடை என எதற்கெடுத்தாலும் தடைகளை மட்டுமே  எதிர்கொள்ளும் காஷமீர் மக்களின் மன நலம் எவ்வாறு உள்ளது என்பதை National Crime Bureaus Findings 2020  தெளிவாக சுட்டிக்காட்டுகிறது.

தற்கொலை செய்வோரின் எண்ணிக்கை 2020ல் கடந்த ஆண்டை விட 13.9% சதவிகிதம் அதிகரித்து உள்ளதாக கூறுகிறது.

மனநலம் பாதிகப்பட்டோர்  2015ல் 1.5மில்லியன் ஆக இருந்தது, இன்று அந்த எண்ணிக்கை  2மில்லியனை தொட்டாலும் ஆச்சரியமில்லை என்கிறர் பிரபல மனநல மருத்துவர் ஷேக் சாகிப் அவர்கள்.

இன்றைய  ஆட்சியாளர்களின்மத வெறியும் மூர்க்கத்தனமும், பாதுகாப்பு அமைப்புகளின் தற்குறித்தனமும்,பித்தலாட்டமும் காஷ்மீர் மக்களை அதலபாதாளத்தில் தள்ளியுள்ளது.

ஒரு காலத்தில் பெருந்தலைவராக, மக்களின் ஏகோபித்த தலைவராக போற்றப்பட்ட ஷேக் அப்துல்லா இன்று காஷமீர் மக்களால் சபிக்கப்படும் (இந்தியாவுடன் கை கோர்த்ததால்) அளவிற்கு பொதுவெளியில் மாறுதல்கள் நிகழ்ந்துள்ளன.

இந்திய இரு பெருங்கட்சிகளை (காங்கிரஸ், பாஜக ) தவிர்த்து, ஏனையோர் இந்தச்சீரழிவு குறித்து வாய்திறக்காமல் இருப்பதுதான் விந்தையாக உள்ளது. அல்லது இவர்களும் ஆட்சியாளர்களின் அத்து மீறல்களை,அடாவடிகளை, உரிமை மறுப்பை ஆதரிக்கின்றனரோ?

எது எப்படியோ, மேலே எழும்பியதெல்லாம் நிச்சயம் கீழே வரும் என்ற நியூட்டன் விதிக்கிணங்க, காஷமீர் மக்களின் நுகத்தடியும் ஒருநாள் விலகும் என்று நம்புவோம்.

ச.அருணாசலம்.

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time