வட கொரியா என்றாலே இரும்புக் கோட்டை, சர்வாதிகாரம் என்பதே பொதுப் புரிதல்! இந்த நாடு குறித்த புதிரான, கொடூரமான சம்பவங்கள் உலக மக்களை அதிர்ச்சியில் உறைய வைக்கின்றன! ஆனானப்பட்ட அமெரிக்காவையே மிரள வைக்கும் வட கொரியாவில் உண்மையில் என்ன நடக்கிறது?
தன்னை ஒரு புரட்சிகர சோசலிஷ நாடாக பிரகடனப்படுத்திக் கொள்கிறது, வட கொரியா! அங்குள்ள மக்கள் அனைவருக்கும் உணவு , மருத்துவம்,கல்வி ஆகியவற்றை உத்திரவாதம் செய்து உறுதிபடுத்தியுள்ளது! வெளி நாட்டு நச்சு கலாசாரம் உள் நுழைய முடியாத நாடாக அது உள்ளது! ரசாயன உரங்களை தவிர்த்து, இயற்கை உரங்களைப் பயன்படுத்தும் நாடாக திகழ்கிறது! கொரானா விவகாரத்தில் தன் சொந்த பலத்தில் சுயமான பாரம்பரிய மருத்துவ அணுகு முறைகளில் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். பன்னாட்டு நிறுவனங்களின் தடுப்பூசிகளுக்கு இங்கு வேலை இல்லை என்று கூறி ஐ.நா.சபை அனுப்பிய அனைத்து தடுப்பூசி மருந்துகளையும் திருப்பி அனுப்பிவிட்டது.
ராணுவ பலத்தில் தனிச் சிறப்புடன் திகழ்கிறது. வெறும் இரண்டரை கோடி மக்கள் தொகை கொண்ட நாடால், அமெரிக்காவிற்கு கடும் எதிர் நிலை அரசியலை துணிச்சலாக முன் எடுக்க முடிகிறது! பக்கத்து நாடான தென் கொரியா உலகின் மிகப் பெரிய வர்த்தக நாடுகளில் ஒன்றாக ஜொலிக்கிறது. அமெரிக்க ஆதரவுடன் ராணுவத்தை பலப்படுத்துகிறது. எனினும் வட கொரியா சீன உறவிலேயே கூட, ஒரு எச்சரிக்கையான இடைவெளியை பின்பற்றுகிறது!
அதே சமயம் வட கொரியா குறித்து பேசப்படும் செய்திகள் அந்த நாடு இவ்வளவு பின் தங்கியுள்ளதா? என்ற அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.
அந்த நாட்டின் அதிபரான கிங்ஜோங்யூன் ஒரு சர்வாதிகாரியாக – மர்ம மனிதராக – இருக்கிறார்! அவர் விதித்துள்ள கட்டுப்பாடுகள் அதிர்ச்சி ரகம்!
# வடகொரியாவில் வெளிநாட்டு படங்களை பார்ப்பதும், வெளிநாட்டு இசையை கேட்டு ரசிப்பதும் சிறை தண்டனைக்கான குற்றமாகும்!
# எந்த வெளி நாட்டோரோடும் போனில் கூட தொடர்பு கொள்ளக் கூடாது. அப்படி தொடர்பு கொண்டால் சுட்டுக் கொல்லும் தண்டனைகள் வழங்கப்படும்.
# அதிபர் கிம் ஜாங்-வுன் அமைச்சரவை ஆலோசனையில் கலந்துகொள்ளும் போது கவனக்குறைவாகவாக இருந்தாலோ, தூங்கினாலோ உடனே மரண தண்டனை தான்.
# ஒருவர் மீது ஏதேனும் ஒரு குற்றம் நிரூபிக்கப்பட்டால் குற்றவாளியின் பெற்றோர், தாத்தா-பாட்டி உள்பட அவருடைய குழந்தைகளும் சேர்ந்து தண்டனை அனுபவிக்க வேண்டும்.
# ஆண்களும் பெண்களும் அங்கீகரிக்கப்பட்ட 28 முடி அலங்காரங்களில் ஒன்றை மட்டுமே செய்ய முடியும்! அதிபர் கிம்மின் பிரத்யேக முடி அலங்காரத்தை நாட்டில் மற்றவர்கள் பின்பற்றக் கூடாது!
# வடகொரியாவின் தலைநகரான சாதாரண மக்களுக்கு குடியிருக்க அனுமதியில்லை. தலை நகர் பியாங்யாங் நகரில் செல்வந்தர்களும், ஆதிக்கம் நிறைந்த மனிதர்கள் மட்டுமே வசிக்க அனுமதிக்கப்படுவர்.
# கிறிஸ்தவர்களின் பைபிள் தடை செய்யப்பட்டுள்ளது. அங்கு பைபிளை விநியோகித்தால் தூக்கு தண்டனை!
# வருடத்திற்கு 5,000 த்திற்குள் தான் வெளி நாட்டுப் பயணிகள் அனுமதி. அதுவும் கடும் கட்டுபாடுகளுடன். மீறினால் சிறை தண்டனை!
# வடகொரியர்கள் தங்கள் நாட்டை விட்டு வெளிநாடுகளுக்கு செல்ல பெரும்பாலும் அனுமதி இல்லை. செல்ல முயன்றால் சுட்டுக் கொல்லப்படுவார்கள்.
# அதிபர் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு அவமதிப்பாக எந்த ஒரு நடவடிக்கை கருதப்பட்டாலும் கடும் தண்டணை விதிக்கப்படும்.
# அரசியல் குற்றம் புரிந்ததாக சிறை முகாம்களில் 2 லட்சத்திற்கும் அதிகமான வடகொரியர்கள் அடைக்கப்பட்டுள்ளனர்.
# வடகொரியாவில் ஐபோன், மடிக்கணிணி போன்ற உபகரணங்களை பயன்படுத்த முடியாது. உலகில் என்ன நடக்கிறது என்பதை வட கொரிய மக்கள் அறிய வாய்ப்பில்லை. அரசின் மூன்று தொலைக்காட்சி சேனல்களை மட்டுமே மக்கள் பார்க்க முடியும். அதில் சொல்லப்படுவது மட்டுமே தகவலாகும்!
மேற்படித் தகவல்கள் எல்லாம் பெருமளவு உண்மைகளே! அதே சமயம் பல பொய்யான கட்டுக்கதைகள் திட்டமிட்டு வட கொரிய அதிபர் குறித்து பரப்பட்டு வருகின்றன என்பது பல நேரங்களில் அம்பலமாகியுள்ளது. உதாரணத்திற்கு அவர் பெண்களோடு கும்மாளம் அடிக்கிறார் போன்ற செய்திகளும், படங்களும்! வட கொரியா குறித்து மிகைப்படுத்தப்பட்ட பொய்களை கட்டமைப்பதில் அமெரிக்கா தீவிரமாக செயல்படுகிறது. ஏனென்றால், இன்று வரை சி.ஐ.ஏ ஊடுறுவ முடியாத ஒரே நாடாகத் திகழ்கிறது வட கொரியா!
வட கொரியாவின் பிரச்சினை என்பது தனி ஒரு நாடு சம்பந்தப்பட்ட பிரச்சினை மட்டுமல்ல! அது சர்வதேச அரசியல் சூழல்களால் உருவான பிரச்சினையாகும்.
இரண்டாம் உலகப் போருக்கு முன்பு வரையிலும் சுமார் 35 ஆண்டுகள் ஜப்பானின் ஆதிக்கத்தில் ஒட்டு மொத்த கொரியாவும் இருந்தது!
இரண்டாம் உலகப் போர் முடிவில் கொரியாவின் வட பகுதியில் ரஷ்யாவின் ஆதிக்கமும், தென் பகுதியில் அமெரிக்காவின் ஆதிக்கமும் வருகிறது. கொரியா இரண்டாக பிளவுபடுகிறது.
கொரிய விடுதலைப் போரின் தளபதியும், நாட்டை கட்டமைத்தவருமான கிம் ஜாங் குல் ரஷ்யா, மற்றும் சீனா உதவியுடன் தென் கொரியாவின் மீது படை எடுத்து அதை கைப்பற்ற முனைந்த போது, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் தென் கொரியாவிற்காக உதவின. மூன்றாண்டுகள் நடைபெற்ற போரில் 50 லட்சம் பேர் மடிந்தனர்.
இதன் பிறகு, ரஷ்யா மற்றும் சீனா அரவணைப்பில் வட கொரியா தன்னை கட்டமைத்துக் கொண்டது. ரஷ்யத் தலைவர் ஸ்டாலினை முன்மாதியாகக் கொண்டு தன்னை நிறுவிக் கொண்டவர் கிம்ஜான் குல் என்பது கவனத்திற்கு உரியது. மக்களை லட்சியத்தின் பெயராலும், வல்லரசு ஆபத்தைக் காட்டியும் கடுமையாக ஈவு இரக்கமின்றி உழைக்க வைத்து வேலை வாங்குவது, தனி நபர் சுதந்திரத்தை பறித்து ஒடுக்குவது என சர்வாதிகாரத்தை முன் எடுத்து கட்டமைக்கப்பட்டதே வடகொரியா! அமெரிக்காவை சமரசமின்றி எதிர்ப்பதால், எந்த நிலையிலும் வட கொரியாவை விட்டுக் கொடுக்காமல் நிபந்தனையின்றி ஆதரித்து வருகிறது சீனா!
அது மட்டுமின்றி, ராணுவத்தில் கட்டாயம் சேவை புரிய வேண்டும். ஆண்கள் 10 ஆண்டுகளும் பெண்கள் 7 ஆண்டுகளும் ராணுவத்தில் பணியாற்ற வேண்டும் என்ற சட்டம் அமல்படுத்தப்பட்டது. நாட்டில் சுமார் 30 சதவிதமான மக்களை ராணுவம் சார்ந்த வேலைகளில் அரசு ஈடுபடுத்தியது. ஐந்து சதவிகிதமானவர்களை ராணுவ வீரர்களாக்கியது. இதனால், உணவு உற்பத்தியும், தொழில் வளர்ச்சியும் கடும் பாதிப்புக்கு ஆளானது. 1950 களில் ஏற்பட்ட பஞ்சத்தில் எட்டு லட்சத்து சொச்சம் பேரும், 1990 களில் ஏற்ப்பட்ட பஞ்சத்தில் நான்கு லட்சத்து சொச்சம் பேரும் இறந்தனர்.
Also read
அமெரிக்க பயத்தால் ராணுவத்திற்கான ஆயுத குவிப்பிலும், அணு ஆயுத உற்பத்தி, ஏவுகணை முயற்சிகளிலும் வடகொரியா தன் வளங்கள் முழுவதையும், மனித உழைப்பையும் செலுத்துகிறது. தென் கொரியாவில் தழைத்தோங்கி இருந்த புத்த மதம் இன்று சிறுபான்மை மதமாகிவிட்டதும், கிறிஸ்துவ மதம் அங்கே பெரும்பான்மை ஆகிவிட்டதும், வட கொரியாவை கலவரப்படுத்தியதன் விளைவாய் அங்கு கடுமையான கட்டுப்பாடுகள் அமல்படுத்த வேண்டியதானது என சொல்லப்படுகிறது.
தென்கொரியா முழுக்க, முழுக்க மேலை நாட்டு கலாச்சாரத்தை உள்வாங்கி தன்னை செழுமைபடுத்திக் கொண்டது என்றும் சொல்லலாம், சீரழித்துக் கொண்டது என்றும் சொல்லலாம்! வட கொரியாவோ தன்னை சுற்றிலும் இரும்புக் கோட்டை எழுப்பி, தன்னைத் தானே சிறைப்படுத்திக் கொண்டது. தனி ஒரு குடும்பத்தின் சர்வாதிகார ஆட்சியின் கீழ் கட்டுண்டு உள்ளது. கம்யூனிசம், சோஷலிசம் பேசிய வட கொரியா, தனிமனித சுதந்திரத்தை கிஞ்சித்தும் மதிக்காத குடும்ப சர்வாதிகாரத்தின் கீழ் அடிமைப்பட்டு போனது! இந்த இரண்டுக்குமே வல்லரசு நாடுகளின் அழுத்தமே காரணமாகும்.
சாவித்திரி கண்ணன்
அறம் இணைய இதழ்
crisp and informative