காந்தியும், குமரப்பாவும் வேறு, வேறல்ல!

- சாவித்திரி கண்ணன்

காந்திக்கு இணையாக எண்ணத்தக்கவர் ஜே.சி.குமரப்பா! இந்தியாவின் ஆன்மாவை பூரணமாக உணர்ந்தவர். இந்தியப் பொருளாதாரம் குறித்த குமரப்பாவின் காந்தியக் கண்ணோட்டம் செயல்படுத்தப்பட்டு இருந்தால், இன்று நம் நாட்டில் வறுமைக்கே வழியில்லை. சுரண்டலுக்கு வாய்ப்பில்லை. அனைவருக்கும் உரிய கண்ணியமான வாழ்க்கைக்கான தாய்மை பொருளாதாரத்தை அடையாளப் படுத்தியவர் குமரப்பா!

”ஆன்மாவின் லட்சியங்களுக்கு உதவுவதற்கானதாக உடலை கருதுவதா?

உடல் ஆதிக்கத்தில் ஆன்மாவையே இல்லாமலாக்குவதா?

நம் பொருளாதாரம் எந்த திசை வழியில் செல்ல வேண்டும்” என குமரப்பா கேள்வி எழுப்பினார்?

இன்று ஆன்மாவைத் தொலைத்துவிட்டு பொருளியலைத் தேடி சுயஅழிவுக்கு ஆளாகிக் கொண்டிருக்கும் இந்திய சமூகத்திற்கு இந்தக் கேள்வி தற்போது மிகவும் அவசியமாகிறது.

குமரப்பா தஞ்சையில் பிறந்தவர். சென்னைக் கிறிஸ்தவக் கல்லூரியில் வரலாறு படித்தார். 1913-இல் இங்கிலாந்து சென்று வாணிபக் கணிதவியலை ஐந்து ஆண்டுகள் படித்து சார்ட்டர்டு அக்கவுண்டானார். லண்டனிலேயே பெரிய வங்கியிலும், பின்னர் ஒரு தணிக்கை நிறுவனத்திலும்  பணியாற்றினார்.

‘பொது நிதியும் நமது வறுமையும்’ என்ற சிறு நூலை இலண்டனில் இருந்து காந்திக்கு எழுதி அனுப்பினார் குமரப்பா! அதை படித்து மகிழ்ந்ததோடு, யங் இந்தியாவில் பிரசுரித்தார் காந்தி! தன்னை ஒத்து சிந்திக்கும் அந்த இளைஞரை சந்திக்க விரும்பி அழைத்தார் காந்தி! இலண்டனில் தான் வகித்த பெரும் பதவி, சம்பாத்தியம் அனைத்தையும் துறந்து, காந்தியின் எளிய ஆஸ்ரமத்தில் அங்கத்தினராகி கிராமந்தோறும் சுற்றிச் சுழன்று இந்தியாவின் ஆன்மாவை அணுவணுவாக உணர்ந்து தெளிந்தார் குமரப்பா!

‘சுரண்டலற்ற பொருளாதாரத்தை சாத்தியப்படுத்துவதே இந்திய விடுதலையின் உள்ளார்ந்த நோக்கமாக இருக்க வேண்டும். பிரிட்டிஷார் செய்த சுரண்டலே, வேறு வடிவில் தொடரும்படி விடுதலைக்கு பிறகான இந்தியா உருவாகிவிடக் கூடாது’ என்று தவியாய் தவித்து 1929 முதற்கொண்டு  அதற்காக சிந்தித்து செயல்பட்டு வந்தார், குமரப்பா! இந்த வகையில் காந்தியும், குமரப்பாவும் நூறு சதவிகிதம் ஒத்த சிந்தனையில் இருந்தனர். ”வருங்கால இந்தியாவின் வளமான பொருளாதாரத்திற்கு குமரப்பா கூறும் ஆலோசனைகளே சரியான தீர்வாகும்’’ என காந்தியே வழி மொழிந்தார்!

காந்தி என்ன நினைத்தாரோ, அதற்கு முழுமையான செயல் வடிவத்தை கட்டமைத்ததில் குமரப்பாவுக்கு நிகராக கருத இன்னொருவரில்லை.

”இந்தியாவின் இயற்கை வளமே மிகப் பெரிய சொத்து. அது இழக்கக் கூடாதது! நிலைத்த பொருளாதாரத்தை நித்தியத்திற்கும் தரவல்லது! பூமியே சகலத்திற்கும் ஆதாரமானது. நிலம் உயிர்ப்பானது! அந்த உயிர்ப்புத் தன்மைதான் பல தலைமுறைகளாக மக்களை காப்பாற்றி வருகிறது! அதை உயிர்ப்புடன் வைத்து நன்றி பாராட்டுவதாக தான் விவசாயம் இருக்க வேண்டுமே அல்லாது, அதை அழித்து வளத்தை பெருக்க முயற்சிப்பது அறியாமை, பேதமை! ஆகவே, ரசாயன உரப் பயன்பாடு கூடாது” என்றார் குமரப்பா!

”வாழ்வின் ஆதாரமான இயற்கையைச் சீரழித்து பெறப்படும் செல்வம்,செல்வமல்ல! என்ற குமரப்பா நிலத்தடி எரிபொருள் பொருளாதாரம் நிலையற்றது மட்டுமல்ல, சுற்றுச்சூழலை நாசப்படுத்தக் கூடிய வன்முறை பொருளாதாரமாகும்! வன்முறையற்ற பொருளாதாரம் பூமியின் இயற்கை வளத்தை அழிக்காது, மாறாக வளப்படுத்தும்! நமது விவசாய முறையில் நாம் பூமியிலிருந்து தொடர்ந்து பெற்றுக் கொண்டே இருப்பது மட்டுமல்ல, ஏதோ ஒரு வகையில் பூமிக்கு திருப்பி செலுத்திவிடுகிறோம். ஆனால், ரசாயன உரங்கள் பூமியின் மீது செலுத்தப்படும் வன்முறை! நமக்கு உணவு தரும் பூமியிடம் நாம் வன்முறையை பிரயோகித்து உணவை பெறக் கூடாது” என்றார்.

அவரது அறிவுரையைக் கேட்கத் தவறியதால் நாம் இன்று இந்தியாவின் ஒட்டு மொத்த நிலப்பரப்பில் மூன்றில் ஒரு பாகத்தை ரசாயன உரத் தாக்கத்தால் மலடாக்கி பலி கொடுத்து விட்டோம். இன்னும் அவர் அறிவுரை இந்திய அரசின் காதில் விழவில்லை. இந்தியாவில் இயல்பாக இருந்த இயற்கை உரப் பயன்பாட்டை அழித்து, பணம் கொடுத்து ஒவ்வொரு ஆண்டும் 500 லட்சம் டன்கள் ரசாயன உரங்கள் வாங்குகிறோம். இதனால், நாம் என்றென்றும் உரத்திற்காக அன்னிய தேசத்திடம் கையேந்தி நிற்பது மட்டுமல்ல, அதற்காக ஒவ்வொரு ஆண்டும் பல ஆயிரம் கோடிகளை படியழக்கிறோம்.

இந்தியாவில் ஏற்பட்ட உணவு பஞ்சம் குறித்த மிகத் தெளிவான கண்ணோட்டத்தை தந்தவர் குமரப்பா தான்! இந்திய பூமித்தாய் இது வரை இங்கு பிறந்து மடிந்த உயிர்களுக்கு மட்டுமின்றி, இப்போது பிறந்திருக்கின்ற உயிர்களுக்கும், இனி பிறக்க இருக்கும் உயிர்களுக்கும் அமுத சுரபியாய் உணவை அள்ளித் தருபவள்! பஞ்சம் உருவானதற்கான காரணம், சில மன்னராட்சி காலங்களிலும், பிரிட்டிஷ் ஆட்சி காலத்திலும் உருவாக்கப்பட்ட நில உரிமை முறைகளே! உழுபவனுக்கு நிலமில்லாமல் போனது. உழைத்தவனுக்கு தானியம் கிடைக்காமல் போனது! வரி விகிதங்கள் அவர்களை வாட்டி வதைத்தது! உற்பத்தியானவற்றை பங்கு பிரிக்கையில் உழைத்தவனுக்கு உரிமை முற்றிலும் மறுக்கப்பட்டது. எனவே, அவன் விவசாயத்தை கைவிட்டான். தானியங்கள் அன்னிய தேசத்திற்கு அள்ளிச் செல்லப்பட்டன. மற்றுமுள்ளவை இங்குள்ள இதயமற்றவர்களால் பதுக்கப்பட்டது. பஞ்சம் என்பது செயற்கையாக உருவாக்கப்பட்டது. இயற்கையில் பிழையில்லை” என்றார்.

1937 ஆம் ஆண்டு நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் காங்கிரஸ் தலைவராக இருந்த போது, ஜே.சி.குமரப்பாவையும் உள்ளடக்கிய தேசிய திட்டக்குழு ஒன்றை நேரு தலைமையில் அமைத்த போதே மிகத் தெளிவாக சுதந்திரத்திற்கு பிறகான இந்தியப் பொருளாதாரம் எப்படி கட்டமைக்கப்பட வேண்டும் என வரையறுத்தார். ஆனால், துரதிர்ஷ்டவசமாக நேரு குமரப்பாவிடமிருந்து வேறுபட்டார். பிரம்மாண்ட தொழிற்சாலைகள், பிரம்மாண்ட அணைகள் என்று யோசித்தார். குமரப்பாவோ, ”சிறு , குறுந்தொழில்கள், சுயசார்பு பொருளாதாரம், சிறிய சிற்றணைகள், கதவணைகள்..ஆகியவை தான் சுரண்டலற்ற பொருளாதாரத்திற்கும், சுற்றுச் சூழலுக்கும் உகந்தது” என்றார். எவ்வளவு பெரிய தீர்க்கதரிசியாக இருந்துள்ளார் என வியப்பாக உள்ளது.

இந்திய சுதந்திரத்திற்குப் பிறகு காந்திய பொருளாதாரத்தில் இருந்து விலகிய காங்கிரஸ் அரசு, குமரப்பாவின் யோசனைகளுக்கு செவி சாய்க்கவில்லை.

‘பொருளாதார வளம் என்றாலே, அது மற்றவர்களை சுரண்டிச் சேர்ப்பது தான், தனி நபர் உரிமைக்கானது தான் என்ற பொது புத்தியை தகர்த்து அது கூட்டிணைவில் கிடைக்கும் வளம். ஒவ்வொரு தனி நபரையும் உள்ளடக்கிய சமூகத்தின் சொத்து’ என்ற புரிதலை வரவழைக்கவே அவர் வாழ்நாளெல்லாம் பாடுபட்டார்.

மதுரைக்கு அருகில் பேரையூர் செல்லும் வழியில் டி.கல்லுப்பட்டி என்ற ஊரில் சிறு குடிலைக் கட்டி கிராம நிர்மாணப் பணிகளை செய்து வந்த குமரப்பாவை அன்றைய முதலமைச்சர் காமராஜ் சந்திக்கச் சென்ற போது, ”தற்போது பரவி வரும் ஆழ்துளைக் கிணற்றின் மூலம் நிலத்தடி நீரை எடுக்கும் வழக்கத்திற்கு முற்றுப் புள்ளி வையுங்கள். குளம், குட்டை,  ஏரிகளை தூர்வாறி, ஆழப்படுத்தி நீரை சேமித்து செயல்படுத்தும் கால்வாய் பாசனத்தை வளர்த்தெடுங்கள்” என அறிவுறுத்தினார்.

குமரப்பா அப்படி சொல்லிய காலகட்டத்தில் தமிழகத்தில் ஒரு சில ஆயிரம் ஆழ்துளைக் கிணறுகளே புழக்கத்தில் இருந்தன. இன்றோ, அவற்றின் எண்ணிக்கை 20 லட்சத்திற்கும் அதிகம்! இதனால் தான் தற்போது நிலத்தடி நீர் வற்றிவிட்டது! தற்போது ஆழ்துளைக் கிணறு கலாச்சாரத்தால் கால்வாய் பாசனமே பல இடங்களில் காலாவதியாகிவிட்டது! எவ்வளவு மழை பொழிந்தாலும் ஏரி, குளங்களில் முறையாக நீர் நிரம்புவதில்லை. மேட்டூர் அணையில் எவ்வளவு நீர் திறந்துவிட்டாலும் அது ஒரு போதும் கடைமடை பகுதி வரை சென்று சேர்வதில்லை. ஆழ்துளை கிணற்றுப் பாசனக் கலாச்சாரம் எல்லாவற்றையும் அழித்துப் போட்டுவிட்டது!

அதே போல டிராக்டர் பயன்பாட்டை ஆபத்தாகவே பார்த்தார். ஏனெனில், ”டிராக்டர் பயன்பாடு கால் நடை வளர்ப்பை காணாமலடித்துவிடும் என பயந்தார். கால் நடைகளே நிலவளத்தின் ஊற்றுக் கண். கால் நடைகளான ஆடு, மாடுகள் இன்றி நிலவளத்தை ஒரு போதும் பாதுகாக்க முடியாது” என எச்சரித்தார். ரசாயன உரம் கிடைக்கும் தைரியத்தில் கால் நடைகளை புறக்கணித்த காரணமே, இன்று உரச் செலவுகளுக்காக கடன் வாங்கி கண் விழி பிதுங்கி, லட்சக்கணக்கில் விவசாயிகள் தற்கொலை செய்து சாகிறார்கள்.

குமரப்பா ஒரு காந்தியச் சிந்தனையாளர் என்பதைக் கடந்து, அதன்  தீவிர செயற்பாட்டாளர்! அதை செயற்படுத்துவதில் சமசரமற்றவர். கவைக்குதவாத கடந்த காலக் கதைகளை அசைபோடும் காந்தியவாதியாக அவர் ஒரு போதும் இருந்தததில்லை. காந்தியம் என்பது பிரச்சாரம் செய்வதற்கானதல்ல, பின்பற்ற வேண்டிய ஒன்று! நிகழ்காலத்தில் அதை நிதர்சனப்படுத்துவது, தவறானவற்றை சுட்டிக் காட்டி, சரியானவற்றை நடைமுறை சாத்தியமாக்குவது. அதற்காக சமரசமின்றி இறுதி வரை செயல்பட்டுக் கொண்டே இருப்பது என்பதில் உறுதி காட்டினார்.

இன்று அவரைப் போன்ற காந்தியவாதிகளை காண முடியாதது பெரும் துர் அதிர்ஷ்டமாகும்!

குமரப்பாவை உணர்வது என்பது நாம், தொலைத்து நிற்கும் நம் ஆன்மாவை மீட்டெடுக்க உதவிடும். குமரப்பாவை நெஞ்சில் வைத்து செயல்படுவோம்.

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time