ராஜேந்திர பாலாஜி மீது ஏன் அதீத அக்கறை உச்ச நீதிமன்றத்திற்கு?

-சாவித்திரி கண்ணன்

‘எதற்காக இவ்வளவு அவசரம் காட்டுகிறீர்கள்..?’ என ராஜேந்திர பாலாஜி கைது தொடர்பாக தமிழக அரசை கேள்வி கேட்கிறது உச்ச நீதிமன்றம்! ஆனால், பல வழக்குகள் நிலுவையில் இருக்க, இவ்வளவு அவசரமாக ராஜேந்திர பாலாஜி முன் ஜாமீன் மனுவை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியே எடுத்துக் கொண்டது ஏன்…?

மோசடி குற்றங்கள் செய்து ஓடி ஒளிந்த ராஜேந்திர பாலாஜிக்காக இவ்வளவு பொங்க வேண்டிய அவசியம் என்ன..? ஊருக்கென்றே உழைத்த உத்தமரை தமிழக காவல்துறை கைது செய்துவிட்டது போலும்!  ”நீதிமன்றத்தை ஏன் தர்ம சங்கடப் படுத்துகிறிர்கள்..” என கேட்கிறார் தலைமை நீதிபதி? ஆனால், தலைமை நீதிபதியின் இந்தக் கேள்வி தன் கடமையைச் செய்யும் தமிழக அரசை தர்ம சங்கபடப்படுத்தாதா..?

ஒரு வழியாக கைது செய்து விசாரணைக் கைதியாக சிறையில் தள்ளிவிட்டார்கள், ராஜேந்திர பாலாஜியை! இப்படிப்பட்ட கிரிமினலைக் காப்பாற்ற யார் யாரெல்லாம் துணை போயுள்ளனர்.? இவர் எந்த தைரியத்தில் ஓடி ஒளிந்தார்…? இன்று எந்த தைரியத்தில் விடுதலையை எதிர் நோக்குகிறார்…? என்பதை எல்லாம் விரிவாக விவாதிக்க வேண்டியுள்ளது!

ஊரைக் கொள்ளையடித்து, ஓங்காரமாய் ஆர்பரித்து, வேலை தேடும் எளியோரிடம் ஆளைப் போட்டு பணம் வசூலித்து, ஆட்டையப் போட்டு, தேடப்படும் குற்றவாளியாய் ஊர், ஊராய் ஓடி ஒளிந்து தற்போது கைதானதன் மூலம் மீள முடியாத அவப் பெயரைத் தேடிக் கொண்டார் ராஜேந்திர பாலாஜி.

தன்னுடைய கோழைத்தனமான செய்கையின் மூலம் கடந்த இருபது நாட்களாக தினசரி, நாளும்,பொழுதும், தன்னை ஒரு பேசுபடு கேலிச் சித்திரமாக அவரே கட்டமைத்துக் கொண்டார்!

ஒரு அமைச்சர் மற்றும் கட்சியின் மாவட்டத் தலைவர் என்ற பெரும் பொறுப்புகளில் இருந்தவர் இப்படி ஓடி ஒளியும், தேடப்படும் குற்றவாளியாக மாறும் அளவுக்கு எல்லைகளை மீறி நடந்துள்ளார்! இத்தனை நாட்கள் அவர் ஓடி ஒளிய, ஆங்காங்கே எத்தனையெத்தனை பாஜகவினர் உதவியுள்ளனர் என பார்க்கும் போது அதிர்ச்ச்சியாக உள்ளது. கிருஷ்ணகிரி மாவட்ட பாஜக நிர்வாகிகள், கர்நாடகாவின் பாஜக நிர்வாகிகள் அவரை காப்பாற்ற பெரும் பிரயத்தனம் செய்துள்ளனர்!

எத்தனை நாட்கள் அவருக்கு பாஜகவினர் பாதுகாப்பு தர முடியும்? தன்னுடைய இந்துத்துவ வெறிப் பேச்சுகளுக்கான வெகுமதியாக தான் எவ்வளவு பெரிய குற்றங்கள் செய்தாலும், காப்பாற்றப்படுவோம் என்ற அதீத நம்பிக்கையில் கொலை பாதகச் செயல்களைக் கூட தயக்கமின்றி அரங்கேற்றி வந்தவர் தான் ராஜேந்திர பாலாஜி. அதற்கான விலையை  என்றாவது ஒரு நாள் அவர் பெற்றுத் தானே ஆக வேண்டும்?

மதுரை உயர் நீதிமன்றமோ ராஜேந்திர பாலாஜி விவகாரத்தில் மருகுகிறது! தன் வழக்கறிஞர் மாரீஸ் என்பவரை ராஜேந்திர பாலாஜி அடிக்கடி போனில் தொடர்பு கொண்ட வகையில், காவல்துறையினர் அவர் வீட்டில் சோதனை நடத்தினர். இது தொடர்பாக  மதுரை உயர் நீதிமன்றம்  சோதனை நடத்திய ஆய்வாளர் சிவபாலனை காணொலி விசாரணையில் ஆஜராகுமாறு கடுமை காட்டியது. `’வழக்கறிஞர் வீட்டில் சோதனை நடத்துவதற்கு மாஜிஸ்திரேட்டிடம் அனுமதி பெறப்பட்டதா?’’என கேள்வியெழுப்பட்டது. இதையடுத்து, `மாவட்ட எஸ்.பி, பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும்’ என நீதிமன்றம் உத்தரவிட்டது.

இன்றைய தினம் உச்சநீதி மன்றமோ, ராஜேந்திர பாலாஜியை கைது செய்வதில் அவசரம் காட்ட வேண்டிய அவசியம் என்ன? என்ற கேள்வியை எழுப்பி உள்ளதோடு, அவரது உதவியாளர்கள் கைது செய்யப்படுவதற்கு இடைக் காலத் தடை தந்துள்ளது. இவை எல்லாம் செல்வாக்கானவர்கள் விவகாரத்தில் நீதிமன்றங்கள் எப்படி செயல்படும் என்பதை உணர்த்துகிறது!

கடைசியில் நட்ட நடு ரோட்டில் பொதுமக்கள் பார்க்க, ஒரு கடத்தல்காரனை சுற்றிவளைத்து பிடிப்பது போல காவல்துறையிடம் பிடிபட நேர்ந்தது அவமானமல்லவா..? ‘ஊழ் வினை உருத்து வந்து ஊட்டும்’ என்பது இது தானோ..?

அமைச்சர் என்ற அதிகாரமிக்க பதவியில் இருந்தவர் ஏழை,  எளிய விவசாயிகளின் வாழ்வாதாரமான பால்வளத் துறையில் கணக்கு வழக்கின்றி பகல் கொள்ளை நடத்தியதோடு நிறுத்தவில்லை. அளவில்லா பேராசையுடன் வேலை தேடித் தவித்த ஏழைகளுக்கு வலை வீசி பணம் பெற்றுள்ளார். பணம் பெற்றதே பெரும் குற்றம். அப்படி பணம் வாங்கிக் கொண்டு அவர்களை ஏமாற்றிக் கதற வைத்தது அதைவிட பெரும் குற்றம்.

அதிமுக தலைமை இது குறித்து இது வரை வாய் திறக்கவில்லை. ஒ.பி.எஸ்சும், இ.பி.எஸ்சும் ஏன் ராஜேந்திர பாலாஜியை அழைத்து விசாரிக்கவோ, கண்டிக்கவோ இல்லை. ஓடி ஒளிந்த ராஜேந்திர பாலாஜி தனக்கு மட்டுமா அவப் பெயர் தேடிக் கொண்டார். கட்சிக்கும் தானே இழுக்கு! கட்சிக்கு இது மானப் பிரச்சினையல்லவா? அல்லது மான, அவமானமே இத்துப் போய்விட்டதா அதிமுகவில்? ராஜேந்திர பாலாஜியை தப்புவிக்கவும், காப்பாற்றவும் ஒட்டுமொத்த தென் மாவட்ட அதிமுகவினரும் தீயாய் வேலை செய்துள்ளனர். ஏறத்தாழ 600 பேர்களின் தொலை பேசியை கண்காணிக்க வேண்டிய நிலைக்கு காவல்துறை நிர்பந்திக்கப்பட்டது!

அவரிடம் பணம் வசூலித்து தந்து ஏமாற்றப்பட்டதும் அதே கட்சியைச் சேர்ந்தவர் என்ற போது ஏன் கட்சி இதன் மீதான நடவடிக்கை இல்லாமல் உள்ளது. நியாயப்படி பார்த்தால் அவரை கட்சியில் இருந்தே விலக்கி வைத்திருக்கலாம். அப்படி ஏன் செய்ய முடியவில்லை? ஒரு வேளை, ”அவ்வாறு செய்யக் கூடாது” அவர் எங்கள் செல்லப் பிள்ளை என்று பாஜக அறிவுறுத்தியதோ என்னவோ?

ஏனென்றால், அவருக்கு பாதுகாப்பு அளித்து அவர் தப்புவதற்கு உதவிய தமிழக பாஜக நிர்வாகிகள் நால்வர் கைதாகியுள்ளது கவனிக்கத்தக்கது. அதே போல கர்நாடகாவின் பாஜக நிர்வாகிகளும் அவர் தப்ப ஒத்தாசை செய்துள்ளது அம்பலமாகியுள்ளது. ராஜேந்திர பாலாஜி தலைமறவு காலத்தில் காவி வேட்டியுடன் திரிந்ததையும் கவனத்தில் கொள்ள வேண்டும்! இன்னும், பாஜக மேலிடம் உச்ச நீதிமன்றத்தில் அவருக்கு ஜாமீன் கிடைக்க உதவாது’ என்பதற்கு உத்திரவாதம் சொல்ல முடியாது.

உச்ச நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கோரும், மனித உரிமை ஆர்வலர்கள் வழக்கை எல்லாம் வழக்கை எல்லாம் இவ்வளவு அவசர, அவசரமாக எடுத்து விசாரித்திருக்கிறதா உச்ச நீதிமன்றம்? ஒரு கிரிமினல் முன் ஜாமீன் கேட்டு விண்ணப்பித்துவிட்டால், அந்த வழக்கை நீதிமன்றங்கள் எடுத்து விசாரித்து தீர்ப்பு சொல்லும் வரை காவல்துறை கைகட்டி இருக்க வேண்டும் என்றால், எல்லா கிரிமினல்களுக்கும் இது சாதகமாகிவிடாதா..?

ராஜேந்திர பாலாஜியின் முன் ஜாமீன் மனுவிற்கு வழக்கறிஞர் துஷ்யந்த் தவே ஆஜராகிறார். தலைமை நீதிபதி என்.வி. ரமணா தாமே அதை எடுத்துக் கொண்டு விசாரிக்கிறார்! ஏற்கனவே ராஜேந்திர பாலாஜி மீதான சொத்துக் குவிப்பு வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடக்கிறது. அந்த வழக்கை விசாரித்து வரும் நீதிபதியிடம் தானே இந்த வழக்கும் வழக்கமாக ஒப்படைக்கப்படும். அப்படி இல்லாமல் தலைமை நீதிபதி தானே அவசரமாக எடுத்து விசாரித்தது ஏன்? என்பதும் ஒரு கேள்வியாக உச்ச நீதிமன்ற பத்திரிகையாளர்களிடையே விவாதிக்கப்பட்டு உள்ளது.

மேலும், ராஜேந்திர பாலாஜியின் உதவியாளர்கள் மூவர் விவகாரத்தில் அவர்கள் முறையாக ஹைகோர்ட்டில் ஜாமீனுக்காக அணுகி அது மறுக்கப்பட்டு இருந்தால் தான் உச்ச நீதிமன்றம் வரலாம். ஆனால், அவர்கள் நேரடியாக உச்ச நீதிமன்றத்தை அணுகியது மரபு மீறல்.  அவர்களை உயர் நீதிமன்றத்தை நாடும்படி கூறி அறிவுறுத்தி தள்ளுபடி செய்வார், தலைமை நீதிபதி என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவரோ இந்த மூவருக்கும் முன் ஜாமீன் தந்துள்ளார். அதே சமயம் ராஜேந்திர பாலாஜி தூண்டுதலால் பணம் வசூலித்து தந்து ராஜேந்திர பாலாஜியால் ஏமாற்றப்பட்ட  நல்லத் தம்பிக்கு ஜாமீன் மறுத்துள்ளார் நீதிபதி! இந்த அணுகுமுறையை எவ்வாறு புரிந்து கொள்வது?

நமது ஜனநாயகம் விசித்திரமானதாக வெளிப்படுகிறது. இப்படி நாடறிந்த ஒரு கிரிமினலுக்கு உதவ ஒரு தேசிய கட்சியே துணை போகிறது! அவர் சார்ந்த கட்சியின் நிர்வாகிகளும், தொண்டர்களும் அவர் கைது செய்து அழைத்து வரப்படும் போது திரளாக வந்து எதிர்ப்புத் தெரிவிக்கின்றனர். மக்கள் என்ன நினைப்பார்கள்..? நம்மை கொள்ளையடித்தவனை கண்டிக்காமல் அந்த கட்சியே கொடிபிடித்து கோஷமிட்டால், அதை எப்படி புரிந்து கொள்வது?

”கொள்ளையடிப்பது, ஏமாற்றுவதும் எங்கள் கட்சியின் குலத் தொழில்! பிதுராஜ்ஜிய உரிமை” என பிரகடனப்படுத்தி விட்டுப் போகலாமே நீங்கள்! ஏனென்றால், உங்கள் செயல்கள் அதைத் தானே நிருபிக்கின்றன!

இவை ஒருபுறமிருக்க, ராஜேந்திர பாலாஜியை தப்பவிட்டது தமிழக காவல்துறையின் பலவீனத்தையே காட்டுகிறது! டிசம்பர் 17 ஆம் தேதி ராஜேந்திர பாலாஜியின் முன் ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்ட காலை 10.40 மணியளவில் அவர் போலீஸ் புடை சூழ பொது நிகழ்வில் இருந்தார். திமுக அரசுக்கு எதிரான ஆர்பாட்டத்தில் பேசி முடித்து கிளம்ப 11.10 ஆனது. அது வரை போலீஸ் சுதாரித்துக் கொள்ளவில்லையே ஏன்? ராஜேந்திர பாலாஜியின் மனு தள்ளுபடியாக வாய்ப்புள்ளது என்பது ஏறத்தாழ எதிர்பார்க்கப்பட்ட ஒன்று தான்! அப்படி இருக்க தகவல் வெளியாகி அரை மணி நேரம் வரையிலும் அவரைச் சுற்றி போலீஸ் இருந்தும் அவர் தப்பியதை எவ்வாறு புரிந்து கொள்வது?

அப்படி சுலபமாக கைது செய்திருக்க வேண்டியவரை தப்பவிட்டு, எட்டுத் தனிப்படைகள் அமைத்து, ஆந்திரா, கேரளா, கர்நாடகா ,டெல்லி என அலையைவிட்டு அளப்பரிய செலவுகள் செய்து பிடித்துள்ளார்கள். இதில் ஒவ்வொரு முறை போலீஸ் ராஜேந்திர பாலாஜியை நெருங்கும் போதும், அவருக்கு தகவல்கள் போலீஸ் துறையிலேயே தரப்பட்டு தப்பிக்க வைக்கப்பட்டுள்ளார்! இவை எல்லாவற்றுக்கும் தமிழக டிஜிபி சைலேந்திர பாபு பதில் சொல்லக் கடமைப்பட்டு உள்ளார்.

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time