மோடி என்றாலே பற்றி எரிகிறது பஞ்சாப்! கொந்தளிக்கும் விவசாயிகள்! குழந்தைகள் முதல் முதியோர் வரை குமுறும் பஞ்சாபிகள்! எல்லாம் தெரிந்திருந்தும் ஏன் சென்றார் பஞ்சாப்? தற்போது எதற்கிந்த மிரட்டல்கள்! இது எந்த சதித் திட்டத்திற்கான ஒத்திகை..?
பிரதமர் மோடி பஞ்சாப் பயணத்தை தொடரமுடியாமல் திரும்பி வந்ததை ஒட்டி நேற்று ஏற்பட்ட சர்ச்சையில் ஏற்படும் கூச்சலும், கூப்பாடும், ஆத்திரமூட்டும் மிரட்டல்களும் ஆச்சரியமூட்டுகின்றன!
கடந்த ஒருவருடத்திற்கும் மேலாக போராடி வரும் விவசாயிகள், குறிப்பாக பஞ்சாப் விவசாயிகள் மோடி அரசின் பல்வேறு அடக்குமுறைகள்,கேலி பேச்சுக்கள், ஏமாற்றல்களைத் தாண்டி வெற்றி பெற்றதை நாம் மறக்க வில்லை, அதே சமயம் மோடியும் மறக்கவில்லை என்பதையே நேற்றைய நிகழ்வுகள் சுட்டிக்காட்டுகின்றது.
தன்னுடைய அரசியல் தலைமையை தற்காத்துக்கொள்ள ,மூன்று விவசாய சட்டங்களை வேண்டா வெறுப்பாக மோடி அரசு திரும்பப்பெற்றாலும், பிரதான கோரிக்கையான எம் எஸ் பி எனப்படும் குறைந்தபட்ச ஆதாரவிலை என்ற கோரிக்கை இன்னும் நிறைவேற்றாத்தால் டெல்லி முற்றுகையை விவசாயிகள் தற்காலிகமாக நிறுத்தினாலும், ஊர்களுக்கு திரும்பியவர்கள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆங்காங்கே அமைதியாக போராடி வருகின்றனர்.
மோடியின் பஞ்சாப் பயணம் அறிவிக்கப்பட்டதும் அவர்கள் ‘மோடியே திரும்பிச்செல்’ GO BACK MODI என்று மாவட்டதலைநகரங்களிலெல்லாம் மறியல் செய்து வந்தனர் . தமிழ்நாட்டில் 2018ல் காவிரி பிரச்சினை உச்சத்தில் இருந்த பொழுது எதிர்கட்சிகள் ஒன்றிணைந்து கறுப்பு கொடிகாட்டி மோடியின் தமிழக வருகையை எதிர்த்து குரல் எழுப்பியதைப் போன்று பஞ்சாப் விவசாய மக்கள் போராடினர்,சாலை மறியல் செய்தனர். இவர்களை சமாதானம் செய்ய கஜேந்திர சிங் சேக்காவத் என்ற மத்திய அமைச்சர் அவர்களுடன் பேச்சுவார்தை நடத்திக் கொண்டிருக்கிறார்.
இதெல்லாம் ஊரறிந்த உண்மை, ஒன்றிய அரசிற்கும் இது தெரியும். விவசாயிகளின் கோபம் நம்மால் புரிந்து கொள்ள முடியும் , ஆனால் மோடியின் வன்மத்தை..?
பஞ்சாபில் பெரோஸ்பூரிலுள்ள தேசிய தியாகிகள் நினைவிடத்திற்கும் அதைத் தொடர்ந்து நலத்திட்டங்கள் துவக்க விழாவிலும் கலந்து கொள்ள பட்டின்டா நகரிலிருந்து ஹெலிகாப்டரில் செல்வதாக இருந்த மோடி மோசமான வானிலையினால் கடைசி நிமிடத்தில் சாலைவழியாக செல்வது என்று முடிவெடுத்து செல்கையில் வழியில் விவசாயிகளின் சாலை மறியல் நடைபெற்ற காரணத்தினால் பிரதமரின் கார் அணிவகுப்பு மேற்செல்ல முடியாமல் பட்டின்டாவிற்கே திரும்ப நேரிட்டது.
இந்த குளறுபடி தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும் நடந்துவிட்ட விரும்பத்தகாத திருப்பங்களை அணுகவேண்டிய விதம் அறிவு பூர்வமாகவும், நாகரீகமாகவும் இருக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு. பிரதமரின் பாதுகாப்பிற்கான முழு பொறுப்பு எஸ் பி ஜி தான்.
இந்த தவறுகளுக்கு யார் காரணம் அல்லது பொறுப்பு, இத்தகைய தவறுகளை தவிர்ப்பது எங்கனம் என்று முடிவுடுக்க வேண்டியது Special Protection Group எஸ் பி ஜி யின் கடமை, பிரதமர் அலுவலகத்தின் பொறுப்பு.
இதற்கெல்லாம் மேலாக ஒரு அரசியல் தலைமை இத்தகைய அசம்பாவித்த்தை பொறுப்புடனும், நாகரீகமாகவும் கண்ணியமாகவும் எதிர்கொண்டு அனைவருக்கும் உதாரணமாக திகழ வேண்டும்.
ஆனால் பாஜக தலைமையோ, ‘ பிரதமரின் பாதுகாப்பிற்கு காங்கிரஸ் உலை வைக்கிறது’ என்றும், அமீத் ஷா இதை ‘ காங்கிரஸ் நாளை செய்யப்போவதற்கு இது ஒரு ட்ரெய்லர்’ என்று பிதற்றுவதும்,பஞ்சாபில் பிரதமருக்கு கொடுக்கப்பட்ட பாதுகாப்பு தொடர்பாக மாநில டிஜிபி விளக்கம் அளிக்க வேண்டும் என மிரட்டுவதும், ‘ நான் உயிருடன் திரும்பி வந்ததற்கு உங்கள் (பஞ்சாப்) முதல்வருக்கு என் நன்றியை கூறவும் ‘ என்று மோடி காவலரிடம் கூறியதாக ஏ என் ஐ ANI செய்திக் குறிப்பு கூறுவதையும் நோக்கும் பொழுது இது ஒரு திட்டமிட்ட நாடகமோ, ஒருவித பிரச்சாரமோ என்று நினைப்பதில் என்ன தவறு?
பிரதமர் அலுவலகத்திடமிருந்து அதிகாரபூர்வ அறிவிப்பு (என்ன நடந்தது) ஏதும் இதுவரை வரவில்லை, எஸ் பி ஜே எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை, உள்துறை அமைச்சகம் இதைப்பற்றி முழுமையான ஆய்விற்கு உத்தரவிட்டுள்ளது.
ஆனால், இதற்கு முன்னதாகவே பா ஜ க வாய்க்கு வந்தபடி எதிர்கட்சியின் மீது வசைபாடுவதும், பஞ்சாப் அரசு, மற்றும் பஞ்சாப் உயரதிகாரிகள் மீது சேற்றை வாரியிறைப்பதும் உள் நோக்கமுள்ளதா? பிரதமரின் உயிருக்கு ஆபத்து என்று கூப்பாடு போட்டு ஏன்புரளியை கிளப்புகின்றனர்?
வழக்கம்போல் மோடி பிள்ளையை கிள்ளிவிட்டு, அரசியல் ஆதாயம் தேடுவது அப்பட்டமாகத் தெரிகிறது. இந்த பாதுகாப்பு குளறுபடியை முழுமையாக விசாரிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தை நாடியுள்ள நிலையில் இதை அரசியல் ஆக்குவது பாஜகவிற்கு அழகல்ல.
இவர்களே வேண்டுமென்றே ஒரு பிரச்சினையை கிளப்பி ‘பிரதமர் உயிருக்கு ஆபத்து’ என்ற மாயையை உருவாக்க நினைக்கின்றனரோ என்று எண்ணத்தோன்றுகிறது. ஏனெனில், இப்படித்தான் குஜராத்தில் ‘மோடியை கொல்ல தீவிரவாதிகள் வருகை, மோடியின் உயிருக்கு ஆபத்து’ என்ற பூச்சாண்டி காட்டி ஏராளமான போலி என்கவுண்டர்கள் நடந்தன என்பதை மறப்பதற்கில்லை.
இந்த குஜராத் மாடல் இந்தியா முழுமைக்கும் வந்தால் நினைப்பதற்கே நெஞ்சம் பதைக்கிறது. குஜராத்தில் நடந்ததைப் போன்றே டெல்லியிலும் அதிகார குவிப்பு, நாடாளுமன்றத்தை செல்லாக்காசாக்குவது, தன்னிச்சையான அமைப்புகளில் ஆமாம் சாமிகளை இட்டு நிரப்புவது, இன்கம் டாக்ஸ், அமலாக்கத்துறை,சி பி ஐ போன்ற அமைப்புகளை கைப்பாவையாக மாற்றுவது போன்றவைகள் ஏற்கனவே நடந்துவிட்டதால் இந்த முயற்சியே அடுத்த இலக்கு போலும்.
Also read
ஊடகங்கள் ஆட்சியின் ஊதுகுழலாக -கோடி மீடியா- மாறிவிட்ட சூழலில் வெறுப்பு அரசியல் கொடிகட்டி பறக்கும் நேரத்தில், இந்த உயிருக்கு ஆபத்து என்ற பிம்பமே தான் விரும்பும் சூழலை ஏற்படுத்தும் என்று ஆட்சியாளர்கள் எண்ணுவதன் விளைவே இந்த ஆர்ப்பாட்டமெல்லாம் . இவர்கள் மூட்டும் தீயில் யாரெல்லாம் பலிகடா ஆக்கப்படுவர் என்பதை ஊகிப்பது கடினமல்ல.
தேர்தல் ஆணையம் உயிரிழந்த நிலையில் எஞ்சியுள்ள உச்சநீதிமன்றமும் மக்களுக்கு விடிவைத்தருமா என்றால் ‘மக்கள் தாங்களை பாதுகாக்க தங்களைத்தான் பெரிதும் நம்ப வேண்டுமேயொழிய நீதிமன்றங்களை அல்ல’ என்று அறிஞர்கள் கட்டியம் கூறுகின்றனர்.
ஜனநாயகம் மீட்டெடுக்கப்பட வேண்டுமானால் மக்கள், தங்களைத்தான் நம்ப வேண்டும்.
ஜனநாயகத தின் ஆணி வேறான தேர்தல்களின் முடிவுகள் அடிப்படையில் அமைதியான அரசு மாற்றம் என்ற கொள்கை அமெரிக்காவில் கடந்த ஆண்டு அடி வாங்கியது.(ஜனவரி 06,2021) இந்தியாவும் இதற்கு விதி விலக்கல்ல என்பதை நினைவில் கொள்வோம் இந்த நாளில்.
கட்டுரையாளர்; ச.அருணாசலம்
நல்ல கட்டுரை . சிந்திக்கவேண்டிய செய்திகள் நிறைய உள்ளன . வாக்குகளுக்காக பக்தி உணர்வை உருவாக்கும் கூட்டம். குறுகிய அனுதாபத்தை மக்களிடம் பெறுவதற்காக எதையும் செய்ய தயாராக இருக்கும் .