ஒரு சித்தரின் அரிய மருத்துவ ஞானம் சீடனுக்கு கடத்தப்பட்ட வரலாறு!

- முத்து நாகு

கற்பனைக்கு எட்டாத மிக ஆழ்ந்த ஆன்மீக, அனுபவ மற்றும் ஞானத்தால் கட்டமைக்கப்பட்டது சித்த மருத்துவ மரபு! யோக மரபின் ஆன்மீகப் பாதையில் எண்ணற்ற சித்தர்கள் மனித குலம் நோயின்றி வாழ்வதற்கு தங்கள் தூய நல்லெண்ணத்தால் உருவாக்கிய சித்த மருத்துவத்தை தகுந்த சீடர் கிடைக்காத நிலையில் அப்படியே சொல்லாமல் சென்று விட்டனர். ஆனால், தகுந்த சீடனைக் கண்டடைந்த போது அவர்கள் அதை மனதார அடுத்த தலைமுறைக்கு தந்து சென்றுள்ளனர். அப்படியான அனுபவத்தைத் தான் குப்பமுனி அனுபவ வைத்திய முறை என்ற நூலில் வியக்கதக்க வகையில் தந்துள்ளார் முத்து நாகு! இந்த நூல் எழுதிய அனுபவத்தை அவரே இங்கு பகிர்ந்து கொள்கிறார்!

‘இந்திய மொழிகளில் தமிழுக்கு மட்டுமே தனியான மருத்துவ அறிவு இருந்துள்ளது. அதனால் தான் தமிழகத்தில் பல அரசுகள் நிலைத்தன! உலகப்பயணிகள் பனுவல்களில் தமிழ் மொழிக்கான தனி மதிப்பு உள்ளதை அறிய முடிகிறது. இப்படிப்பட்ட நமது அறிவை இழந்தோம் என்பதை விட இழக்க வைத்திட பிரிட்டீஷாருடன் சேர்ந்து அரசியல் சமூக இயக்கங்கள் செயல்பட்டன’என்பதை இந்த நூலினை தயாரிக்கும் போது தான் நான் உள்வாங்கிக்கொண்டேன்.

எனது தாத்தா பண்டுவர் குப்புசாமியின் தந்தை நாகப்பன் வைகை ஆற்றுப்படுகையில் ஆடு, மாடு மேய்க்கும் போது சாமியார் ஒருவர் அவ்வழியாக வந்ததாகவும், அவரது களைப்பைக்கண்ட நாகப்பன் ஆட்டுப்பாலை சுடுபாறையில் கறந்து அதை எருக்கம் குச்சியால் கிண்டி, எருக்கம் இலையில் வைத்து கொடுத்து வணங்கினாராம். பால்கட்டியின் சுவையுடன் இவரது செயலை வியந்து பார்த்துள்ளார் சாமியார்.

ஆற்றின் கரையோரத்தில் செங்கத்தாரி, உள்ளீ (காட்டு வெங்காயம்), செம்முள்ளி, கல்இச்சி, கல்அத்தி, சங்கம்குப்பி, எலிவிசச்செடி, செப்படி போன்ற ஆயிரக்கணக்கான மூலிகைகள் இருப்பது கண்டு பார்த்த சாமியாருக்கு சில மூலிகைகளை அடையாளப்படுத்தியுள்ளார் நாகப்பன். இவரை பாராட்டிய சாமியார், உயிர் காக்கும் மருந்து செய்முறையுடன் ஆடுமாடுகளை தாக்கும் சப்பை நோய்கான மருந்தை சொல்லி மேற்கு நோக்கி கிளம்பியுள்ளார். ”சாமி இங்க தங்கி எங்க சனங்களுக்கு பண்டுவம் பார்க்கனும். எங்க கோரிக்கையை தட்டக்கூடாது’ என்று சொல்லி நெடுஞ்சானாக காலில் விழுந்து வணங்கி உள்ளார். நாகப்பனின் கோரிக்கையை ஏற்ற சாமியாருக்கு ஆற்று ஓரத்தில் குடிசை அமைத்து தனது மகன் ரங்கப்பனை பணிவிடை செய்திட அனுப்பினார் நாகப்பன்.

ரங்கப்பனின் கேள்வி ஞானத்தை கண்ட சாமியார், அகத்தியரின் மற்றொரு பெயரான ‘குப்பன்’ என்ற பெயரை சூட்டி அழைத்திட, அதுவே அவருக்கு நிலைத்து காலப்போக்கில் குப்புசாமியாக மருவி குப்பமுனி என மாறியது. சாமியாரின் பெயர் கதிர்வேல் என தெரியவர சுவாமி அடைமொழியுடன் அவரது பெயர் துலங்கியது. அவரிடம் வாய்மொழியாக மருத்துவம் கற்று தேர்ந்த குப்புசாமி சிறு வயதிலே பெரும்பண்டுவராக அறியப்பட்டுள்ளார்.

இவரது ஊர் அருகில் உள்ள ஜம்புலிபுத்தூர் கதலிநரசிங்கப்பெருமாள் கோயில் பட்டர் கதலிஐயர் என்பவர் அஹ்ரகாரத்தில் நடத்திய திண்ணைக் கல்வி பயின்றார். கதிர்வேல்சாமிகள் மருத்துவம் சொல்லச் சொல்ல ஓலையில் எழுதினார் குப்புசாமி. ”பண்டுவத்தை நான் நல்ல சீடனுக்கு கடத்தி விட்டேன் எனது பயணம் முடிவடைந்தது” என கதிர்வேல்சாமிகள் வைகை ஆற்றில் எதிர்திசையில் நடந்து போனாராம். அவர் நடக்க நடக்க ஆற்று நீர் விலகி வழிவிட, அவர் அப்படியே மறைந்தார். அவர் வளர்ந்து வந்த நல்ல பாம்புகளும் அவருடன் சென்று ஆற்றில் நீந்தி போனதாக வாய்வெளி கதை நம்பிக்கையாக எங்கள் பகுதியில் இன்றும் உலா வருகிறது. கதிர்வேல்சாமிகளுக்கு அடுத்து நமச்சிவாயம் செட்டியார் என்ற பெருமகன் எங்கள் பகுதிக்கு வந்து பல மருத்துவமுறைகளை சொல்லிக் கொடுத்து விட்டு சென்றாராம்.

குப்புசாமியின் மருத்துவ திறனை அறிந்த கண்டமனூர் ஜமீன், அரண்மனை பண்டுவராக அங்கிகரித்தது. இந்தச் ஜமீனில் கடைசி வாரிசான இராமகிருஷ்ண பாண்டியருக்கு குட்டம் (குஷ்டம்) வந்திட அவருக்கு மருத்துவம் பார்த்து சரி செய்ததை இன்றும் பெருமையாக எங்கள் கிராமங்களில் சொல்லுவதை நான் கேட்டுள்ளேன். குப்புசாமியை பிரிட்டீஷ் அரசாங்கம் சிவில் வழக்குகளை விசாரிக்கும் ஜூரியாக பெரியகுளம் பிர்காவிற்கு நியமித்தது. அதற்கான சான்றுகள் எங்கள் வீட்டில் உள்ளன.

எங்கள் வீட்டிலுள்ள கதிர்வேல்சாமியார், நமசிவாயம்செட்டியார், குப்புசாமி எழுதிய சுவடிகளையும், கையெழுத்து பிரதிகளையும் ஒப்பிட்டு நூலாக்கம் செய்திட நினைத்த போது ”சித்த மருத்துவத்திற்கு பல ஆயிரம் நூல்கள் இருக்க, இதில் என்ன புதிதாக உள்ளது” என்ற கேள்வி எல்லோரும் போலவே எனக்கும் வந்தது. சித்தமருத்துவக் கல்லூரி, தனிநபர்களின் அனுபவ மருத்துவ நூல்கள் பலவற்றை ஒப்பீடு செய்து படித்த பின்னரே எங்கள் குடும்பத்தினர் பாதுகாத்துள்ள பனுவலில் இப்பகுதியில் மட்டும் கிடைக்கும்  மூலிகைகளை கொண்டு கந்தகம், ரசம், தாளகம் போன்ற தாதுகளை சுத்தி செய்து மருந்து செய்திடும் முறையை கண்டறிந்துள்ளனர் என்பதை புரிந்து கொள்ள முடிந்தது. இந்த ஏடுகளின் துணை கொண்டு, எனது தந்தையும், எனது தாத்தாவும் பல ஆயிரம் பேர்களை நலப்படுத்தி உள்ளார்கள்! அவர்களது தொடர்ச்சியாக, எங்கள் குடும்பமும் மருத்துவம் பார்த்து வருகிறார்கள் என்பதை எங்கள் பகுதி மக்கள் அறிவார்கள்.

தமிழ் இலக்கியத்தில் கஞ்சங்குல்லைபூ என்று அறியப்படும் கஞ்சா, அரபு தேசத்தில் விளைந்திடும் போஸ்தக்காய் அதன் பிசினான அபின், தோப்பிக்கள், பனங்கள் இவைகள் மருந்தாக பயன்பட்டவை பயன்படுபவை. அதே போல் கடலில் விளைந்திடும் கடல்நுரை, கடல்பாசம், பவளம், பவளப்புற்று, முத்துச்சிப்பி, சங்கு இதே போல் வனத்தில் மட்டுமே விளைந்திடும் குங்கிலியம், கடுக்காய், தான்றிக்காய், மாச்சக்காய், மாசிக்காய், கழற்சிக்காய், முயல், பச்சோந்தி, மான்கொம்பு, யானையின் கடைவாய்ப்பல், பச்சக்காடை இறகு, மயில் இறகு போன்ற நூற்றுக்கு மேல்பட்ட மருந்துகளை பயன்படுத்த கூடாது என பிரிட்டீஷார் போட்ட வனச்சட்டம் இருநூறு ஆண்டுகாலமாக சித்த மருத்துவத்தை ஒதுக்கி வைத்தாலும், மக்கள் மருத்துவமாக இருப்பதால் இன்றும் சாகாமல் உள்ளது.

கடந்த தலைமுறை வரை, பலவகையில் சித்தமருத்துவத்தை பயிற்சி எடுத்தவர்கள் ஒவ்வொருவரும் சித்தர்களைப்போல பலவித ஆய்வு முயற்சிகளை செய்துள்ளனர். இதற்கு எடுத்துக்காட்டு பிள்ளைப் பூச்சியின்கூடு, சாலிமரத்துப் பூச்சியின்கூடு, விலங்குகளின் சாணம் இதெல்லாம் விட மூட்டைப் பூச்சியை தலைமுடி உதிர்தலுக்கு மருந்தாக பயன்படுத்தி வெற்றி பெற்றுள்ளார்கள் என்பதை கண்கூடாக அறிந்துள்ளேன். மனித மண்டை, நாய்மண்டை, கழுதை மண்டை ஓடுகள் பயித்தியம், சன்னிக்கு மருந்துக்கு பெரிதும் உதவும் மருந்துகளுக்கு தடை போட்டுள்ளது அரசு.

இந்த நூல் விவாதத் திறப்பினை கொடுக்கும் என நம்புகிறேன்.

வெளியீடு; உயிர் பதிப்பகம்

தொடர்பு எண்; 9840364783

விலை; ரூ 200

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time